பிள்ளையின் கற்றலினை மேம்படுத்துவதில் பெற்றோரின் வகிபாகம்
கல்வி என்பது உங்களது பிள்ளைகளின் வாழ்வில் முக்கிய பகுதியாக விளங்குகின்றது. பிள்ளைகள் பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்வதுடன் அன்றாடம் பல்வேறுபட்ட தகவல்களை கிரகித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கற்றல் செயற்பாடு பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதே வேளை பாடசாலைக்கு வெளியேயும் உங்களது பிள்ளைகள் கற்றலினை தமது அன்றாடச் செயற்பாடுகளின் ஊடான அனுபவங்கள் ஊடாகவும் கற்றுக் கொள்கின்றனர்.
பாடசாலை கற்றல்ச் செயற்பாடுகளை கண்காணித்தல் : உங்களது பிள்ளையினுடைய கற்றல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பெற்றோர் ஈடுபடுதலானது உங்களது பிள்ளையினுடைய கற்றல் தொடர்பான ஆர்வத்தினை மேன் மேலும் அதிகரிப்பதாக அமையும். அதில் நீங்கள் செய்யக் கூடிய மிக முக்கியமான செயற்பாடுகளில் ஒன்று, உங்களது பிள்ளை பாடசாலையில் என்ன கற்றுக் கொள்கின்றது என்பதில் கவனம் செலுத்துதல் ஆகும். உங்களது பிள்ளை எந்தெந்த பாடங்களை விரும்பிப் படிக்கின்றது மற்றும் பாடசாலையில் வழங்கப்படும் கணிப்பீட்டுப் பரீட்சைகளில் சித்தி பெறும் வீதம் என்பவை தொடர்பில் அதிக கவனத்தினையும் தேவையான சந்தர்ப்பங்களில் தகுந்த ஊக்குவித்தல்களையும் வழங்குவதற்கு தயங்காதீர்கள் அல்லது மறவாதீர்கள்.
- மிகவும் சிறிய பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வரும் போது வீட்டுப் பாடங்கள், செயற்பாட்டுத் தாள்கள் மற்றும் ஆசிரியரிடமிருந்தான தகவல்களை கொண்டு வருவார்கள். எனவே உங்களது பிள்ளைகள் முன்பள்ளிகளிலோ அல்லது பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியினை கற்பவர்களாகவோ இருந்தால் பாடசாலை விட்டு வீடு வந்த பின்னர் பிற்பகல் வேளையிலோ அல்லது மாலை வேளையிலோ பிள்ளையினுடைய புத்தகப் பையினை வாங்கி அப்பியாசப் புத்தகங்களில் ஏதாவது குறிப்புக்கள் அல்லது வீட்டுப் பாடங்கள் ஆசிரியரால் எழுதப்படடுள்ளதா என பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- உங்களுடைய பிள்ளைக்காக நேரத்தினை ஒதுக்கிப் பிள்ளையினுடைய இன்றைய தின கற்றல் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தது எனக் கலந்துரையாடுங்கள். கற்ற விடயங்கள் ஒவ்வொன்றினையும் பற்றி உங்களுக்கு விவரிக்குமாறு கேளுங்கள். இந்தக் கலந்துரையாடலை உண்மையான ஆர்வத்துடன் மேற்கொள்ளுங்கள்.
- உங்களுடைய பிள்ளை வளர்ந்த பிள்ளையாயின் இன்றைய தினம் இடம்பெற்ற ஒவ்வொரு வகுப்புக்களும் எவ்வாறு அமைந்தது என்பது பற்றிக் கேளுங்கள். உதாரணமாக: உன்னுடைய இன்றைய விஞ்ஞான பாட வகுப்பில் நீ எவ்வாறான பரிசோதனைகளை செய்தாய். அதில் நீ வெற்றி பெற்றாயா? அதனை எவ்வாறு மேற்கொண்டாய்? போன்றவற்றைக் பிள்ளையிடம் கேட்கலாம்.
பாடசாலையில் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுதல்: உங்களது பிள்ளையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் ஆர்வத்துடன் ஈடுபட பல்வேறு வழிகள் உள்ளன. அதில் இன்னுமொரு சிறந்த வழி பாடசாலையில் பெற்றோர் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுதல். உங்களுடைய பாடசாலை அதிபர் அல்லது ஆசிரியரிடம் பெற்றோர்கள் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில ஈடுபடக் கூடிய வாய்ப்புக்கள் பற்றிக் கேட்டறியுங்கள்.
- பெரும்பாலான முன்பள்ளிகளில் பெற்றோர்கள் வகுப்பறை கற்றலுக்கு உதவ முடியும். உதாரணமாக காலை வகுப்பில் இடம்பெறும் சித்திரம் கீறும் நடவடிக்கைகளின போது ஆசிரியருக்கு உதவுதல்.
- உங்களது பிள்ளை இரண்டாம் நிலை அல்லது உயர்வகுப்பு கற்பவராயின் பாடசாலையினால் அழைத்துச் செல்லப்படும் களப் பயணத்திற்கு அல்லது சுற்றுலாவுக்கான தொண்டராக பணியாற்றலாம். இதன் ஊடாக உங்களது பிளளையின் வகுப்புத் தோழர்களோடும் வகுப்பாசிரியர் மற்றும் அதிபர் ஆகியோருடனும் சிறந்ததொரு உறவை ஏற்படுத்திக் கொள்ள இது வழி வகுக்கும்.
- உங்களது தனிப்பட்ட திறமைகளினைப் பொறுத்து வேறு வழிகளில் எவ்வாறு பாடசாலைச் செயற்பாடுகளுக்கு உதவ முடியும் என சிந்தியுங்கள். உதாரணமாக நீங்கள் திறமையான தையல்காரர் ஆக இருப்பின் பாடசாலை விழாக்களுக்கான ஆடைகளை நேர்த்தியாக வடிவமைப்பதற்கான ஆலோசனைகளினை வழங்கலாம்.
- பாடசாலையில் புதிய மாணவர் சங்கங்களை அல்லது குழுக்களை உருவாக்கி அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவலாம். உதாரணமாக உங்களது பிள்ளைக்கு செஸ் விளையாட்டில் ஆhவம் இருப்பின் செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஒன்றிணைத்து செஸ் கிளப் ஒன்றினைப் பாடசாலையில் உருவாக்கலாம்.
ஆசிரியர்களுடன் சிறந்த தொடர்பாடலைப் பேணுங்கள்: உங்களுடைய பிள்ளையின் ஆசிரியரானவர் உங்களது பிள்ளையின் கல்வியில் முக்கிய பங்கு வகிப்பவராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் பிள்ளையின் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொண்டு சிறந்த நல்லுறவைப் பேண முயற்சியுங்கள். பிள்ளையினுடைய கற்றல் முன்னேற்றங்களை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொண்டு அவருடைய ஆலோசனைக்கேற்ப பிள்ளையினை வழிநடத்துங்கள். உங்களுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு நீங்கள் அவருடைய ஆலோசனையைப் பெற விரும்புகின்றீர்கள் அல்லது பேச விரும்புகின்றீர்கள் என்பதனை தெரியப்படுத்தவும்.
- பாடசாலையில் வகுப்பறைச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னரோ அல்லது முடிந்ததன் பின்னரோ ஆசிரியரிடம் சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக: நான் ஏன்ஜலுடைய அம்மா. நீங்கள் ஏன்ஜலைப் பற்றி ஏதாவது ஆலோசனைகள் தரவிரும்பினால் கூறவும் எனக் கேட்கலாம்.
- பெற்றோர் – ஆசிரியர் சந்திப்புக்களுக்கு முன்னுரிமை அளித்துச் செல்லவும். பெரும்பாலான பாடசாலைகள் இவ்வாறான சந்திப்புக்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு முறை நடாத்தும். அத்தகைய சந்திப்புத் திகதிகளை உங்களுடைய வீட்டுக் கலண்டரில் சந்திப்பு இடம்பெறும் இரண்டு நாட்களுக்கு முன்பே குறித்து வைத்து தவறாது கலந்து கொள்ளவும்.
- உங்களுக்கான எல்லைகளை மதிப்பதற்கு முயற்சியுங்கள். அதாவது ஆசிரியரை பாடசாலையில் சந்திப்பதற்கு செல்ல முன் அனுமதி பெற்றுச் செல்லுங்கள். முடிந்தவரை தொலைபேசியில் உரையாடுவதனையோ அல்லது இரவு நேரங்களில் ஆசிரியரது தொலைபேசிக்கு அழைப்புக்களை எடுப்பதனையோ தவிருங்கள்.
பிள்ளையினுடைய வகுப்பறைக்குச் செல்லுங்கள்: பிள்ளையினடைய வகுப்பறைக்குச் சென்று பிள்ளையினுடைய வகுப்பறையில் அமர்ந்து ஒன்று அல்லது இரண்டு பாடவேளைகளை அவதானிப்பதானது உங்களுடைய பிள்ளை எவ்வாறு கற்றுக் கொள்கின்றது என்பது தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள உதவும். உங்களுடைய பிள்ளையினுடைய பாடசாலை பெற்றோர்களை வகுப்பறையில் பெற்றோர்கள் அமாந்து அவதானிப்பதற்கு அனுமதிக்கின்றாதா? இல்லையா? எனக் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன் பாடசாலை அதிபரைத் தொடர்புகொண்டு அதற்கான ஒழுங்குமுறைகள் மற்றும் அனுமதிகளை முதலிலே பெற்றுக் கொள்ளவும்.
- முக்கியமாக, உங்களது பிள்ளை எவ்வாறு கற்றுக்கொள்கின்றது என்பதனை அவதானிக்க நீங்கள் உங்களது பிள்ளையினுடைய வகுப்பறைக்கு வருவதனை ஆசிரியருக்கு முன்பே தொலைபேசி ஊடாகவோ அல்லது குறுஞ்செய்தி ஊடாகவோ முதலிலேயே தெரியப்படுத்துங்கள்.
- பாடசாலைக்கு சென்று வந்த பின்னர் இரவு சாப்பாட்டு வேளையில் பிள்ளையினுடைய கற்றல் செயற்பாடு தொடர்பில் நீங்கள் அவதானித்த விடயங்களைப் பற்றிப் பேசுங்கள். உதாரணமாக: எப்படி அந்தக் கணக்குச் செயற்பாட்டினை இலகுவில் வரைவாக செய்து முடித்தாய்? அல்லது நீ இன்று உனது வகுப்பில் வாசித்த கதையில் உனக்குப் பிடித்த பாத்திரப்படைப்பு எது? போன்ற விடயங்களை கேட்கலாம். இது உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் அவருடைய கற்றல் செயற்பாட்டினை அவதானித்துள்ளதனை உணர்த்துவதாகவும் அதேவேளை அவரை ஊக்குவிப்பதாகவும் அமையும்.
உங்களுடைய பிள்ளையின் சக மாணவர்களின் பெற்றோருடன் பேசுங்கள்: சக மாணவர்களின் பெற்றோர்களை சந்திப்பதற்கு சிறந்த வழி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து கொள்ளுதல் மற்றும் பெற்றோர் சந்திப்புக்களில் தவறாது பங்குபற்றுதல் ஆகும். உங்கள் பிள்ளைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி ஏனைய பெற்றோருடன் பேசுங்கள். பள்ளியில் நடக்கும் ஏதாவது விடயங்கள் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், ஏனையோர் குறித்த விடயம் தொடர்பில் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.
பிள்ளைகளுக்கான உரிய கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்: இளம் வயதிலேயே கூட உங்கள் பிள்ளைக்கு வீட்டுப்பாடம் இருக்கும். வீட்டில் ஒரு நல்ல கற்றல் சூழலை வளர்ப்பதன் மூலம் உங்களது பிள்ளை தனது கற்றலில் வெற்றிபெற உதவுங்கள். பிள்ளை கற்பதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்வதும் இதில் அடங்கும்.
- பிள்ளையின் கற்றல் செயற்பாட்டிற்காக உங்கள் வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கவும். அது சமையலறை மேசையாகவோ அல்லது உங்கள் பிள்ளையின் அறையில் ஒரு மேசை அல்லது உங்கள் வீட்டு அலுவலக அறையின் ஒரு மூலையாகக் கூட இருக்கலாம்.
- பிள்ளை தனது கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் போது கவனச்சிதறல்கள் ஏற்படுவதற்கான சூழலை தவிர்ப்பதன் மூலம் பிள்ளை தனது கற்றல் செயற்பாட்டில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு பிள்ளைக்க உதவுங்கள். உதாரணமாக, பிள்ளை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் போது தொலைக்காட்சியினை ஏனையோர் பார்ப்பதனை அல்லது தொலைக்காட்சி இயங்குவதனைத் தவிர்க்கவும்.
- உங்களது பிள்ளைக்கான கற்றலுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட நேர அட்டவணையினை உருவாக்கவும் அதனைக் கடைப்பிடிக்கவும் பிள்ளைக்கு உதவுங்கள் அல்லது கற்றுக் கொடுங்கள்.
- உங்கள் பிள்ளை இரவு உணவிற்கு முன் சிறப்பாக செயல்படுவார் எனின் பிள்ளையினுடைய கற்றல் செயற்பாடுகளுக்கு போதுமான நேரத்தை வழங்குவதற்காக உங்கள் உணவு நேரத்தை சிறிது நேரம் கழித்து திட்டமிடுங்கள்.
பாடசாலை பாடவிதானத்திற்கு துணை செய்யும் செயற்பாடுகளில் பிள்ளையுடன் இணைந்து ஈடுபடுதல்: உங்கள் பிள்ளை பாடசாலையில் என்ன கற்றுக் கொள்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்களது குடும்பத்தின் ஓய்வுசார் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதன் மூலம் நீங்கள் உங்களது பிள்ளையின் கற்றலை வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் மாற்றி அமைப்பதோடு கற்றலில் அதிக ஈடுபாட்டினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்த முடியும். உதாரணமாக:
- உங்களது பிள்ளை வரலாற்றுப் பாடத்தில் இலங்கையின் பண்டைய வரலாறு பற்றிக் கற்கின்றது எனின் நீங்கள் உங்களது ஓய்வு நேரங்களில் பிள்ளையினை அருகிலுள்ள ஒரு தொல்பொருள் காட்சிச் சாலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தொல் பொருட்களில் குறித்த பாட விதானத்திற்கு பொருத்தமானவற்றை பிள்ளைக்கு நேரில் காட்டலாம். இது பிள்ளைக்கு குறித்த பாட விதானம் தொடர்பான தெளிவான புரிதலைப் பெற உதவும்.
- மரபுரிமை சார்ந்த பண்டைய நகரங்களுக்கு பிள்ளைகளை சுற்றுலா அழைத்துச் சென்று அங்கு அவர்கள் கற்ற பாடங்களுடன் தொடர்புடைய இடங்களை காட்டுதல்.
- உங்களது பிள்ளை மிகவும் சிறியவராக காணப்படின் சமையலறையில் பிள்ளைகளுக்கான கற்றல்ச்; செயற்பாட்டினை மேற்கொள்ள முடியும். அதாவது சமயலறையில் காணப்படும் காய்கறிகளை சிறியதில் இருந்து பெரிதாக அடுக்குமாறு பிள்ளையினைப் பணிக்கலாம் அல்லது சமையலுக்கு பயன்படும் பொருட்களை பெயர் கூறி எடுத்துத் தருமாறு பிள்ளையினைப் பணிக்கலாம். இத்தகைய செயற்பாட்டின் ஊடாக பிள்ளையினுடைய சொற்களஞ்சியம் அதிகரிக்கும்.
பிள்ளைகள் கற்பதற்கு இடருறும் பாடங்கள் தொடர்பில் உதவுங்கள்: உங்களது பிள்ளை குறிப்பிட்ட பாடமொன்றினைக் கற்பதற்கு இடர்பாடுகளை அல்லது சிக்கலை எதிர்நோக்கும். எனவே நீங்கள் பிள்ளை பாடசாலைக்கு வெளியேயும் குறித்த பாடத்தினைக் கற்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியும். முதலாவதாக பிள்ளையினுடைய தேவையினைக் கண்டறியுங்கள். அதாவது குறித்த பாடத்தின் மேல் உள்ள விருப்பமின்மையால் பிள்ளை சிரமத்தினை எதிர்நோக்குகின்றதா அல்லது குறித்த பாடத்தினை கற்பதற்கு தேவையான அடிப்படைத் திறன்களில் பிள்ளை இடருறுகின்றதா எனக் கண்டறியவும்.
- உதாரணமாக, உங்களது பிள்ளை தனது வரலாற்றுப் பாடங்களில் ஆர்வம் காட்டவில்லை எனின் உங்கள் குடும்பத்தில் உள்ள சில சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கடந்த கால வரலாறினை பிள்ளையுடன் பேசுவதன் மூலம் வராலாறு தொடர்பான ஆர்வத்தை தூண்டவும். உறவினர்களைப் பற்றிய கதைகளைக் கேட்பது பிள்ளைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் அமையும்.
- உங்கள் பிள்ளையான அடிப்படையான திறன்கள் பற்றாக்குறையினால் போராடுகின்றது எனின், நீங்கள் முன்னெடுக்கக்கூடிய சில வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு தகவல்களைத் தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல் இருந்தால், ஃபிளாஷ் கார்டுகள் (ஒரு பக்கம் சொல்லும் மறு பக்கம் சொல்லுடன் தொடர்புபட்ட படமும் இருக்கும் சிறு கடதாசி அட்டை) உதவியுடன் அவற்றைக் கற்பிக்கவும். பாடத்திட்டத்தின் பிரதியினை ஆசிரியரிடம் இருந்து பெற்று அதில் உள்ள பிள்ளை கற்பதற்கு சிரமப்படும் விடயங்களை உங்கள் பிள்ளைக்கு வேடிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான வழியில் கற்றுக்கொள்ள நீங்கள் உதவுவதற்கு பயன்படுத்தக் கூடிய சில ஃபிளாஷ் கார்டுகளை வடிவமைக்கவும்
வாசிப்பை ஊக்குவிக்கவும்: பிள்ளையின் பாடசாலைக் கற்றலுக்காக மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் வாசிப்பு அவசியமானது. உங்களது பிள்ளை சிறந்த அறிவுமிக்கவராக மாற உதவும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று பாடசாலைக்கு வெளியே வாசிப்பை ஊக்குவிப்பதாகும். உங்கள் பிள்ளைக்கு வாசிப்பை ஆர்வத்தினைத் தூண்டுவதற்கான பல்வேறுபட்ட வழிகளைக் கடைப்பிடிப்பதன் ஊடாக இதைச் சாத்தியமாக்கலாம்.
- உங்கள் பிள்ளை சிறியவராக இருப்பின் அவருடன் இணைந்து நீங்களும் வாசிக்கலாம். இதற்காக நீங்கள் சிறுவர் சார் தொடர்கதைகளை அல்லது நாவல்களை அல்லது நீண்ட கதைகளை பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் குறித்தவொரு நேரத்தினை வாசிப்பதற்கென ஒதுக்க முடியும்.
- நீஙகள் புத்தககங்களை ஒவ்வொரு நாளும் வாசிப்பதன் மூலம் உங்களது பிள்ளைக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக இருந்து காட்டவும். பிள்ளை தொலைக்காட்சி பார்ப்பதற்கு பதிலாகப் புத்தகங்களை வாசிக்கப் பழகும் போது பிள்ளை பல்வேறுபட்ட ஒழுங்கங்களையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்ளும்.
- பிள்ளைகளுக்கு வாசிப்பினை ஊக்குவிப்பதற்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்குவதற்கு ஒரு போதும் பின்நிற்க வேண்டாம். அதாவது ஒரு மாதத்தில் பிள்ளை வாசிக்க வேண்டிய இலக்கினை நிர்ணயித்து அந்த இலக்கினை பிள்ளை அடையும் போது பிள்ளைக்கு ஏதாவது பரிசில்களை வழங்கி ஊக்குவிக்கவும். உதாரணமாக ஒரு மாதத்திற்கு 100 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தினை வாசித்து முடிக்க வேண்டும் எனும் இலக்கினை தரம் 04 இல் கல்வி கற்கும் பிள்ளைக்கு வழங்கலாம்.
பிள்ளை கற்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும்: உங்களது பிள்ளையானது பாசாலையினை விட அதிக மணிநேரம் தனது வீட்டிலேயே செலவிடுகின்றது. எனவே தான் பிள்ளையானது ஒரு பாரம்பரிய கற்றல் சூழலில் இருந்து விலகி இருக்கும் போது தொடர்ந்து கற்றலுக்குரிய சந்தாப்பங்களை ஏற்படுத்தி கற்றலுக்கு உதவுவது அவசியமானது. எனவே உங்களது அன்றாடச் செயற்பாடுகளை பிள்ளைகள் கற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களாக மாற்றி அமையுங்கள்.
- எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளைக்கு கணித திறன்களையும் அமைப்பையும் கற்பிக்க சமையல் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் இரவு உணவினைத் தயார் செய்யும் போது அதற்குத் தேவையான பொருட்களை அளவிடவும் எடுத்துத் தருமாறும் பிள்ளையிடம் கேளுங்கள். குறித்த உணவினைத் தயாரிப்பதற்கான தயாரிப்பு வழிமுறை அல்லது படிமுறை தொடர்பில் பிள்ளையுடன் கலந்துரையாடுங்கள்.
- உங்கள் பிள்ளை உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்காக நேரம் ஒதுக்கி சிந்தனைமிக்க பதிலைக் கொடுங்கள். உங்கள் பிள்ளை தேர்தல் செயல்முறை பற்றி ஒரு கேள்வியைக் கேட்டால், வேட்பாளர்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் என்ன என்று பிள்ளையிடம் கேட்பதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
- கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒன்று. உதாரணமாக நீங்கள் ஒரு விடயம் தொடர்பான தகவலினை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றீர்கள் எனின், தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பல்வேறு வழிகள் தொடர்பில் உங்களது பிள்ளைக்கு விபரியுங்கள்.
கல்வி சாராத ஏனைய செயற்பாடுகளிலும் பிள்ளைகளினை ஊக்குவியுங்கள்: வீட்டுப்பாடம் படிப்பதும் செய்வதும் அமைதியான கற்றல் வகைகளாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கின்ற போதிலும், கல்வியோடு சேர்ந்த அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் ஆளுமைமிக்க பிள்ளையாக திகழ்வதற்கும் கல்வி சாராத ஏனைய செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளை ஊக்குவித்தல் அவசியம். செயற்திறன் மிக்க கற்றல் என்பது உங்களது பிள்ளை ஒரு செயற்பாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் அல்லது ஆர்வத்துடன் பங்குபற்றுதலையே குறிக்கின்றது.
- உங்கள் பிள்ளையினை விளையாட்டுக் குழு ஒன்றில் இணைந்து விளையாடுவதற்கு ஊக்குவிக்கவும். மாலை வேளைகளில் விளையாட்டில் ஈடுபடுவதானது பிள்ளைகளுக்கு விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை கற்பிப்பதுடன் குழுச் செயற்பாட்டில் ஒவ்வொரு அங்கத்தவருடைய முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றது.
- சமூகத் தொடர்புகள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையினை வளர்ப்பதுடன் பிள்ளை வகுப்பறைக் கற்றலிலும் அதற்கு வெளியேயும் வெற்றி பெற உதவும்.
- உங்களது பிள்ளையை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உதாரணமாக, உள்ளூர் கலை அருங்காட்சியகத்திற்கு உங்களுடன் வருமாறு பிள்ளையிடம் கேளுங்கள். வௌ;வேறு கண்காட்சிகள் பற்றி அவரது கருத்துக்களைக் கேளுங்கள்.
- முன்மாதிரியாகச் செயற்படுங்கள். அதாவது பிள்ளைக்கு கற்றலின் முக்கியத்துவம் பற்றி உணர்த்துவதற்கு நீங்கள் நூலகம் செல்லுங்கள். அங்கு உறுப்பினராக இணைந்து புத்தகங்களை இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசியுங்கள். பிள்ளைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கு உதவுங்கள்: பிள்ளைப்பருவ விருத்திக்கு மனம்-மற்றும் உடல் இணைந்த வளர்ச்சி மிகவும் முக்கியமானது. பாடசாலைக் கல்வியில் வெற்றிபெற, உங்கள் பிள்ளையினது உடல் ஆரோக்கியமாக இருத்தல் மிக அவசியம். பிள்ளைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கின்றதா மற்றும் நன்கு ஓய்வெடுத்துக் கொள்கின்றதா என்பதனை உறுதிசெய்து உங்களுடைய பிள்ளையினது கல்வியில் முக்கிய பங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்குவதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை வளர்ச்சியடையும் போது பிள்ளை சரியான ஊட்டச்சத்துக்களைப் பெறுவது அவசியமானது. புதிய பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை பிள்ளைக்கு வழங்கவும்.
