மேதினமும் எமது இணையத்தின் முதலாவது ஆண்டு நிறைவும்

லகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளாக மே மாதம் முதலாந்திகதியை கொண்டாடி வருகிறார்கள். இந்த நாள் பாட்டாளி வர்க்கத்தின் தியாகத்தையும், வலிமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய தினம், உலகம் முழுவதும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.

உலகில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் அவர்களும் அவர்களது குடும்பங்களும் வறுமையில் வாடுகின்றனர். அத்தோடு பல நாடுகளில் இன்னமும் அமுலிலுள்ள ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள், இன்றைய நாளில் பேரணிகளையோ கூட்டங்களையோ நடாத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளினை மிகுந்த துயரத்துடனேயே கடந்து செல்ல வேண்டியுள்ளது.

தங்களது உழைப்பை உலகிற்கு தந்து வியர்வை சிந்தி மற்றவர்களின் வாழ்க்கைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணம் செய்யும் தொழிலாளர்கள் இத்தினத்தில் உலகளாவிய ரீதியில் கௌரவிக்கப்படுகிறார்கள். எனினும் உலகில் ஏராளமான நாடுகளில் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக இன்றும் போராடி வருகின்றனர். எவ்வாறெனினும் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வேலை செய்வதை எதிர்த்து, 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமென்ற போராட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றிபெற்று இன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடும் அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் எமது மேதின வாழ்த்துக்கள். அதேநேரத்தில் கொரோனா தொற்றுநோயால் இதுவரையில் உலகெங்கிலும் மரணத்தைத் தழுவிய அனைவருக்கும் எமது அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

O O O

ல நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இன்று நாம் இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். கடந்த வருடம் மேதினத்திலன்றே எமது ‘சக்கரம்’ இணையத்தளத்தில் முதலாவது பதிவு இடப்பட்டது. இதுவரையிலிடப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் திரும்பிப்பார்க்கையில் மிகவும் பூரிப்பாகவே உள்ளது.

‘சக்கரம்’ இணையத்தளத்திற்கு வாசகர்கள் நாளாந்தம் பெருகிய வண்ணமேயுள்ளன. இது இன்றுள்ள சூழலில் அரசியல், சமூக, பொருளாதார, கலை, இலக்கிய பரப்பில் ஆழமாக வாசிப்பதிலுள்ள அக்கறையைக் காட்டுவதோடு நின்றுவிடாது, ‘சக்கரம்’ போன்றதோரு ஊடகத்திற்கான தோவையொன்று நீண்டகாலமாக இருந்தது என்பதையும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. அத்தோடு சக்கரம் இணையத்தளத்திற்கு இருக்கும் ஆதரவாலும், வாசகர் பெருக்காலும் நாமும் உந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய கொரோனா பேரிடரால் வீடுகளில் முடங்கியிருக்கும் சூழலில் எமது இணையத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையிலும் திடீரென பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்களும் புதிய பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றுவதில் துரிதமாக செயற்பட வேண்டியுமுள்ளது.

முதலாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் இந்தத் தருணத்தில், நேரிலும் மின்னஞ்சல் வாயிலாகவும் எமது இணையத்தளத்தினை வாழ்த்தியும் ஊக்குவித்தும், எமது இணையத்தளத்தினை ஏனையோருக்கு அறிமுகப்படுத்தியும், ஆக்கங்களை எழுதியும், ஆலோசனைகளை வழங்கியும் வரும் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம். மேலும் இப்போது போலவே, இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாக உங்களது ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

ஆசிரியர் குழு
01.05.2020

Tags: