அணு ஆயுதங்களுக்குத் தேவை முடிவுரை!

-ஜி.ஆர்.இரவீந்திரநாத்

ரண்டாம் உலகப் போரின் இறுதியில், 1945 ஓகஸ்ட் 6 அன்று ஜப்பானின் ஹிரோஷிமாவிலும் மூன்று நாள் கழித்து (ஓகஸ்ட் 9) அந்நாட்டின் இன்னொரு நகரமான நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டன. அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் இந்த இரண்டு நகரங்கள் எதிர்கொண்ட பேரழிவுகளை ஒருபோதும் மறக்க முடியாது. இந்தக் கொடூரச் செயலால் ஏறத்தாழ 2.5 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகும் பல்லாயிரம் பேர் பல்வேறு வகை பாதிப்புகளால் மரணமடைந்தனர்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி படைகளை வெற்றிகொண்ட சோவியத் ஒன்றியத்தின் செம்படை, ஜப்பானை நோக்கி முன்னேறியது. 1945 ஓகஸ்ட் 8 அன்று ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்ட பிறகும் போரைத் தொடர நினைத்த ஜப்பான், ஓகஸ்ட் 15 அன்று சரணடைவதற்கான அறிவிப்பை வெளியிட சோவியத் ஒன்றியத்தின் இந்த வியூகமே காரணமானது. உண்மையில், அணுகுண்டுகள் வீசப்படாவிட்டாலும்கூட ஜப்பான் 1945 ஓகஸ்ட் மாதம் சரணடைந்திருக்கும் என்பதை ஜப்பானிய, அமெரிக்க ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதை அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ்.ட்ரூமேனும் நன்கு அறிந்திருந்தார். ஆம், அவசியமே இல்லாத நிலையிலும் ஜப்பானிய நகரங்கள் மீது அணு ஆயுதங்களை அமெரிக்கா வீசியது. தனது அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தை உலகில் நிலைநாட்ட வேண்டும்; சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் அரசியல் நோக்கமே இதற்குக் காரணமாகும்.

மனிதகுலத்துக்கு எதிரானது: உலகில் இதுவரை 2,087 அணுகுண்டுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா 1,054, ரஷ்யா 715, பிரிட்டன் 45, பிரான்ஸ் 210, சீனா 45, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா தலா 6 எனப் பரிசோதனை நடத்தியுள்ளன. இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவித்திருக்கின்றன. ஏதேனும் விபத்தால், ஓர் அணுகுண்டு வெடித்தால்கூட, அது பல லட்சம் மக்களைக் கொன்றுக் குவித்துவிடும்.

அதிக அளவிலான அணுகுண்டு வெடிப்புகளால் ஏற்படும் புகை/ தூசு மண்டலம் தரையிலிருந்து மேலெழுந்து புவிப்பரப்பு முழுவதையும் பல மாதங்களுக்குப் போர்த்திவிடும். இதனால் சூரியக் கதிர்கள் புவி பரப்பில் நுழையாது. பூவுலகே இருண்டு, குளிர்ந்து, வறண்டுவிடும். இது அணு குளிர்காலம் எனப்படும். இதனால் புவிவாழ் உயிரினங்களும் மக்களும் மடியும் நிலை ஏற்படும்.

அணுகுண்டு வீசப்படும் இடத்தில் உள்ள அனைத்தும் எரிந்து ஆவியாகிவிடும். அவ்வெடிப்பிலிருந்து வெளிவரும் அயனியாக்கக் கதிர்வீச்சு உயிரினங்களின் செல்களையும் உறுப்புகளையும் அழித்துவிடும். அதிக அளவிலான இக்கதிர்வீச்சு, உடனடி மரணத்துக்கு வழிவகுக்கும். இக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். அவர்களின் குரோமோசோம்களும் ஜீன்களும் பாதிக்கப்படும். எதிர்காலச் சந்ததிகளுக்குப் பல்வேறு மரபு சார்ந்த நோய்கள் உருவாகும்.

அணு ஆயுதங்கள் சட்டவிரோதம்: ‘அணு ஆயுதங்கள் பேரழிவை உருவாக்குபவை. எனவே, அவற்றை முழுமையாக ஒழித்திட வேண்டும்’ என்ற முகப்புரையுடன் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2017 ஜூலை 7 அன்று நிறைவேறியது. இந்த உடன்பாட்டை 122 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. இது சட்டரீதியான சர்வதேச உடன்படிக்கையாக மாறியுள்ளது. இந்த உடன்பாட்டின்படி, அனைத்து அணு ஆயுதங்களும் சட்டத்துக்குப் புறம்பானவை; அவற்றைஒழித்திட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அணு ஆயுத நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

உலகில் தற்போது 14,930 அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 90% அணு ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் உள்ளன. ஏறத்தாழ 1,800 அணு ஆயுதங்கள் உடனடியாக ஏவப்படக்கூடிய வகையில் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் ஐரோப்பாவில் 5 நாடுகளிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஹிரோஷிமா-நாகசாகியில் பிரயோகிக்கப்பட்ட அணு ஆயுதங்களைவிட, இன்றைய அணு ஆயுதங்கள் பல மடங்கு அழிவாற்றல் மிக்கவை. இப்பேரழிவு அணு ஆயுதங்களிலிருந்து உலகைக் காக்க… நம்பகமான ஒரே வழி, அவற்றை முற்றிலும் ஒழிப்பதுதான்.

சமூகரீதியிலான பாதிப்புகள்: அணு ஆயுதங்கள் பல்வேறு சமூகப் பொருளாதார தீய விளைவுகளையும் ஏற்படுத்திவருகின்றன. அணு ஆயுதங்களுக்காக, 82.4 பில்லியன் டொலர்களை 9 அணு ஆயுத நாடுகள் 2021ஆம் ஆண்டில் செலவு செய்துள்ளன. அதேவேளையில், உலகம்முழுவதும் கோடிக்கணக்கானோர் வறுமையாலும் வேலையின்மையாலும் மருத்துவ வசதிகள் இன்றியும் அவதிப்பட்டுவருகின்றனர்.

கல்வி-மருத்துவ வசதிகளுக்கான நிதியின் பெரும்பகுதி அணு ஆயுதங்களுக்காகவும் இராணுவத்துக்காகவும் செலவு செய்யப்படுகிறது. ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லை எனில் எந்தச் சிகிச்சையும் பெற முடியாது. கோடிக்கணக்கில் டொலர்களை அணு ஆயுதங்களுக்கு வாரி இறைக்கும் அமெரிக்கா, தனது குடிமக்களுக்கு மருத்துவ சிகிச்சையைக்கூட இலவசமாக வழங்கவில்லை.

பல நாடுகளிலும் இதே நிலைதான். இந்தியாவில் அணு ஆயுதங்களுக்காக மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துவருகிறது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகக் கேள்வியும் கேட்க முடியாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் 6 கோடி இந்தியர்கள் மருத்துவச் செலவுகளால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 3.5 இலட்சம் முதல் 4 இலட்சம் பேர் வரை காசநோயால் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 321 குழந்தைகள் வயிற்றுப்போக்கின் காரணமாகவே இறக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது.

அணு ஆயுதங்கள் உலக சமாதானத்தின், வளர்ச்சியின் எதிரிகள். மனிதகுலத்தின் கண்ணிய வாழ்வைக் கெடுப்பவை. அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் யாரும் வெல்ல முடியாது. தற்போது நடந்துவரும் ரஷ்ய-உக்ரைன் போர், நேட்டோ-ரஷ்யப் போராக மாறியுள்ளது. இது ஓர் அணு ஆயுதப் போராக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. எனவே, அணு ஆயுதங்களை ஒழிப்போம். பூவுலகைக் காப்போம்.

ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா நாள்; ஓகஸ்ட் 9: நாகசாகி நாள்

-இந்து தமிழ்
2023.08.07

Tags: