நெருப்புடன் விளையாடுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்!

-அ.அன்வர் உசேன்

சீனாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்று திரும்பியுள்ளார். கடந்த 3ஆம் தேதி அங்கு சென்ற அவர் இருந்தது 19 மணி நேரம்தான்! ஆனால் அதன் பாதக விளைவுகள் எத்தனை ஆண்டுகளுக்கு உலக அரசியல் அரங்கில் இருக்கும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது! இது நான்சி பெலோசி என்ற தனி நபரின் வறட்டுப் பிடிவாதம் அல்ல! நான்சியும் அவரது அமெரிக்க அரசியல் சகாக்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ அழிவு அரசியலுக்கும் சீனா பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிச அரசியலுக்கும் இடையே உள்ள வர்க்க முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடு. இது உலக அரசியல் நிகழ்வுகளில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. 

யார் இந்த நான்சி பெலோசி?

82 வயதான நான்சி பெலோசி ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர். அமெரிக்க அரசியல் சட்டமுறைப்படி ஜனாதிபதி/உதவி ஜனாதிபதிக்கு பின்னர் மூன்றவது முக்கிய நபர். அமெரிக்க முதலாளித்துவ சமூகம் உற்பத்தி செய்த ஆழமான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக சீனாவின் சோசலிச அரசி யல் முறையை கடுமையாக எதிர்த்து வருபவர். அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயக முறைதான் உலகிலேயே மிகச்சிறந்தது எனவும் அதனை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் அல்லது அந்த முறை  திணிக்கப்பட வேண்டும் எனவும் ஆழமாக எண்ணு பவர். சீனாவில் நடத்தப்பட்ட தியானென்மென் சதுக்க கலகங்களை ஆதரித்தவர். அந்த கலகங்களுக்குப் பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சீனாவுக்கு சென்றிருந்த பொழுது தியானென்மென் சதுக்கத்தில் புகைப்படம் எடுத்து சீனாவை விமர்சித்தவர். சீனாவில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஷின்ஜி யாங் பகுதியின் பிரச்சனைகளை முன்வைத்து சீனா வுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்துவரு பவர்.  நவீன தொழில் நுட்பத்துக்கு தேவையான ‘சிப்’ (Chip) எனப்படும் மிக முக்கிய “சில்லு” எனும் பாகத்தை உற்பத்தி செய்யும் தொழிலில் ஏராளமான முதலீடு செய்தவர். இந்த உற்பத்தியில் தைவான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பல முதலாளிகளை பெலோசி தற்போதைய தைவான் பயணத்தில் சந்தித்தார். 

சமீபத்தில் அமெரிக்க பங்கு சந்தை விதிகளை மீறி தனது அரசியல் அதிகாரம் மூலம் கிடைத்த இரகசிய தகவல்களை தனது முதலீட்டுக்கு ஆதரவாக தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இவர். இவரது தைவான் பயணத்தை அமெரிக்க ஜனநாயக கட்சியினர் மட்டுமல்ல; குடியரசு கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர். அதே சமயம் பலர் எதிர்த்தும் உள்ளனர். அவரது சொந்த தொகுதியிலேயே விலைவாசி உயர்வு, வறுமை ஆகியவற்றை கவனிக்காமல் பெலோசி ஆசியாவில் ஏன் பதற்றத்தை உருவாக்க முயல்கிறார் என விமர்சித்து மக்கள் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர். பெலோசியின் தைவான் பயணம் அப்பட்டமாக பொறுப்பற்றது; மிகவும் ஆபத்தானது என நியூயார்க் டைம்ஸில் தாமஸ் ஃபீரிட்மென் எனும் பத்திரிக்கையாளர் கண்டித்துள்ளார். இவரும் சீனாவை விமர்சிப்பவர்தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.  நான்சி பெலோசியின் பயணத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை எனவும் சபாநாயகர் என்ற முறையில் அவருக்கு அந்த அதிகாரம் மற்றும் உரிமை உள்ளது எனவும் அமெரிக்க அரசு நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அது நம்பத்தகுந்ததாக இல்லை. அமெரிக்க  ஜனாதிபதி பைடனும் பெலோசியும் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள்தான். அமெரிக்க முப்படை, பைடன் அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது. அவர் தடை விதித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. மேலும் பெலோசி தைவான் வந்தது அமெரிக்க இராணுவ விமானத்தில்! அந்த விமானத்துக்கு கப்பற்படை விமானங்கள் பாதுகாப்பு! இந்த சூழலில் பெலோசி தன்னிச் சையாக தைவானுக்கு சென்றுவிட்டார் என்பதை எவரும் நம்பமாட்டார்கள்! அல்லது ஜோ பைடன் உலக அரசியலில் கடும் பதற்றத்தை உருவாக்கும் பெலோசியின் பயணத்தை தடுக்க முடியாத அளவுக்கு கையாலாகதவர் எனும் முடிவுக்கு வரவேண்டியிருக்கும். பெலோசியின் தனிப்பட்ட நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் இந்த பயணம், சோசலிச சீனாவுக்கு எதிரான அமெரிக்க முதலாளித்துவ நிர்வாகத்தின் திட்டமிட்ட “சோதனை முயற்சிதான்” என்பதில் ஐயமில்லை.

சீனாவின் கண்டனம் ஏன்?

தைவான் தீவு பல நூறு ஆண்டுகளாக சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. மாவோ தலை மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்று மக்கள் சீனக் குடியரசு அமைந்தது. அப்பொழுது புரட்சியின் எதிர்ப்பாளர் சியாங்-கே-ஷேக் தமது ஆதரவாளர்களுடன் தைவான் தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு ‘சீனக் குடியரசு’ எனும் தேசத்தை அமைத்துக் கொண்டதாக அறிவித்தார். அதுதான் உண்மையான சீனா எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து ஒட்டு மொத்த சீனாவையும் நிர்மாணிப்பேன் எனவும் பேசினார். ஆனால் அவருடன் தைவானில் இருந்தது சில இலட்சம் பேர்தான்! மக்கள் சீனக் குடியரசில் அப்பொழுதே 45 கோடிப் பேருக்கும் அதிகமான மக்கள் இருந்தனர். அவர்கள் புரட்சியை ஆதரித்தனர். 

சோசலிசத்துக்கு எதிராக சிறு துரும்பைக் கூட பயன்படுத்தும் அமெரிக்காவும் பல முதலாளித்துவ தேசங்களும் தைவான்தான் உண்மையான சீனா என அங்கீகரித்தன. எனினும் 1970களில் உலக  அரசியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் உருவாகின. அதே சமயம் தைவானால் தமக்கு எவ்வித பொருளாதார பலனும் இல்லை என்பதைக் கணித்த அமெரிக்கா, சீனாவுடன் உறவு ஏற்படுத்த முயன்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்து கிட்டத்தட்ட  தனிமைப்பட்டிருந்த சீனாவுக்கும் அமெரிக்க நட்பு தேவையாக இருந்தது. இதன் பின்னணியில் 1972ம் ஆண்டு ஹென்றி கிஸ்ஸிங்கர் சீனா பயணித்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜானாதிபதி நிக்சன் சீனா சென்றார். மாவோ-நிக்சன் இடையே பல ஒப் பந்தங்கள் உருவாயின. அதில் மிக முக்கியமானது சீனா எனில் அது “மக்கள் சீனக் குடியரசு” மட்டும் தான்; தைவான் அல்ல என்பதை ஏற்று அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடர்பு வைத்து கொள்ளலாம்; ஆனால் அங்கீகாரம் வழங்க கூடாது என்பதையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா. சபையும் இதனை ஏற்றுக் கொண்டது. சீனா ஐ.நா. உறுப்பினராக மட்டுமல்ல; “வீட்டோ” (இரத்து) அதிகாரம் கொண்ட முக்கிய தேசமாகவும் பரிணமித்தது.

தைவானை சீனாவுடன் இணைக்க ராணுவத்தை பயன்படுத்துவீர்களா என ஹென்றி கிஸ்சிங்கர் கேட்ட பொழுது, மாவோ  அவர்கள், ஆயுதம் மூலம் எங்களுக்கு உரிமையான எந்த ஒரு பகுதியையும் இணைக்க விரும்பவில்லை எனவும் தைவான் எங்களுடன் இணைய 100 ஆண்டுகள் கூட காத்திருக்கத் தயார் எனவும் கூறியதாக செய்திகள் வந்தன. அந்த வகையில் ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகள் ராணுவம் பயன்படுத்தப்படாமல்தான் சீனாவுடன் இணந்தன. அதே போலவே தைவானும் இணையும் என சீனா நம்பியது. தைவான் உட்பட சீனா ஒரே தேசம்தான் என ஏற்றுக்கொள்ளும் தேசத்துடன் மட்டும்தான் சீனா உறவுகளை கொண்டுள்ளது. 

ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா!

தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா சீனாவுக்கு எதிராக தைவானை கொம்பு சீவுகிறது.  சீனாவுக்கு எதிராக இந்தியா/ஜப்பான்/ ஆஸ்தி ரேலியா பங்கு கொண்டுள்ள “குவாட்” அமைப்பை உருவாக்கியது.  பின்னர் குவாட் தனது இராணுவ நோக்கத்து க்கு பயன்படாது என கணித்த அமெரிக்கா “ஆக்கஸ்” (AUKUS) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் அமெரிக்கா/பிரிட்டன்/ஆஸ்திரேலியா உறுப்பினர்கள். முதல்முறையாக பிரிட்டன் மூலம் ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தயாரிக்க அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.

இது சீனாவுக்கு எதிரான முயற்சியாகும். இந்த சீன எதிர்ப்பு எனும் பெரும் திட்டத்தின் ஒரு முக்கிய நகர்வுதான் பெலோசியின் தைவான் பயணம். அமெரிக்கா உட்பட முதலாளித்துவ தேசங்கள் தமக்கு இலாபம் எனில் வாக்குறுதி தருவார்கள். அதனைப் பற்றியும் நிற்பார்கள். எந்த நிமிடம் அதை மீறுவது தான் தமக்கு இலாபம் என கருதுகின்றனரோ அப்பொழுது அந்த ஒப்பந்தத்தை குப்பை தொட்டியில் வீசத்  தயங்கமாட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவியல் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார அடிப்படையிலும் மிகப்பெரிய சவாலாக சீனா உருவெடுத்துள் ளது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா அமெரிக்காவை மிஞ்சி விடும் என பொருளாதார நிபுணர்கள் கணித் துள்ளனர். எனவே சீனாவைக் கட்டுப்படுத்துவதும் பின்னுக்கு தள்ளுவதும் அமெரிக்காவுக்கு அவசியத் தேவையாக மாறியுள்ளது. சீனாவை விட அதிக வலு அமெரிக்கா பெற்றிருப்பது இராணுவத்தில் மட்டும்தான்!  எனவே இராணுவ நடவடிக்கைகள் மூலம் சீனாவை பின்னுக்கு தள்ளுவதும் அதன் விளைவாக அதன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தடுப்பதும் அமெரிக்காவின் நோக்கம் ஆகும். அதற்கு தைவான் பிரச்சனை மிகவும் பயனுள்ள ஒன்றாக அமெரிக்காவுக்கு மாறியுள்ளது. நேட்டோ  விரிவாக்கம் குறித்து ரஷ்யாவுக்கு தந்த வாக்குறு தியை மீறுவது போல தைவான் குறித்த- தான் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்தை மீற வேண்டிய தருணம் வந்து விட்டது என அமெரிக்கா கணக்கு போடுகிறது. இதில் நான்சி பெலோசியின் பயணம் உடனடி நன்மையா? அல்லது தீமையா? என்பதில்தான் அமெரிக்க நிர்வாகத்தில் முரண்பாடுகள். ஆனால் அடிப்படை நோக்கத்தில் எந்த முரண்பாடும் இல்லை. 

விளைவுகள் என்ன?

நான்சி பெலோசியின் பயணம் தீயோடு விளையாடுவது போன்றது என சீனா எச்சரித்தது. அதனையும் மீறி பெலோசி தைவான் சென்றார். அதன் விளைவு கள் வேறு எவரையும்விட தைவானுக்குத்தான் பாதகமாக அமையும் நிலை உருவாகியுள்ளது. தைவான் தீவைச் சுற்றி சீனா 6 இடங்களில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அவற்றில் மூன்று இடங்கள் தைவான் தனது எல்லைப் பகுதி என நிர்ணயித்தவை ஆகும். சீனாவின் இரு முக்கிய இராணுவ கப்பல்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன.  சீனாவின் 27 விமானங்கள் தைவானுக்குள் சென்று வந்துள்ளன. தனது கடல்வழி மற்றும் வான்வழியை முற்றிலும் சீனா முடக்கிவிட்டது என தைவான் புலம்பியுள்ளது.

சீனா இராணுவத்தை பயன்படுத்தினால் தைவான் என்ன ஆகும் என்பதை கீழ்கண்ட ஒப்பீடுகளிலிருந்து அறியலாம்:

                                                                                   சீனா                 தைவான்       

மொத்த இராணுவ வீரர்கள் 
(கப்பற்படை/விமானப்படை உட்பட)       20.35 லட்சம்           1.69 லட்சம்       
போர் விமானங்கள்                                             3227                          504       
டாங்கிகள்                                                              5400                          650       
பீரங்கிகள்/ இராணுவ 
ஆயுத  வாகனங்கள்                                          10,000                        2093       
போர் கப்பல்கள்                                                     86                             26       
நீர்மூழ்கி கப்பல்கள்                                              59                              4       
மக்கள் தொகை                                              140 கோடி                   2.50 கோடி     


பெலோசியின் பயணம் காரணமாக கடும் கோபம் கொண்டுள்ள சீன மக்களில் ஒரு பிரிவினர் உடனடியாக தைவானை இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கோருகின்றனர். தைவான் மக்களில் ஒரு பிரிவினருக்கும் சீனாவுடன் இணைவதில் விருப்பம் உள்ளது என்பது முக்கியமான அம்சம். தைவான் ஆட்சியாளர்கள் இவற்றை கணித்தனரா அல்லது அவர்களின் கண்களை மறைக்கும் அளவுக்கு அமெரிக்கா மூளை சலவை செய்துள்ளதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று!

தைவானையும் தாண்டி பெலோசியின் பயணம் சீனா-அமெரிக்க முரண்பாடுகள் மேலும் மோசமடையும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. இது ஆசியாவுக்கும் உலகத்துக்கும் நல்லதல்ல என்பதை சிங்கப்பூர் பிரதமர், பெலோசியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியமும் அதே கருத்தை முன் வைத்துள்ளது. ஆனால் அதனை உணரும் நிலையில் பெலோசியோ அல்லது அமெரிக்க நிர்வாகமோ உள்ளதா என்பது தெரியவில்லை. ரஷ்யா-உக்ரைன் பதற்றமும் தைவான்- சீனா பதற்றமும் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவை. ஆனால் அதில் தனக்கு இலாபம் உள்ளது என அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நினைக்கின்றனர். அது மிக மிக ஆபத்தானது.

Tags: