ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது எப்படி?

ஊடகவியலாளர்: சனத்

Afbeeldingsresultaat voor ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது எப்படி?

லங்கையில் 1978 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. இதன்படி 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அமரர். ஜே.ஆர். ஜயவர்தன பதவியேற்றார்.

அதன்பின்னர் 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதியே இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் செல்லுப்படியான மொத்தவாக்குகளில் 52.91 சதவீத வாக்குகளைப் பெற்று ஜே.ஆர். ஜயவர்தன வெற்றிபெற்றார்.

நாட்டில் 1982 முதல் 2015 வரை இடம்பெற்றுள்ள ஏழு ஜனாதிபதி தேர்தல்களிலும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது – செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவர் பெற்றிருந்ததால் வெற்றியை நிர்ணயிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.

அத்துடன் 2, 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணக்கூடிய தேவைப்பாடும் எழவில்லை.

1982 முதல் 2015 வரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குவீதம்?

1982 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 81 இலட்சத்து 45 ஆயிரத்து 15 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும், 66 இலட்சத்து 2 ஆயிரத்து 617 பேரே வாக்களித்தனர்.

இவற்றில் 80 ஆயிரத்து 470 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதன்படி 65 இலட்சத்து 22 ஆயிரத்து 147 வாக்குகளே செல்லுபடியாகின.

இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வேட்பாளர் ஒருவர் 32 இலட்சத்து 61 ஆயிரத்து 73 வாக்குகளை பெறவேண்டியிருந்தது. (50%+1) எனினும், 34 இலட்சத்து 5 ஆயிரத்து 811 வாக்குகளை (52.91% ) ஜே.ஆர். ஜயவர்தன பெற்றார். வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அமரர். ரணசிங்க பிரேமதாச 50.43% வாக்குகளையும், 1994 இல் நடைபெற்ற 3 ஆவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா 62.28% வாக்குகளையும்,

1999 இல் நடைபெற்ற 4 ஆவது ஜனாதிபதி தேர்தலில் 2 ஆவது முறையும் போட்டியிட்ட சந்திரிக்கா 51.12% வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றனர்.

2005 இல் நடைபெற்ற 5 ஆவது ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 51.02% வாக்குகளையும், 2010 இல் நடைபெற்ற 6 ஆவது ஜனாதிபதி தேர்தலில் 57.88% வாக்குகளையும் பெற்று அரியணையேறினார்.

2015 இல் நடைபெற்ற 7 ஆது ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளைப்பெற்று இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதனால் 82 முதல் 2015 வரையில் ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதற்கு 2ஆம் கட்ட வாக்கெடுப்பு (எண்ணுதல்) நடைபெறவில்லை.

ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் சிலர் இறுதிநேரத்தில் பின்வாங்கக்கூடும்.

எனினும், பலமான சில வேட்பாளர்கள் மூன்றாம்நிலை வரிசையில் இருப்பதால் பிரதான வேட்பாளர்களால் 50%+1 வாக்குகளை பெறமுடியாமல் போய்விடும் என்றும், 2 ஆம் விருப்பு வாக்கின் அவசியத்தும் உணரப்படும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

Afbeeldingsresultaat voor ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது எப்படி?

உள்ளாட்சி, மாகாண மற்றும் பொதுத்தேர்தல்களின்போது முதலில் கட்சி சின்னத்துக்கு புள்ளடி இட்டுவிட்டு (X) அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்கு முன்னால் (X) அடையாளமிடலாம்.

ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் மூவருக்கு விருப்புகளை வழங்கலாம்.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர் என்பதற்கு அப்பால் ஏனைய கட்சி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு அருகாமையில் வாக்களிப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை பயன்படுத்தலாம்.

Afbeeldingsresultaat voor ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது எப்படி?

ஜனாதிபதி தேர்தலில் 2 இற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்ற பட்சத்தில் – A,B,C,D,E என வைத்துக்கொள்வோம்.

A என்பவரே வாக்காளரின் முதன்மை தேர்வாக இருக்கும் பட்சத்தில் A என்பவருக்கு முன்னால் 1 என இலக்கத்திலும் – 2, 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால் தாம் விரும்பு வேட்பாளர்களுக்கு 2, 3 என அடையாளமிட்டு விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தலாம்.

உதாரணம்.

A 1

B 2

C 3

2, 3 ஆம் விருப்பு வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஒரு வேட்பாளருக்குதான் வாக்களிக்க, வாக்காளர் விரும்புவாரெனில் வாக்கு சீட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் X அல்லது 1 என அடையாளமிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

விருப்புகளை அளிக்க விரும்புபவர்கள் மூன்று வேட்பாளர்களுக்கும் X X X என அடையாளமிட்டால் அந்த வாக்கு செல்லுபடியாகாது. எனவே, 2,3 ஆம் விருப்பு வாக்குகளை பயன்படுத்த விரும்புபவர்கள் 1,2,3 என அடையாளமிடுவதே சிறந்த நடைமுறையாக கருதப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், முதல்கட்ட வாக்கெண்ணும் பணி இடம்பெறும். இதில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றவரே வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார்.

(அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழிக்க வருவதே செல்லுபடியான மொத்த வாக்குகளாகும்)

முதலாம் சுற்று வாக்கெண்ணிப்பில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறாத பட்சத்திலேயே 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு 50 வீதத்துக்கும் மேல் வாக்குகளை எவரும் பெறாத – நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலொன்றில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்களை A,B,C,D,E என எடுத்துக்கொள்வோம்.இத் தேர்தலில்…..

A -45%

B -40%

C -05%

D –03%

E -02%

வாக்குகளையும் பெற்றுள்ளனர் என எடுத்துக்கொள்வோம். எவரும் 50% மேல் வாக்குகளை பெறாததால் இரண்டாம் கட்ட வாக்கெண்ணும் பணி இடம்பெறும்.

முதல் இரு இடங்களைப்பிடித்த A,B ஆகியோரை தவிர ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். இதற்கான உரிய அறிவிப்பும் விடுக்கப்படும்.

அதேபோல் A,B ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகளிலுள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில்கொள்ளப்படாது.

5 வீத வாக்குகளை பெற்ற C என்பவரின் வாக்குகள் கவனத்தில் எடுக்கப்படும். C என்பவருக்கு மட்டும் 1 என அடையாளமிடப்பட்ட (விருப்பு வாக்கு அளிக்கப்படாத) வாக்கு வாக்கெண்ணும்போது கவனத்தில் கொள்ளப்படாது.

C என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆம் விருப்பு வாக்கை A என்பவருக்கு வழங்கியிருந்தால் அந்த வாக்கு A என்பவருக்கும், B என்பவருக்கு வழங்கியிருந்தால் அந்த வாக்கு B என்பவருக்கும் வழங்கப்படும்.

C என்பவருக்கு 1 ஆம் வாக்கையும், D என்பவருக்கு 2 ஆம் விருப்பு வாக்கையும், A என்பவருக்கு 3ஆம் விருப்பு வாக்கையும் வழங்கியிருந்தால் அந்த 3 ஆம் வாக்கு A என்பவருக்கான வாக்குகளுடன் சேர்க்கப்படும்.

3 ஆம் விருப்பு வாக்கு B என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அது அவருக்கான வாக்குடன் இணைந்து கணக்கிடப்படும்.

C என்பவருக்கு முதலாம் வாக்கை அளித்தவர் D,E ஆகியோருக்கு 2, 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தால் அவை கணக்கெடுப்படாது.

அதன்பின்னர் ஏனைய வேட்பாளர்களினதும் 2,3 ஆம் விருப்பு வாக்குகள் இவ்வாறு உரிய வகையில் கணக்கெடுப்புசெய்து உரியவர்களுக்கு பகிரப்பட்டபின்னர் – கூடுதல் வாக்கை பெற்றவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார்கள்.

(இதன்போது 50%+1 என்ற கோட்பாடு பொருந்தாது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போது A இற்கு 3 சதவீதமும், B இற்கு 4 சதவீதமும் கிடைத்திருக்குமானால்,

A -45% + 3% 48%

B -40% + 4% 44%

இருவருக்குமான வாக்குகளை கூட்டினால் 92 வீதமாகும். இதில் கூடுதல் வாக்குகளை பெற்றவரே A வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

மாறாக A இற்கு எந்தவொரு விருப்பு வாக்குகளும் கிடைக்காமல் B இற்கு 7 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பீ யே 47% வெற்றியாளராவார்.

C,D,E ஆகியோருக்கு 1 ஆவது வாக்கை பயன்படுத்தியவர்கள் வேறு எவருக்கும் விருப்பு வாக்குகளை பயன்படுத்தவில்லையெனில், ஆரம்பக்கட்ட வாக்கெண்ணிக்கையின்போது கூடுதல் வாக்கை பெற்றவர் ( A-45%) வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

2, 3 ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் A, B ஆகியோர் சமனான வாக்குகளைப் பெற்றிருந்தால் ( A – 48% , B – 48%) திருவுளச் சீட்டுமூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Tags: