‘சுயலாப அரசியலுக்காக சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர்’

“எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள்” என, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

வவுனியாவில் இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதலாவது மாநாட்டின் போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஒன்றுகூடலானது வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது இந்த மாவட்ட தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்த நிகழ்வாக இது அமைந்திருக்கிறது. 

“அந்த வகையில் இந்த மாவட்ட தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைக்கு தீர்வாக வர இருக்கிற ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் எங்கள் மக்கள் பல தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில்    நாங்கள் ஆயுதம் தூக்கி போராடி இலங்கை- இந்திய ஒப்பந்தத்துடன் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்த கொண்டு ஜனநாயக வழிமுறை ஊடாக பிரச்சினையை தீர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த கருத்தை முன்வைத்து வந்திருக்கின்றோம். 

“அன்று சக தமிழ் கட்சிகளோ சக இயக்கங்களோ இல்லை வன்முறைக்கு ஊடாகவே பிரச்சினையை தீர்க்கலாம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் வன்முறையின் ஊடாக பிரச்சினையை தீர்க்க முடியாது என்று கூறியிருந்தோம். 

“அத்தோடு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு தேசிய நல்லிணக்கம் ஊடாக தமிழ் மக்களின் வாக்குபலத்தின் ஊடாகவே வருங்காலங்களில் எங்களுடைய பிரச்சினையை தீர்க்கலாம் என்று அன்று கூறியிருந்தோம். அது இன்று யதார்த்தமாகியுள்ளது.

“அன்று நாங்கள் கூறியிருந்ததை ஏற்றிருந்தால் அழிவுகள், இழப்புக்கள், துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகள் எல்லாம் ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சுயலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். 

“யுத்தத்தின் பின் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களாக வந்தவர்களும்; அவர்களை ஆதரித்து மக்களை உசுப்பேத்தி மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கு வந்தவர்களும்தான் வென்றிருக்கிறார்களே ஒழிய மக்கள் வெற்றிப்பெறவில்லை.

“அதன் அர்த்தம் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பதாகும். வர இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எங்களை நம்பி எங்களை பின்பற்றி எங்களுடன் அணிதிரள்வீர்களேயானால் நீங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்னைகளை விரைவாக தீர்ப்போம்.

“குறிப்பாக வீட்டுப்பிரச்சினையாக இருக்கலாம், காணி பிரச்சினையாக இருக்கலாம், வேலை வாய்ப்பு பிரச்சினையாக இருக்கலாம், ஒரு சிறப்பான வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் அல்லது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலையாக இருக்கலாம், காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் காணுகின்ற ஏற்பாடாக இருக்கலாம்.

எங்களுடைய மக்கள் எதிர்கொள்கின்ற சாகலவிதமான நியாயமான பிரச்சினைகளுக்கும் உங்களுக்கு வெகு விரைவாக பெற்றுத்தருவோம். ” என்றார்.

-க.அகரன்
தமிழ் மிரர்
2019.11.04

Tags: