பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தங்கள் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை!

-எம்.எம்.சுஹைர் (M.M.Zuhair)

2022 ஜனவரி 27 இல் வெளிவிவகார அமைச்சரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1979 இல் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்துக்ககான திருத்தங்கள் கொடூரமான (Draconian) சரத்துக்களில் மாற்றம் செய்வதாக அமையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

ஈரானுக்கான இலங்கையின் தூதுவராகவும் பணி புரிந்த சுஹைர் இதற்கு உதாரணம் காட்டுகையில், பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போது ஒரு சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்ட வழக்கு விசாரணைகளின் போது பயன்படுத்தப்புடுவதென்பது மேலும் நீதியற்ற நிலைகளுக்கு இட்டுச் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையின் சாராம்சம் வருமாறு:

சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் அவர்கள் பொலிசாரின் பௌதீக ரீதியான பாதுகாப்பில் இருக்கும் போது பொலிஸ் அதிகாரிகளினால் பெறப்பட்டவையாகும். நீதிபதிகள் சந்தேக நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு முன்பும், பதிவு செய்யப்பட்ட பின்பும் அவர்கள் பொலிசாரின் பாதுகாப்பிலேயே வைக்கப்பட்டிருப்பர். இந்த நிலைமையில் பொலிசாரின் விருப்பப்படி சந்தேக நபர் வாக்குமூலம் அளிக்கத் தவறியிருப்பின் அவர் தனது பாதுகாப்பு குறித்து அஞ்சவேண்டி இருக்கும்.

சந்தேக நபர்களைத் தடுத்து வைத்திருக்கும் இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்வையிட்டு வர ஏற்பாடு செய்திருப்பது வரவேற்க வேண்டிய விடயம்தான். ஆனால் பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் சந்தேக நபர் நீதிபதி அவ்விடத்தை விட்டு நகர்ந்த பின்னர் தமக்கு என்ன நடக்குமோ என்ற மனச் சித்திரவதையுடன்தான் இருப்பார். இந்தச் சூழ்நிலையில் அவர் தனது மன விருப்பத்துக்கு விரோதமான முறையில் வாக்குமூலங்கள் வழங்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.

பயங்கரவாதத் தடைச்சட்ட சந்தேக நபர்கள் மட்டுமின்றி, அந்த வகையில் அல்லாத சந்தேக நபர்களும், பெரும்பாலான தடுப்புக் கைதிகளும் எதிர்நோக்கும் குரோதமான நிலைமைகள், துன்புறுத்தல்கள், இழிவாக நோக்கும் போக்குகள் என்பன குறித்து உயர் நீதிமன்றங்கள், மனித உரிமைகள் ஆணையகம், சுதந்திரமான வழக்கறிஞர்கள் ஆகியோரின் அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பல வழக்குகளில் சந்தேக நபர்களிடம் பொலிசாரால் மிரட்டிப் பெறப்பட்ட வாக்குமூலங்களை உயர் நீதிமன்றங்கள் பதிவு செய்துள்ளன. அண்மையில் ஒரு இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சந்தேக நபர்களை மிரட்டிய சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

எமது அரசியல் அமைப்புக்குப் புறம்பான முறையில் தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நிவைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி, சட்ட மா அதிபர், பொலிஸ் சுப்பிரிண்டன் போன்றோருக்கு இருப்பது முறையானதல்ல.

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதல் தடவையாக புதிய திருத்தச் சட்டப் பிரகாரம். மேன் முறையீட்டு நீதிமன்றம் ஒரு சந்தேக நபருக்கு வழங்கிய பிணையை மேல் நீதிமன்றம் என்ற பெயரில் உள்ள ஒரு கீழ் நீதிமன்றம் இரத்துச் செய்து அவரை வழக்கு முடியும் வரை தடுத்துக் காவலில் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய திருத்தச் சட்டப்படி தடுப்புக் காவல் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருப்பினும் அதன் மூலம் தடுப்புக் காவல் காலத்தில் சந்தேக நபர் மீது நடத்தப்படும் சித்திரவதைகள் குறைந்து விடும் என்பதற்கில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திலுள்ள வெறுக்கத்தக்க சரத்துகள் நீக்கப்பட்டு, எமது அரசில் சாசனத்துக்கு அமைவான முறையிலும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாகவும் அவை திருத்தப்பட்டால் மட்டுமே குறைந்த பட்சம் எமது நாடு ஒரு நவீன அரசுள்ள நாடு என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Tags: