வீடு தேடி வரும் சினிமா

-ஜி.அசோக்

மிழ் மக்களைப் பொருத்தவரை கேளிக்கை என்றால் அது சினிமா மட்டும்தான். சினிமாவை ஒட்டித்தான் பல்வேறு கேளிக்கைகள், டி.வி, மெல்லிசைக் நிகழ்ச்சிகள், யூ-டியூப் சேனல்கள், பத்திரிகைகள், விருது நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோக்கள் எல்லாம் சினிமா மூலம் உண்டாகும் வெவ்வேறு வடிவங்கள்.
ஆனால், தற்போது இந்த சினிமா சுழற்சியில் சம்மட்டி அடி விழுந்து விட்டது. 
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக தியேட்டர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
படத் தயாரிப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படங்களின் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
ஊரடங்கு முடிந்த பிறகும் தியேட்டர்கள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒரு வேளை ஊரடங்குக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்குக்குப் பிறகு இதற்கு ஒரு வேளை அரசு அனுமதி கொடுத்தால் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும். அதிக பட்ஜெட்டில் உருவாகி, பெரும் வசூலை எதிர்பார்த்திருக்கும் ‘மாஸ்டர்’ போன்ற படங்களுக்கு அது சிக்கலாக அமையும்.

மாற்றுத்தளம்: 
தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் உள்ளனர். தற்போதைய சூழலில் மே மாதத்திற்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகம். 

ஆகஸ்ட் மாதம் தான் தியேட்டர்கள் முழுவீச்சில் இயங்கும் என்கிறார்கள். இந்த நிலையில் மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி (Over the Top – O.T.T.) தளங்கள் தான். ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓ.டி.டி தளங்கள் பல அதிரடி சலுகைளை கொடுத்து மக்களை தங்களது தளங்களில் படம் பார்க்க தூண்டுகிறது.

இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா…? என்ற அச்சமும் திரையுலகினர் மத்தியில் உள்ளது. அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ள படத்தை இதிலாவது விற்று போட்ட பணத்தை கொஞ்சமாவது எடுத்து விடலாம் என எண்ணுகின்றனர்.

படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால், அதற்காக வாங்கிய பணத்தின் வட்டியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதனால் சினிமாவுக்கு ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களை விட ஆன்லைனில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில பல கோடிகளைத் தாண்டிக்கொண்டிருக்க, ஆன்லைனுக்காகவே படம் எடுக்கும் கலாசாரம் தொடங்கிவிடும் என கணிக்கப்படுகிறது .’வெப் சீரிஸ்’ என அடையாளப்படுத்தப்படும் இந்த வகைப்படங்கள்தாம் இப்போது ட்ரெண்டிங். இதன் காரணமாக இந்தியாவில் ஓ.டி.டி தளத்தில் இனி வரிசையாகப் படங்கள் வெளியாக உள்ளன.

30 producers issue joint statement on OTT premiere of movies ...

தமிழ் சினிமா:
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதல்முறையாக வழக்கறிஞராக நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது தமிழ் பட பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

ஊரடங்கில் முதன்முதலாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகும் படம் இது.”பெண்குயின்’ கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு, அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கம், சந்தோஷ் நாராயணன் இசை என நல்ல கூட்டணி. இப்படத்தில் மொத்தம் ஏழே கதாபாத்திரங்கள்தான். முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

அமிதாப் பச்சன் – ஆயுஷ்மான் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் ‘குலாபோ சிதாபோ’. இப்படத்தை ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருந்தனர். ஆனால், தற்போது ஜூன் 12-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. ‘சுஃபியும் சுஜாதாயும்’ படம்தான் நேரடியாக ஆன்லைன் தளத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படம். ஜெயசூர்யா, அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். 

அமேஸான் வெளியிட இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்தான் இது. அதுபோல, நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 உள்ளிட்ட நிறுவனங்களும் நிறைய தயாரிப்பாளர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து சினிமாத்துறையும் படங்களை நேரடி ஆன்லைன் தளங்களில் வெளியிட முன்வந்துவிட்டனர். 

இது பற்றி இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாவது: 
உலகம் முழுமையிலும் 1,37,000 திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம், இந்தியா மூன்றாமிடம். அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 40,000 திரைகள் கொண்ட அரங்கங்கள் உள்ளன. மக்கள் தொகையில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம் கொண்ட நம்நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு திரையரங்கைக் கொண்ட செனகல் எனும் தனி நாடான தீவும் இருக்கின்றது. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக்குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான். 

இனி வரும் காலங்களில் உயிர்வாழவே பணத்திற்கு அலையப்போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களைப் பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்கு செலவழிக்கும் தொகையில் சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி… இப்படி தங்களின் வசதிக்கு ஏற்ப குடும்பமே எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். 

இது போக இதனால் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் போன்ற இந்த செலவுகளிலிருந்தும் விடுதலை. இது போக எரிபொருள் மிச்சம் என இப்படிப்பட்ட எண்ணற்ற பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர் பழக்கமாகவும் ஆகிவிடலாம். 

இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு செலவழித்த தொகை கிடைக்குமா என்றால்! கட்டாயம் அதற்கு மேலும் கிடைக்கும் என ஹாலிவுட் தயாரிப்பாளர்களே கூறுகிறார்கள். திரையரங்கில் பார்க்கும் பார்வையாளர்களைவிட மின்திரையில் (Amazon, Netflix, etc.. & Television) பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டதாம். இதற்கு காரணம் திரையரங்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டது தான்.
இந்தியா போன்ற பல மொழிகளில், அவர்களுக்கான மொழியில் தயாரிக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் இன்று ஆங்கில துணை எழுத்துக்களுடன் உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது.
வீட்டுக்குள் வந்துவிட்ட மின்திரை ஊடகங்கள் திரைப்படப் பார்வையாளர்களின் திரைப்படம் குறித்த பார்வையை மாற்றியிருக்கின்றன. சுவையைக் கூட்டியிருக்கின்றன. கதை என்றால் கதாநாயகர்களை முன்னிறுத்தித்தான் உருவாக்க வேண்டும், கதாநாயகிகள் களிப்பூட்டுபவர்களாக, கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனும் காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைத்திருக்கின்றன. 

Are OTT platforms a gamechanger for the Tamil film industry? - The ...

ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பரிலேயே வெளியாகி இருக்க வேண்டிய படங்கள் ஆயிரக்கணக்கில் முடங்கிக்கிடக்கின்றன. 1500 கோடிகளிலிருந்து 2500 கோடி வரை செலவழிக்கப்பட்ட படங்கள் கூட திரையரங்குகள் செயல்படும் நாளுக்காகக் காத்திருக்காமல் மின்திரையின் மூலமாக மக்களை சென்றடைவதற்கான திட்டங்களை ஆராயத்தொடக்கிவிட்டன எனும் செய்திகளை இணையங்களில் காண முடிகிறது. திரைப்படக்கலை அழிந்துப்போகும் என கவலைகொள்ள வேண்டியதில்லை. அதன் வடிவம்தான் மாறிக்கொண்டேயிருக்கும்!

சில படங்கள் தரும் அனுபவத்தைத் திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும். அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களைத் திரையரங்கில் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். 

எந்தப்படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் பார்வையாளனின் உரிமை! என்கிறார் இவர். 

இது பற்றி திரையரங்கு நடத்துபவர்களின் கருத்தை கேட்டோம்:
“ஊரடங்கு முடிந்த பின் தியேட்டர்கள் திறக்கப்படும் போது மக்கள் அமரும் பகுதிகளை கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்வோம். எங்களது ஊழியர்களும், வரும் வாடிக்கையாளர்களும் உடல் வெப்பநிலை சரி பார்த்த பிறகே தியேட்டர்களுக்கு அனுமதிப்போம். கூடுமானவரை ஆன்லைன் டிக்கெட் பதிவு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரூபாய் நோட்டுகளை நேரடியாக வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்” என்கிறார் பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி கமல்.

“எப்போது ஊரடங்கு முடியும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். வீட்டை விட்டு எப்போது வெளியே வருவோம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வர விரும்பும் இடம் சினிமா தியோட்டர், வணிக வளாகம், உணவகங்களாகக் கூட இருக்கலாம். பெரிய திரையரங்குகள் கூட மக்கள் வருகைக்காக தான் காத்திருக்கின்றன. இன்றைய நிலை மாறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் கார்னிவல் சினிமாஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி மோகன்.

தென் கொரியாவில் ஊரடங்கு முடிந்ததும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சினிமா பார்க்க டிக்கெட் வாங்கிச் செல்கிறார்கள். டிரைவ் இன் தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 
வரும் காலங்களில் ஓ.டி.டி-க்கு என்றே படம் எடுக்கும் தயாரிப்புக் கம்பெனிகள் அதிகம் ஆகலாம். ஓ.டி.டி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள் உருவாகலாம். ஆனாலும் இவர்களின் கடைசி இலக்கு தியேட்டர் ரிலீஸ் சினிமாவாகவே இருக்கும்! 

Tags: