ஆ. சபாரத்தினம் மாஸ்டர்: அருகி வரும் ஆசிரியர் தலைமுறைகளிலிருந்து ஒருவர்

இ.கிருஷ்ணகுமார்

காலைக்கதிர் இ பேப்பரை விரைவாக தட்டிச்சென்றபோது “மூதறிஞர் ஆ. சபாரத்தினம் பிரிந்தார் “என்ற  செய்தி என்னை திடீரென நிறுத்தி விட்டது. மனம் தடுமாறியது. வேதனையடைந்தது. நினைவுகள் சபாரத்தினம் மாஸ்டரை பின்  தொடர்ந்து சென்றதன.  ஏ.ஜெ.கனகரத்னாமறைந்தபோது எப்படியான  நிலையில்இருந்தேனோ அதுபோன்றதொரு உணர்வில் இருந்தேன். ஆழ்ந்த புலமை , தன்னை என்றுமே முன்னிலைபடுத்தாத அரும் குணம் , தனக்கு தெரிந்தவற்றை எல்லோருக்கும் பகிந்து கொள்ளும் அரிய பண்பு, எல்லோரையும் சமமாக மதிக்கும் போக்கு , துன்பப்படுவோருக்கு வலிந்து உதவும் போக்கு என இவரது பண்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் . தூய்மையான வெள்ளை வேட்டி , வெள்ளை நேஷனல் சேர்ட் வெள்ளை சால்வை அணிந்துஎப்போதும் திருநீறு பூச்சிய முகத்துடன்  ஒரு பழையசைக்கிளில் ஒரு புத்தக பையுடன்  வருபவர்தான் சபாரத்தினம் மாஸ்டர்.  சைக்கிளை தூக்கியே திருப்புவார்.

கல்வியை பெரும் செல்வமாக போற்றுகின்ற ஒரு பெரிய ஆசிரியசமூகம்  யாழ்ப்பாணத்தில் இருந்தது. இவர்கள் ஆசிரியத்துத்வதை தாமே விரும்பித்  தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் அனைவருமே ஆசிரியர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள். வகை மாதிரிகள். இந்த தலை முறையினரிடம் கருத்து வேறுபாடுகள் அரசியல் வேறுபாடுகள் சமய வேறுபாடுகள் இருந்தன. ஆனால் ஒருவரை ஒருவர் மதித்தார்கள். கல்வியை என்றுமே ஒரு வியாபாரமாக பார்க்கவில்லை.  சின்னத்தம்பிப்புலவர் , குமாரசமிபுலவர் என ஒரு புலவர் பாரம்பரியத்துடன்  தொடங்கி சி.வை தாமோதரம்பிள்ளை,  பண்டிதமணி கணபதிப்பிள்ளை , பொ. கைலாசபதி எனவிரிந்து சென்று எமது தலைமுறையில் ஹன்டி பேரின்பநாயகம் , மு.கார்த்திகேசன் , க.கைலாசபதி, ஏ.ஜெ.கனகரத்னா , மயிலன்கூடலூர் நடராஜன், மகாஜனக்கல்லுரி  சண்முகசுந்தரம், கனக செந்திநாதன், ஒரேட்டர்சுப்பிரமணியம்   என பரந்து விரிந்து கிளை பரப்பியது . இந்தத் தலைமுறையில் ஒருவராக சபாரத்தினம் மாஸ்டர் இருந்தார்.

ஏ.ஜெ. கனகரத்னாவும் சபாரத்தினம் மாஸ்டரும் நல்ல நண்பர்கள். ஏ.ஜெ.  இருந்தபோது ஒரு மாதத்திற்கு குறைந்தது இரு முறையாவது வீட்டுக்கு வருவார்.  இருவரும் நிறைய நேரம் பேசிக்கொள்வார்கள். மாஸ்டர் சைவசித்தந்ததில் ஆராய்ச்சியும் புலமையும் மிக்கவர் . பல ஆராய்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார் . எப்போது அவர் வாயை திறந்தாலும் உப அதிபர் பொ.கைலாசபதி அவர்களின் பெயரையும்  அவரது சைவ சித்தாந்த ஆராய்ச்சி பற்றி எதாவது ஒரு விடயத்தையும்  கூறியே தீரூவார். அந்த அளவு  சைவாசிரிய கலாசாலை உப அதிபர் பொ.கைலாசபதியின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர்.  அதேயளவு நவீன சிந்தனையாளர்களான பூக்கோ, தெரிதா பற்றியும் புலமை இருந்தது. “காவல் நகரோன்” என்ற புனை பெயரில் ‘மல்லிகை’யில் பின் நவீனத்துவம்தொடர்பான கட்டுரைகளை மாஸ்டர் எழுதியிருந்தமை இப்போது ஞாபகம் வருகிறது.  ஏ.ஜெ  யும் மாஸ்டரும் இப்படியான விடயங் களை   உரையாடும்போது   அவை புரியகடினமாக இருந்தாலும் கேட்க ஆசையாக  இருக்கும். ஏ.ஜெ. யை காண வரும்போது எதாவது பழம் வாங்கி வருவார். என்னோடும்  சோமேசோடும்  மிக அன்பாக பழகுவார். சோமேசுக்கு நிறைய புதிய விடயங்களை கூறுவார். எதிரே இருப்பவருக்கு தன்னை போல விடய ஞானம் இருக்கும் என்ற எண்ணத்துடனே மிக விரைவாக பேசிக்கொண்டே போவார். அவர் போன பிறகு அவர் கூறிய பல விடங்களை தேட வேண்டிய நிலைக்கு வரவேண்டியிருக்கும் . அவர் வரலாற்றுப் பாட நூல்களை யும் எழுதியிருந்தார். அவரது வரலாற்று அறிவு மிக ஆழமானது.  ” புதுமுறைச்சரித் திரம்” என்ற ஆரம்ப மாணவர்களுக்கான கல்வித் திணைக்கள வெளியீடுகள் முக்கியமானவை .

மரியா சேவியர் அடிகளாரும் சபாரத்தினம் மாஸ்டரும் ஒருவர் மீது  ஒருவர் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர்கள். சைவசித்தாந்தத்தின் மேல் இருவருக்கும் ஈடுபடும் அதிகம். மாஸ்டர்  திருமறைக்கலாமன்றத்தில் சிறிது காலம்  மாலைவேளைகளில்  “சைவசித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் ” என்னும் தொடரில் விரிவுரைகள் நடத்தி வந்தார். எல்லா மதங்களிலும் அடிப்படை வாதமே மேலோங்கி வரும் இக்காலத்தில் இவைபற்றி யெல்லாம் எத்தனை பேர் அறிவர்.

சபாரத்தினம் மாஸ்டரிடம் ஏதாவதொரு விடயத்தை பற்றிய சந்தேகத்தை, விளக்கத்தை யாராவது கேட்டால் அதுபற்றி பூரணமாக அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் தேடிவந்து கூறிவிட்டுப்போவார். சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடுகள் அவருக்கு இல்லை. இதே பண்பு ஏ.ஜெ. கனகரத்னாவிடமும் உண்டு. ஏ.ஜெ இடம் ஒரு  ஆங்கில  சொல்லுக்கு பொருள் கேட்டால் முதலில் பொருளைக் கூறுவார். பிறகு’ நில்லுங்கோ செக் பண்ணிவிட்டு சொல்லுகிறேன்’ என்று கூறி விட்டு ஒக்ஸ்போர்ட் அல்லது வெப்ஸ்டர் டிக்சனரியை பார்த்து விட்டு அதனுடைய வேர்சொல்லிருந்து முழுமையான விளக்கத்தை தருவார்.  இது அந்த தலை முறைக்கே உள்ள பண்பு போலும். இவர்கள் எல்லோரும் எல்லாத் தலைமுறையினரிடமும் பழகும் ஆற்றல் கொண்டவர்கள் .

சபாரத்தினம் மாஸ்டர் எனக்கு என்பதுகளின் பிற் பகுதியிலேயே அறிமுகமானார். நான் அப்போது குருநகரில் அமைந்துள்ள மாநகர சபை கிளை நூலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன் . அடிக்கடி  நூலகத்திற்கு வருவார் . பல விடயங்களை பேசுவார். பல நூல்களை படிக்கும்படி சிபார்சு பண்ணுவார். ஒரு துருதுறுப்பும் இளைஞர்களுக்குரிய  உற்சாகமும் எப்போதும்  அவரில் குடியிருக்கும்.  நூல்கள் மீதும் நூலகங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சோமிதரனின் ‘ எரியும் நினைவுகள்’ ஆவண படத்தில் சபாரத்தினம் மாஸ்டரின் நூலகம் பற்றிய உரையாடல் முக்கியமான வரலாற்றுக்குறிப்பு .

ஒரு ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்யாத குணம் . ஒரு எறும்பு நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தால் அதை பார்க்காது போய்விட கூடாது ,ஒரு இலையையோ ஒரு துரும்பையோ போட்டு அதனைக் காப்பாற்றவிடவேண்டும் என்பார்.

1993 இல் எனக்கு இரட்டைப் பெண்குழந்தைகள் பிறந்தன. “சேர்  எனது குழந்தைகளுக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன். உடனே தேவி சகஸ்ரநாமம் எடுத்துவந்து அதை படித்து அபர்ணா, அஜிதா என இரு பெயர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சூட்டினார்.  அது மட்டுமல்ல பிறந்த நேரத்தை குறித்துக்கொண்டு போய் தானே  ஜாதகம் எழுதிக்கொண்டு வந்து தந்தார். அவருக்கு சோதிடத்தில் நம்பிக்கை அதிகம் .  அதன் பிறகு வீடுக்கு வரும் போதெல்லாம் எங்கே என்  பேர்த்திகள்  என்று கேட்டுக்கொண்டே வருவார். நானும் அடிக்கடி என் பெண்பிள்ளைகளுடன் அவரை சந்தித்து வருவேன்.

பல வசதி குறைந்த மாணவர்கள் அவரால் உதவி பெற்று நல்ல நிலையில் இருப்பதையும் நான் அறிவேன். நான் பல்கலைகழகத்தில் அனுமதிகள் கிளையில் கடமை ஆற்றிக்கொண்டிருகும் போது நிர்வாக உதவி வேண்டி நிற்கும் பல மாணவர்களை கூட்டிவருவார். அந்த மாணவர்கள் நல்ல நிலையில் வந்து நன்றி மறவாது மாஸ்டரை சந்தித்து வருவதோடு எனக்கும் நன்றி கூறுவார்கள். மாணவர்கள் கற்கும் ஆவல் இருந்து வசதியின்மையால்  கல்வி தடைப்படுவதை மாஸ்டர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. தனக்குரிய தொடர்புகளை பாவித்து அவர்களை முன்னேற்றுவதில் முழு அக்கறையும்செலுத்துவார். சோமேசிடம்  கற்ற மாணவிகளின்  மேற்படிப்புக்கு மாஸ்டர் பல உதவிகள் செய்துள்ளார்.

சோமேசின் “உலகம் பலவிதம் – ம.வே. திருஞனசம்பந்தப்பிள்ளை” எனும் பதிப்பு வெளியாதும் மாஸ்டருக்கு ஒரு பிரதியை கொடுக்கப்கொடுப்பதற்காக  இருவரும் சென்றோம். சிரித்த முகத்துடன் வரவேற்றார். சிறிது நேரம் உரையாடிவிட்டுத் திரும்பினோம். விதையொன்று வீழ்ந்து முளைக்கத்  தயாராகிக்கொண்டிருந்தது.

மாஸ்டர் முதுமை வாழ்வு நிறைவாகவே இருந்தது. மகன், பேரன், மைத்துனிகள் என அனைவரும் அன்புடன் கவனித்துக் கொண்டார்க்கள். முதுமை அவரது நினைவாற்றலை குறைத்துவிட்டது. அவ்வளவுதான். அவரின் வாழ்வு அருகி வரும் ஒரு தலைமுறை ஆசிரியர்களின் பண்புகளை நினைவு படுத்தியபடியே இருக்கும் . நிறைவுடன் சென்றுவாருங்கள் சேர் . உங்களுடன் இந்தப் பிறப்பில் சேர்ந்து பழக கிடைத்தமை நாம் செய்த புண்ணியம் தவிர வேறொன்றும் இல்லை .

வாழ்க்கைக் குறிப்பு: 1928 ஆம் ஆண்டு, ஐப்பசி 30 ஆம் திகதி பிறந்த சபாரத்தினம் மாஸ்ரர், மேலதிக ஆங்கில உதவி ஆசிரியராகச் சேவையில் சேர்ந்தார். பின்னர் 1949 – 1950  ஆம் ஆண்டுகளில், மஹரகம ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். 33 ஆண்டுகள் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியராகவும், கரம்பன் சண்முகநாத வித்தியாலயத்தில் அதிபராகவும் (1984 – 1988) பணியாற்றி, ஒய்வு பெற்றுள்ளார்.

Tags: