பொருளாதார ஏற்றத்தாழ்வு – இந்தியாவின் நிலை என்ன?

நா. ரகுநாத்

 சிறப்புக் கட்டுரை: பொருளாதார ஏற்றத்தாழ்வு - இந்தியாவின் நிலை என்ன?

டந்த பத்தாண்டுகளில் பரவலாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்ட பேசுபொருள்களுள் ஒன்று பொருளாதார ஏற்றத்தாழ்வு (Economic Inequality). வளர்ந்த பொருளாதாரங்கள் என்று கருதப்படும் நாடுகள் உட்பட, உலகின் பல பகுதிகளில் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாகியிருப்பதையும், தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதையும் பல பொருளியல் அறிஞர்கள் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் வழியே பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் வெளிப்பாட்டை, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த சமூக – பொருளாதாரக் குறியீடுகளில் மட்டுமின்றி, அரசியல் தளத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களிலும் நாம் காண முடிகிறது. நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய மக்களின் அச்சத்தை முதலீடாகக் கொண்டு, இனவெறி மற்றும் மதவெறி போன்ற உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குக் குடிபெயர்ந்த மக்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, அதிதீவிர தேசியம் பேசி மக்களின் ஆதரவைப்பெறும் அரசியல் கட்சிகள், தலைவர்களை நாம் பார்க்கிறோம்.

உலகெங்கும் காணப்படும் இந்தப் போக்குக்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பிற்போக்கான அரசியலின் ஆதிக்கம் இரண்டிலுமே இன்று இந்தியா முன்னிலையில் இருக்கிறது. மக்களின் பொருளாதாரம் சார்ந்த அதிருப்தியைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிப்பவர்கள், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி அந்த அதிருப்தியை வேறு திசையில் செலுத்தி, பிற்போக்குத்தனமான மாற்றங்களைச் சமுதாயத்தில் புகுத்தி, தங்கள் அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும். இதைத்தான் இன்று நாம் இந்தியாவில் பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுந்தால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை.

மக்கள் வாழ்வில், சமுதாயத்தில், நாட்டின் அரசியலில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றிய விவாதங்கள் இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் தன்மை என்ன?

Afbeeldingsresultaat voor income inequality world

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு – ஆய்வுகள் சொல்லும் சேதி

ஒவ்வொரு நாட்டிலும் யார் யாரிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பது பற்றி Credit Suisse எனும் முதலீட்டு வங்கி வெளியிடும் புள்ளி விவரங்களை, Oxfam எனும் தன்னார்வ நிறுவனம் அலசும். அதன்படி, 2018இல் பொருளாதாரப் படிநிலையில் மேல்தட்டில் இருக்கும் 10 விழுக்காட்டினர், இந்திய நாட்டின் மொத்த தனிநபர் சொத்து மதிப்பில் 77 விழுக்காட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு குடும்பங்களிடம் வெறும் 4.7 விழுக்காடு செல்வம் மட்டுமே இருந்தது.

2014இல் தேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 23 விழுக்காடு, மேல்தட்டில் இருக்கும் ஒரு விழுக்காட்டினரிடம் சென்று சேர்ந்தது என்றும், நாட்டின் வளங்கள் சிலரிடமே சென்று குவியும் இந்தப் போக்கு 1980 – 2015 காலத்தில்தான் தீவிரம் பெற்றது என்றும் தாமஸ் பிக்கெட்டி மற்றும் லூகஸ் சான்ஸல் என்கிற பொருளாதார அறிஞர்கள் 2017இல் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளனர். ‘ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்ததை விட, இன்று சுதந்திர இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்து, அது செல்வந்தர்களின் ஆட்சியாக மாறியிருக்கிறதா?’ என்ற கேள்வியை அவர்கள் அந்தக் கட்டுரையில் எழுப்பியிருந்தனர்.

நாட்டில் சொத்து, வருமானப் பகிர்வு எந்த அளவுக்குச் சமமற்றதாக இருக்கிறது என்று ஒவ்வொருமுறை ஆய்வுகள் வெளிவரும்போதும், அவற்றை மறுதலித்துப் பேசும் அறிவுஜீவிகள் பலர் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைவிட ஒருபடி மேலே சென்று, இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது இயல்பான விஷயம்தான், அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று எழுதுபவர்களும் இங்கு ஏராளம்.

வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா?

பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கிறது எனும் வாதத்தை மறுதலிப்பவர்கள், அந்த வாதத்தை முன்வைப்பவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்ன? இந்தியாவில் ஒவ்வொருவரும் எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்பது பற்றிய முழுமையான தகவல்கள் நம்மிடம் இல்லை. இங்கு வருமான வரி செலுத்துபவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவு. தனிநபர், குடும்பங்கள் வைத்திருக்கும் சொத்து பற்றிய அரசின் அதிகாரபூர்வ விவரங்களும் மாதிரி குடும்பங்கள் (Sample Households) வழங்கும் தகவல்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகிறது. ஆக, பொதுவெளியில் இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (NSSO) சேகரிக்கும் தனிநபர் மாத நுகர்வுச் செலவின் (Monthly Per Capita Exenditure) அடிப்படையில்தான் நாட்டில் பொருளாதாரப் படிநிலையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மக்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு கணக்கிடப்பட்டு வந்துள்ளது. தனிநபர் வருமானம் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாத காரணத்தால், வருமானப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வை அளவிட நுகர்வு ஒரு பதிலியாகப் (Proxy) பயன்படுத்தப்படுகிறது. தங்கள் நுகர்வு பற்றிய விவரங்களை அரசுடன் பகிர்வதில் மக்கள் நேர்மையாக இருக்க மாட்டார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், தங்கள் வருமானம், சொத்து, நுகர்வு என எதுவாக இருந்தாலும், அதன் அளவைக் குறைத்துச் சொல்வதற்கான காரணங்கள் அடித்தட்டில் இருக்கும் மக்களைவிட மேல்தட்டில் இருக்கும் மக்களுக்கே அதிகம்.

இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். வாடகைக்கு வீடு கொடுப்பவர்களில் எத்தனை பேர், வாங்கும் வீட்டு வாடகைக்கு ரசீது கொடுக்கின்றனர்? அவர்கள், வாடகையை வங்கி வழியே செலுத்தச் சொல்கிறார்களா… இல்லை, பணமாகக் கையிலேயே பெற்றுக்கொள்கிறார்களா? இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதி வரும் விவேக் கவுல் என்பவர், 2018-2019 நிதியாண்டில் தனிநபர்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையை அலசி ஆராய்ந்து மின்ட் வணிகப் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

வருமான வரி அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இந்தியாவில் வீட்டை வாடகைக்குக் கொடுத்து அதிலிருந்து வருமானம் பெறுபவர்கள் 35 லட்சத்திற்குச் சற்றே அதிகமானவர்கள் மட்டுமே. இது கொஞ்சம்கூட நம்பும்படி இல்லை என்கிறார் விவேக் கவுல்.

வருமானம், சொத்து மற்றும் நுகர்வு பற்றிப் பொதுவெளியில் இருக்கும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லாததால், ஏற்றத்தாழ்வு அதிகரிக்கவில்லை என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து உள்ளது என்பதை அடிப்படையற்ற வாதம் என்று புறந்தள்ளுவது சரியான அணுகுமுறை அல்ல. இருக்கும் விவரங்களை வைத்துத்தானே ஆய்வு செய்யவும் அளவிடவும் முடியும்!

Afbeeldingsresultaat voor Economic Inequality

வறுமை ஒழிப்பும் ஏற்றத்தாழ்வும்

அடுத்து, இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனும் வாதத்துக்கு வருவோம். கடந்த முப்பதாண்டுகளில் எந்த அளவுக்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருக்கிறது என்பதைப் பார்க்கச் சொன்னால், ‘நீங்கள் அதை ஏன் பார்க்கிறீர்கள்? நாம்தான் வேகமான பொருளாதார வளர்ச்சியின் வழியே 2004-05 – 2011-12 காலத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள்தொகையின் பங்கை 37 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாகக் குறைத்துள்ளோமே; 13.8 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துவிட்டார்களே! அதைப்பற்றிப் பேசுங்கள்’ என்கிறார்கள். சிலர் இன்னும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து, ‘உலக நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. இந்தியாவும் சீனாவும் பல கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதால்தான் இது சாத்தியமானது’ எனும் வாதத்தை முன்வைக்கின்றனர்.

அந்தந்த நாட்டில் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மோசமாகிக்கொண்டே போகிறது என்று சுட்டிக்காட்டினால், வறுமையைக் குறைத்துள்ளோம், உலகில் ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது என்று சொல்வது எந்த வகையில் பொருத்தமான பதிலாக இருக்கும்? நாம் வறுமைக்கோட்டைக் காலங்காலமாக எப்படி வரையறுத்துள்ளோம் என்று சற்று ஆலோசித்துப் பார்த்தால், நாம் வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டி இருக்கும்.

இன்றும்கூட உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-5 வயதுக் குழந்தைகளில் 50 விழுக்காடு குழந்தைகள் இந்தியாவில்தான் உள்ளனர். இந்தியாவிலுள்ள 0-5 வயதுக் குழந்தைகளில் 40 விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இதுதான் வறுமைக் குறைப்பில் நாம் நிகழ்த்தியுள்ள சாதனையா?

வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கு அதிகமாகக் கூலியும், சம்பளமும் தர வேண்டும் என்பதால், ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும், நிரந்தரமற்ற வேலையில், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யத் தயாராக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் கொண்ட வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி மேற்கொள்கின்றன. இதன் விளைவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவத்தின் கனவு தேசங்களிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் உண்மைக்கூலி கடந்த முப்பதாண்டுகளாகத் தேக்கம் கண்டுள்ளது. இப்படிதான் உலக நாடுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்துள்ளோம்.

அதாவது, அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருக்கிறது என்று சொல்வது சரியாக இருக்காதாம்; ஆனால், அதே அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டோம் என்று பெருமிதப்பட்டுக் கொள்ள முடியுமாம். இதில் எவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது என்பதை இந்த வாதங்களை முன்வைக்கும்போது உணரவே மாட்டார்களா?

1950-1980 காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது என்று சொன்னால், ‘1947-1977 காலத்தில் வறுமையின் அளவு குறையவே இல்லை. அந்த முப்பதாண்டுகளில் மக்கள்தொகை இரண்டு மடங்கு அதிகரித்ததன் விளைவாக, வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பானது. அதனால், அந்தக் காலத்துச் சோசியலிசத்தை விட, 1991க்குப் பின் நாம் தழுவிய முதலாளித்துவமே சிறந்தது’ என்று வாதிடுகின்றனர். அரசு, ஆய்வுகள் நடத்தும் முறை, நுகர்வு மற்றும் சொத்துக் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் முறையைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளபோதும் அந்த ஆய்வுகளின் விவரங்களை/முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள், 1947-77 காலத்தில் சேகரிக்கப்பட்ட விவரங்களை மேற்கோள்காட்டி வாதம் செய்கின்றனர். இவர்கள் எதன் அடிப்படையில் தங்கள் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Afbeeldingsresultaat voor Economic Inequality

வேறு வழியின்றிப் புலம்பெயரும் மக்கள்

அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னால், ‘ஊரக இந்தியாவைவிட நகர்ப்புறங்களில்தான் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது; ஆனால், மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்குத் தானே புலம்பெயர்கின்றனர்… ஏன்? நகரங்களில்தான் பொருளாதார வாய்ப்புகள் அதிகம் என்பதே அதற்குக்காரணம்’ என்கிறார்கள்.

அரசின் கொள்கை முடிவுகளின் விளைவாக ஊரக இந்தியா பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சந்தையில் நியாயமான விலை கிடைப்பதில்லை. அவர்கள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசுகள் செவிசாய்ப்பதில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஊரகப் பகுதிகளில் வாழ்வாதாரங்கள் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன. வேறு வழியில்லாமல் அவர்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்கின்றனர்.

நகரங்களுக்கு வருபவர்களுக்கு நல்ல ஊதியம், சமூகப் பாதுகாப்பு பலன்களை உறுதிசெய்யும் நிரந்தர வேலையையா நாம் வழங்குகிறோம்? கூலித்தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், மேட்டுக்குடி மக்களின் வீடுகளில் பணியாட்களாகவும் அவர்கள் வேலை செய்யும் ஓர் அவல நிலையைத்தான் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

ஏதோ ஒரு வேலை கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் சுயமரியாதையை இழந்து பிழைத்துக் கொண்டிருக்கும் நிலையை, நல்ல பொருளாதார வாய்ப்புகளைத் தேடி மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்கின்றனர் என்று சொல்வது ஒரு நாகரிகமான, முற்போக்கான சமுதாயத்தின் அடையாளமாக இருக்காது.

கட்டுரையாளர் குறிப்பு

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சியளித்து வருகிறார்.

Tags: