‘காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு’ – என்ற ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

பிரமிளா கிருஷ்ணன்

காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு - ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

(லகம் முழுவதும் காற்றாலை மின்சாரம் என்பது பிரபலமாகி வருகிறது. காற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. அத்துடன், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளுக்கு செலவு செய்வது போன்று இந்த மின்சக்திக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்த மின்சக்திக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
காற்றின் வேகத்தில் இறக்கைகளை சுழலச் செய்து அதன் மூலமாக ஜெனரேட்டரில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல் சிக்கனமாதும் கூட என்பதால் இந்த மின் உற்பத்திக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது)

மிழ்நாட்டிலுள்ள மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் காற்றாலை மின்கம்பங்கள் உள்ள இடங்களில் பறவைகள் விலகிச்செல்வதால், பல்லிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அங்கு உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர் மரியா தாகூர் மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்கள் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்திய ஆய்வில், காற்றாலை மின்கம்பங்கள் இருக்கும் இடங்களில், பல்லிகளை பறவைகள் உண்பதில்லை என்பதால் பல்லிகள் வெகு எளிதாக நடமாடுகின்றன என்றும் அங்கு உணவுச்சங்கிலியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பதிவு செய்துள்ளனர்.

உலக அளவில் காற்றாலை மின்சக்தி தயாரிப்பில் இந்தியா நான்காம் இடத்தை வகிக்கிறது என்கிறது இந்திய அரசாங்கத்தின் தரவுகள்.

காற்றாலை மின்சக்தி தயாரிப்பை அதிகரிக்க அரசு திட்டங்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளும் அதிகரித்துவரும் வேளையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, காற்றாலை சக்தி தூய்மையான மின்சக்தியா என்ற விவாத்திற்கும் இட்டுச்செல்கிறது.

ஆய்வாளர் மரியா, சாதாரண இடங்களை விட காற்றாலை மின்கம்பங்கள் உள்ள இடத்தில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் பல்லிகள் உள்ளன என்கிறார்.

”காற்றாலை மின்கம்பங்கள் இருக்கும் இடத்தில், பருந்து உள்ளிட்ட பெரிய பறவைகள் , மற்ற உயிரிகளை உணவாக கொள்ளும் பறவைகள் வருவதில்லை. இதனால் அங்குள்ள உணவு சங்கிலியில் பறவைகளின் இடம் காலியாகிவிட்டது. பறவைகள் வருவதில்லை என்பதால், பல்லிகள் உண்ணப்படுவதில்லை. இதன்காரணமாக பல்லிகள் அங்கு நிறைந்துள்ளன. அந்த பல்லிகள் மனிதர்களின் நடமாட்டம் இருந்தால்கூட அஞ்சுவதில்லை. சுற்றுச்சூழலில் ஒவ்வொரு உயிரினத்தின் இருப்பும் அவசியம். சின்ன உயிரிகளை உணவாக கொள்ளும் பறவைகள் இல்லாமல்போனால், அங்கு நம்மால் கணிக்கமுடியாத அளவு மாற்றங்கள் ஏற்படும்,’ ‘என்கிறார் மரியா.

பல்லியுடன் ஆய்வு குழுவினர்
பல்லியுடன் ஆய்வு குழுவினர்

மரியாவின் ஆய்வு முடிவுகளை எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள தேசிய காற்றாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.பலராமனை சந்தித்தோம்.

காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறதா, சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுகிறதா என சமீபத்தில் மத்திய அமைச்சகம் ஒரு ஆய்வை நடத்தியது என்கிறார் அவர்.

”பறவைகளுக்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் வெளியாவதால், எங்கள் அமைச்சகம் கோவை சலீம்அலி பறவையியல் ஆய்வு நிறுவனத்திற்கு நிதி அளித்து ஒரு பிரத்யேக ஆய்வை கர்நாடகாவில் நடத்தியது. அதன் விவரங்களின் படி, நேரடியாக காற்றாலை மின்கம்பங்களால் பறவைகள் இறப்பதில்லை. பறவைகள்,விலங்குகள் காற்றாலை மின்கம்பங்கள் இருப்பதால் விலகி செல்கின்றன, அதாவது, அந்த இடங்களில் அவை காணப்படுவதில்லை. இந்த பாதிப்பை கணக்கிட்டால் சுமார் 0.1% பாதிப்பாக மட்டுமே இருக்கும். மேலும் இதுபோன்ற ஆய்வுகளில் காற்றாலை மின்கம்பங்கள் வைக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த காலத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வுகள் வெளியாவதில்லை என்பதால், தற்போது உள்ள எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியானதாக இருக்காது,” என்றார்.

காற்றாலை மின்கம்பங்கள் உயரம் 200 மீட்டர் என்றும் பறவைகளின் பறக்கும் உயரம் என்பது அதைவிட அதிகமானதாக இருக்கும் என்பதனால், மின்கம்பங்களால் அவை பாதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

”காற்றாலை மின்கம்பங்களில் உள்ள விசிறிகளில் உள்ள வண்ணம் பறவைகளுக்கு அங்கு போகக்கூடாது என்ற சமிக்கையை கொடுக்கும் வண்ணத்தில் இருக்கும் என்பதால், பறவைகள் அங்கு வராது. சுற்றுச்சூழலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மின்சக்தியாக,காற்றாலை உள்ளது. குறைந்த காலத்தில் ஆய்வு நடத்துவதற்கு பதிலாக நீண்ட கால அளவுகளை கொண்டு பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு பாதிப்புகள் உள்ளதா என கண்டறிந்தால் அது சரியான முடிவாக இருக்கும்,” என்றார் பலராமன்.

காற்றாலை நிபுணர்கள் கூறுவது போல, நேரடியாக பறவைகள் மின்கம்பங்களில் மோதி இறப்பதில்லை. ஆனால் மின்கம்பங்கள் இருப்பதாலே பறவைகள் அந்த இடத்தை நெருங்குவதில்லை என்பதைத்தான் தனது ஆய்வு கூறுகிறது என்கிறார் மரியா. ”ஒரு இடத்தில் பறவைகள் இல்லாமல் போனால் உணவு சங்கிலியில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை எடுத்துரைத்துள்ளோம்,” என்று விளக்குகிறார் மரியா.

காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு - ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

காற்றாலை மின்சக்திக்கு எப்போதும் ஆதரவாளராக இருப்பதாக கூறும் மரியா, ”இந்த ஆய்வில் காற்றாலை மின்கம்பங்கள் வைப்பதற்கு முன், வைத்தபின் என இரண்டு காலத்தில் எனது ஆய்வு நடத்தப்படவில்லை. பல இடங்களில் காற்றாலை மின்கம்பங்கள் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்டன. எந்தவித முன்நிபந்தனைகளை வைத்துக்கொண்டும் ஆய்வை நடத்தவில்லை. மற்ற மின்சக்தி தயாரிப்புகளை காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் காற்றாலை உள்ளது என்றபோதும், அதை மேலும் முறைப்படுத்தவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்,” என்கிறார்.

மரியாவின் ஆய்வு முடிவுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற ஆய்வாளர்கள், காற்றாலை மின்சக்தி உற்பத்தியாளர்கள் என பலரிடமும் பேசினோம்.

அதில் இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரிரங்கனிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. காற்றாலை மின்சாரத்திற்கு எதிராக ஆய்வுகள் வருவது வாடிக்கைதான் என்று கூறும் கஸ்தூரிரங்கன், கடந்த முப்பது ஆண்டுகளாக காற்றாலை மின்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்.

”காற்றாலை மின்கம்பங்கள் விளைநிலங்கள் அல்லாத, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில்தான் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பறவைகள் உள்ளிட்ட பிற உயிரனங்கள் பல்கி பெருக்குவதற்கான வளமான இடமில்லை என்பதால், இங்கு அச்சம் தரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டு மின்கம்பங்களுக்கு மத்தியில் 400 மீட்டர் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்பதால், பறவைகள் பறக்கும்போது எந்த பாதிப்பும் நேராது. பல கிராமங்களில் இந்த காற்றாலை மின்கம்பங்கள் வைக்கப்பட்ட பின்னர்தான், சாலைவசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு, அடிப்படைவசதிகள் பெருகின. சமூக, பொருளாதார வளர்ச்சியை தரும் காற்றாலை மின்கம்பங்கள் சுற்றுசூழலுக்கு எதிரானது அல்ல,” என்கிறார் கஸ்தூரிரங்கன்.

”மின்சாரத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களை நாம் நம்பியிருக்கக்கூடாது. சோலார் மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மட்டுமே நம்மை சுயசார்புடன் இருக்க தேவையான ஒன்றாகும். இந்த நிறுவனங்கள் காற்றாலை மின்சாரத்திற்கு எதிரான ஆய்வுகளுக்கு நிதியளிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது,” என்கிறார் அவர்.

எண்ணெய் நிறுவனங்கள் அல்லது நிலக்கரி நிறுவனங்கள் நிதி அளிக்கவில்லை என்று கூறும் மரியா, அவரது ஆய்வு வெளியானதை அடுத்து, காற்றாலை நிறுவனங்கள் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து பேச முன்வந்தன என்கிறார்.

”காற்றாலை நிறுவனங்கள் சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எவ்வாறு சரிசெய்வது என கலந்து பேச ஒத்துழைக்கிறார்கள். இந்த முன்னெடுப்புகள் காற்றாலை மின்சக்தியை மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் என நம்புகிறேன்,” என்கிறார் மரியா.

பிபிசி தமிழ்
5 மே 2019

Tags: