இலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாசா
இலங்கையில் நடந்த 8-வது அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிக முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் ஆளும் ஜனநாயக தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமேதாசா பின்தங்கியுள்ளார். தோல்வியை ஒப்புக்கொள்வதாக பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட வகையில் நாட்டின் தெற்குப்பகுதியில் கோத்தபய 65 சதவீதமும், பிரேமதேசா 28 சதவீதமும் வாக்குகள் பெற்றுள்ளனர்.
இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு கோடியை 20 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.
இலங்கை தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் பொதுஜனக் கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்ச, ஆளும் ஜனநாயக தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா ஆகியோர் இடையேதான் கடும் போட்டி இருந்தது.
இலங்கையையே உலுக்கிய ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல் என்பதால், முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரை முன்னின்று நடத்தியவர் கோத்தபய ராஜபக்சே என்பாதல், சிங்கள மக்கள், புத்த பிட்சுகள் இடையே இவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஆளும் கட்சி சார்பி்ல போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ்தேசியக் கூட்டணி ஆதரவு அளித்துள்ளதால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்து முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை வகித்து வந்தார். அவ்வப்போது சஜித் பிரேமதாசாவும் முன்னிலைவந்தாலும், தொடர்ந்து கோத்தபாயதான் முன்னிலையில் இருந்தார். தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டபோது, கோத்தபய ராஜபக்சவைக் காட்டிலும் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுச் சென்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இலங்கை அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை 50 சதவீத வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தமிழர்கள் வாழும் கிழக்கு, வடக்கு மாவட்டங்களில் பெரும்பாலான வாக்குகளை பிரேமதாசா பெற்றுள்ளார். இவை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை பெற்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியில் மொத்தமுள்ள 17 மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருக்கிறார். கண்டி, ரத்னபுரா, அனுராதபுரம், பொலனுருவா, நுவாராலியா, கம்பகா, ஹம்பனோட்டா, கல்லே, படுலா, காகலே, மாத்தரை, குருனேகலே,புத்தலம், கலுதரா, கொழும்பு, மாத்தலே, மொனரகலா ஆகிய மாவட்டங்களில் கோத்தபய முன்னிலையுடன் இருந்து வருகிறார்.
அதேசமயம், திரிகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திகமதுலா ஆகிய 5 மாவட்டங்களில் பிரேமதேசா முன்னிலை பெற்றுள்ளார். 90 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் கோத்தபய 5 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளார்.
இலங்கை தேர்தல் ஆணையம் இன்னும் 22 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 17 மாவட்டங்களில் முன்னிலையுடன் செல்லும் கோத்தபய ராஜபக்சேவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபய ராஜபக்சேவின் செய்தித்தொடர்பாளர் கேஹிலியா ரம்புகவேலா கூறுகையில், ” எங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றிக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. அந்த மக்களின் கவலைகளை, அதிருப்திகளை எவ்வாறு களைவது என்பது குறித்து எதிர்காலத்தில் ஆய்வு செய்வோம்.வடக்கு, தெற்கு எனப் பிரிவினை கூடாது. அது எதிர்காலத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும்” எனத் தெரிவித்தார் .
-இந்து தமிழ்
2019.11.17