- பிள்ளைகளின் வயதைப் பொறுத்து, பிள்ளைகள் ஒவ்வொரு இரவும் சுமார் 08 தொடக்கம் 11 மணி நேரம் நித்திரை அவசியமானது. உங்கள் பிள்ளைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட அன்றாட விடயங்களை மற்றம் கடமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதில் அவசியமான நித்திரை நேரமும் அடங்கும்.
கேள்விகளைக் கேளுங்கள்: உங்களுடைய பிள்ளையுடன் சிறந்த தொடர்பாடலை பேணுவதன் மூலம் பிள்ளையினுடைய கல்வியினை மேலும் மேம்படுத்த முடிவதுடன் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் கண்காணிக்கவும் முடியும். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்களது பிள்ளைகளிடம் கேள்விகளைக் கேட்பது ஆகும். பிள்ளையினுடைய பாடசாலை வாழ்க்கையில் பிள்ளை என்ன கற்றுக்கொள்கின்றது என்பதில் நீங்கள் அக்கறை காட்டுகின்றீர்கள் என்பதையும் பிள்ளைக்கு உணர்த்துவதாக அமையும்.
- பிள்ளையிடம் திறந்த கேள்விகளைக் கேளுங்கள். ஆம் அல்லது இல்லை என்று எளிமையாக பதிலளிக்கக்கூடிய கேள்விகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
- பிள்ளையிடம் உன்னுடைய இன்றைய நாள் எவ்வாறு அமைந்தது? எனக் கேட்பதற்குப் பதிலாக இன்றைய நாளின் என்ன விடயம் உனக்கு பிடித்ததாக அமைந்து? எனக் கேளுங்கள். உங்களது பிள்ளையுடன் உரையாடலை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.
கவனமாக செவிமடுங்கள்: பிள்ளைகள் அவர்களுடைய விருப்பங்களையும், விழுமியங்களையும் மற்றும் கருத்துக்களையும் நீங்கள் மதிப்பதனை விரும்புகின்றார்கள். உங்களது பிள்ளையிடம் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கும் போது, நீங்கள் கவனமாக பதிலை செவிமடுப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களது பிள்ளை கூறும் விடயத்தினை கவனமாக செவிமடுப்பதனை பிள்ளைக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன.
- தொடர் வினாக்களை பிள்ளைகளிடம் வினாவுங்கள். உதாரணமாக உங்களது பிள்ளை இன்று விஞ்ஞான வகுப்பு பிடித்திருந்தது எனக் கூறின் அதில் என்ன விடயம் உனக்கு பிடித்திருந்தது? நீ என்னென்ன பரிசோதனைகளை நீ மேற்கொண்டாய்? எனக் கேளுங்கள்.
- சாதகமான உடல் மொழிகளை வெளிப்படுத்துங்கள். கவனமாக நீங்கள் செவிமடுக்கின்றீர்கள் என்பதனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி பிள்ளையுடன் கண்தொடர்பைப் பேணுதல் மற்றும் தலையசைத்துக் கேட்டல் என்பவற்றினைக் குறிப்பிடலாம்.
உங்கள் பிள்ளைக்கு என நேரம் ஒதுக்குங்கள்: உங்கள் பிள்ளையுடன் செலவிட ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டதொரு நேரத்தை ஒதுக்குங்கள். பாடசாலையில் நடைபெற்ற விடயங்கள் உட்பட பிள்ளையின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ள சந்தர்ப்பத்தினை அளிப்பதாக இது அமையும். உங்களால் முடிந்தால், ஒவ்வொரு இரவும் ஒன்றாக இரவு உணவை சாப்பிட முயற்சிக்கவும். நாள் பற்றி பேச இரவு உணவு வேளை ஒரு சிறந்த நேரம் ஆகும்.
- உங்கள் பிள்ளையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள நேரத்தை திட்டமிடுங்கள். உதாரணமாக உங்களது பிள்ளை ஒரு நிகழ்வில் பாடல் பாடினால் அதனைக் கேட்பதற்காக அந்நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். இது பிள்ளையினை மேலும் ஊக்குவிப்பதாக அமையும். அத்தோடு பிள்ளையின் வாழ்க்கை மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையினை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
- உங்களது பிள்ளைக்கு வீட்டுப்பாடத்தினை செய்து முடிப்பதற்கு உதவி செய்யுங்கள். உங்களது வீட்டுப்பாடம் செய்யும் போது இடருறும் போது உதவுவதற்காக ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தினை ஒதுக்குங்கள்.
ஊக்கமளியுங்கள்: ஆதரவான சொற்களை வழங்குவது உங்கள் பிள்ளைக்கு வெற்றிபெற உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிள்ளை வெற்றிபெறும் போது பிள்ளையினை உற்சாகப்படுத்துவதன் மூலமும், பிள்ளை இடருறும் போது ஆதரவை வழங்குவதன் மூலமும் பிள்ளையினுடைய கல்வியில் அக்கறைமிக்கவராக இருங்கள். உங்கள் பிள்ளை மேன்மேலும் கற்றுக்கொள்ளவும், மாணவனாக வளரவும் பெற்றோருடைய கருத்து முக்கியமானது.
- பிள்ளைக்கு ஊக்கமளிக்கும் கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் வழங்குங்கள். எழுத்துச் சோதனையில் உங்கள் பிள்ளைக்கு ‘ஏ’ கிடைத்தால் கூட உங்களது வீட்டின் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருக்கலாம்.
- உங்களது பிள்ளை கற்றுக் கொள்வதில் சிரமப்பட்டால், என்ன தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். உதாரணமாக வீட்டுப்பாடம் மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கின் பிள்ளையிடம் வீட்டுப் பாடம் செய்வதற்கு எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கண்டறிய முயலுங்கள். பிள்ளைக்கு வீட்டுப்பாடத்திற்கு உதவும் நேரத்தினை அதிகரியுங்கள்.
மேற்கூறிய விடயங்களை தொகுத்து நோக்கின், பிள்ளை ஒன்று கற்றலில் பெரும்பான்மையான நேரத்தினை பாடசாலைச் சூழலுக்கு வெளியேயே செலவிடுகின்றது. எனவே பாடசாலையில் உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் பிள்ளையின் கற்றல் தொடர்பில் வழங்கும் ஆதரவினை விட பல மடங்கு ஆதரவினை பெற்றோர் பாடசாலைச் சூழலிலும் மற்றும் வகுப்பறைக்கு வெளியேயும் பல மடங்கு வழங்க வேண்டியுள்ளது. அதுவே எமது பிள்ளையின் கற்றலினை மேம்படுத்துவதற்கு உதவுவதாக அமையும். இதனை நடைமுறைப்படுத்த பாடசாலை நிர்வாகத்துடனும், பிள்ளையினுடைய ஆசிரியர்களுடனும் நல்லுவைப் பேண வேண்டும். அது மட்டுமன்றி பிள்ளையின் சக மாணவர்களுடனும் அவர்களுடைய பெற்றோர்களுடனும் கூட நல்லுறவைப் பேண வேண்டியது அத்தியாவசியமானது. எனவே பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளையினை அனுப்புவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிடாது பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியேயும் பிள்ளைக்கான கற்றல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பது பெற்றோருடைய இன்றியமையாத கடமையாகும். மேற் கூறிய அனைத்தினையும் கடைப்பிடிக்காவிட்டாலும் உங்களால் இயன்ற சிலவற்றையாவது நடைமுறைப்படுத்தி உதவவேண்டும் என அனைத்துப் பெற்றோரிடமும் வேண்டி நிற்கின்றோம்.
உங்களது பிள்ளைகளே எமது நாட்டின் வளமான எதிர்காலம் என்பதனை நினைவில் கொள்ளவும்.
நன்றி
ஆசிரியர்
போட்டிப் பரீட்சை வழிகாட்டி