கொவிட் எதிரியை வெற்றி கொள்ளத்தக்க சக்திமிக்கதொரு ஆயுதம் தடுப்பூசி மட்டுமே!

Dr. Chandima Jeewandara MBBS, MRCGP (INT), PhD

ன்று உலகமே ஒரு நிலையான போராட்டத்தில் உள்ளது. அது கொவிட்-19 என்ற எதிரியைத் தோற்கடிப்பதற்காகும். அந்த வைரசும் மனித குலத்துக்கு எதிரான போராட்டத்தை இன்னமும் கைவிட்டதாகத் தெரியவில்லை. அந்த வைரஸானது அவ்வப்போது தனது முகத்தை மாற்றிக் கொண்டும், பலமடைந்து

கொண்டும் மனித இனத்தின் வாழ்க்கைப் பயணத்திற்கு பாரிய தடைகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில்தான் மூன்று புதிய திரிபுகளுடனான டெல்டா வைரஸ் தொற்றாளா்கள் உலகில் முதல் தடவையாக இலங்கையில் இனங் காணப்பட்டனர். இது தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கலங்கள் தொடர்பான உயிரியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

கேள்வி: இலங்கையினுள் டெல்டா வைரஸ் பரவல் தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல் என்ன?

பதில்: எமது நிறுவனம் இது தொடர்பில் மேற்கொண்ட சமீபத்திய புதிய மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும், சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் கையளித்திருக்கின்றோம். இந்த ஆராய்ச்சிக்காக 88 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டதோடு, அவற்றில் 84 மாதிரிகள் டெல்டா வகையுடன் தொடர்புடைய மரபணு பகுப்பாய்வு அறிக்கையாகும். விசேடமாக மரபணு பகுப்பாய்வு அறிக்கையினைத் தயாரிக்கும் போது நாம் இந்தத் தடவை கொழும்பு நகரின் மீது அதிக கவனத்தைச் செலுத்தினோம். தற்போது கொழும்பு, மஹரகம, மாலபே, ஹோமாகம, இரத்மலானை, களுத்துறை, பயாகல, அகலவத்தை, ஹோனபொல, பண்டாரகம, நுவரெலியா, வவுனியா, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை, மாத்தறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இந்த டெல்டா தொற்றாளர்களுள் விசேடமாக கொழும்பை உள்ளடக்கியதாகப் பெற்ற மாதிரிகளிலேயே நாம் அதிகமான பகுப்பாய்வினை மேற்கொள்கின்றோம். இதற்கான காரணம் தற்போது இலங்கையின் டெல்டா வகையின் விசேடமான மூன்று திரிபுகள் இனங் காணப்பட்டுள்ளதாகும். அந்த திரிபுகள் தொடர்பிலேயே அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசேடமாக கொழும்பு நகரினுள் இந்த மூன்று திரிபுகளுடனான டெல்டா வகைக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதை காண முடியும். இவ்வாறான மூன்று திரிபுகளுடனான டெல்டா வகை இவ்வாறு இனங் காணப்பட்டது உலகில் முதற் தடவை இலங்கையில் ஆகும். எனவே இது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் இந்நோய்க்குள்ள தாக்கம் எவ்வாறானது?, வைரஸ் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துகின்றது என்பன தொடர்பில் நாம் மிகச் சிறந்த முறையில் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். தடுப்பூசியினால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றது? நாம் இயற்கையாகவே பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றது?

இவை போன்றன தொடர்பில் எம்மால் இப்போது எதனையும் கூற முடியாது. இப்போதைக்கு கூற வேண்டியிருப்பது, இந்த மூன்று திரிபுகளைக் கொண்ட டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் உலகில் முதற் தடவையாக இனங் காணப்பட்டிருப்பது இலங்கையில் என்பதேயாகும். இதன் போது A701S என்ற மரபணு திரிபானது இனங் காணப்பட்டது இலங்கையில் மாத்திரமாகும். A222V என்ற திரிபானது உலகின் பல பகுதிகளிலும் இனங் காணப்படுவதோடு, இந்தத் திரிபுகள் காணப்படும் போது நோய் பரவல், தொற்று ஏற்படுவது அதிகம் என்ற விடயம் தற்போது உறுதியாகிக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் விசேடமாக டெல்டா வகையினால் அதிகளவு பரவல் ஏற்படக் கூடும் என்பதே தற்போதைய ஆரம்ப ஆய்வுகளிலிருந்து உறுதியாகியிருக்கின்றது. அதே போன்று A1078S என்ற திரிபானது உலகில் தற்போது இனங்காணப்பட்டிருப்பது இலங்கையிலும், மலேசியாவிலும் மாத்திரமேயாகும். எவ்வாறாயினும் இது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு நகரை அண்மித்ததாக இந்த மூன்று திரிபுகளுடனான டெல்டா வகை தொடர்பில் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கேள்வி: இவ்வாறு இலங்கைக்கே உரித்தான வைரஸ் திரிபு வகை இனங் காணப்பட்டதால் எதிர்வரும் காலங்களில் நாட்டினுள் ஆபத்தான நிலை ஏற்படக் கூடுமா?

பதில்: முக்கியமாகக் கூற வேண்டிய விடயம், இப்போது இனங் காணப்பட்டிருப்பது திரிபடைந்த வகை அல்ல. இது டெல்டா வகையினால் உருவான மரபணு திரிபாகும். புதிய வகை ஒன்று உருவாகுமளவுக்கு தேவையான விடயங்கள் இதனுள் உருவாகவில்லை. எனவே இதனை புதிய வைரஸ் வகையாக இனங் காண்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தற்போது நாம் காணும் இந்த மூன்று புதிய திரிபுகளும் ஒரே வைரஸிலிருக்கும் டெல்டா வைரஸாகும். இது உலகில் முதற் தடவையாக இனங் காணப்பட்டிருப்பது இலங்கையிலாகும். தற்போது இந்த மூன்று திரிபுகளுடனான தொற்றாளர்கள் அதிகளவில் இனங் காணப்படுவது கொழும்பு மாவட்டத்திலாகும். எதிர்வரும் காலங்களில் இது புதிய வைரஸாக மாற்றமடையக் கூடிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு, இது தொடர்பில் எம்மால் இப்போது உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் இல்லை.

கேள்வி: டெல்டா வகை இவ்வாறு மாற்றமடைதல் இடம்பெறுவதற்கு காரணியாக அமையும் விடயங்கள் எவை?

பதில்: சாதாரணமாக SARS-CoV-2 வைரஸானது பிரிந்து பிரிந்து செல்லும் போதுதான் இந்த திரிபுகள் உருவாகின்றன. ஒரு மாதத்திற்கு இரண்டு திரிபுகள் அளவில் உருவாகும் என்பதுதான் பொதுவான நிலைப்பாடாக உள்ளது. திரிபுகள் உருவாவதற்கு நோய்ப் பரவல் இடம்பெற வேண்டும். அண்மைய காலங்களில் விசேடமாக கொழும்பு நகரை அண்மித்ததாக பாரியளவில் இத்தொற்று பரவியது. அவ்வாறு பரவும் போதுதான் இவ்வாறான திரிபுகள் உருவாகின்றன. இங்கிலாந்தில் நோய் வேகமாகப் பரவிய போது அல்பா திரிபு உருவானது. இந்தியாவில் இந்நோய் வேகமாகப் பரவிய போது டெல்டா வகை உருவானது. அதற்கு சமமான முறைதான் தற்போது இலங்கையில் காணப்படுகின்றது. டெல்டா வகையினால் புதிய திரிபுகள் உருவாகி வரும் காலங்களில் அது வைரஸாக வளரக் கூடிய வாய்ப்பும் ஆபத்தும் காணப்படுகின்றது. இது தொடர்பில் எமது நிறுவனம் இந்நாட்களில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி: தடுப்பூசி மற்றும் எதிர்ப்பு சக்தி உருவாக்கம் தொடர்பில் என்ன கூற இருக்கிறது?

பதில்: தடுப்பூசியை முழுமைப்படுத்திய அனைவராலும் மிகச் சிறப்பாகவே இந்த டெல்டா வைரஸ் தொடர்பில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தடுத்துக் கொள்ள முடியும் என்பது மிகத் தெளிவான ஒன்றாகும். போட்டுக் கொண்டது எந்த ‘பிராண்ட்’ தடுப்பூசி என்ற விடயம் இங்கு முக்கியமானதல்ல. எந்த வகையான தடுப்பூசி என்றாலும் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நாளிலிருந்து நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான மிகச் சிறந்த பாதுகாப்புக் கிடைக்கின்றது. இது தொடர்பில் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

கேள்வி: இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களிடமிருந்து இந்நோய் பரவாதா?

பதில்: இந்தத் தடுப்பூசியினால் பிரதானமாக வழங்கப்படும் பாதுகாப்பாக இருப்பது, நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதைத் தடுப்பதேயாகும். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களிடமிருந்து இத்தொற்று பரவுவதை முழுமையாகத் தடுப்பதற்கான வாய்ப்பு இந்த கொவிட் தடுப்பூசிக்கு இல்லை. எனவே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டாலும் நீங்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகக் கூடும். விசேடமாக டெல்டா வைரஸ் தொடர்பில் நாம் காணும் விடயமாக இருப்பது இரு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படுகின்றது என்ற விடயமாகும். டெல்டா வைரஸ் தொடர்பில் காணப்படும் மற்றொரு பிரச்சினையாக இருப்பது எமது சுவாசக் குழாயினுள் மிகப் பாரியளவில் இந்த வைரஸ் தங்கியிருக்கும் என்பதாகும். தடுப்பூசியை முழுமைப்படுத்தி இருப்பதன் காரணமாக நீங்கள் உயிரிழப்பது தடுக்கப்பட்டாலும், உங்களிடமிருந்து இலகுவில் நோய்த் தொற்று பரவும். எவ்வாறாயினும் நீங்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருந்தால் உங்களிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் வாய்ப்பு குறிப்பித்தக்களவு, அதாவது வீத அளவில் கூறுவதாயின் 65 வீதமளவில் குறைவடையும் என சில நாட்களுக்கும் முன்னர் கிடைத்த இன்னமும் உறுதிப்படுத்தப்படாத ஆராய்ச்சி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட வைரஸ்கள் வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதையே மிகச் சிறந்த தீர்வாக நாம் காண்கின்றோம். அதே போன்று தடுப்பூசி மாத்திரமல்ல, அதனோடு தொடர்புடைய ஏனைய அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

கேள்வி: நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு முடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இடம்பெறும் மரண எண்ணிக்கையில் குறைவினைக் காண முடியுமா?

பதில்: அப்போது கண்டிப்பாக மரண எண்ணிக்கையில் குறைவு ஏற்படும். தடுப்பூசி செயற்பாட்டின் வெற்றிகரமான பெறுபேற்றினை செப்டெம்பர் மாத இறுதியாகும் போது எம்மால் கண்டு கொள்ள முடியும். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால் இரண்டு வாரங்களில் உயிரிழப்புக்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி உடம்பில் உருவாகின்றது. புதிய வைரஸ் திரிபுகள் உருவாகாமல் இருக்குமானால், தற்போது டெல்டா வைரஸானது இப்போது வழங்கப்படும் தடுப்பூசியினால் நன்றாகக் கட்டுப்படுத்தப்படுவதால் தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நோய் குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்படும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம். தடுப்பூசி வேலைத்திட்டத்தினால் குறிப்பிடக் கூடியளவில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறையும். தற்போது உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு தடுப்பூசியைக் கூட போட்டுக் கொள்ளாதவர்களாவர்.

கேள்வி: தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது. தடுப்பூசி செயற்றிட்டத்தினால் ஒரு மட்டத்திற்கு ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினாலும் உயிரிழப்புக்களில் அதிகரிப்பை காண முடிகிறதே. இதற்கு என்ன காரணம்?

பதில்: தடுப்பூசி போடும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றாலும் இன்னமும் பெரும்பாலானவர்கள் ஒரு தடுப்பூசியையேனும் பெறாதவர்களாகவே உள்ளனர். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டாலும் தேவையான எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரங்கள் ஆகும். விசேடமாக இலங்கையினுள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினோபாம் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியின் ஒன்றைப் போட்டுக் கொண்டால் எப்படியும் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டையும் போட்டுக் கொண்டாலும் இரண்டு வாரங்கள் செல்ல வேண்டும். எனவே தற்போதைக்கு நாம் எதிர்பார்க்கும் பாதுகாப்பான பிரிவிற்கான அளவு மிகவும் குறைவாகும். பாதுகாப்பற்றவர்களே இன்னமும் இந்நாட்டில் அதிகளவில் காணப்படுகின்றனர். இன்னமும் உயிரிழப்பவர்களின் பெரும்பான்மையானவர்கள் அதாவது 90 வீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியை முழுமைப்படுத்தாதவர்களாவர். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த பின்னர் இந்நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைவதால் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே மிகச் சிறந்த ஆயுதமாக நாம் காண்கின்றோம்.

கேள்வி: கொவிட் – 19 தொற்று ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? வைத்தியசாலையில் அனுமதி பெறவே வேண்டுமா?

பதில்: நோய் அறிகுறிகள் இருக்குமானால் மிகவும் முக்கியமானது வீட்டிலேயே தங்கியிருப்பதாகும். இருமல், சளி, தொண்டை நோவு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுள் ஒன்றோ அல்லது பலதோ இருக்குமாயின் விசேடமாக இந்நாட்களில் நாம் சந்தேகிக்க வேண்டியது ஏற்பட்டிருப்பது கொவிட்- 19 தொற்று என்றேயாகும். அப்போது நீங்கள் உடனடியாக மற்றவர்களிடத்திலிருந்து தூர விலகிக் கொள்ளுங்கள். வீட்டில் தனியான அறை ஒன்றில் தனிமையாக இருந்து இந்த அறிகுறிகள் குறையும் வரைக்கும் முடிந்தளவுக்கு பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியமாகும். இந்த வைரஸ் நோய் சில தினங்களில் அல்லது ஒரு வாரத்தினுள் தானாகவே சுகமாகி விடும். இந்நாட்களில் பொறுமை இல்லாமலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு குழப்பகரமான நிலைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். கொவிட்- 19 தொற்றின் போது பெரும்பாலானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. மிகச் சொற்பமானவர்களுக்கே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. அவைகளும் மிகவும் தற்காலிமான அறிகுறிகளாகும். இவர்களுள் சொற்பமானவர்களே கடுமையான நோய் நிலைகளுக்கு உள்ளாகின்றனர்.

பேட்டி கண்டவர்: காஞ்சனா சிரிவர்தன
தமிழில்:எம்.எஸ்.முஸப்பிர்
(தினகரன், ஓகஸ்ட் 28, 20210)

Tags: