தோழர் சங்கரய்யா 100

1. மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 99 ஆண்டு கால வாழ்க்கையைப் பூர்த்தி செய்து நூறாவதாண்டில் காலடி எடுத்து வைக்கின்றார். 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது!

2. அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டியவர். 1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது.

3. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்த காலத்தில் காங்கிரஸார் பலரை கம்யூனிஸ்ட்களாக்கிவிட்டார்!

4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக 1943-ல் பொறுப்பேற்றார். கட்சியை வளர்க்கப் பல உத்திகளைக் கையாண்டார். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கரகாட்டக் கலைஞர் பொன்னுத்தேவரை ஆடவைப்பார். கூட்டம் சேர்த்ததும் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசுவது அவற்றில் ஒரு உத்தி. கலை, இலக்கியத்தில் மிக அதிக ஆர்வம் கொண்ட சங்கரய்யாதான், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்க வேண்டும் என்ற யோசனையைச் சொன்னவர்!

5. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியைத் திருமணம் (1947 செப்டம்பர் 18) செய்துகொண்டார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார். 75 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தன் பிள்ளை, பேரக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு சீர்திருத்த, சாதி மறுப்புப் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார்.

6. மூன்று ஆண்டுகள் (1948-51) தலைமறைவுக் காலம். இந்தியாவில் எங்கெங்கெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தார் என்று பட்டியல் போட்டால் நீளும். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை. பின்னாளில் எதற்கும் கலங்காதவராக நிற்க இந்தப் பயணமும் ஒரு காரணம்!

7. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்!

8. முதன்முறையாக 1957 தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் (மதுரை கிழக்கு) அவர் வென்றார்.

9. சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார்!

10. கட்சியில் இரும்பு மனிதர் என்ற பெயர் சங்கரய்யாவுக்கு உண்டு. ஆனால், சங்கரய்யாவைக் கலங்கவைக்கும் பாடலும் உண்டு. டி.மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, தோழா’ பாடலைக் கேட்டால் கட்சித் தோழர்களின் தியாகத்தை நினைத்து அழுதுவிடுவார்.

11. மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இருவர் மட்டுமே இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மற்றொருவர் நம் தோழர் சங்கரய்யா! வயது காரணமாக கட்சியின் அன்றாடப் பணிகளில் ஈடுபடாவிட்டாலும், வாரம் ஒரு முறையேனும் கட்சி அலுவலகத்துக்கு வருவதையும், தவிர்க்க முடியாத கூட்டங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பண்பான நடத்தை ஆகியவற்றால் இன்றைக்கும் எண்ணற்ற இளையோரை வசீகரிக்கிறார், வழிகாட்டுகிறார்!

-தொகுப்பு: கே.கே.மகேஷ்

சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்’: தோழர் என்.சங்கரய்யா

கேள்வி : இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் சிறையில் இருந்து விடுதலை பெற்றீர்கள். அன்று இந்தியாவின் எதிர்காலம் பற்றி உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது?

என்.எஸ்.: மதுரை சதிவழக்கு போட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தோம். 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். அந்த வழக்கில் பி. ராமமூர்த்திக்கு அடுத்து நான் இரண்டாவது குற்றவாளி. கே.டி.கே. தங்கமணி உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மாலை 6 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்து, இந்த வழக்கு காவல்துறையினரால் இட்டுக் கட்டப்பட்ட வழக்கு என்று தீர்ப்பளிக்கிறார். நாங்கள் விடுதலையாகி வெளியே வருகிறோம்.

மதுரை சிறைச்சாலையில் இருந்து பொதுக் கூட்டம் நடந்த திலகர் சதுக்கம் வரையில் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

நீங்கள் கேட்ட கேள்வி குறித்து சிறையிலேயே விவாதித்திருக்கிறோம். இந்தியாவின் சுதந்திரம் முழுமையடைய வேண்டுமென்றால் தொழிலாளிகள்- விவசாயிகள், – சாதாரண பொதுமக்கள் ஆகியோருடைய ஜனநாயக சுதந்திரத்திற்கு முழுப் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுதான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்பதுதான் எங்களுடைய ஆழமான கருத்தாக இருந்தது. அதற்காகத்தான் போராடினோம். இனி மேற்கொண்டு போராடி அதை ஒரு ஜனநாயக இந்தியாவாக மாற்றலாம் என்று நினைத்தோம். அதையே அந்தக் கூட்டத்திலும் எங்கள் எண்ணமாக வெளியிட்டோம். இந்தியாவின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்; இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிலைமையை உருவாக்க வேண்டும்; அதற்காகப் போராடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அப்போது நாங்கள் தொழிலாளிகளிடம் கூறினோம்.

கேள்வி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இடையே எத்தகைய ஒற்றுமை – வேற்றுமைகள் இருந்தன?

என்.எஸ்.: வேலூர் ஜெயிலில் காங்கிரஸ் தலைவர் களும் (காமராஜர், பட்டாபி சீத்தாரமய்யா, அப்துல் ரகுமான், அன்னபூர்ணையா) நாங்களும் இருந்தோம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் மீது `ஹிட்லரின் ராணுவம் படையெடுத்தது. அது தங்களுக்குச் சாதகமான நிலைமையாக இந்தியா விற்கு இருந்தது என அவர்கள் நினைத்தார்கள். இரண்டாவது உலக யுத்தத்தைப் பற்றி பெரியதொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அவர்களோடு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லி, நமக்கெதிராக ஜெயிலிலேயே ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதிலுள்ள சிலரால் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற்கான முயற்சியும் செய்யப்பட்டது.
ஆகவே, காங்கிரஸா? கம்யூனிஸ்டா? என்பது தான் முன்னே வந்தது. காங்கிரஸ் பாதையா? கம்யூனிஸ்ட் பாதையா? நாம் வலுவான அரசியல் எதிரியாக வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

சிறுகடைக்காரர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் நம்மோடு நல்ல நட்புறவோடுதான் பழகினார்கள். அது பிற்காலத்தில் பெரிய அளவிற்கு உதவி செய்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நமது தோழர்கள் 10-12 பேர் இருந்தனர். 1945 வரைக்கும் இருந்தனர். அப்போது ஒவ்வொரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத் திலேயும் நமது தோழர்கள் மாற்றுப் பாதையை முன்வைத்தனர். அதாவது மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகத்தை முன்வைத்தால் நாம் வெகுஜன போராட்டத்தை முன்வைத்தோம்.

கேரளா போன்ற இடத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியே நம்மிடம் இருந்தது. மதுரையிலும் காங்கிரஸ் கமிட்டி நம்மிடம் இருந்தது. நாமும் காங்கிரஸிற்குள் இருந்தோம். கட்சிக்குள் தேர்தல் நடந்தபோது வைத்தியநாத அய்யரைத் தோற்கடித்து ஜானகியம்மா வெற்றி பெற்றார். மதுரை டவுன் கமிட்டி எங்களிடம்தான் இருந்தது. இதே போல ஆந்திராவிலும், கேரளாவில் முழுமையா கவும் இருந்தது. வங்காளத்திலும் இருந்தது. நண்பர்களாகவும் இருந்தோம். அதே நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளிடையே சித்தாந்த ரீதியான போட்டியும் இருந்தது.

கேள்வி: இன்றைய வலதுசாரி, இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த மக்களிடையே எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

என்.எஸ்.: இன்றைக்கு மதவாத, வகுப்புவாதம் தான் ஆட்சியில் உள்ளது. பொருளாதார ரீதியாக அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் நிறைய சலுகைகள் கொடுக்கும் ஆட்சி இது. பொருளாதாரத்தில் பிற்போக்கான கொள்கைகளையும், சமூக ரீதியாக சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெரும்பான்மையான மக்களுடைய மனோபாவத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மதத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயலும் ஆட்சி. அதாவது இந்துத்துவா என்று சொல்லக்கூடியது தான் இன்று இங்கே ஆட்சியில் உள்ளது. எனவே இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான தேவை என்னவெனில் மிகப் பரந்த அளவில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வேண்டியிருக்கிறது.

கேள்வி : இன்றைய சூழ்நிலையில் சோஷலிசத்திற்கான போராட்டத்தை வரும் தலைமுறையினர் எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

என்.எஸ்.: மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு மத்திய ஆட்சி அவசியம். இரண்டாவது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தேர்தலில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஜனநாயகம் அப்போதுதான் பல மடையும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும்.. மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக செயல்படக் கூடிய கவர்னர்களின் ஆட்சி போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். மொழிகளின் சமத்துவம். இந்தியா விலுள்ள அனைத்து தேசிய மொழிகளும் ஒரே உரிமை கொண்ட மொழிகள் என்பது ஏற்கப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப் பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் அயல்நாட்டுப் பெருமுதலாளிகளின் சுரண்டல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவை மேலும் வலுவடைய வேண்டும். அது ஒன்றுதான் இந்தியாவில் சாதாரண மக்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அவர்களின் கடன் சுமைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றைக்கு தொழிலாளிகள் – உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளது. இவர்களது அரசியல், பொருளாதார, சமூக, தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவை வேண்டும். குறிப்பாக இப்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி மூலமாக மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

சமூக ரீதியில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் வயதுவந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இதை நிறைவேற்ற முடியும். இட ஒதுக்கீடு இன்னும் கணிசமான காலத்திற்கு நீடிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் விடுதலை என்பது இந்தியாவிலுள்ள எல்லா மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதில்தான் அடங்கியுள்ளது. இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின், ஏகபோக முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராட அகில இந்திய அளவிலான முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் ஒற்றுமை அவசியம். கூட்டுப் போராட்டத்திற்கு முயற்சிக்க வேண்டும். அது தேவைப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தை எதிர்த்து மக்கள் போராடினார்களோ, அதே போல இந்த வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு அகில இந்திய இயக்கம் தேவைப்படுகிறது.

கேள்வி: வருங்காலத் தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை…?

என்.எஸ்.: மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நூல்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு வேறு வழியேதும் கிடையாது. உலக ஏகாதிபத்தியத்தையும், உலக முதலாளித்துவத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, உலக சோஷலிச அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் உலகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் உண்மையான, உறுதி யான விடுதலை கிடைக்கும். சரித்திரம், கலாச்சாரம் ஆகியவற்றில் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆக, இந்தியாவிலும் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப, இந்திய அம்சங்களைக் கொண்ட சோஷலிசம் என்பதற்கான ஒரு பெரிய இயக்கம் நடைபெற வேண்டும்.

சோஷலிசத்தின் அரசியலை போதியுங்கள். சோஷலிசத்தின் பொருளாதார அம்சங்களை போதியுங்கள். சோஷலிசத்தின் கலாச்சார அம்சங்களை போதியுங்கள். உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடதுசாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி.

ஆகவே தொடர்ச்சியாக மக்களோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். நான் சொல்ல விரும்புவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் குறைந்தது 300 குடும்பங்களையாவது சந்தித்து அவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டும். இதைச் செய்யும்போது நம்முடைய பிரச்சனைகளுக்கு வழிகாட்ட ஒரு தோழர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர்களிடையே ஏற்படும். அந்தத் தோழரைச் சுற்றி ஏற்படக்கூடிய ஒற்றுமைதான் எந்த நெருக்கடியையும் சமாளிக்க உதவி செய்யும். இந்தக் கட்சி எந்த நிலைமையிலும் மக்களைக் காப்பாற்றும்; முன்னெடுத்துச் செல்லும்.

கடைசியாக அரசியல், பொருளாதார,சமூக, கலாச்சார துறைகள் அனைத்திலும் இந்திய மக்களை, தமிழ் மக்களை முன்னேற்றக் கூடிய இயக்கமாக, மாணவர்கள் செயல்பட வேண்டு மென்று நான் நினைக்கிறேன்.

இதைக் கொண்டுவர வேண்டியது கம்யூனிஸ்டுகளின், சோஷலிஸ்டுகளின் கடமை. வகுப்பு வாதத்திற்கு எதிராக ஒரு தத்துவப் போராட்டத்தை, அரசியல் போராட்டத்தை, கருத்துப் போராட்டத்தை நடத்த வேண்டும். எவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதோ, அதேபோல சோஷலிசத்திற்கான போராட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும். அதில் இடதுசாரி சக்திகள், ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் தங் களது கடமையை ஆற்ற வேண்டும்.

பேட்டி: வீ.பா.கணேசன்
2017.08.14

#100YearsOfCommunistStruggle

Tags: