கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் !
அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
தீபாவளிக்குத் தீர்வு சித்திரை வருடத்தில் தீர்வு என்று மக்களை ஏமாற்றி, அரசியல் தீர்வு வரா விட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவதாகக் கூறியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் என சி.தவராசா தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலைக் குள்ளநரி என்று மக்கள் முன்னிலையில் தெரிவித்துவிட்டு பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றார்.
அவ்வாறானவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்சிக்கத் தகுதியில்லை.ரணிலை எத்தனை தடவைகள் எவ்வாறு எல்லாம் விமர்சித்தீர்கள் பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றீர்கள் இவ்வாறான சிறிதரன் முதலில் கண்ணாடியைப் பார்த்துவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானதா விமர்சித்தவர்களின் பின்னால் ஒரு நாளும் அலைந்ததில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் சிறிதரன் ஏராளமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உங்கள் மீது பல வினாக்களைத் தொடுத்திருந்தார். எனினும் இன்றுவரை அவற்றுக்குப் பதிலைக் கூறியதில்லை.
தமிழ் மக்களை ஏமாற்றி ரணில் பின்னால் வால் பிடித்துக்கொண்டு திரியும் கூட்டமைப்பினரும் முக்கியமாக சிறிதரன் முதலில் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள்.நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி போட்டியிடவில்லை.
மாறாக பெரமுனவின் சார்பாகப் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்கியிருந்தது.அவரை வடக்கு கிழக்கு மக்கள் வேறு காரணங்களுக்கு நிராகரித்து இருக்கலாம். ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மூன்று கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 154 ஆசனங்களைக் கைப்பற்றியது.எனினும் தனி ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி 71 ஆசனங்களைக் கைப்பற்றியது.
மக்கள் தற்போது தெளிவாகி வருகின்றனர்.முதலில் அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என்றார்.
–வீரகேசரி
2019.11.23