மின்மினியே…. எங்கள் கண்மணியே!

-கோவை முகில்

க்கால இளைய தலைமுறையினருக்குப் பெருமளவு அறிமுகமில்லாத, பெயரளவில் மட்டுமே கேட்டுணரப்பட்ட ஒரு இயற்கையின் அதிசயம்தான் மின்மினிப் பூச்சிகள்.

“நெருப்பில்லாமல் வெளிச்சமா?… மின்சாரம் இல்லாமல் லைட்டா?… அதுவும் ஒரு பூச்சியின் உடல் மீதா?…” என்று நடப்புச் சமுதாயத்தினர் ஆச்சரியப்படும் இயற்கையின் அற்புதப் படைப்புதான் இந்த வெளிச்ச ஜீவன்.

மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். இதை மினுக்கட்டான் பூச்சி, லைட்டு பூச்சி என்றெல்லாம் அழைப்பர்.

உண்மையில் இந்த மின்மினிப் பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையிலிருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டு விட்டு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும்.

குளிர் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கின்றன.

புலிகள் மற்றும் சிங்கங்கள் மான்களையும், வரிக் குதிரைகளையும் வேட்டையாடி….விளையாடி… விருந்தாக்கி மகிழ்வது போல், இவையும் தன் இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்து விடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப் பொருளைச் செலுத்தி விடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளைச் செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறி விடும். உடனே மின்மினிப் பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, நீரைக் குடிப்பது போல உறிஞ்சி விடும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்து கொண்டு இருக்கும்.

ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்குச் சைகை செய்கிறது. ஆண்பூச்சி சிக்னலுக்கு 2.1 விநாடிகளுக்குப் பின் பதில் சிக்னல் கொடுக்கின்றது பெண் பூச்சி. இதில் பெண் பூச்சி கொடுக்கும் ஒளி பிலிவு குறைந்து காணப்படுகிறது. இப்பூச்சிகள் பகலில் மட்டுமே இணை சேரும். இப்பூச்சிகளை, தவளைகள் அதிகமாக உணவாக உட்கொள்கின்றன. இப்பூச்சிக்குப் பிடித்த உணவு நத்தை ஆகும்.

எல்லா முன்னிரவுகளிலும் மின்மினிகள் தென்படுவதில்லை. வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை சில குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருக்கும்போது மட்டுமே அவை வெளிவருகின்றன. உலகிலுள்ள எல்லா வெப்ப நாடுகளிலும், மித வெப்ப நாடுகளிலும் அத்தகைய சூழல்கள் உள்ள போது அவை பெருகி வளர்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகளில் குகுயோ என்ற இனத்து மின்மினிகள் பெரிதாகவும் அதிக ஒளி வீசுவதாகவும் இருக்கும். அங்குள்ள பழங்குடி மக்கள் இருட்டில் நடமாடும் போது தம் கால் விரல்களில் மின்மினிகளை ஒட்டிக் கொள்வர்.

பிரேசில் நாட்டின் பழங்குடிப் பெண்கள் மின்மினிகளைத் தமது கூந்தலில் சூடிக் கொள்வார்கள். மின்னல் ஜடைக்காரிகள்.

ஜப்பானில் மின்மினிகளுக்காக ஒரு திருவிழாவே கொண்டாடப்படுகிறது. பெண்கள் கூண்டுகளில் லட்சக்கணக்கான மின்மினிகளை வளர்த்து, கியோட்டா நகருக்கு அருகிலுள்ள ஏரிக்கு எடுத்துச் சென்று பறக்க விடுவார்கள். அதை ரசிக்க பெரும் கூட்டமே திரளும்.

ஜப்பானில் மின்மினி திருவிழா

மின்மினியின் ஒளி வீசும் உறுப்புகளில் திசுக்கள் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கும். அந்த உறுப்புகளின் மேல் பரப்புக்கு அருகில் குருணைகளைப் போன்ற பொருட்களின் ஒரு படலம் உள்ளது. அதனடியில் படிக செல்களாலான ஒரு படலம் ஒரு பிரதிபலிப்பானாகச் செயல்படுகிறது. குறுணைகளில் ஒளி உற்பத்தியாகிறது. அவற்றினூடாகக் காற்று செல்லும் குழல்களும் நரம்புகளும் கொண்ட ஒரு வலையமைப்பு பரவியிருக்கிறது. தணல் கரியை ஊதினால் அதன் பிரகாசம் அதிகரிப்பதைப் போல, மின்மினி தன் உடலை உப்பச் செய்து காற்றை உள்ளிழுக்கும் போது, காற்றுக் குழல்கள் திறந்து கொண்டு, குருணைகளின் மேல் காற்றின் ஆக்சிஜன் பட்டு அவற்றின் பொலிவு கூடுகிறது.

விவசாயிகளின் நண்பன்:-

ஆய்வாளர்கள் மின்மினியின் உடலிலிருந்து அந்தக் குறுணைகளை பிரித்தெடுத்து சுத்தமான ஆக்சிஜன் நிரம்பிய ஜாடிக்குள் வைத்துப் பார்த்தார்கள். அவை சிறிது நேரம் இடைவிடாத ஒளி வீசிய பின் அணைந்து போயின. அந்தக் குருணைகளில் உள்ள ஏதோ ஒரு பொருள் ஆக்சிஜன் பட்டதும் ஒளி வீசிவிட்டு உருமாறித் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்று ஆய்வார்கள் ஊகித்தனர். அதைப் பிரித்தெடுத்து ஆய்வு செய்து, அதற்கு ‘லூசிபெரின்’ என்று பெயரிட்டனர். குருணைகளில் இருக்கும் லூசிபெரேஸ் என்ற நொதி, கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு, லூசிபெரினையும் ஆக்சிஜனையும் இணைத்து ஒளி வீசச் செய்கிறது. அந்த இணைப்பைத் தற்காலிகமானதாகவே வைத்திருப்பதன் மூலம், லூசிபெரேஸ் இடைவிடாது இணைப்பதும் பிரிப்பதுமாக மின்மினியின் ஒளி வற்றாமல் தொடருமாறு செய்கிறது.

மின்மினியின் ஒளி எதற்குப் பயன்படுகிறது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் கருத்தொற்றுமை இல்லை. தன் இணையைச் சைகை காட்டி அழைப்பது மட்டுமே அதன் பயன் அல்ல. சில வகை மின்மினிகள் தமது கூட்டுப்புழுப் பருவம் வரை மட்டுமே ஒளி உறுப்புகளுடன் இருந்து, வளர்ச்சி பெற்றதும் அவற்றை இழந்து விடுகின்றன. அவை இனப்பெருக்கக் காலத்தில் ஒளி வீசுவதில்லை. வேறு சில இன மின்மினிகள் இடும் முட்டைகள் கூட ஒளி வீசுகின்றன. சில இனத்து மின்மினிகள் பகல் நேரத்தில் மட்டுமே இணை சேரும் வழக்கம் உள்ளவையாக உள்ளன. பூச்சியின் வால் முனையில் மட்டுமே ஒளி வீசுவதால், அது தனக்கு முன்னுள்ள வெளியை வெளிச்சமிட்டுப் பார்ப்பதாகவும் தெரியவில்லை. தன் எதிரிகளை மிரட்டவும் அது ஒளியைப் பயன்படுத்துவதில்லை.

வெப்ப மண்டலச் சதுப்பு நிலங்களில் தவளைகள் வயிறு முட்ட மின்மினிகளைப் பிடித்து விழுங்கிய பிறகு, தவளைகளின் உள் உறுப்புகள் ‘எக்ஸ்-ரே’படத்தில் உள்ளதைப் போலத் தெரியும். சரி, இவற்றால் மனிதர்களுக்கு நேரடிப் பயன் என்ன? மின்மினிகள் நத்தைகளை அழிப்பதால் அவை விவசாயிகளின் நண்பர்களாக மதிக்கப்படுகின்றன. அவை நத்தையின் மேல் அமர்ந்து தமது உமிழ்நீரால் நத்தையின் சதைப் பகுதியைக் கரைத்து உறிஞ்சிக் குடித்து விடும்.

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கின்றன?

“தூங்கணாங்குருவி, குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து, அதில் மின்மினிப் பூச்சியைப் பொதிந்து வைக்குமாம்.” காரணம் மின்மினிப் பூச்சியும் தூங்கணாங்குருவியும் மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களையே வாழிடங்களாகக் கொண்டவை.

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கின்றன?

இப்பொழுதெல்லாம் மின்மினிப் பூச்சிகளைக் காண முடிவதில்லை. அவை எங்கே போயின?.

மின்மினிப்பூச்சிகள் புவியில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.

இது மென்மையான உடலினைக் கொண்டு 5 முதல் 25 மிமீ நீளத்தில் இருக்கிறது. இது தட்டையான அடர் பழுப்பு அல்லது கருப்பு உடலால் பெரும்பாலும் ஆரஞ்சு அல்லது மஞ்சள் வண்ணத்தில் குறிக்கப்படுகிறது.

இவை வாழ்வதற்கு ஈரப்பதமான சூழ்நிலை மிகவும் அவசியம். ஆதலால்தான் இவை ஆறு, ஏரி, குளம், நீரோடை, வயல்வெளிகள், வனப்பகுதிகள், சதுப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளிப்பகுதியிலிருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.

இப்பூச்சிகளின் வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு கால அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களை வெளிவிடுகின்றன.

மின்மினிப் பூச்சிகள் 3-4 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அதாவது முட்டை இட்டதும் இவை அழிந்து விடுகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் சில இனங்கள் முழு பூச்சியாக உருமாறிய பின்பு உணவினை உண்பதில்லை. பல இனங்கள் பூக்களின் மகரந்தங்கள், தேன் ஆகியவற்றை உணவாக்குகின்றன.

இப்பூச்சிகளை உணவாக்க நினைக்கும் விலங்குகள் இதனைத் தாக்கியதும் இதனுடைய உடலிலிருந்து வெளிப்படும் திரவமானது கசப்பு சுவையைத் தருகிறது. மேலும் இவை ஒளியையும் வெளிப்படுத்தும். இதனால் இவற்றைப் பெரும்பான்மையான உயிரினங்கள் வேட்டையாடுவதில்லை.

இப்பூச்சிகள் நத்தைகள், மண்புழுக்கள் ஆகியவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உயிர்ச்சூழலைச் சமநிலைப்படுத்துகின்றன. மேலும் இவை வேளாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் அழிக்கிறது.

இவை பூக்களின் மகரந்தத்தையும், தேனையும் உண்பதற்காக ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்குச் சென்று அமர்வதால் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவி தரமான விதைகளை உருவாக்க உதவுகிறது.

மின்மினிப் பூச்சிகள் தென்படும் இடங்கள் நீர் மாசுபாடு இல்லாத வளமான உயிர்ச்சூழலுக்கான அறிகுறியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளில் உள்ள அடினோசைன் டிரை பாஸ்பேட்டை எடுத்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உயிரினத்தின் செல்களில் செலுத்தி நோயின் தன்மை பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

உணவு கெட்டுப்போவது, பூமியில் பாக்டீரியா மாசுபடுத்தல் பற்றிய ஆராய்ச்சிகளில் மின்மினிப் பூச்சிகளின் அடினோசைன் டிரை பாஸ்பேட் பயன்படுத்தப்படுகிறது.

ஒளி மாசுபாடு

மின்மினிப் பூச்சிகள் தற்போது காணாமல் போவதற்கு முக்கிய காரணம் ஒளி மாசுபாடு. இவை இருளில் ஒளிர்தலைப் பயன்படுத்தியே இணையைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

ஒளி மாசுபாட்டால் இவற்றால் இணையைச் சரிவரத் தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும் இவை வேறு சில உயிரினங்களைப் போல இடம் பெயர்ந்தும் வாழ்வதில்லை.

இதனால் இதனுடைய வாழிடம் ஈரப்பதம் இல்லாமல் ஒளி மாசுபாடடைந்தால் இவை மடிந்து விடுகின்றன.

வெளிநாடுகளில் மின்மினிப் பூச்சிகளின் சூழலியல் முக்கியத்துவம் கருதி, தற்போது இவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

மாசுபாட்டைக் குறைத்து இந்த இயற்கை வழங்கிய இனிய ஜீவனைக் காப்பாற்றும் பட்சத்தில் அதன் படைப்பு நன்மைகளை நம் சந்ததியினர்க்கும் கொண்டு செல்லலாம்

Tags: