கொரோனாவும் மகாத்மாவின் இந்திய சுயராஜ்யமும்

வெ.ஜீவானந்தம் 

கரோனாவும் மகாத்மாவின் இந்திய ...

 

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கப்பலில் திரும்பிய மோகன்லால் கரம்சந்த் காந்தி, தனது கப்பல் பயணத்தில் சாவர்க்கர் போற்றிய மேற்கத்திய நாகரிகம், ரயில், கல்வி, வன்முறைப் போராட்டம், பிரிட்டிஷ் அடிமைப்படுத்திய வரலாறு ஆகியன குறித்துத் தானே கேள்வியாளராகவும், பதிலளிப்பவராகவும் குஜராத்தியில் எழுதிய முதல் நூல் இந்திய சுயராஜ்யம்.

காந்தியின் கொள்கை சாசனமாக இறுதிவரை நிற்கும் இந்த நூலை 1908 ஆம் ஆண்டு கப்பல் பயணத்தில் இடது கையாலும், வலது கையாலும் மாறி மாறிப் பத்து நாள்களில் எழுதிய வெறும் 100 பக்க நூலே இது.

இளம் வழக்கறிஞர் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து சென்று  அங்கு இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த சாவர்க்கர் போன்றோரிடம் அகிம்சை முறைப் போராட்டம் பற்றி விரிவாக விவாதம் செய்தததையும் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்திய சுயராஜ்யம் by ரா. வேங்கடராஜுலு

இதன் கருத்துகள் யாவும் முதலில் படிக்கும் நவீன இளைஞன் முற்றிலுமாக ஒப்புக்கொள்ள முடியாது, முட்டாள்தனமான, பிற்போக்கான நூலாகவே தோன்றும். முதலில் இந்த நூலை வாசித்த கோகலே, இது இளம் காந்தியின் அவசர எழுத்து, காலப்போக்கில் அவர் இதைக் கிழித்துப்போட்டு விடுவார் என்று கூறினார். மாறாக ருஷ்ய அறிஞர் டால்ஸ்டாயோ, மனிதவர்க்கத்திற்கே முதன்மையான நூல் இது என்றார். காந்தியின் வாரிசான நேருவோ இதை எந்தக் காலத்திற்கும் பொருந்தாத, யாருக்கும் உதவாத நூல் என்றே இறுதி வரை கூறினார்.

ஆனால் இன்றும் உலகம் முழுவதும் மனிதநேய அறிஞர்களால் இந்திய சுயராஜ்யம் நூல் ஏற்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, விளக்கங்களும் அதன்  அடிப்படையில் புதிய புதிய நூல்களும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதன் வார்த்தைப் பயன்பாடுகள் நூலை வாசிக்கும் முதல் வாசகருக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஊட்டும்.  ஆனால் தமது வாழ்நாளின் இறுதி வரை அதில் கூறப்பட்டவையே தனது மாற்றமுடியாத இறுதியான கொள்கை எனவும், இதில் எந்த ஒரு வார்த்தையையும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும்  உறுதியுடன் கூறிவந்தார் மகாத்மா காந்தி.

கொரோனா

கொரோனா, 2019-ன் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் வெளிப்பட்ட வளர்ச்சி முழுமை பெறாத – அரைகுறையான மரபணு ஆர்என்ஏ கொண்ட – குறை பிரசவ வைரஸ். இது புதிதல்ல, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் வைரஸ் குடும்பத்தில் ஒன்றே கோவிட் 19 என்பது. இனிவரும் காலங்களில் இதன் பல்வேறு வடிவங்கள் தொடர்ந்து உருவாவதைத் தடுக்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதுவரை வெல்ல முடியாது நம்முடன் வாழ்ந்து வரும் சளி, இருமல் (சாதாரண ஜலதோஷம்) போல குணமாக்கும் மருந்துகள் ஏதுமற்ற அதே வகை நோயே கொரோனா, போலியோ, ட்டி.ப்பி.ட்டி.  எனப்படும் முத்தடுப்பு போல விரைவில் இதற்கும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும். எனினும், நாம் பாம்பு, புலி, சிறுத்தை, கடற்சீற்றம், நிலநடுக்கம் ஆகியவற்றுடன் வாழ்வது போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பயந்து, ஒளிந்துகொள்ள முடியாது. இணைந்து பாதுகாப்பாக வாழப் பழக வேண்டும், அவ்வளவே.  

கொரோனாவும் இந்திய சுயராஜ்யமும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல், அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்பது கேட்பது நியாயமே. ஆனால் கொரோனா இயற்கையின் ஒரு அங்கம். மனிதனைப் போல வைரஸும் இயற்கைச் சங்கிலியின் ஒரு கண்ணியே. இதை ஒழிக்க முடியாது. இதனுடன் வாழ்வது எப்படி எனும் வாழ்வியல் பாடம் கற்பதே அவசியம். வாழும் முறை தெரிந்துகொண்டால் எதனுடனும் வாழலாம். முதுமையே காணப்படாத பனிப்பாலையிலும், மணற்பாலை வனத்திலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.

காந்தியின் இந்திய சுயராஜ்யம், வாழ்வுமுறை மாற்றம் கூறும் நூலே. இதை இந்தியருக்கான நூல் என்றோ 20 ஆம் நூற்றாண்டுக்கான நூல் என்றோ எல்லை இட்டு அடைத்துவிட முடியாது. அதை எந்த நாட்டுக்கும், எந்தக் காலகட்டத்திற்கும், எந்தக் கேட்டிற்கும் தீர்வு காணத் தக்க திருக்குறளாக விரித்துப் பயன்படுத்த முடியும் என்பதாலேயே இன்றும் அது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

எனவே, இன்றைய காலகட்டத்தின் தேவையான வாழ்வுமுறை மாற்றத்திற்கு இந்திய சுயராஜ்யத்தின் சில பகுதிகள் எப்படி வழிகாட்டி உதவ முடியும் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் அடிப்படையான நோக்கம்.

மனிதனை ஒழுங்குபடுத்து, உலகம் ஒழுங்காகும் என்பார்கள். இதையே காந்தி, மாற்றத்தின் முதற்புள்ளியாக நீ மாறு என்பார். எனவே நம்மை, நம் செயல்பாடுகளை, சிந்தனைகளை, அணுகுமுறைகளை மாற்றி, கொரோனாவுடன் இயைந்து வாழ காந்திஜியின் இந்த சிறுநூல் எப்படி உதவும் என்பதைக் காண்போம். தொடர்ந்து, காந்தி நம் வாழ்வின் மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் இச்சிறு நூல் மூலம் வழிகாட்டுவார் என்பதை உணர்வோம். 

The world's largest coronavirus lockdown is having a dramatic ...

நகரமயமும் கொரோனாவும்

மனிதன் போல, மரம் போல, யானை போல இயற்கையின் ஒரு அங்கமே கோவிட் 19. இயற்கையை அழிப்பதன் மூலம் இங்கு வாழும் உயிரினங்களின் வாழ்விடத்தை அழிக்கிறோம்.  வாழ்விடமிழந்த அவை நம்மிடம் தேடி வருகின்றன. இயற்கை அழிப்பு என்பது மனிதப் பேராசையின் ஒரு வடிவமே.

காந்தி தன்னிறைவு, தற்சார்பு வாழ்வுமுறை, வாழ்விடம் பற்றி மிகவும் வலியுறுத்துபவர்.  இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இடம் பெயரச் செய்து மலிவுக் கூலிகளாக நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் மோசமான வாழ்வுச் சூழலுக்குத் தள்ளும் முதலாளித்துவ நகர்மய, எந்திரமய வாழ்வு முறைக்கு மாற்றாக கிராமமய தன்னிறைவு கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தினார்.

தன்னைச் சுற்றிய 5-10 கிலோ மீட்டர் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்கள், உணவு கொண்டு வாழ்வதே தற்சார்பு என்றார். நகரம் வாழ்வு தரும், வளம்  தரும் என்று ஓடிய கிராம மக்களைச் சுரண்டிய தொழிற்சாலைகளை மூடிய பின் நீ எக்கேடு கெட்டால் என்ன என்று அநாதைகளாகப் பட்டினியில் சாக விட்டதே நகர்மையத் தொழில் மையம். இன்று விரட்டியடிக்கப்பட்டு நகரங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கிராமங்கள் நோக்கி கால்நடையாக வரும் மக்கள் தமது நகர வாழ்வுக் கனவைவிட்டுக்  கிராமங்களைத் தமது நிரந்தர வாழ்விடமாக ஏற்க வேண்டும்.

நமது கல்வி, தொழில் அனுபவம், செல்வம், உழைப்பு கொண்டு தமது கிராமத்தைத் தன்னிறைவுமிக்க பொன்னுலகமாக மாற்றி கிராம சுயராஜ்யத்தை உருவாக்க காந்தியின் இந்திய சுயராஜ்யம் வழிகாட்டுகிறது. சமூக இடைவெளிக்கு நிச்சயமாக நகரம் உகந்த இடமாக முடியாது. கிராமங்களை மேம்படுத்துவது அல்லது அப்துல் கலாமின் நவீன வசதிகள் கொண்ட ”புறா”வாக்குவதே, இனிவரும் தொடர் நோய்ப் பரவல் காலத்திற்கு உகந்த நிரந்தரத் தீர்வாகும்.

கொரோனாவும் நாகரிகமும்

நவீன நாகரிகத்தை காந்தி ஒரு கனவு நோய், வீண் மாயக் கற்பனை என்கிறார். உடல் இன்பம், நுகர்வு வெறி, ஆடம்பரம், உழைப்பின்மை, கும்பல் நடத்தை, பணவெறி ஆகியவற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதே இந்த நாகரிகம். இது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் சாத்தான் என்கிறார்.

இதைக் கொரோனா முழுமையாக நிரூபித்துள்ளது. நகர ஆடம்பர ஜொலிப்பில் கரைந்த மத்தியதர வர்க்கம், வீடு, கார், நுகர்வு ஆகியவற்றுக்கென கடனில் மூழ்கி, இக்காலத்தை எப்படிக் கடக்கப் போகிறோம் என்ற அச்சத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளது.

நாகரிகம் என்பதன் பொருளே நன்னடத்தைதான் என்கிறார் காந்தி. சிலரின் ஆடம்பரம் பலரின் வாழ்வை அழித்து உருவாவதே. நகரங்களில் பெரும் செல்வங்களை உருவாக்கிவிட்டு மனதிலும் தலையிலும் சுமையுடன் நடந்து செல்லும் கிராமப்புற அநாதைகளின் வாழ்வு இதை உணர்த்துகிறது. நகரங்கள் ஏழை மக்களை அழுத்திக் கொல்லும் கண்ணிகளே என்பது புரிகிறது. அங்கு வறியவர்களை வதைத்துப் பணக்காரர்களே வாழ்வார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பின்னரே இந்த நீண்ட பயணத்தைத் துவக்கியுள்ளனர்.

நமது எதிரிகள், அடிமைப்படுத்தியவர்கள் எனும் ஐரோப்பியர், வியாபாரம் செய்யவே வந்தவர்களை, நமது பேராசை, உட்பூசலால் அவர்களை அழைத்து நாமே ஆட்சியைக் கொடுத்தோம் என்கிறார் காந்தி.

அதுபோல நமது வளர்ச்சிப் பேராசையால் காடுகளை அழித்து நகரங்களாக்கினோம். வளர்ச்சி, பணப் பேராசையால் காற்று, நீர், மண், உணவு என அனைத்தையும் மாசுபடுத்தி வியாதிகளை வலிய வரவழைத்துக்கொண்டுள்ளோம். அதில் ஒன்றே கரோனா என்கின்றனர் விஞ்ஞானிகள். இதுவரை ஏழைகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும்  மட்டுமே தாக்கி வந்த தொற்றுநோய்கள் இன்று பணக்கார நாடுகளையும், மன்னர்களையும், சீமான்களையும் தாக்குகிறது என்பதால்தான் இத்தனை கூச்சலும் ஆர்ப்பாட்டமும்.

Photos show nature reclaiming cities amid the coronavirus outbreak ...

கொரோனாவும் மருத்துவமும்

பொதுவாக நவீன மருத்துவர்களை காந்தி வெறுப்பவர், கடுமையாக விமர்சிப்பவர் என்ற கருத்து உண்டு. அவர் மனிதநேயமற்ற வணிகமயமாகும் எதையும் கடுமையாகச் சாடுபவரே. அதுபோல மருத்துவம், இந்திய மன்னர்களை அச்சுறுத்தி வெள்ளையருக்கு அடிமைப்படுத்தப் பயன்பட்டு வருவதைக் கண்ட அவர், அவர்களைவிடப் போலி மருத்துவர்களே மேல் என்றார். நோய் நாடி, நோய் முதல் நாடி என்ற அடிப்படை தவறி மருந்து கொடுத்துத் தற்காலிகத் தீர்வு தருவதையும் அதற்கு அளவின்றிக் கட்டணம் வசூலிப்பதையும் கண்டித்தார்.

நோய் உண்டாகக் காரணம் என்ன, அதை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி அறிவுரை கூறும் டாக்டர்கள் இன்று எத்தனை பேர்? கரோனா உண்டாகக் காரணம் என்ன? நமது அதீத அதிகாரவெறியால் ஆதிக்க உணர்வால் சீனாவும், அமெரிக்காவும் நடத்தும் உயிரிப் போர் (BIOLOGICAL WAR – பயாலஜிகல் வார்) என்கிறது ஒரு கட்சி, கண்மூடித்தனமாக இயற்கையை அழித்தது என்கிறது இன்னொரு கட்சி. இவை பற்றி, அவற்றைத் தடுத்தால் நோய் வராது என்று பேசும் மருத்துவர் உண்டா?

உலக சுகாதார நிறுவனம், கொரோனா அதிவேகமாகப் பரவிக் கொல்லும் நோய்,  இதற்குத் தனிமைப்படுத்தல் தவிர வேறு மருந்தில்லை என்று அறிவித்துவிட்டது. இதனால் லாபமில்லாத ஆபத்தான இந்த நோயைக்  குணப்படுத்த நாம் ஏன் வேலை செய்ய வேண்டுமென கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டனர். எல்லா நோய்க்கும் எம்மிடம் மருந்துண்டு என்று மருத்துவத்தை முற்றிலும் வணிகமயமாக்கிய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் திறமை என்ன என்பதை கொரோனா அம்பலப்படுத்திவிட்டது. நாம் தரக்குறைவானது என்று ஒதுக்கிய அரசு மருத்துவமனைகளும், மருத்துவத் துறையினருமே சமூகக் காவல் தெய்வமாகியுள்ளனர். தனியார் லாபத்திற்கான மருத்துவத்தை எதிர்த்து விமர்சித்த காந்தியின் நிலைப்பாடு எத்தனை சரியானது என்பதை இன்றைய சூழலில் எவர் மறுக்க முடியும்?

நோயாளிகளுக்கு அன்பு காட்டுவதும், சரியான வாழ்வுமுறையைக் கற்பிப்பதும் ஒரு நல்ல டாக்டரின் கடமை என்கிறார் காந்தி. கொல்லும் கொரோனாவுக்கும் இது தவிர வேறு மருந்தில்லை எனத் தெரிந்து சரியான பாதுகாப்பு, சத்தான உணவு, சுத்தமான வாழ்வுச் சூழல் எனும் காந்திய மருத்துவத்தைத் தானே நாம் இப்போது மருத்துவம் எனத்  தந்து கொண்டுள்ளோம்.

கொரோனாவும் சமூக ஒற்றுமையும்

மகாத்மா காந்தி இந்திய சுயராஜ்யம் நூலில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படைத் தேவை இந்து – முஸ்லிம் நல்லிணக்கமே என வலியுறுத்துகிறார். இந்து மன்னர்களிடம் முஸ்லிம்களும், இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் இந்துக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். தமது நலன் பாதிக்கப்படாத வரை மக்கள் மதங்களைப் பகையாகக் கருதாமல், குடிமக்கள் என்ற வகையில் நிறைவுடனேயே வாழ்ந்துள்ளனர். பின்னர் உருவான மதவாத இயக்கங்களாலேயே சமூக அமைதி குலைந்தது என்கிறார் காந்தி.

இன்று இஸ்லாமியரால்தான் கொரோனா பரவியது என ஒரு பிரச்சாரம் பரப்பப்பட்டது. கூட்டம், கொண்டாட்டம், மத வழிபாடு எனபன நமது மக்களின் இயல்பான பங்கு. எல்லா மதங்களும் அரசியல் கட்சிகளும்  அரசும்கூட மாறிமாறி ஜனவரியில் கூட்டம் கூட்டின. ஆனால், இஸ்லாமியரை மட்டும் குற்றம் சாட்டுவதாக இருந்தது இந்திய அரசமைப்புகளின் நடவடிக்கை. இதனை உலக நாடுகள் அவையும், உலக சுகாதார நிறுவனமும் நமக்கு எண்ணெய்யும்வேலைவாய்ப்பும் தரும் அரபு நாடுகளும் மருத்துவ அறத்திற்கு அப்பாற்பட்ட தவறு என கண்டித்த பின் மதவாதத் தலைவர்கள் ராக்கி கட்டத் துவங்கியுள்ளனர். சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் மதவாதம் கடந்து நோயை நோயாக மட்டுமே அணுக வேண்டும் என்ற எச்சரிக்கையை கொரோனா விடுத்துள்ளது.

கொரோனாவும் உடல் உழைப்பும்

கொரோனாவுடன் கார்கள் நின்றுபோயின. பயணங்கள் முடிவுற்றன. சாலைகள் வெறிச்சோடின. அலுவலகங்கள், கடைகள், கோவில்கள் மூடிக்கிடக்கின்றன. ஒரு பகுதியினருக்கு வருமானம் தந்த உழைப்பு நின்றுபோனது. மறுபகுதி உழைப்பின்றி வாழ்ந்த வெள்ளைச்சட்டைக்காரர்களும் வீட்டில் வேலை செய்ய ஆளின்றித் தாமே சின்னச்சின்ன வேலைகளைச் செய்யவும் துவங்கியுள்ளனர். காந்தி தன் உழைப்பின்றி உண்பவன் பாவி என்பார். உடல் உழைப்பின் மூலம் மனிதன் வாழ வேண்டுமென்றார். எதற்கும் மணியைத் தட்டி வேலை வாங்கும் மனிதர்களைக் கரோனா வேலை செய்ய வைத்துள்ளது. ஆலைகளில் எந்திரங்களின், எந்திர இயக்கமின்றிக் காற்று சுத்தமாகியுள்ளது. வீட்டு வேலை என்பது பெண்களுக்கே என்பது மாறி சமநீதியைக் கரோனா நிலைநாட்டியுள்ளது.

கொரோனாவும் ரயிலும்

டாக்டர்களையும் வழக்கறிஞர்களையும் தறி நெய்யப் போகலாம் என்ற காந்தி, ரயிலை நோய் பரப்புவது, பஞ்சத்திற்கும் பதுக்கலுக்கும் பாவங்களுக்கும் காரணமானது என்று குற்றம் சாட்டி மக்களின் வெறுப்புக்கு ஆளானார் காந்தி. புண்ணிய தலங்களுக்கும் கோவில்களுக்கும் எளிதாக ரயிலில் போவதை, காசியை அசிங்கமாக்கும் பக்தியைக் கண்டித்தார்.

இன்று ரயில்கள்,கார்கள், விமானங்கள் எதுவும் ஓடவில்லை. உலகம் நிம்மதியாக நடந்துகொண்டிருக்கிறது. நாளேடுகளைப் பக்கம் பக்கமாக அடைத்த விபத்துச் செய்திகளில்லை. பெட்ரோல் செலவின்றிக் காற்று சுகமானதாகியுள்ளது. காந்தி சொன்ன வாழ்வைக் கொரோனா நிஜமாக்கியுள்ளது. படுவேகத்துடன் கூடிய பயணங்கள் எத்தனை தேவையற்ற பயணங்கள் என்பதை அனைத்துத் தரப்பினருக்கும் கொரோனா உணர்த்தியுள்ளது.    

L - RD.nl

கொரோனாவும் கல்வியும்

கல்வியே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவது. எனவே அத்தகைய பொறுப்புள்ள மனிதர்களை வெள்ளையருக்கு குமாஸ்தாக்களை உருவாக்கும் மெக்காலே கல்வி தராது என்பதால் புதிய இந்தியாவுக்காகப் புதுமைக் கல்வியாக ‘நயீதலீம்’ கல்வியை உருவாக்கினார். ஒரு நேரம் படிப்பு, ஒரு நேரம் உடல் உழைப்பு, உற்பத்தி, வருவாய் ஈட்டல், தன்னிறைவுக்கான கல்வியை அதில் வழங்கினார். இன்று பள்ளிகள் நான்கு மாதங்களாக மூடப்பட்டுவிட்டன. தேர்வுகள் நடக்கவில்லை. மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். வீட்டுக் காய்கறித் தோட்டம், தச்சு, விவசாயம், பானை செய்தல், செருப்புத் தைப்பது, வரை மாணவர்கள் உயர்வு தாழ்வன்றி அனைவரும் அனைத்தையும் கற்க வேண்டுமென்றார். அப்படி ஒரு கல்வியை மாணவர்கள் பெற்றால் வருமானமின்றி வாடும் இந்நாள்களில், பெற்றோர்க்கு எத்தனை உதவியாகப் பிள்ளைகள் இருக்க முடியும். நமது கல்விமுறை சமூகத்திற்கும், வீட்டுக்கும், தனக்கும் உதவும் பிள்ளைகளை உருவாக்குவதாக உள்ளதா? கல்வியைச் சந்தைச் சரக்காக்கியுள்ளோம். ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த கூலிக் கொத்தடிமைகளாக வேலை நேரக் கட்டுப்பாடின்றி உழைக்கின்றனர். பல கோடி செலவில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட மார்ச்சுவரிகள் போன்ற கல்விக் கூடங்களை இனி எப்படி நடத்தப் போகிறோம் என்ற அதிர்ச்சியால் உறைந்துள்ளனர் கல்வித் தந்தைகள். அவை எதுவுமின்றி உயர்தரமான கல்வியை நாள் முழுவதும் தர முடியும் என்பதை இணையக் கல்வி உணர்த்தியிருக்கிறது.

கொரோனாவுக்குப் பின் ஏழை, நடுத்தரக் குடும்பத்தின் பிள்ளைகளுக்கான காந்திய புதுமைக் கல்வியே, மகிழ்ச்சி, தற்சார்பு, சமூக அக்கறை கொண்ட மாணவர்களை உருவாக்கும் என்பது திண்ணம்.

இந்திய சுயராஜ்யம் நூலின் இறுதியில் மனிதர்கள் தமது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தம் செய்ய வேண்டிய காலம் இது என்கிறார் காந்தி. இது இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. நாம் இயற்கையை அழித்தோம். பேராசையால் மாசுகள் குவித்தோம், பணமே பெரிது, எதை இழந்தும் பணம் குவிப்பது என்றோம். இன்று பணத்தைவிட உயிர் வாழ்வது முக்கியமானது என்பதைக் கொரோனா உணர்த்தியுள்ளது. உலகைத் திருத்தும் முன் மனிதர்கள் தம்மைத் திருத்திக்கொள்வது முதன்மையானது என்பதை உணர்த்துகிறது கொரோனா.

கொரோனா நாம் விரும்பாத ஏற்க முடியாத புதிய வாழ்வு முறையை நம் முன் வைக்கிறது. இந்திய சுயராஜ்யத்தில் காந்தி சொல்லியிருப்பது போன்றே நாம் ஏற்க முடியாத நிபந்தனைகள் அவை, ஆனால் அந்தக் கசப்பு மருந்துதான் நம்மைக் கொல்லும் நோயிலிருந்து நம்மையும் உலகையும் காக்கும் வல்லமை மிக்கதாக உள்ளது.

21 ஆம் நூற்றாண்டில் தொற்று நோய்களின் காலம் முடிந்து, வாழ்வியல் சார்ந்த நோய்களின் காலம். நமது வாழ்வுமுறைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே இனி வாழ முடியும். கரோனா புதிய வாழ்வுமுறையை நம் முன் வைக்கிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், புற்றுநோய், விபத்து எனும் கொடிய கொல்லும் நோய்கள் நமது தவறான வாழ்வுமுறையாலேயே உண்டாகின்றன.

  • தனிமனிதத் தூய்மை, சுத்தம், சமூகத் தனிமை, எளிய வாழ்வு என்பன காந்தி சொன்னது மட்டுமல்ல, கரோனா நோயிலிருந்து தப்புவதற்கு அதுவே வழி என்கின்றனர் மருத்துவர்கள். மருந்து எதுவுமில்லை. மருந்தென வேண்டாவாம் என ஓய்வும் தனிமையும் சத்தான உணவுமே மருத்துவமனைகளில் தரப்படுகின்றன.
  • கூட்டம் தவிர்த்தல், சமூக இடைவெளி, கண்ட இடங்களில் எச்சில் துப்பாமை, பயணங்கள் தவிர்த்தல், ஆடம்பரம் தவிர்த்தல், சிக்கனம், வெந்நீர் குடிப்பது, சுற்றுச்சூழல் தூய்மை எனக் காட்டப்படும் வழிகாட்டல்கள் யாவுமே காந்தி தன் ஆசிரமத்தில் கடைப்பிடித்தவையே.
  • பேருந்துகள், கார்கள், ரயில்கள், விமானங்கள் யாவும் நோய் பரப்புவன என்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவும் காந்தி, இந்திய சுயராஜ்யத்தில் கூறியவையே.
  • லாப நோக்கம் கொண்ட மனிதநேயம் மிக்க மருத்துவத்தை அரசு மட்டுமே தர முடியும், தர வேண்டும் என்பதும் இந்திய சுயராஜ்யம் வலியுறுத்தியதே. வணிகமயமாகாத கல்வியும், மருத்துவமும், விடுதலை இந்தியாவின் செயல்பாடாக வேண்டுமென்றார் காந்தி.
  • காரணம் காட்டி மதப் பகைமை வளர்ப்பதை, தமக்கு ஏற்க முடியாததைச் சொல்பவர்களைத் தேசத்துரோகிகள் என்பதையும் இந்திய சுயராஜ்யம் எதிர்க்கிறது.

மொத்தத்தில் 1908-ல் எழுதப்பட்ட இந்திய சுயராஜ்யம் நூலின் மூல கருத்துகள் கொரோனா காலத்திலும் நமக்கு வாழும் முறைமை கூறும் வழிகாட்டியாக ஒளி வீசுகின்றன.

நகர வாழ்வின் வளர்ச்சி, பேராசை, மிகை உற்பத்தி, அடர்த்தியான குடியிருப்பு, ஆரோக்கியமற்ற சூழல் என்பனவற்றிற்கு மாறாக கிராமத்தின் காற்றோட்டமான, தூய்மையான, தற்சார்பு வாழ்வுச் சூழலே இனி நம்மை மருத்துவப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க வல்லது என்பதைக் கரோனா நமக்கு பலமாக உணர்த்தியிருக்கிறது.

காந்திஜியின் கிராம சுயராஜ்யம் இந்திய சுயராஜ்யத்தின் நலவாழ்வுத் தேவையென்பதைக் கொரோனா புரிய  வைத்திருக்கிறது. இந்தப் புதிய வாழ்வு முறைமையை மகாத்மா காந்தி தெளிய வைத்துள்ள இந்திய சுயராஜ்யத்தின் வழி வாழத் தொடங்குவோம்.

coronavirus impact on environment
Tags: