காலநிலை மாற்றம்

ச.அக்‌ஷயன்

climatechange

லங்கைக்கு கிழக்கேயுள்ள வங்காள விரிகுடாவிலும் வழமையாக நவம்பர் மாதங்களில் தோற்றம்பெறுகின்ற சூறாவளிகளின் நிகழ்வானது தற்போது வருடத்தின் ஏனைய மாதங்களிலும் நிகழ்ந்து வருகின்றமை போன்ற காரணிகளும் இலங்கையிலுள்ளவர்கள் காலநிலை மாற்றத்தின் வெளிப்பாட்டை தெளிவாக அறிந்துகொள்வதற்குரிய சான்றுகளாக உள்ளன. எனவே காலநிலை மாற்றம் பற்றிய ஒரு அறிமுகத்தை இந்த ஆக்கத்தினூடாக வழங்கலாம் என நினைக்கின்றேன்.

காலநிலை மாற்றம் பற்றி பார்க்கும்போது பச்சைவீட்டு விளைவு, புவிவெப்பமடைதல் போன்ற விடயங்களையும் சுருக்கமாக விளங்கிக்கொள்வதனூடாகவே காலநிலை மாற்றம் பற்றிய தெளிவிற்கு வழிவகுக்கும். ஏனெனில் பச்சைவீட்டு விளைவு புவிவெப்பமடைவதில் செல்வாக்குச் செலுத்துகின்ற நேரடி நிகழ்வாக உள்ளதுடன், காலநிலை மாற்றத்தில்  இன்று மிகவும் தெளிவாகத் தெரிகின்ற வேறுபாடுகளுக்குரிய முக்கிய காரணியாக புவிவெப்பம் அதிகரித்தல் காணப்படுகின்றது. இதனால் பச்சைவீட்டு விளைவு, புவிவெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஆகிய பதங்கள் ஒன்றோடொன்று பிரிக்கமுடியாதவாறு தொடர்புபட்டுள்ளது.

பச்சைவீட்டு விளைவு

பச்சை வீட்டு வாயுக்கள் என அழைக்கப்படும் காபனீரொட்சைட்டு, காபனோரோரொட்சைட்டு, குளோரோ புளோரோ காபன், நைதரசன் ஒட்சைட்டு,  கந்தகவீரொட்சைட்டு,  மெதேன்வோயு,  ஐதரோகாபன், நீராவி முதலிய வாயுக்கள் புவிக்கு கிடைக்கும் சூரியக் கதிர்வீச்சின் மூலமான வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டு புவிக்குத் தேவையான வெப்பத்தை தொடர்ந்தும்பேணுதல் பச்சை வீட்டு விளைவு (Green House Effect) எனப்படுகின்றது.

குளிர்ப்பிரதேசங்களில் பழவகை காய்கறிவகை ஆகியவற்றை பயிரிடுவதற்கு வேண்டிய வெப்பநிலையைப் பேணுவதற்காக கண்ணாடி அல்லது பொலித்தீனால் அமைக்கப்டும் வீடுபோன்ற அமைப்புக்களே பச்சை வீடுகளாகும். சூரியனிலிருந்து உள்வரும் கதிர்வீச்சானது நெட்டலையாக வெளிச்செல்கின்றது. ஆனால் இவ்வாறு அமைக்கப்படும் பச்சைவீடுகளுள் செல்கின்ற வெப்பநிலையானது கண்ணாடி அல்லது பொலித்தீன் மூடியுள்ளதன் காரணமாக வெளியே செல்லமுடியாமல் அதற்குள்ளே தேங்கிவிடுகின்றது. இதனால் தாவரங்களுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கக்கூடியதாகவிருக்கின்றது.

குளிர்ப்பிரதேசங்களில் இவ்வாறு பச்சை வீடுகளில் நிகழும் செயற்பாட்டை வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு, குளோரோபுளோரோ காபன், மெதேன், நைதரசன் ஒட்சைட் போன்ற வாயுக்கள் புவிக்கு கிடைக்கின்ற வெப்பநிலையின் ஒருபகுதியை மீண்டும் நெட்டலையாக வான்வெளிக்கு திருப்பி அனுப்பாமல் உறிஞ்சி வைத்துக் கொள்கின்றது. இதனால் இத்தகைய பூமிக்குத் தேவையான வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் செயற்பாட்டை பச்சைவீட்டு விளைவு என்கின்றனர். இப்பச்சை வீட்டு நிலைமைகளினாலேயே புவியின் சராசரி வெப்பநிலை 15OC ஆக இருக்கின்றது.

அண்மைக்காலமாக பச்சை வீட்டு வாயுக்களின் அளவு மனிதர்களால் அதிகளவில் சேர்க்கப்படுவதனால் பச்சைவீட்டு விளைவு வழமையான நிலையைவிட அதிகரித்துச் செல்கின்றது. இதனையே பச்சைவீட்டு விளைவின் தாக்கம் என்கின்றனர். இதனால் பூகோள வெப்பநிலை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

Afbeeldingsresultaat voor climate change

புவிவெப்பமடைதல்

புவியினுடைய வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்தல் புவி வெப்பமடைதல் எனப்படும். அதாவது இயற்கையான காரணிகளினாலும் மனித நடவடிக்கைகளினாலும் வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிப்பதனால் புவியின் வெப்பநிலை அதிகரித்தல் புவிவெப்பமடைதல் எனப்படுகின்றது.  பச்சைவீட்டு விளைவில் செல்வாக்குச் செலுத்தும் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்தல் இந்தப் புவிவெப்பமடைவதற்கு பிரதான காரணமாகும். பச்சை வீட்டு வாயுக்களான CO2, CH4, N2O, NOxபோன்றவற்றின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரிக்கப்படுவதனால் வெப்பசக்தியை புவிக்கு உறிஞ்சி வைத்துக் கொள்ளும் திறனும் அதிகரிக்கின்றது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கின்றது. கடந்த 2000 – 2012 ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலப்பகுதியினுள் 0.8 OC வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4 OC வெப்பநிலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

வளிமண்டலத்தில் அதிகளவில் பச்சைவீட்டு வாயுக்களான காபனீரொட்சைட், மெதேன், நைதரசன் ஒட்சைட்டு ஆகிய வாயுக்களின் செறிவு அதிகரிக்கின்றபோது அவை வெப்பநிலையை அதிகரிப்பதில் செல்வாகுக்குச் செலுத்தும். அண்மைக்காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு ஆரம்பத்தில் இருந்தததை விட அதிகரித்துவருவதனை அது பற்றிய அவதானிப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன.

காபனீரொட்சைட்டின் செறிவு வருடமொன்றிற்கு ஏறக்குறை 0.2 சதவீதத்தினால் அதிகரித்து வருகின்றது. காபனீரொட்சைட்டில் ஏற்படுகின்ற 10 சதவீதமான அதிகரிப்பு உலகின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையின் 0.03 சதவீதமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டின் செறிவு ஏறக்குறைய 284 ppm(parts per million) ஆக இருந்தது. 1974 இல் இது ஏறக்குறைய 330 ppm ஆகக் காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இது 379 ppm ஆக அதிகரித்துள்ளது. 2010 ஆண்டில் ஜீலை மாத அவதானிப்புகளின்படி 390.9 ppm ஆக அதிகரித்துள்ளது. 2012 ஜீலை மாதத்தில்  395.77 ppm ஆகவும் உள்ளது.

காலநிலை மாற்றம்

குறித்தவொரு காலப்பகுதியில் அதாவது பத்துவருடம் அல்லது அதற்கும் அதிகமாக, புள்ளிவிபர ரீதியில் காலநிலை மூலக்கூறுகளின் அளவீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை மாற்றம் எனப்படும். அதாவது காலநிலை மூலகங்களான படிவுவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று முதலியவற்றில் உலகரீதியாகவோ அல்லது பிரதேச ரீதியாகவோ வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற மாற்றம் காலநிலை மாற்றம் எனப்படுகின்றது. காலநிலை மாற்றம் என்பது புவியின் பனிக்கட்டியாற்றுக் காலத்திலிருந்து இன்று வரையில் நிகழ்ந்து வருகின்ற ஒரு நிகழ்வாகும். ஆரம்ப காலங்களில் காலநிலை மாற்றத்திற்கு இயற்கைக்காரணிகளே காரணமாகவிருந்ததுடன் காலநிலை மாற்றம் மிகவும் மெதுவானதாகவே காணப்பட்டது. இன்று இயற்கைக் காரணிகளுடன் மானிடச் செற்பாடுகளும் காலநிலை மாற்றத்தில் பெரும்பங்கை செலுத்தி வருகின்றன.

காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு (IPCC) வெளியிட்ட அண்மைய ஆய்வு அறிக்கையொன்றிலே கடந்த 2000 – 2012 ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலப்பகுதியினுள் 0.8OC வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4OC வெப்பநிலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

உலகின் காலநிலை மாற்றத்தில் சூரியக் கதிர்வீசலின் தாக்கம், புவி சுற்றுவட்டப் பாதை மாற்றம், எரிமலைக் கக்குகைகள் முதலிய இயற்கைக் காரணங்களும் அளவுக்கதிகமான வளநுகர்ச்சி, உயிர்சுவட்டு எரிபொருட்களின் தகனம், காடுகள் அழித்தல் போன்ற மனித செயற்பாடுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

Afbeeldingsresultaat voor climate change

காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் இயற்கைக் காரணிகள்:

• சூரிய கதிர்வீசலின் தாக்கம்:- புவியின் இயங்குதன்மைக்குரிய மூலமாக சூரியன் காணப்படுகின்றது. நீண்டகாலரீதியில் மற்றும் குறுகிய காலரீதியில் சூரியனின் சக்தியின் வேறுபாட்டில் அல்லது தீவிரத்தில் ஏற்படும் மாற்றம் உலகின் காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. நீண்டகால ரீதியில் சூரியனின் கதிர்வீசல் தன்மையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனாலேயே இன்று சூரியன் வெளிப்படுத்தும் சக்தியில் 70 சதவீதமே ஆரம்பத்தில் சூரியன் வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் சிறிய காலப்பகுதியிலும் சூரியனால் புவிக்கு வெப்பவேறுபாடு ஏற்படுகின்றது. இவற்றுள் 11 வருடகால சூரிய சுழற்சிக் காலம் முக்கியமானதாகும்.  இது சூரியப் புள்ளி நடவடிக்கை எனவும் அழைக்கப்படும். இவ்வாறு 11 வருட சூரியசுழற்சிக் காலத்தின்போது குறைந்த அட்சரரேகைகளில் வெப்பத்தையும், அதிக அட்சர ரேகைகளில் குளிர்ச்சியையும் ஏற்படுகின்றது. சூரிய சக்தியின் வெளிப்பாட்டில் உண்டான மாறுதல்களாலேயே, புவியில் சிறுபனிக்காலம் உருவானதற்கும், 1900 இலிருந்து 1950 வரை வெப்பம் அதிகரித்ததற்கும் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

•  புவிக்கோள் பாதையில் மாற்றங்கள்:- புவியின் கோள்பாதையில் ஏற்படும் சிறு மாறுபாடுகளே சூரிய ஒளியானது பருவம் சார்ந்த வினியோகத்தின் விளைவாக புவியின் மேற்பரப்பை அடையும் செயற்பாடு மற்றும் அது புவியின் பல பகுதிகளில் எவ்வாறு வினியோகமாகிறது என்பனவற்றில் மாற்றங்களை விளைவிக்கின்றது. இதனால் வருடாந்த சராசரி வெப்பநிலையில் குறைந்தளவான மாற்றமே ஏற்படுகின்றபோதிலும், நிலவியல் மற்றும் பருவம் சார்ந்த வினியோகங்களில் மிகவும் பாரியளவிலான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.  புவியின் சுற்றுவட்டப்பாதை மாற்றங்கள் மூன்றுவகையில் காணப்படுகின்றன. புவியின் மையவிலகல், புவியின் சுழற்சி அச்சுச் சாய்மானக் கோணத்திலான மாற்றங்கள், புவியச்சின் முந்துகை என்பனவே அந்த மாற்றங்களாகும். இவை அனைத்தும் இணைகையில் மிளங்கோவிச் சுழற்சியினை உருவாக்குகின்றது. இந்த மிளங்கோவிச் சுழற்சி தட்ப வெப்பநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது பனியாறாக்கம், சகாராவின் தோற்றம் என்பவற்றுடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றது.

• எரிமலை வெடிப்புக்கள்:- புவியின் உட்பகுதியிலுள்ள பாறைக்குழம்பானது புவியோட்டுப்பாறைகளின் பலவீனப் பிளவுகளினூடாக வெளியேறுதல் எரிமலை வெடிப்பு எனப்படுகின்றது. எரிமலைகள் சல்பர் ஒக்சைட்டு, காபனீரொட்சைட்  போன்ற வாயுக்களை வெளிவிடுவதினால் இவை புவிவெப்பமடைதலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. எரிமலை வெடிப்புக்களினால் வெளியெறுகின்ற சில வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்ந்து சூரிய ஒளி புவியை வந்தடைவதை தடைசெய்கின்றன. இதனால் சில வருடங்களுக்கு குளிர்வையும் உண்டாக்குகின்றன. 1951ஆம் ஆண்டில் பினாடுபோ எரிமலை வெடித்து உலக ரீதியாக 0.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை குறைவடைவதற்கு காரணமாகியது. 1915 ஆம் ஆண்டு தம்போரா எனும் எரிமலை வெடித்ததனால் கோடைகாலம்  இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கியது.

• கடற்பரப்பு வேறுபாடுகள்:- கடல்மேற்பரப்பல் ஏற்படுகின்ற வெப்பநிலையுடன் தொடர்புபட்ட மாற்றங்களும் காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏனெனில் சமுத்திர நீரானது ஆவிநிலையில் வளிமண்டலத்தில் பச்சைவீட்டு விளைவுக்கு உதவுகின்றவையாகும். கடலில் வெப்பநிலை அதிகரிக்குமாயின் வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும். கடல் மேற்பரப்பில் ஏற்படுகின்ற வெப்பநிலை வேறுபாடுகளில் எல்-நினோ, லா-நினா என்பன முக்கியமான நிகழ்வுகளாகும். எல்நினா வேளையின்போது பசுபிக் பிரதேச கடற்பரப்பு வெப்பநிலை உயர்வடைகின்றது.

• பச்சைவீட்டு விளைவு:- சூரியனிலிருந்து புவிக்கு கிடைக்கும் சூரியக் கதிர்வீச்சின் மூலமான வெப்பத்தை பச்சை வீட்டு வாயுக்கள் என அழைக்கப்படும் காபனீரொட்சைட் முதலிய வாயுக்கள் உறிஞ்சிக்கொண்டு புவிக்குத் தேவையான வெப்பத்தை தொடர்ந்துபேணுதல் பச்சை வீட்டு விளைவு (Green House Effect)எனப்படுகின்றது. இயற்கையாகவே வளிமண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் செறிந்திருக்கும் இப் பச்சைவீட்டு வாயுக்களால் எமது பூமிக்கு போதுமான வெப்பம் கிடைத்து வருகின்றது. ஆனால் இன்று பல்வேறு நடவடிக்கைகளினால் பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிப்பதனால் பச்சைவீட்டு வாயுக்களால் உறிஞ்சப்படுகின்ற வெப்பநிலையின் அளவு அதிகரிப்பதனால் புவியினுடைய வெப்பநிலை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

Afbeeldingsresultaat voor climate change

காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் மானிடக் காரணிகள்:

• குளோரோ புளோரோ காபண் வளிமண்டலத்தில் சேர்தல்:- குளோரோ புளோரோ காபண் ஒரு பச்சைவீட்டு வாயுவாக இருப்பதுடன் அது ஓசோன் படையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான வாயுவாகும். இந்த CFC வாயுவானது பல்வேறு விதத்தில் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியின்போது இயந்திரங்களால் வெளியேற்றப்படுதல், வளிகுளிரூட்டல் (Refrigerator,  Air Container)   செயல்முறையின் போது வெளியேற்றப்படுதல், கணனி உதிரி பாகங்கள் சுத்தம் செயன்படுத்தும் திரவங்களிலிருந்து வெளியேற்றப்படுதல் முதலிய முறைகளில் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றது.

•  உயிர்சுவட்டு எரிபொருட்களின் பாவனை:- உயிர்சுவட்டு எரிபொருட்களான பெற்றோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி போன்றவற்றை பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகின்றபோது புவிவெப்பமடைதல் அதிகரிக்கின்றது. தொழிற்சாலைகள், வாகனங்கள் முதலியன உயிர்சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவில் பச்சை வீட்டு வாயுக்கள் சேர்கின்றன. மேலும் வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பெற்றோலியப் பொருட்கள் தகனமடைகின்றபோது காபனீரொட்சைட்டு போன்ற வாயுக்கள் சேர்கின்றன. கைத்தொழில் நடவடிக்கைகள், வாகனப்பாவனை முதலியவற்றால் 1.4 பில்லியன் காபனீரொட்சைட்டு வளிமண்டலத்தில் வெளிவிடப்பட்டிருக்கின்றது.

• தாவரப்போர்வை அழிக்கப்படுதல்:- இயற்கைத் தாவரங்கள் ஒளித் தொகுப்பின்போது காபனீரொட்சைட்டு வாயுவை சுவாசித்து ஒட்சிசன் வாயுவை வெளிவிடுகின்றன. அத்துடன் இவை நைதரசன் வட்டத்திலும் பங்களிக்கின்றன. இதனால் காபனீரொட்சைட்டு மற்றும் மிகையான நைதரசன் போன்ற வாயுக்களின்அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் காடழிக்கப்படுகின்ற போது இவை அதிகளவில் வளிமண்டலத்தில் சேர்வதற்கு வழி எற்படுத்தப்படுகின்றது. காடுகள், புற்றரைகள் என்பன பயிர்ச்செய்கை முதலிய காரணங்களுககாக வெட்டி எரிக்கப்படுகின்றன. இவை வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்களை சேர்க்கின்றன.

• மந்தை மேய்த்தல்:- அசைபோடும் விலங்குகளை மேய்க்கின்றபோதும் அவற்றிலிருந்து வெளியேறும் மெதேன் போன்ற வாயுக்கள் வெப்பநிலை அதிகரிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக மாடுகள், எருமைகள், குதிரைகள், கழுதைகள், கோழி, பன்றி, தாரா முதலியன தமது வாய்மூலமும் எருமூலமும் மெதேன் வாயுவை வெளியேற்றுகின்றன. மெதேன் வாயு பச்சைவீட்டு வாயு ஆகையால் அதிகளவில் வளிமண்டலத்தில் சேர்ந்து வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிசமைக்கின்றது.

• நெல்லுற்பத்தி:- சதுப்புத் தன்மையுள்ள நெற்காணிகளை நீர்நிரப்பி பயன்படுத்துகின்றபோது அந்நிலத்திலிருந்து வளிமண்டலத்திற்கு மெதேன் வாயு வெளிவிடப்படுகின்றது. இதனால் புவிவெப்பமடைதல் அதிகரிக்கின்றது.

• விவசாயக் கழிவுகளை எரித்தல்:- விவசாயக் கழிவுகளை அதிகளவில் எரிப்பதனாலும்CO2, CH4, N2O, NOxபோன்ற வாயுக்கள் சேர்கின்றன. இவை யாவும் பச்சைவீட்டு வாயுக்களாகையால் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிஏற்படுத்துகின்றன.

• தின்மக்கழிவுகள் சேருதல்:- அதிகரிக்கின்ற கழிவுகளை கொட்டுதல், நிலம்நிரப்புதல் போன்ற செயற்பாடுகளினூடாகவும் வளிமண்டலத்திற்கு மெதேன் வாயு கிடைப்பதற்கு ஏதுவாகின்றது.

Afbeeldingsresultaat voor climate change

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்:

• மழைவீழ்ச்சி மாற்றம்:- புவிவெப்பமடைவதனால் ஈரவலயங்கள் வரண்ட வலயங்களாகவும், அதேபோன்று வரண்ட வலயங்கள் ஈரவலயங்களாகவும் மாற்றப்படலாம். படிவு வீழ்ச்சி நிலைமைகளை நோக்குகின்றபோது சுமார் 1960 களிலிருந்து இன்றுவரை பூகோள ரீதியாக பாரிய மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. வடதென் அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகள், வடஐரோப்பா, வட மற்றும் மத்திய ஆசியா ஆகிய பிராந்தியங்களில் 1900- 2005 இற்கும் இடையில் படிவுவீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதேவேளை மத்தியதரைக்கடற் பிராந்தியம், தென்ஆபிரிக்கா, தென் ஆசியாவின் சில பகுதிகள் என்பவற்றில் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகரீதியாக 1970 களிலிருந்து வரட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

• வெப்பநிலை உயர்வடைதல்:- புவிவெப்பமடைதல் மூலம் ஏற்படுகின்ற முக்கியமான பாதிப்பு புவியின் வளிமண்டல வெப்பநிலை உயர்ச்சியடைதல் ஆகும்.  கடந்த 2000 – 2012 ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலப்பகுதியினுள் 0.8OC வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4OC வெப்பநிலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. பச்சைவீட்டு வாயுக்கள் அதிகளவில் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்வதனால் இந்த நிலைமை ஏற்படுகின்றது.

•  பனி உருகுதல்:- புவிவெப்படைதலினால் பனிக்கட்டிக் கவிப்புகள் உருகும் நிலை ஏற்படும். உறைநிலை அல்லது அதற்குக் கீழே வெப்பநிலை காணப்படும்போதே பனிக்கட்டிகள் திண்ம நிலையில் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கின்றபோது பனிக்கட்டிகள் திண்மநிலையிலிருந்து திரவநிலைக்கு மாறும். இந்த நிலைமை வெப்பநிலை அதிகரிப்பதனால் ஏற்படும். எதிர்வரும் 2040 ஆண்டளவில் அந்தாட்டிக் பகுதிகள் பனியற்ற கோடைகாலத்தை உணரும் என எதிர்வுகூறப்படுகின்றது. அமெரிக்காவிலுள்ள பனிக்கட்டி தேசிய பூங்காவில் 1910 இல் காணப்பட்ட பனிக்கட்டிக் கவிப்பில் 20 சதவீதமான பனிக்கட்டிக் கவிப்புகளே 2012 ஆம் ஆண்டில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை 2004 ஆம் ஆண்டில் இமயமலையின் மேல்படிந்துள்ள பனிக்கட்டியானது வருடாந்தம் 4 அங்குலம் தடிப்பினால் குறைந்துவருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

• கடல்மட்டம் உயர்வடைதல்:- கடல் மட்ட வெப்பநிலையானது பல தசாப்தங்களாக சராசரி 1OC இற்கு மேல் அதிகரித்துள்ளது. இக்கடல் மட்ட வெப்பநிலை உயர்வு எல்நினோ நிகழ்வுகளின் போது 3OC ஆக அதிகரிக்கின்றது. இதனால் முனைவுப் பனிப்படலம் குறிப்பாக ஆட்டிக் பனிப்படலம், 2.3 மீற்றர் வரை உருகி கடந்த நூற்றாண்டில் கடல்மட்டத்தை 1.3 மில்லிமிற்றரினால் உயரச் செய்துள்ளது. இது ஆட்டிக் பகுதியில் படர்ந்திருக்கும் மொத்தப் பனியில் 40 சதவீதமாகும். கடல்மட்ட உயர்வு காரணமாக இன்று கரையோர ஈரநிலங்கள் பல கடலுள் மூழ்கிவருகின்றன. தொடர்ச்சியான இந்நிகழ்வுகளினால் உலகின் மொத்த ஈரநிலங்களில் 20 சதவீதம் 2080 ஆம் ஆண்டளவில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது. 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 23 அங்குலம் கடல்மட்டம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாலைதீவுகள், பசுபிக் தீவான ரிகுவா என்பன கடலுள் மூழ்கிவிடும் எனக் கூறப்படுகின்றது.

• உயிர்பல்லினத்தன்மை குறைவடைதல்:- காலநிலை மாற்றமும் பூகோள வெப்பமயமாதலும் உயிரின பல்வகைமை இழப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றபோது அதன் தீவிரத்தை தாங்கமுடியாத விலங்கினங்கள் உயரிழக்கின்றன. குறிப்பாக டைனோசர் முதலிய உயிரினங்கள் வெப்பநிலை அதிகரிப்பால் அழிவடைந்தன என்று கூறப்படுகின்றது. இதேவேளை சர்வதேச சமுத்திர வளிமண்டலவியல் அமைப்பின் அந்தாட்டிக் பகுதியில் நடாத்திய சூழல்தொகுதி பற்றிய ஆய்விலே 50 சதவீதமான பென்குயின் பறவைகள் புவிவெப்பமடைதலினால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றது.

Afbeeldingsresultaat voor climate change

• தொற்றுநொய்கள் பரவுதல்:- வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வரண்ட பிரதேசங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்குகளால் தொற்றுநொய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றபோது ஒட்டுண்ணிகள், வைரஸ், பக்டீரியாக்கள் அதிகளவில் விருத்தியடைவதற்கு வழிசமைக்கின்றது. மலேரியா, யானைக்கால் நோய்கள், லைம் நோய், ஹண்டாவைரஸ் தொற்றுக்கள், டெங்குக் காய்ச்சல், புபோனிக் பிளேக், மற்றும் காலரா ஆகிய நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

•  இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல்:- வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக வரட்சி. சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் உருவாக்கம் மிக அதிகளவில் காணப்படும். கடந்த காலப்பகுதிகளில்  அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஏற்பட்ட அதிகளவிலான சூறாவளிகளின் உருவாக்கத்தில் பூகோள வெப்பநிலை அதிகரிப்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது. அத்துடன் நவம்பர் மாதங்களிலேயே ஏற்படுகின்ற சூறாவளி நிலைமை தற்போது மாற்றமடைந்து வருடத்தின் ஏணைய காலப்பகுதிகளிலும் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மியன்மாரில் 2008 ஆம் ஆண்டு தாக்கிய நர்கீஸ் சூறாவளி மே மாதத்தில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் வரண்ட பிரதேசங்களில் திடீரென பெய்கின்ற மழைவீழ்ச்சியின் காணமாகவும், மலைப்பனி உருகி நதிகளுடன் கலப்பதாலும் அதிக பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் மியாமி, நியுயோர்க் மற்றும் ஒர்லியன்ஸ் முதலிய பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும்.

•  மனித உணர்வில் மாற்றம் ஏற்படல்;- வெப்பநிலை அதிகரிப்பதனால் உடலியல் ரீதியாக அது பல்வேறு தாக்கங்களை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றது. இதனால் மன உணர்வுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. குறிப்பாக மனஅழுத்தம், கோபம் போன்ற குணங்கள் மேலோங்குவதற்கும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைகள் குறைவடைவதற்கும் இது வழிசமைக்கும். மேலும் உடல் எரிவு, சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

• மீன்பிடி பாதிக்கப்படல்:- வீழ்ச்சியடைந்து செல்கின்ற சமுத்திர சுற்றோட்டங்கள் நலிவடைந்த சமுத்திர எழுச்சிகள் ஒரு சில வளமான மீன்பிடித்தளங்களைச் சுற்றி ஏற்படுகின்ற போசாக்கு குறைநிரப்பு நிலை என்பன மீன் உற்பத்தியில் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

• விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு:- காலநிலையில் ஏற்படும் தளம்பல் போக்குகள் பயிர்ச்செய்கை உற்பத்திகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது உற்பத்தி குறைவு, பொருளாதார இழப்புகள் என்பவற்றிற்கு வழிவகுப்பதுடன் விவசாயத்தில் நேரடியாக பெருமளவு குடித்தொகை தங்கியுள்ள வளர்முக நாடுகளில் வறுமை, பட்டினி போன்றன இடம்பெறுவதற்கு வழிசமைக்கும்.

• நீர்நிலைகள் வற்றும்:- காலநிலையானது வரட்சியடையும்போது உளளுர் ஏரிகள், நதிவடிகால்கள், குளங்கள் என்பவற்றின் நீர்மட்டங்கள் விரைவாக குறைந்து விடுகின்றன. இது குறிப்பிட்ட பிரதேசத்தின் நீர்ப்பாசன நடவடிக்கைகள், நீர்மின்சார நடவவடிக்கைகள் மற்றும் உள்ளுர் கப்பற் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

•  வெப்பமாக்குவதற்கான சக்தி நுகர்வு வீழ்ச்சியடைதலும், குளிரூட்டுவதற்கான சக்தியின் கேள்வி அதிகரித்தலும்.

•   வெப்பத்துடன் தொடர்புடைய இறப்பு வீத அபாய அதிகரிப்பு. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், சிறுவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுதல்.

Cow-Dead

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்:

• காலநிலை மாற்றத்தில் முக்கியமாக பங்கு வகிப்பது காலநிலை மூலக்கூறான வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே அகும் எனவே வெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணங்களை கட்டுப்படுத்துகின்றபோது காலநிலை மாற்றத்தின் பெருமளவிலான விளைவினைக் குறைத்துக்கொள்ளமுடியும்.

• புவிவெப்பமடைவதைக் குறைப்பதற்கு வளிமண்டலத்தில் பச்சைவீட்டு வாயுக்கள் மிகையாகச் சேருவதனைக் குறைக்கவேண்டும். குறிப்பாக மேலதிக காபனீரொட்சைட் சேர்வதனை தடுக்குமுகமாக சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். அத்துடன் தற்போதுள்ள காபனீரொட்சைட்டின் அளவினைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

•  தாவரங்களை நடுதல்:- தாவரங்களை நடுவதனூடாக புவிவெப்பமடைதல் குறைக்கப்படுகின்றது. தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள காபனீரோட்சைட்டை உறிஞ்சிக்கொள்வதுடன், ஒட்சிசனையும் வெளிவிடுகின்றது. காடழிப்பினுடைய விளைவுகளைச் சமநிலைப்படுத்துவதற்கு தாவரங்களை நடுதல் உதவி புரிகின்றது.

•  சக்தி சேமிப்பு கருவிகளின் பயன்பாடு:- சக்தி சேமிப்பு கருவிகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் புவிவெப்பமடைதல் மட்டுமன்றி சக்திப் பயன்பாட்டிற்குரிய சக்திச் செலவீட்டிற்குரிய பணத்தினையும் அரைவாசியாகக் குறைத்துக்கொள்ளமுடியும்.  தற்போது மின்குமிழ்கள் மிகவும் குறைந்த சக்தியை வெளியிடக்கூடியவாறு தயாரிக்கப்படுகின்றன.

•  மீள்புதிப்பிக்கக்கூடிய சக்தியின் பாவனை:- உயிர்சுவட்டு எரிபொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து மீள் புதுப்பிக்கக்கூடிய சக்திவள மூலாதாரங்களான சூரியசக்தி, காற்று, கடல் அலை, நீர் முதலியவற்றை விருத்தி செய்து பயன்படுத்துவதனூடாகப் புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தலாம். சூரிய சக்தியில் இயங்குகின்ற உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சக்தியை மீதப்படுத்துவதுடன், சூழலுக்கு நேசமான பயன்பாட்டு முறையாகவும் அமையும்.

Afbeeldingsresultaat voor climate change

• மோட்டார் வாகனப் பாவனையைக் குறைத்தல்:- வாகனத்திலிருந்து வெளியேறுகின்ற புகைகள் காபன் வெளியேற்றத்திற்கான பிரதான காரணியாக அமைவதனால் புவிவெப்பமடைவதற்கு வழிவகுக்கின்றது. அந்தவகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதுடன், குறுகிய தூரப் பயணங்களுக்கு மோட்டார் வாகனப் பாவனையைக் குறைத்தல். குநை;த தூரத்தை நடந்து செல்லல், துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலம் புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தலாம்.

•  மீள்சுழற்சி, மீள்பாவனை, குறைத்தல்:- தின்மக்கழிவு முகாமைத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற  3-R System இன் அடிப்படையான மீள்சுழற்சி, மீள்பாவனை, குறைத்தல் ஆகிய நடiமுறைகளைப் பின்பற்றுவதனூடாகவும் புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தலாம். கண்ணாடி, கடதாசி , உலோகம் முதலிய பொருட்களின் மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி என்பவற்றின் மூலம் 80 சதவீதம் சக்தியைச் சேமிக்கமுடிவதுடன், புதிய பொருட்களை தயாரிப்பதனால் ஏற்படுகின்ற மாசுபடுதலையும் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக கடதாசி உற்பத்திகளை மீள்சுழற்சி செய்வதனூடாக கடதாசி உற்பத்திகான காடழித்தலைக் கட்டுப்படுத்துவதுடன், அது புவிவெப்பமடைவதையும் குறைத்துக்கொள்ளும்.

•  காபன் வட்டம் பற்றி அறிவுறுத்தல்:- வளிமண்டலத்தினை வந்தடைகின்ற காபனீரொட்சைட்டுக்கும் அங்கிருந்து வெளியேறுகின்ற காபனீரொட்சைட்டிற்கும் இடையில் வேறுபாடு காணப்படாதவாறு காபன் வட்டம் செயற்படுகின்றது. ஆனால் மேலதிகமாக காபன் சேர்கின்றபோது காபன் வட்டச் செயன்முறையில் குழப்பம் ஏற்படுகின்றது. எனவே காபண் வட்டத்தின் சமநிலையைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

•   விழிப்புணர்வூட்டல்:- காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சூழற்தொகுதி பாதிப்புகள் பொருளாதார, சமூக, அரசியல் தாக்கங்கள் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினராலும் தெரிந்து கொள்ளப்படவேண்டும். வெகுசன ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகரித்து வருகின்ற காபனீரொட்சைட்டின் மட்டத்தின் பாதகமான விளைவுகள் பற்றி எல்லோரும் அறியத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தொலைக்காட்சி, பத்திரிகைகள், சுவரொட்டிகள் முதலியவற்றிற்கூடாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

•   அவதானிப்புகளும், எதிர்வுகூறல்களும்:- அதிகரித்துச் செல்கின்ற வளிமண்டல காபனீரொட்சைட்டின் காலநிலை விளைவுகள் பற்றிய மிகவும் செம்மையான எதிர்வுகூறல்கள், உலகரீதியான வளிமண்டலவியல் தரவுகளின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Tags: