கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் குறித்து…

இரா. சிந்தன்

Afbeeldingsresultaat voor communist manifesto

ம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை உலகுக்கு அறிவிக்கும் ஆவணமாகும். அதன் நான்கு அத்தியாயங்களைப் போலவே, அடிக்குறிப்புகளும், ஏழு முன்னுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்க்சிய தத்துவ நோக்கில் உலக நிகழ்வுப்போக்குகளை புரிந்துகொள்ளவும், செயல்படவும் அவை உதவி செய்கின்றன. இக்கட்டுரையில் நாம் முன்னுரைகள் குறித்து பார்ப்போம்.

அறிக்கைக்கு மரணமில்லை:

ஐரோப்பா முழுவதும் காட்டுத் தீ போல் புரட்சி நெருப்பு பரவிப்படர்ந்த காலத்தில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை மக்களை அடைந்தது. அறிக்கையின் முதல் பதிப்பு வெளியாகிய சில மாதங்களுக்குள் அது மூன்று முறை அச்சடிக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் ஆசிரியராக செயல்பட்ட ரைனிஸ் ஜைதுங் மட்டுமல்லாது பிற இதழ்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியான சில வாரங்கள் கழித்து பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான முதல் மாபெரும் உள்நாட்டு போரான ஜூன் எழுச்சி நடக்கிறது.

1888 ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்ஸ் இதனை குறிப்பிடுகிறார். அதே சமயம் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் எழுதுகிறார்.  “1848 ஜூனில் வெடித்த பாரிஸ் எழுச்சிக்கு ஏற்பட்ட தோல்வியானது, ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்களைச் சிறிது காலத்துக்கு மீண்டும் பின்னிலைக்குத் தள்ளியது.” ஆனால் போராட்டங்கள் முற்றாக வடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவை பழையபடி “சொத்துடைமை வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலே மட்டும் நடைபெறும் போராட்டமாக ஆனது.”

அதாவது, பாட்டாளி வர்க்கத்தால் ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டது. ஒருவேளை “சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் தென்படுமாயின், அவை (ஆளும் வர்க்கத்தால்) ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டன.” இத்தகைய அடக்குமுறைகளினால் அறிக்கை ‘கேட்பாரற்றுக் கிடந்து அழியும்’ என்ற தோற்றம் ஏற்பட்டது. மீண்டும் தொழிலாளி வர்க்க இயக்கம் எழுச்சியடைந்தபோது, ‘சர்வதேச தொழிலாளர் சங்கம் (முதலாம் அகிலம்) உதித்தெழுந்தது’. இந்த சங்கத்தின் கோட்பாடுகளாக ‘அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை’ அறிவிக்க முடியவில்லை. எனவே கார்ல் மார்க்ஸ் அப்போதைய திட்டவட்டமான சூழலை கணக்கில் கொண்டு, (1864 இல்) பரந்த செயல்திட்டம் ஒன்றை வடிவமைத்து முன்வைக்கிறார்.

அதே சமயம், அவர் பாட்டாளி வர்க்கத்தின் அறிவுநுட்பத்தின் வளர்ச்சியை நம்பினார். அவ்வாறு வளர்ச்சியடைகிறபோது ‘பாட்டாளி வர்க்க விடுதலைக்கு உரிய மெய்யான நிலைமைகள் குறித்து, மேலும் முழுமையான உள்ளார்ந்த புரிதலுக்கு’ வழி ஏற்படும் என எதிர்பார்த்தார். அது மெய்ப்பிக்கப்பட்டது. மீண்டும் அறிக்கை பாட்டாளி வர்க்கத்தின் கைகளை அடைந்தது.

Afbeeldingsresultaat voor communist manifesto original cover

1872 ஜெர்மன் பதிப்பும் அதன் முன்னுரையும்:

1871 பாரிஸ் கம்யூன் அனுபவம் மிக முக்கியமானது. அப்போது பாரீசில்  பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியது மட்டுமல்ல; இரண்டு மாத காலம்   ஆட்சியை வழிநடத்தியது. அதனைச் செய்துகாட்டிய பாட்டாளிகளை ‘விண்ணைச் சாடியவர்கள்’ என விதந்தோதினார் மார்க்ஸ். மேலும் அது குறித்து பிரான்சில் உள்நாட்டு யுத்தம் என்ற புத்தகத்தையும் படைத்தளித்தார். பாரிஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டது.

ஆனாலும், ஆளும் வர்க்கங்கள் மீண்டும் மார்க்சைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினார்கள். அவர்கள் சர்வதேச அளவில் மிக ஆபத்தான தலைவர் என்று அரசுகளால் பார்க்கப்பட்டார். கிலியடைந்த அரசுகளின் ஆயுதம் சதிவழக்குகளே; இது பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கு புதிய அனுபவம் அல்ல. இவ்வாறாக சதிவழக்கு ஒன்றில் ஜெர்மானிய சமூக ஜனநாயக தலைவர்களாக வில்ஹெம் லீப்னெஹெட், அகஸ்ட் பெபல் மற்றும் அடால்ப் ஹெப்னர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். அந்த விசாரணையில் ‘கம்யூனிஸ்ட் அறிக்கையும்’ ஒரு ஆதாரமாகக் காட்டப்பட்டது. இவ்வாறு அறிக்கையின் மீது விழுந்த கவனம், கம்யூனிஸ்ட் அறிக்கை மீண்டும் பதிப்பிக்கப்படவும், பரந்த பகுதி மக்களிடையே சென்று சேரவும் வழிவகுத்தது.

இப்படித்தான் கம்யூனிஸ்ட் அறிக்கையின் 1872 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு வெளியானது (அதாவது சுமார் 25 ஆண்டுகள் கழித்து). இப்பதிப்பிற்கு கார்ல் மார்க்சும் எங்கெல்சுசும் முதல் முன்னுரையை எழுதினார்கள். அடுத்தடுத்த 3 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை 6 மொழிகளில் 9 பதிப்புகள் வெளியாகியது.

அந்த முன்னுரையில் அவர்கள் இனி ஆவணத்தை திருத்துவது சாத்தியமில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அறிக்கை எழுதப்பட்ட காலத்தை விடவும் நவீன தொழில்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது, பாட்டாளி வர்க்க கட்சி அமைப்புகளும் மேம்பட்டிருந்தன; விரிவடைந்திருந்தன. எனவே அறிக்கையில் வகுக்கப்பட்டிருந்த ”கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும்  எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்” என்பதையும் அந்த முன்னுரையில் தெளிவுபடுத்தினார்கள்.

பாரிஸ் கம்யூன் படிப்பினை:

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சூழலையும், வரலாற்று நிலைமைகளையும் கணக்கில் கொண்ட புரட்சிகர திட்டம் தேவை. ‘நிலவுடைமையில் புராதன பொதுவுடைமை நிலவி வந்த ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் செக்கோஸ்லாவாக்கியாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் ஒரே மாதிரியான செயல்திட்டம் இருக்க முடியாது’.

மேலும், பிரான்சில் நடைபெற்றிருந்த புரட்சியின் அனுபவத்தையும் கணக்கில் கொண்டு  “பாட்டாளி வர்க்கமானது ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தை வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது” என்ற படிப்பினையை எடுத்துக் கூறுகின்றனர்.  மிகவும் எதிர்பாராத சூழலில் அறிக்கையின் பதிப்பு வெளியானதால் மிக சுருக்கமாகவே விசயங்களை சுட்டிக்காட்டினர்.

முதலாளி வர்க்க அரசு இயந்திரத்தை அப்படியே தொழிலாளி வர்க்கம் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுவதன் பொருள், இதுவரை நடைபெற்ற புரட்சிகளைப் போன்றதல்ல, பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் நடக்கும் புரட்சி என்பதை மேலும் தெளிவாக உரைப்பதாகும். இதுவரை நடைபெற்ற புரட்சிகள் பழைய சுரண்டல் நடைமுறைகளின் இடத்தில் புதிய வகையிலான சுரண்டலை மாற்றீடு செய்தன. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சியானது சுரண்டலை முற்றிலும் ஒழிக்கும் இலட்சியத்தைக் கொண்டது.

Afbeeldingsresultaat voor communist manifesto russian

1882 ரஷ்ய பதிப்பும் அதன் முன்னுரையும்:

கம்யூனிஸ்ட் அறிக்கையின் கடைசி அத்தியாயம் பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையினை விவரிக்கிறது. அதில்  ரஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இடம்பெறவில்லை. ரஷ்ய பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை அந்தக் குறையை போக்குகிறது.

அறிக்கை எழுதப்பட்ட சமயத்தில் “அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாக ரஷ்யாவும், குடியேற்றத்தின் மூலம் ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி சக்திகளை ஈர்த்துக் கொள்ளும் நாடாக அமெரிக்க ஐக்கிய நாடும்” இருந்து வந்தது என்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, அந்த இந்த இரண்டு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருட்களை வழங்கின; அவர்களின் சந்தையாக விளங்கின.

34 ஆண்டுகள் கடந்த பிறகு  “… இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகத்தை வெகுவிரைவில் தகர்த்துவிடும் அளவுக்கு அத்தனை ஆற்றலோடும், அவ்வளவு பெரிய அளவிலும்” அமெரிக்காவில் நிகழ்ந்த குடியேற்றம் காரணமாக அந்த நாடு வளர்ச்சியுற்று வந்தது. இது அமெரிக்காவை புரட்சிகரமாக மாற்றியமைத்திருந்தது.

அதே சமயம் அவர்கள் ரஷ்யாவை பற்றி குறிப்பிடும்போது அங்கே புரட்சி நடக்குமானால் அது ”மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ரஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்” என்கிறார்கள். இந்த முன்னுரையில் அவர்கள் கூறியது  ஆரூடம் அல்ல. மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்தில் ரஷ்ய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து அளித்தார்கள்.

அறிக்கையின் கோட்பாடுகள் ரஷ்ய பாட்டாளி மக்களைச் சென்றடைந்தது. அந்த அறிக்கை ரஷ்யாவில் பல்வேறு மொழிகளில் பதிப்புகள் பல கண்டது. புரட்சிக்கு முன்னதாக ரஷ்ய மொழியில் மட்டும் அது 70 பதிப்புகளும், ஜார் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு பிரதேச மொழிகளில் 35 பதிப்புகளும் வெளியாகின. இது ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் வெளியான பதிப்புகளை விடவும் கூடுதலாகும். ரஷ்ய பதிப்பின் முன்னுரை எழுதப்பட்டு 35 ஆண்டுகள் கழித்து சோவியத் புரட்சியை பாட்டாளி வர்க்கம் சாதித்துக் காட்டுகிறது.

மார்க்ஸ் மறைவுக்குப்பின் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை:

மேற்சொன்ன இரண்டு முகவுரைகளை மட்டுமே மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதினார்கள். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் 5 பதிப்புகளுக்கு முன்னுரைகளை எழுதுகிறார். 1883 இல் எழுதிய முன்னுரையில், ரத்தினச் சுருக்கமான அறிக்கையினுடைய மையக் கருத்தினை விளக்குகிறார்.

சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களாகும். எனினும் இப்போது இந்தப் போராட்டமானது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

“சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) அது ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது”

 மேலும், இந்தக் கருத்து மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியது என்பதை அவர் மீண்டும் ஒருமுறை குறிப்பிடுகிறார். அடுத்து எழுதிய முன்னுரையிலும் இந்த வரையறுப்பை மீண்டும் குறிப்பிடும் அவர் ’டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம்.’ என்கிறார்.

1888 ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை:

இவ்வாறு பாட்டாளிவர்க்க புரட்சியை விளக்கும் எங்கெல்ஸ், 1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிற்கு விரிவானதொரு முன்னுரையை எழுதுகிறார். அதில் உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க இயக்கம் எதிர்கொண்டுவந்த ஏற்ற இறக்கங்களையும், அறிக்கையின் பரவலில் நிலவிய ஏற்ற இறக்கங்களையும் பட்டியலிடுகிறார். அத்துடன் இந்த அறிக்கைக்கு பெயர்சூட்டிய சூழலையும், காரணத்தையும் விளக்குகிறார்.

 “இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்”;  “மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் “படித்த” வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர்.” இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் சோசலிஸ்ட் அறிக்கை என்ற பெயரை சூட்டவில்லை.

இவ்வாறு அவர்கள் பட்டியலிடும் காரணத்தில் மூன்றாவதான காரணமே மிக முக்கியமானது. இந்த அறிக்கை எந்த வர்க்கத்தைச் சென்றடைய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள் என்பதை அது காட்டுகிறது. ‘படித்த’ வர்க்கங்கள் என அவர்கள் குறிப்பிடுவது முதலாளி வர்க்கமே ஆகும். முதலாளி வர்க்கம் குறித்த கண்மூடித்தனமான ஈர்ப்பு எதுவும் அவர்களிடம் இல்லை. மாறாக, அக்காலத்தில் ‘பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட’ இயக்கமாகவே இருந்தாலும், கம்யூனிஸ்ட் இயக்கமே தொழிலாளி வர்க்கத்தின் இயக்கமாக இருந்தது. எனவே அவர்கள் ‘கம்யூனிஸ்ட்’ என்ற பெயரை சந்தேகத்திற்கிடமில்லாமல் தேர்வு செய்தார்கள். பாட்டாளி வர்க்கத்தைச் சென்றடைவதிலும், அதன் தலைமையிலான புரட்சி என்பதிலும் ஊசலாட்டமில்லாத நேர்மை தேவை என்பதை வலியுறுத்தும் விவரிப்பாக இது அமைந்திருக்கிறது.

1890 மேதினத்தில் எழுதப்பட்ட முன்னுரை:

1886-ம் ஆண்டில் சிக்காகோ நகரின் ஹே மார்கெட் வீதிகளில் 8 மணி நேர வேலை கோரி, வீரம் செறிந்த தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. அதன் நினைவாகவே உலகமெங்கும் மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1890-ம் ஆண்டில் அப்படியொரு மே தினத்தில், உணர்ச்சிப் பெருக்கோடு ஒரு முன்னுரையை எழுதுகிறார் எங்கெல்ஸ்.

”அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும் வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்” என்ற எச்சரிக்கையை அவர் அதில் வெளிப்படுத்துகிறார். அதே சமயம் “இதனை மார்க்ஸ் தம் கண்கொண்டு நேரில் கண்டு களிக்க இப்போது என் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்” என்ற ஆதங்கமும் அவர் மனதில் குடிகொள்கிறது.

Afbeeldingsresultaat voor communist manifesto in polish language

போலிஷ், இத்தாலிய பதிப்புகளின் முன்னுரைகள்:

போலிஷ் பதிப்பின் முன்னுரையில், “அறிக்கையானது ஐரோப்பா கண்டத்தின் பெருவீத தொழில்துறையின் வளர்ச்சியை காட்டும் சுட்டுகை போல ஆகியிருப்பது” குறிப்பிடத்தக்கது என்கிறார். ஒரு நாட்டின் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அதில் பணியாற்றும் பாட்டாளி வர்க்கத்தினர் தங்களைச் சுரண்டும் உடைமை வர்க்கங்கள் பற்றி தெளிவு பெறுவது அவசியம் என்கிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்திடம் ஒற்றுமை ஏற்பட்டால் மட்டும் போதாது; வர்க்கப் பார்வை அவசியம்.  அப்போதுதான் சோசலிச இயக்கம் வலுப்படும்.  மேலும், ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் அடைகிற வெற்றி, மற்ற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமானது என்பதையும் அந்த முன்னுரை சுட்டுகிறது.

அடுத்த ஆண்டில் (1893) இத்தாலியப் பதிப்பு ஒன்று வெளியாகிறது. அதில் எங்கெல்ஸ், தொழிலாளி வர்க்க இயக்கங்களைக் குறித்த மதிப்பீட்டை முன்னுரையில்  முன்வைக்கிறார். முதலில் அவர் பாரிஸ் தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, “(அவர்கள்) மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்துவ ஆட்சியமைப்பைத் தகர்த்திடும் மிகத் திட்டவட்டமான நோக்கத்தைக் கொண்டிருந்தனர்” என்கிறார். ஆனாலும் அந்த நாட்டில் நிலவிய “பொருளாதார முன்னேற்றமோ, பெருந்திரளான ஃபிரெஞ்சுத் தொழிலாளர்களின் அறிவுசார் வளர்ச்சியோ சமுதாயப் புனர்நிர்மாணத்தைச் சாத்தியமாக்கும் கட்டத்தினை  எட்டவில்லை என்ற மதிப்பீட்டை முன்வைக்கிறார். இதன் காரணமாக அங்கே, ‘முடிவில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் அறுவடை செய்து கொண்டது’.

அதே சமயம் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கங்கள் ”முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு உயர்த்தியதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை”. மேற்சொன்ன இரண்டு மதிப்பீடுகளும் நமக்கு புரட்சிகர பாட்டாளிவர்க்க இயக்கத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

முதலில் பாட்டாளி வர்க்கம் தன் அரசியலை கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு அரசியல் உணர்வுபெற்ற வலிமையான பாட்டாளி வர்க்கம், தனது நாட்டில் நிலவும் திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வுப் பார்வையை கொண்டு, நிலைமைகளை மாற்றியமைக்கும் திறனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

முடிவாக:

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகளும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு மிக முக்கியமான பாடங்களைத் தருகின்றன. அறிக்கையின் ஒரு பகுதியாகவே அவற்றையும் படிக்க வேண்டும். பொதுவான ஒரு வாசகர் இதுபற்றிச் சொல்லும்போது, கம்யூனிஸ்ட் அறிக்கையை ‘ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அனுபவம் வழங்குகிறது’ என்பார். உண்மைதான் அறிக்கையின் இலக்கியத் தரமும் பொருள் பொதிந்த முன்னுரைகளும் அத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன.

அதே சமயம் இந்தப் புத்தகம் தன் வாசகர் இதுவரை உலகை பார்த்து வந்த பார்வையினை மாற்றியமைக்கிறது. உலகின் நடைமுறைகளை, செய்திகளை, அரசியலை, வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்கிறது. அதுதான் இப்புத்தகத்தை முழுமையாக வாசிப்பதன் மூலமும், திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமும் கிடைக்கும் உணர்வுக்கான அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்க விடுதலைக்கு பாதை அமைத்துக் கொடுக்கும் இந்த எளிய நூலையும், அதன் முன்னுரைகளையும் வாசிப்போம். பரவலாக்குவோம்.

-மார்க்சிஸ்ட்
2020.02.04

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் படிக்க….

Tags: