இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க – இந்திய தலையீடு இருக்காது?

-பிரதீபன்

Afbeeldingsresultaat voor trump and modi cartoon

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அதன் மூலோபாய – தந்திரோபாய வகுப்பாளரும், அம்முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சதோதரருமான பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், ‘இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.

அவரது இந்தக் கூற்று சம்பந்தமாக அரசியல் வட்டாரங்களில் பலவித வியாக்கியானங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, அவரது இந்த ‘இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருக்காது’ என்ற கூற்றை வைத்துப் பார்க்கும்போது, கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருந்தது என்று அர்த்தமாகிறது.

உண்மையும்கூட அதுதான். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகளும், இந்தியாவும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை தோல்வியடையச் செய்வதில் மறைமுகமாகவும், அதேநேரத்தில் தீர்க்கமாகவும் செயல்பட்டிருந்தன என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

இந்த விடயத்தை அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுமாத்திரமின்றி, 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு இந்தியா முக்கிய பங்களித்திருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒரு தடைவ குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு அந்த வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்து மகிந்தவின் ஆட்சியை வீழ்த்தியதிற்குக் காரணம், அவருடைய அரசு தமது போட்டியாளரான சீனாவின் பக்கம் சாய்ந்து செல்கிறது என்பதாலாகும்.

ஆனால் கடந்த 4 வருட காலத்தில் அரசியல் அரங்கில் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன. இதை அந்த வெளியுலக சக்திகளும் புரிந்துள்ளன.

அதாவது, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு சகல துறைகளிலும் தோல்வி கண்டுள்ளது. அதன் காரணமாக அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நம்பிக்கையை இழந்துள்ளது. அதன் காரணமாக முதலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும், பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தோல்வியைத் தழுவும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலைமையில் ரணில் தலைமையிலான அரசு தொடர வேண்டும் என சில வெளிநாட்டுச் சக்திகள் விரும்பினாலும் – குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள் – இலங்கையின் தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவை இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கடந்தமுறை போன்று இம்முறையும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தால் அதனால் பயன் ஏதும் கிடைக்காது என்பதுடன், இலங்கை மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதையும் அவை உணர்ந்துள்ளன.

அதன் காரணமாகத்தான் கடந்த சில மாதங்களாக அமெரிக்க – இந்திய இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்ச்சியாகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்திருக்கிறனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளதுடன், பரஸ்பர புரிந்துணர்வுக்கும் வந்துள்ளன என அறிய முடிகிறது. தமக்கு விருப்பமுள்ளவர்களுடன் மட்டுமின்றி, விருப்பம் இல்லாதவர்களுடனும் இணைந்து வேலை செய்வதில் கில்லாடிகளான அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

மறுபக்கத்தில், மகிந்த தரப்பும் தமது பாரம்பரியமான அமெரிக்க எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு நிலையில் இருந்து சற்று விடுபட்டு காலத்துக்கு ஏற்ப சமயோசிதமாகச் செயல்படும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகிந்த தரப்பின் இந்த கொள்கை ‘சீர்செய்யலுக்கு’ பிரதியுபகாரமாக அமெரிக்க – இந்திய சக்திகள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தாம் தலையீடு செய்யமாட்டோம் என வாக்களித்திருக்கக்கூடும். அதை வைத்தே பசில் ராஜபக்ச இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெளிச் சக்திகளின் தலையீடு இருக்காது எனத் துணிந்து கூறியிருக்கலாம்.

அப்படி வெளிச் சக்திகளின் தலையீடு இன்றி இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், தற்போதைய அரசியல் கள நிலவரப்படி கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவது பெரும்பாலும் உறுதி என நம்பலாம்.

Tags: