டிசம்பர் 11: பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள்

சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சின்னசாமி அய்யர், தாயாரின் பெயர் லட்சுமி அம்மாள்.

பெற்றோர் இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர். இருப்பினும் அப்பெயரைச் சுருக்கி ‘சுப்பையா’ என்றே அழைத்து வந்தனர்.

சிறுவயதிலேயே அறிவோடும் ஆற்றலோடும் விளங்கிய சுப்பையாவை பெற்றோர்கள் உரிய வயதில் பள்ளிக்கு அனுப்பினர். சுப்பையாவுக்கு பள்ளிப்படிப்பில் ஆர்வம் அதிகம் இல்லை.

சுப்பையாவுக்கு ஐந்து வயதானபோது அவனது தாயார் லட்சுமி அம்மாள் மறைந்தார். தாயின் மறைவு சுப்பையாவின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பாரதியார் வரலாறு தாயில்லாமல் சுப்பையாவை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்ட அவனது தந்தை சின்னசாமி அய்யர், 1889-ம் ஆண்டு வள்ளியம்மாள் என்ற பெண்மணியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளும் தன் சொந்தப் பிள்ளையைப் போலவே சுப்பையாவிடம் அன்பு காட்டினார்.

சின்னசாமி அய்யருக்கு சுப்பையாவை கலெக்டராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே அவர் எப்போதும் சுப்பையாவிடம் பள்ளிப்பாடங்களைக் கவனத்துடன் படிக்கும்படி அறிவுறுத்தி வந்தார்.

ஆனால் சுப்பையாவுக்கோ பள்ளிப் படிப்பில் நாட்டமே இல்லை. அவன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்து, அக்காட்சிகளில் மனம் மகிழ்ந்திருந்தான்.

தந்தைக்குப் பயந்தும், விளையாட்டுத் தோழர்களும் இல்லாத நிலையில் சுப்பையா பெயரளவிற்குப் புத்தகமும் கையுமாகவே அமர்ந்திருந்தான். அவ்வேளையில் சுப்பையாவின் தோழர்கள் புத்தகங்களே என்றால் மிகையல்ல.

சுப்பையாவின் தந்தை சின்னசாமி அய்யர், எட்டயபுர அரசரின் அரண்மனையில் பணிபுரிந்து வந்தார். சுப்பையாவும் தந்தையுடன் அரண்மனைக்குச் செல்வான். அவ்வேளையில் அரசரின் அவையில் சமஸ்தானப் புலவர்கள் விவாதம் செய்து கொண்டிருப்பர். சுப்பையாவும் அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பான்.

புலவர்கள் கூறுகின்ற சொற்களைக் கேட்டு, சுப்பையாவும் இனிமையான பாடல்களை இயற்றினான். அப்போது அவனுக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது.

பாரதி’ என்னும் பட்டம்

பாரதியார் வரலாறு 1893 ஆம் ஆண்டு ஒருநாள் சுப்பையா எட்டயபுரம் அரண்மனைக்குச் சென்றிருந்தான். அப்போது அரசவைப் புலவர்கள் தந்த ஈற்றடிகளைக் கொண்டு, அற்புதமான கவிதைகளைப் பாடிக் காட்டினான்.

சுப்பையாவின் கவி பாடும் ஆற்றலைக் கண்ட எட்டயபுர அரசர் சுப்பையாவுக்கு ‘பாரதி’ என்னும் பட்டப் பெயரை வழங்கினார். அப்போது சுப்பையாவுக்கு பதினோரு வயதே நிரம்பியிருந்தது.

பாரதி என்கிற சொல்லுக்கு கல்விக் கடவுளான சரஸ்வதியின் அருள் பெற்றவர் என்பது பொருள். அதன் பிறகு சுப்பையா அனைவராலும் பாரதி என்றே அழைக்கப்பட்டான். அப்பெயரே சுப்பையாவுக்குப் பெருமையும் புகழும் பெற்றுத் தந்தது.

பாரதியார் பள்ளிப் படிப்பு 

பாரதிக்கு பள்ளிப் படிப்பில் ஆர்வமே இல்லை. அவருக்கு தமிழ்க் கவிதைகள் இயற்றுவதிலேயே பெரும் விருப்பம் இருந்தது. ஆனால் பாரதியின் தந்தைக்கோ தனது மகன் மேற்படிப்பு படித்து, அரசாங்கப் பணியில் சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

தந்தையின் மீதிருந்த மரியாதையின் காரணமாக பாரதி 1894 ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்த பாரதி ஐந்தாம் படிவம் வரை படித்துத் தேர்ந்தார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாரதி தமிழ்ப் பண்டிதர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொண்டார். படிப்பை முடித்த பாரதி மீண்டும் எட்டயபுரம் திரும்பி வந்தார்.

பாரதியார் திருமணம்

அக்காலக் கட்டத்தில் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்து விடுவார்கள். சின்னசாமி அய்யரும் தனது மகன் பாரதிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார்.

அதன்படி, 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணிற்கும் பாரதிக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதிக்கு பதினைந்து வயதும் செல்லம்மாளுக்கு ஏழு வயதுமே நிரம்பிருந்தது.

பாரதியார் தந்தையின் மரணமும் காசி பயணமும்

பாரதியின் தந்தை சின்னசாமி அய்யர் ஓரளவு வசதி படைத்தவர்தான். ஆனால் சில வஞ்சகர்களின் சூழ்ச்சியால் அவர் வறுமை நிலையை அடைந்தார். வறுமையும் மனக்கவலையும் சின்னசாமி அய்யரை நோயுறச் செய்தது. அவர் 1898ஆம் ஆண்டு காலமானார்.

குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த பாரதிக்கு தந்தையின் மறைவு பெரும் மனத்துயரம் தந்தது. தந்தையை இழந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிக்கு அடைக்கலம் தந்தவர் அவரது அத்தை குப்பம்மாள்தான்.

காசியில் வசித்து வந்த அவர் தன்னோடு பாரதியையும் காசிக்கே அழைத்துச் சென்றார். காசி சென்ற பின்பு பாரதியின் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. அவர் காசியிலுள்ள இந்துப் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார்.

எட்டயபுரத்தில் இருந்தவரை தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்திருந்த பாரதி, காசியில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். மேலும் பல்கலைக் கழக நூலகம் பாரதிக்கு மேலைநாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியது.

அவர் மேலைநாட்டு அறிஞர்களான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியர் போன்ற கவிஞர்கள் மற்றும் நாடக நூலாசிரியர்களின் நூற்கள் பலவற்றையும் கற்றார். அதனால் பாரதிக்கு மேலைநாட்டு இலக்கிய அறிவும், ஆங்கில அறிவும் வளர்ந்தது.

இவை அனைத்திற்கும் மேலாக காசி வாழ்க்கை பாரதியின் உள்ளத்தில் இந்திய சுதந்திர வேட்கையை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.

வட இந்தியாவில் இந்திய சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த வேளை அது. ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து பல அரசியல் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. பாரதியும் அக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.

பாரதி எட்டயபுரத்தில் வாழ்ந்த அக்காலப் பிராமணர்கள் போலவே மழித்த முகமும், தலையில் குடுமியுமாகவே தோற்றமளித்தார்.

காசியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல பிராமணர்கள் சிலர் தலைமுடியை வெட்டிக் கொண்டு, மீசையும் வைத்துக் காட்சியளித்ததைக் கண்ட பாரதியும் தலைக் குடுமியை வெட்டி, முறுக்கு மீசையும் வளர்த்துக் கொண்டார்.

இவை தவிர சுய மரியாதையின் அடையாளமாக தலைப்பாகை கட்டி வந்தனர். பாரதியும் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை மேற்கொண்டார்.

காசி மாநகரம் பாரதியின் அறிவை விரிவடையச் செய்தது. அவருக்கு காசி மாநகரம் மிகவும் பிடித்துவிட்டது. காசியிலேயே இனி தான் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் பாரதி மீண்டும் எட்டயபுரம் திரும்ப வேண்டிய அவசியம் வந்தது.

பாரதியார் எட்டயபுரம் திரும்புதல்

பாரதி காசியில் வசித்தபோது இந்தியாவின் பல சமஸ்தானத்து மன்னர்களும் கலந்து கொண்ட பேரவை ஒன்று டில்லியில் நடைபெற்றது. டில்லியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்து கொள்ள எட்டயபுர அரசரும் சென்றிருந்தார். பேரவையில் கலந்து கொண்ட அரசர், காசிக்குச் சென்ற அரசர், காசியிலுள்ள ஒரு மடத்தில் பாரதியைச் சந்தித்தார்.

பாரதியுடன் உரையாடிய அரசர், பாரதியின் பன்மொழித் திறமையையும், இலக்கிய அறிவையும் கண்டு பேராச்சரியம் அடைந்தார். அவர் பாரதியைத் தன்னோடு எட்டயபுரம் வந்துவிடுமாறும், அவருக்கு சமஸ்தானத்தில் உத்தியோகம் தரவிருப்பதாகவும் சொல்லி அழத்தார்.

அதன்படியே 1902 ஆம் ஆண்டு பாரதி எட்டயபுரம் திரும்பியதோடு, எட்டயபுர் சமஸ்தானத்திலும் பணிக்குச் சேர்ந்தார்.

பாரதியார் வரலாறு எட்டயபுர அரசவைக்கு வரவழைக்கப்படும் பத்திரிகைகளை மன்னாருக்குப் படித்துக் காட்ட வேண்டும்; அரசர் விரும்பும் நூற்களைப் படித்து அவற்றிற்கு விளக்கம் கூற மற்ற வேண்டும்.

மற்ற நேரங்களில் பாரதி அரசவைக்கு வரும் புலவர்கள், சான்றோர்களோடு சேர்ந்து பலவகை நூற்களை ஆராய்ச்சி செய்வார். இவை தவிர மன்னர் வெளியில் செல்லும் போது மன்னருக்குப் பேச்சுத் துணையாகவும் நண்பராகவும் அவரோடு சென்று வருவார். அவ்வளவுதான்!

பாரதி எட்டயபுரம் அரண்மனையில் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியையே செய்து வந்தார். பாரதிக்கு சலிப்பு உண்டாயிற்று. வெறுமனே அரசரின் கைப்பாவையாக இருக்க விரும்பாத பாரதி 1904 ஆம் ஆண்டு எட்டயபுர சமஸ்தான வேலையை விட்டு விலகினார்.

பாரதியார் வரலாறு தமிழாசிரியர் பணி

எட்டயபுர சமஸ்தானத்தில் பணிபுரிந்த வேளையிலேயே மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விவேகபானு என்னும் பத்திரிகையைப் பற்றி அறிந்திருந்தார். புலவர் கந்தசாமி என்பவர் அப்பத்திரிகையை நடத்தி வந்தார்.

அப்பத்திரிகையில் பாரதி இயற்றிய ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதை 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. அச்சு வடிவில் வந்த பாரதியின் முதல் கவிதை இதுவேயாகும்.

ஒருமுறை அவர் மதுரைக்கு வந்திருந்த போது பாரதியின் பன்மொழிப் புலமையை அறிந்து பாரதியை சென்னைக்கு வருமாறு வேண்டிக் கொண்டார். பாரதியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார் அதன்படி பாரதியும் சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலிருந்து 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலகி, சென்னைக்குப் புறப்பட்டார்.

பாரதியார் சென்னைக்கு வந்தார்

சென்னைக்கு வந்து சேர்ந்த பாரதியார் சுதேசமித்திரன் நாளிதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சுதேசமித்திரன் பத்திரிகைப் பணியின் மூலம் பாரதி பத்திரிகை பற்றி பெருமளவில் அறிந்து கொண்டார். பாரதியாரின் திறமையைக் கண்ட சுப்பிரமணிய அய்யரும் பாரதிக்கு ஊக்கவும் உற்சாகமும் ஊட்டினார்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலம் அது. பாரதி இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து பல பாடல்களை இயற்றினார். பாரதியின் பாடல்கள் ‘தேசபக்திப் பாடல்கள் என்ற பெயரில் சுதேசமித்திரன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியாகின.

சுதேசமித்திரன் பத்திரிகையில் அரசியல் தலையங்கங்கள் போன்றவற்றை அதன் ஆசிரியர் சுப்பிரமணிய அய்யரே எழுதி வந்தார், கவிதை, கட்டுரை, செய்தித் தொகுப்பு போன்றவற்றை பாரதியார் கூனித்துக் கொண்டார்.

ஸ்ரீமான் சுப்பிரமணிய அலயர் ஆங்கிலேய அரசை எதிர்த்தவராயினும் அவர் மிதவாத அமைப்பைச் சேர்ந்தவராகவே இருந்தார், அவர் ஆங்கிலேய அரசு மீதான எதிர்ப்பைக்கூட வெளிப்படையாக அப்பத்திரிகையில் வெளியிடவில்லை.

திலகர் தலைமை தாங்கிய தீவிரவாத அமைப்பை ஆதரித்து வந்த பாரதியாருக்கு ஸ்ரீமான் சுப்பிரமணிய அய்யர் மீது சற்று மனவருத்தம் உண்டானது.

இந்திய சுதந்திரம் பற்றிய தனது கருத்துக்களைத் தான் சுதந்திரமாக எழுதிட, தனக்கொரு பத்திரிகை வேண்டும் என்று நினைத்த பாரதியார் 1005 ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி’ என்ற புதிய தேசிய இதழைத் தொடங்கினார்.

பாரதியார் அரசியலில் தீவிரம் – பெண்ணுரிமைச் சிந்தனை

பாரதியார் சக்கரவர்த்தினி இதழைத் தொடங்கிய பிறகு தன்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக எழுத ஆரம்பித்தார். வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் என்ற கவிதையை தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டார்.

இவ்வேளையில் பாரதியாரின் அரசியலில் ஆர்வமும் அதிகரித்தது. அவர் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு காசி மாநகரில் நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மாநாட்டில் கலந்து கொண்டார். 1906ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

கல்கத்தா சென்றிருந்த பாரதி அங்கே சுவாமி விவேகானந்தரின் பெண்சீடரான சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார். அப்போது சகோதரி நிவேதிதை பாரதியிடம், “உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு பாரதியாரும், “பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?” என்று பதில் கூறினார்.

உடனே நிவேதிதை பாரதியிடம், “நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறீர்கள்.

ஆனால் உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக் கிறீர்களே! இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சமஉரிமை தாருங்கள்!” – என்று சற்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

நிவேதிதை கூறியது பாரதியின் உள்ளத்தில் பெண்ணுரிமைச் சிந்தனையை உருவாக்கியது. அவர் அன்று முதல் தன் மனைவி செல்லம்மாளையும் வெளியிடங்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். சகோதரி நிவேதிதையின் ஆன்மிகம் பற்றிய பல போதனைகளால் பாரதிக்கு ஆன்மிக ஆர்வமும் உண்டாயிற்று.

பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகை

மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்பவர் தமிழில் சிறப்பானதொரு பத்திரிகை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று வெகு நாட்களாக விரும்பினார். அவர் ஒருமுறை பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் அறிவாற்றலைக் கண்ட அவர் பாரதியிடம் தன் எண்ணத்தைக் கூறினார். பாரதியாரும் அதற்குச் சம்மதித்தார்.

அதன்படி 1906ஆம் ஆண்டு மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் ‘இந்தியா’ என்னும் பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். பாரதியாரை அப்பத்திரிகையின் பொறுப்பாசியராக நியமித்தார்.

பாரதியார் இந்தியா பத்திரிகையில் இந்திய நாட்டிற்காக உழைத்தவர்களைப் பாராட்டியதோடு, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் புறக்கணித்தவர்களையும், அரசாங்கத்தை ஆதரித்தவர்களையும் கடுமையாக விமர்சித்தும் கட்டுரைகள் எழுதினார்.

பாரதியாரின் கைத்திறத்தால் ‘இந்தியா’ பத்திரிகை பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் கருத்துக்கள் பாமா மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்று விரும்பிய பாரதியார் அரசியல் கருத்துக்களை கேலிச்சித்திரமாக (கார்ட்டூன்) வரைந்து வெளியிட்டார்.

இந்தியப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியாரே ஆவார். மேலும், ‘பாலபாரத்’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதியார் வெளிக் கொணர்ந்தார்.

பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதியார், சென்னைக் கடற்கரையில் அரசியல் கூட்டங்களையும் நடத்தினார். அக்கூட்டங்களின் மூலம் இந்தியச் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்.

இவ்வேளையில் டாக்டர் நஞ்சுண்டராவ், வி.சர்க்கரை ரெட்டியார், எஸ். துரைசாமி அய்யர், சுரேந்திரநாத் ஆர்யா போன்ற தலைவர்களோடு பாரதியாருக்கு நட்பு கிட்டியது.

பாரதியார் சென்னை ஜன சங்கம்

பாரதியார் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பால கங்காதரத் திலகரின் தீவிரவாதப் போக்கையே ஆதரித்து வந்தார்.

1907 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் நாள் ‘பஞ்சாப் சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதிராய் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்டார். இதனைக் கண்டித்து மே மாதம் 17 ஆம் தேதி சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பாரதியும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இவ்வேளையில் பாரதியாருக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் நட்பு உண்டானது. முதல் சந்திப்பிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும் நட்பும் கொண்டனர்.

இருவரும் மாலைநேரம் திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும், வங்காள விடுதலை வீரர்கள் பற்றியும் கலந்துரையாடினர். பாரதிக்கும் வ.உ.சிக்கும் இடையில் நிலவிவந்த நட்பு அவர்களது இறுதிக்காலம் வரை நீடித்து என்றால் மிகையாகாது.

பாரதியார் வரலாறு 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரசின் இருபத்து மூன்றாவது மாநாடு குஜராத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் செய்தி வெளியானது. பாரதியாரும் வ.உ.சிதம்பரனாரும் இணைந்தே இம்மாநாட்டில் பங்கேற்கச் சென்றனர்.

அங்குதான் பாரதியார் அரவிந்தர் மற்றும் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்ற அரும்பெரும் தலைவர்களைச் சந்தித்து அத்தலைவர்களின் நட்பையும் பெற்றார்.

சூரத் மாநாட்டில் பங்கு கொண்ட பின் பாரதியாரின் மனதில் மேலும் இந்திர சுதந்திர வேட்கையும், ஆங்கிலேயரை எப்படியும் இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியும் ஏற்பட்டது.

பாரதியார் சூரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் ‘சென்னை ஜனசங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பினர் ஒவ்வொரு ஊருக்கும் சென்றனர். அவ்விடமெங்கும் பிரச்சாரம் செய்தனர்.

“இந்தியர்கள் அனைவரும் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்!” என்று முழங்கினார். மேலும் பாரதியார், வ.உ. சிதம்பரனாரின் சுதேசக் கொள்கைகளின் அடிப்படையில் சுதேசிப் பொருட்கள் மட்டுமே அடங்கிய ‘பாரத பந்தர்’ என்ற பெயரால் கடை திறக்கவும் ஏற்பாடு செய்தார்.

பாரதியார் இயற்றிய நூல்கள்

இக்காலக் கட்டத்தில் பாரதியார் தான் இயற்றிய பாடல்களை நூல் வடிவில் வெளிக் கொணர விரும்பினார். 1907 ஆம் ஆண்டில் மிதவாத காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த வி.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர், பாரதியார் இயற்றிய மூன்று தேசியப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து சுதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டார்.

அந்நூல்கள் பள்ளிக்கூடங்களுக்கும், மேலும் பல தன்னார்வ அமைப்புகளுக்கும் இலவசமாகவே விநியோகிக்கப்பட்டது. அச்சில் வெளிவந்த பாரதியாரின் முதல் நூல் இதுவாகும் bharathiyar history in tamil .

பாரதியார் இந்நூலில் மேலும் தான் இயற்றிய சில பாடல்களைச் சேர்க்க விரும்பினார். அதன்படி 1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினான்கு பாடல்கள் கொண்ட ‘சுதேச கீதங்கள்’ என்று தலைப்பிட்ட நூலை தன் சொந்தச் செலவிலேயே வெளியிட்டார். இவ்வேளையில் பாரதியார் இந்தியா’ பத்திரிகையில் ‘ஞானரதம்’ என்ற உரைநடைக் காவியத்தை எழுதி வந்தார்.

பாரதியார் வரலாறு சுயராஜ்ய தினம்

1908ஆம் ஆண்டு திலகரின் ஆதரவாளர்கள் நாடெங்கும் சுயராஜ்ய தினத்தைக் கொண்டாட முடிவு செய்தனர். சென்னையில் பாரதியார் அந்நிகழ்ச்சியைக் கொண்டாட முடிவெடுத்தார். சென்னை ஜனசங்கத்தின் சார்பில் பல இளைஞர்களைக் கொண்டு வந்தே மாதரம்’ என்று முழங்கியபடி ஊர்வலம் ஒன்றையும் நடத்தினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற சுயராஜ்ய தின விழாவிற்கு ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் தலைமை ஏற்றனர். அவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.

இதனையறிந்த பாரதியார் மிகவும் ஆத்திரம் கொண்டார். அவர் உடனே சென்னையிலிருந்து பாளையங்கோட்டைக்கு விரைந்து சென்றார். நண்பர்கள் இருவரையும் சிறையில் சந்தித்தார்.

வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா மீதான வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பாரதியார் நீதிமன்றத்திற்குச் சென்று அவர்கள் இருவருக்கும் ஆதரவாக சாட்சி கூறினார்.

இருப்பினும் ஆங்கிலேய அரசு அவர்களை விடுதலை செய்யாமல் சுப்பிரமணிய சிவாவிற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது.

வ. உ. சி க்கும் சுப்பிரமணிய சிவாவிற்கும் வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து பாரதியார் இந்தியா பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

வ.உ.சி வழக்கில் நீதிபதியாக இருந்தவர் பின்ஹே என்ற ங்கிலேயர், “பாரதியாரின் பாடல்களைக் கேட்டால் செத்த பிணமும் உயிர்பெற்று எழுந்துவிடும். அடிமைப்பட்ட தேசம் எதுவாயினும் அது ஐந்து நிமிடங்களில் புத்துயிர் பெற்று நிமிர்ந்து நிற்கும்” – என்று கூறினார்.

பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கில அரசு, இந்தியாவில் எவ்விடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாரதியாரின் பாடல்களைப் பாடுவது ராஜ துரோகம் என்ற சட்டமும் கொண்டு வந்தது.

ஆனால் ஆங்கிலேய அரசின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத பாரதியார் தொடர்ந்து இந்தியா பத்திரிகையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டுரைகளும், பாடல்களும், கேலிச்சித்திரங்களும் வெளியிட்டு வந்தார்.

பாரதியாரின் இச்செய்கையைப் பொறுத்துக் கொள்ள இயலாத ஆங்கில அரசு பாரதியாரின் எழுத்துக்களுக்கு முட்டுக்கட்டை போடத் தீர்மானித்தது.

ஆங்கில அரசு 1908ஆம் ஆண்டு புதிய பத்திரிகைச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. பத்திரிக்கச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஒரு பொய்யான காரணமும் கூறப்பட்டது.

அதாவது, “சுதேச மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகள் இந்திய மக்களின் அறிவை வளர்ப்பதாகச் சொல்லி அரசுக்கு எதிரான எண்ணங்களைத் தூண்டி விடுகின்றன’ – என்பதே அரசு கூறிய காரணமாகும்.

புதிய பத்திரிகைச் சட்டத்தை இந்தியா பத்திரிகையின் மீது திணித்து, பாரதியாரை எப்படியேனும் கைது செய்துவிடலாம் என்பது ஆங்கிலேய அரசின் எண்ணமாக இருந்தது.

ஆனால் பத்திரிகைச் சட்டப்படி, ஒரு பத்திரிகையின் வெளியீட்டாளரையே விசாரணை செய்ய முடியும். அதன்பிறகுதான் ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்,

இந்தியா பத்திரிகையின் வெளியீட்டாளராக சீனிவாசன் என்பவரின் பெயரே பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனவே ஆங்கிலேய அரசு பாரதியாருக்குப் பதில் வெளியீட்டாளரான சீனிவாசனைக் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. அதனால் இந்தியா’ பத்திரிகை வெளிவர இயலாமல் போய்விட்டது.

பாரதியார் அரவிந்தர் நட்பு

மகான் அரவிந்தர் என்று போற்றப்பட்ட அரவிந்த கோஷ் முதலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். பின்னாளில்தான் ஆன்மிகத்தில் முழுக்கவனம் செலுத்தினார். ‘கர்மயோகின்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையையும் அவர் வெளியிட்டு வந்தார்.

பாரதியார் அப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, 1909ஆண்டு டிசம்பர் மாதம் ‘கர்மயோகி’ என்ற பெயரில் வெளியிட்டார். மேலும் அரவிந்தர் வங்காள மொழியில் வெளியிட்டு வந்த ‘தர்மா’ என்ற பத்திரிகையையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இப்பத்திரிகையில் பாரதியார் அரசியல் செய்திகள் எதையும் வெளியிடாமல் இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, ஆ ன்மிகம் சம்பந்தமான செய்திகளை வெளியிட்டார். கூடவே சமஸ்கிருத மொழியிலுள்ள பகவத் கீதையின் சுலோகங்களுக்கு எளிய தமிழ் விளக்கங்கள் எழுதி அவற்றையும் வெளியிட்டார்.

‘விஜயா’ என்ற தமிழ்ப் பத்திரிகையும், ‘பாலபாரதா’ என்ற ஆர் ங்கிலப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டு வந்தார். இவை தவிர ‘சித்ராவளி’ என்ற மாத இதழும், சூர்யோதயம்’ என்ற வார இதழும் பாரதியாரின் மேற்பார்வையில் வெளியாயின.

ஆனால் பெரும்பாலான பத்திரிகைகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியால் ஒரு ஆண்டிற்குள் நின்று போயின. தொடர்ந்து பொருளாதார நெருக்கடியால் தவித்த ‘இந்தியா’ பத்திரிகையும் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு நின்று விட்டது. இதனால் பாரதியாரின் மனம் வருந்தியது.

பாரதியார் கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற காவியங்களை இயற்றிக் கொண்டிருந்தார். பகவத் கீதை சுலோகங்களுக்கு தமிழில் விளக்கம் எழுதி வந்தார். பாரதியார் இப்படைப்புகளைப் படைத்தது 1912ஆம் ஆண்டு காலக்கட்டமாகும்.

எல்லோரும் ஓர் இனம்

அக்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக மட்டுமே போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் பாரதியாரோ உள் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருந்த தீண்டாமை, சாதிபோதம் போன்ற சமூக அவலங்களையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் உயர்சாதியினர் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

உயர்சாதியினர் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் கிணறுகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற பல கொடுமைகள் நடந்து வந்தன. பாரதியார் இவற்றைக் கண்டு மனம் கொதித்தார்.

பாரதியார் பிராமணக் குலத்தில் பிறந்திருந்த போதும் பூணூல் அணிவதை விட்டுவிட்டார். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்’ என்ற சமுதாயம் மலர அவர் விரும்பினார்.

பாரதியார் வரலாறு 1913ஆம் ஆண்டின் ஒருநாள் கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்தார். உயர்சாதியினர் குளிக்கும் குளத்தில் அவரை குளிக்கச் செய்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்.

அவருக்கும் பிராமணர்கள் அறிந்து வைத்திருந்த வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்ததோடு “இனி நீயும் பிராமணன்தான்!” என்று அந்த இளைஞரிடம் கூறினார்.

பாரதியாரின் இச்செயலைக் கண்டு பலர் அவரைப் பாராட்டினர். ஆனால் சாதிப்பித்து பிடித்த பலரோ, ‘பாரதியார் பிராமணக் குலத்திற்கு தீங்கு செய்துவிட்டார்’ என்று அவர் மீது குற்றம் சாட்டினார்கள்.

பாரதியார் வரலாறு பாரதியார் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. அவர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமின்றி, பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களோடு நட்பு பாராட்டியதோடு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்களோடு சரிசமமாக உணவருந்தினார்.

பாரதியார் புதுச்சேரியில்

புதுச்சேரியில் வசித்த பெரும்பாலான நாட்களில் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வந்தார் என்று கண்டோம். அவர் பகவத்கீதை மற்றும் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற நாலாயிரத் திவ்விய பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்று வந்தார்.

அதனால் வைணவத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகரித்தது. பாரதியார் வைணவர் போலவே நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டார்.

ஒருநாள் பாரதியார் தனது நெருங்கிய நண்பரான குவளையூ கிருஷ்ணமாச்சாரியாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாரதியார் குவளையூராரிடம், “நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று கூறுகிறோமே! அந்த நாலாயிரம் பாசுரங்களையும் எத்தனை ஆழ்வார்கள் பாடினார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு குவளையூரார், “பன்னிரெண்டு ஆழ்வார்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் தான் நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகும்” என்று பதில் கூறினார்.

உடனே பாரதியார், “கிருஷ்ணா! பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடல்கள் பாடினார்கள். ஆனால் நான் ஒருவனே ஆறாயிரம் பாடல்களைப் பாடப் போகிறேன்!” – என்று கூறினார்.

பாரதியார் கூறியதைக் கேட்ட குவளையூர் கிருஷ்ண மாச்சாரியார், “ஐயா! அது உங்களால் முடியாது. காரணம் இது கலி முற்றிவிட்ட காலம். அதிகபட்சமாக மனிதன் ஆயுள் நூற்றியிருபது ஆண்டுகள் தான். அதனால் அந்தக் காலக்கட்டத்திற்குள் உங்களால் ஆறாயிரம் பாசுரங்களைப் பாடி முடிக்க முடியாது!” என்று பதில் கூறினார்.

ஆனால் பாரதியாரோ, “இல்லையில்லை. நான் நிச்சயம் ஆறாயிரம் பாசுரங்கள் பாடி முடிப்பேன். நீயும் பார்க்கத்தான் போகிறாய்!” – என்று நம்பிக்கையோடு கூறினார். கூறியது போலவே பாரதி ஆறாயிரம்’ என்ற தலைப்பில் பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.

ஆனால் பாரதியார் தனது வாழ்நாளில் அறுபத்தாறு பாசுரங்களை மட்டுமே இயற்ற முடிந்தது. பிற்காலத்தில் அப்பாடல்கள் ‘பாரதி அறுபத்தாறு’ என்ற தலைப்பில் வெளியானது.

பாரதியார் எப்படி இறந்தார்

பாரதியார் சென்னையில் வசித்து வந்த காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று, பெருமாளை வணங்கி வருவது வழக்கம். அக்கோயிலில் யானை ஒன்று இருந்தது. பொதுவாகவே பாரதியாருக்கு வாயில்லா பிராணிகளிடம் அன்பு அதிகம்.

மகாகவி பாரதியார் நாள் தோறும் அந்த யானை உண்பதற்கு தேங்காய், பழம் போன்றவற்றை வாங்கித் தருவார். யானையும் பாரதியாரிடம் மிகவும் அன்பாகவே பழகி வந்தது.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம். ஒருநாள் பாரதியார் வழக்கம்போல யானைக்குப் பழம், தேங்காய் வாங்கிக் கொண்டு யானையின் அருகில் சென்றார். அன்று யானைக்கு மதம் பிடித்திருந்ததை அறிந்த பலர் பாரதியாரிடம் யானையின் அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ஆனால் பாரதியாரோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இத்தனை நாளும் மிகுந்த நட்போடு பழகிய யானைதானே என்று நினைத்த பாரதியார் யானையின் அருகில் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை, பாரதியாரைத் தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஏற்கனவே உடல்நலிவுற்றிருந்த பாரதியார், தூக்கி எறியவும் அப்படியே மூர்ச்சையாகிவிட்டார்.

அதைக்கண்ட பலரும் பதறித் தவித்தனர். இருப்பினும் யானையின் அருகில் சென்று பாரதியாரைத் தூக்கிவிட அனைவரும் அஞ்சினார்கள்.

ஆனால் பாரதியின் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், யானையைக் குறித்து கொஞ்சமும் அஞ்சாமல் பாரதியாரின் அருகில் சென்று அவரைத் தூக்கினார்.

மேலும் சிலரும் சேர்ந்து பாரதியாரை இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிலநாட்கள் பாரதியார் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இரண்டொரு தினங்களில் அவருக்குக் குணமும் கிட்டியது.

பாரதியார் ஓரளவு உடல்நிலை தேறிவிட்டார். அவர் அடுத்து வந்த நாட்களில் சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகம் சென்று தன் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பாரதியார் ஆகஸ்ட் மாதம் 2ஆம் நாள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல் பாளையம் என்னும் ஊருக்குச் சென்று, மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருளில் மிக அருமையான சொற்பொழிவையும் ஆற்றிவிட்டுத் திரும்பினார்.

அதே நாளில் வாய்க்கரை என்னுமிடத்தில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற தலைப்பில் சிறப்பான சொற்பொழிவாற்றினார். மேற்கூறிய இரண்டு சொற்பொழிவுகளுமே பாரதியார் ஆற்றிய இறுதிக் சொற்பொழிவுகளாகும்.

சென்னைக்கு வந்த நாள் முதலே பாரதியாரின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. கோயில் யானை வேறு தாக்கியதால் பாரதியாரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வந்தது.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி, பாரதியாருக்கு வயிற்றுக்கடுப்பு நோய் பீடித்து உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. செப்டம்பர் 12ஆம் நாள், திங்கட்கிழமை அதிகாலை ஏறக்குறைய இரண்டு மணி அளவில் பாரதியார் இவ்வுலகைவிட்டு மறைந்தார். பாரதியார் மறைந்தபோது முப்பத்தி ஒன்பது வயது மட்டுமே நிரம்பியிருந்தது.

தனது குறுகிய கால வாழ்க்கையிலும் தாய்நாட்டின் மீதிருந்த பக்தியால் எண்ணற்ற தேசப்பாடல்களை இயற்றினார் அவர்.

பாரதியார் தேசியக்கவி

தாய்நாட்டிற்குள்ளேயே மக்களைப் பீடித்திருந்த சாதிவெறி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், அச்சம், கோழைத்தனம் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களைத் தீர்க்கவல்ல மாமருந்தான பாடல்களையும் அவர் பாடிச் சென்றார். அதனால்தான் இன்றளவும் பாரதியார் தேசியக்கவி என்றும் மகாகவி என்றும் மக்களால் போற்றப்படுகின்றார்.

உலகம் போற்றும் பாடல்களை இயற்றி, இந்திய மக்களின் மனதில் அறிவையும், துணிவையும், வீரத்தைப் புகட்டிய மகாகவி பாரதியார் மறைந்துவிட்டாலும், அவரது பாடல்கள் அவரது புகழை என்றும் நிலைத்து நிற்கச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Tags: