குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் வடிவத்தில் சமீபத்தில் மதச்சார்பின்மை மீதும் அரசமைப்புச் சட்டத்தின்மீதும் ஆட்சியினரால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், நாடு முழுதும் கடும் எதிர்ப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்கள் முழுவதிலும், (இதில் அஸ்ஸாம் முன்னணியில் இருக்கிறது) மக்களின் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது, இணைய தள இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றால் எல்லாம் அனைத்துத்தரப்பு மக்களும் இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்திட முடியவில்லை.
பாஜக மாநில அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம், அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் இருந்த 1971 காலக்கெடு தேதியை (cut off date) பயனற்றதாகச் செய்திருப்பதன் மூலம், தங்களின் கேந்திரமான நலன்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டதாகவே அஸ்ஸாம் மக்கள் இதனைப் பார்க்கின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இதில் மிகவும் விரிவான அளவில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து கிளர்ச்சிகளைச் செய்து வருவதாகும். மாணவர்களின் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன. அரசமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்கான ஒரு மாணவர் இயக்கமாக இது இருப்பதுடன், ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. மேலும் இந்தக் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்களில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) போன்ற தொழில்முறை கல்வி நிறுவனங்களில் (professional institutions) படிக்கும் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வெளிவந்திருப்பது, உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, மாணவர்கள் மீது மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதும், நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளையும், வெளியே இழுத்துவந்து அடித்து நொறுக்கி இருப்பதும் மோடி அரசாங்கமானது எந்த அளவிற்கு மோசமாக மாணவர் சமுதாயத்தைப் பார்க்கிறது என்பதற்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய உதாரணமாகும். முன்பு இதேபோன்றுதான் காவல்துறையினர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டார்கள். அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வளாகமும் இதேபோன்று காவல்துறையினரின் அத்துமீறல்களின் வெட்கக் கேடான காட்சிகளைப் பார்த்தது. இங்கே காவல்துறையினர் ஸ்டன் கையெறி (stun grenade) குண்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா இக்கிளர்ச்சிகள் குறித்து எதேச்சாதிகாரம் மற்றும் மதவெறித் தொனியில் மிகவும் விநோதமான முறையில் கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மோடி, “தீ வைப்பவர்களை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளின் மூலம் அடையாளம் காண முடியும்,” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர், முஸ்லீம்கள்தான் இவ்வாறு பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகப் பொருள்தரும் விதத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். மேலும் அவர், மாணவர்களை “அர்பன் நக்சல்கள்” அவர்களை, அவர்களுடைய கொடிய குறிக்கோள்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார். அமித் ஷா, “அவர்கள் அவர்களால் விரும்பக்கூடிய அளவுக்கு எதிர்ப்பினைக் காட்டட்டும், ஆனால் சட்டத்தில் ஒரு சிறுதுளி கூட மாற்றம் செய்யப்பட மாட்டாது,” என்று பிரகடனம் செய்திருக்கிறார். நிர்மலா சீத்தாராமனும் “ஜிகாதிகள், மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பிரிவினைவாதிகள் மாணவர்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்,” என்று எச்சரித்திருக்கிறார்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, குடியுரிமைக்கான மதச்சார்பின்மைக் கருத்தாக்கத்தையும், அரசமைப்புச்சட்ட விழுமியங்களையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இந்நடவடிக்கையானது அவர்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஒன்று என்பதை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கி இருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை, தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் (NRC) முதல் கட்டத்திற்காக வரவிருக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்கு (NPR) எதிரான போராட்டத்துடன் இணைத்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்: ச. வீரமணி
2019.12.19