கியூபாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டிய பாடம்!

மேற்குலகத்துக்கு தானாகச் சென்று கைகொடுக்கும் கியூபா

கொரோனா விடயத்தில் தொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து   வருகிறது கியூபா.  மடிந்து விழும் உயிர்களை காப்பாற்றி பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள்  வியந்து பார்த்து வருகின்றன.

சீனாவை விட கொரோனா வைரஸ் தொற்றில்அதிகமாகப் பாதிக்கப்பட்டது இத்தாலிதான். சொன்ன அறிவுரையைக் கேட்காமல் இத்தாலி மக்கள் அலட்சியமாக இருந்ததால் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இத்தாலியில் சம்பவிக்கும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்து விட்டன. அப்போதுதான் மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலியச் சென்று உதவிகளை செய்யத் தொடங்கியது.

52 டொக்டர்கள், தாதிகளை அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது கியூபா. தங்கள் உயிருக்கும் ஆபத்து வரும் என்று தெரிந்துதான் இவர்கள் இத்தாலி  மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தனர். இத்தாலி மட்டுமல்ல, மேலும் 5 நாடுகளுக்கும் கியூபா டொக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னமும் உதவி செய்ய தயாராக உள்ளனர் என்றால் இதற்கு என்ன காரணம்? இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் ஒரு மாவீரரின் இலட்சிய கனவு அடங்கி உள்ளதுதான் அடிப்படை!

Cuba geneest de wereld van corona - NPO Radio 1

பிறருக்கு உதவிகளை அளித்து உயிர்காக்கும் அளவுக்கு கியூபா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. இன்னமும் ஓர் ஏழை நாடுதான். ஆனால் ஒரு சில குறிக்கோள்களை வகுத்து அதற்குள் பயணித்து வருகிறது. தன்னை நசுக்கும் அமெரிக்கா போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் கூட இந்த பயணத்தில் எந்த தங்குதடையும் இல்லை. உலகில் தீராத ஒரு பகை இருக்கிறதென்றால் அது கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள பகைதான்.

கென்னடி காலத்தில் இருந்தே.. 1959 இலேயே இந்நாடுகளுக்குள் விவகாரம் வெடித்து விட்டது. பிடல்காஸ்ட்ரோவும், சேகுவேராவும் ஒன்றாக கரம் கோர்த்து, அவர்களின் புரட்சி போராட்டத்தில் வித்திட்டதுதான் மக்கள் குடியரசு. இதற்குப் பிறகுதான் அமெரிக்காவின் பரம எதிரி பட்டியலில் ஒன்றானது கியூபா. இன்றுவரை அந்த பகை  உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை இந்த குட்டி நாட்டின் மீது விதிக்க ஆரம்பித்தது அமெரிக்கா. பொருளாதாரத் தடைகளுடன் சேர்த்து ஏராளமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் கியூபா மீது திணித்தபடியே இருந்தாலும், அதை மிக சாதுரியமாக கையாண்டார் பிடல் காஸ்ட்ரோ.

அமெரிக்காவை அடித்து சாய்க்க ஆயுதம் உதவாது. அறிவாயுதமும், சுயசார்பும்தான் கைகொடுக்கும் என்பதை உணர்ந்தவர் காஸ்ட்ரோ. அதைதான் கையில் எடுத்தார்.

‘தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்.’

இதைத்தான் மக்கள் முன்பு முன்வைத்தார் காஸ்ட்ரோ. அனைவருக்கும் இலவசக் கல்வியைப் புகுத்தினார்.. தனியார் பாடசாலைகளே அங்கு இல்லை. முழுக்க முழுக்க அரசே பாடசாலைகளை  நடத்தி அதில் இலவசமாக கல்வியை வழங்கியது அந்நாடு. அதனால்தான் கியூபாவில் எழுத படிக்க தெரிந்தவர்களின் அளவு 98.2 சதவீதமாக உயர்ந்தது. இதில் கூடுதலாக காஸ்ட்ரோ கவனம் செலுத்தியது மருத்துவத்தில்தான்.

தன்னுடைய நாட்டு மருத்துவக் குழு உலகம் முழுவதற்கும் உதவ வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் காஸ்ட்ரோ. புரட்சி வென்ற பின்பு கியூபா தன்னுடைய மருத்துவர்களில் பாதிப் பேரை இழந்து விட்டது. இதற்குக் காரணம் அங்கிருந்த 6,000 டொக்டர்களில் 3,000 பேர் கியூபாவை விட்டு வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்.. இதனால்தான் எஞ்சியிருந்த டொக்டர்களை ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் 2 பிரிவாக பிரித்தனர்.

ஒரு வகையானவர்கள் தங்கள் நாட்டை கவனித்து கொண்டாலும் இன்னொரு குழு மருத்துவர்கள் உலகம் முழுவதும் குறிப்பாக பேரிடர் சமயங்களில் அந்தந்த நாட்டு மக்களுக்கு விரைந்து சென்று உதவுவார்கள். எனவே கியூபாவின் இன்றைய மருத்துவ உதவி என்பது திடீரென முளைத்த விஷயம் இல்லை.. எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் காஸ்ட்ரோவின் விருப்பப்படியே 50 வருடமாகவே கியூபா தன் சேவையை விடாமல் நடத்தி வருகிறது. இது ஒரு கம்யூனிச நாடு என்பதால் அந்த நாட்டில் உள்ள எல்லா சொத்துக்களும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் மருத்துவத்தை மனிதர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதில் கியூபா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.

அந்த நாட்டில் எல்லோருக்குமே ஒரே மாதிரி வைத்தியம்தான். ஏற்றத்தாழ்வுகள் இல்லை. மருத்துவத்தை வைத்து இலாபம் சம்பாதிக்கும் தொழிலாகவும் கியூபா இதுவரை நினைத்ததும் இல்லை. இன்றைக்கு உலகில் இருக்கும் தலைசிறந்த டொக்டர்களில் பாதிப் பேர் கியூபாவில்தான் இருக்கிறார்கள். கியூபா தந்து வரும் இந்த மருத்துவ உதவிதான் கொரோனா வைரஸிடம் சிக்கித் தவிக்கும் பலருக்கும் மலை போல உதவி வருகிறது.

அமெரிக்கா என்னென்ன பொருளாதாரத் தடைகளை கியூபா மீது விதித்ததோ அவை அனைத்தையும் முழுமையாக ஆதரித்த நாடுதான் இத்தாலி.. இப்போதும் அவைகளை ஆதரித்து வரும் நாடும் கூட. நோய்த் தொற்று பரவத் தொடங்கியவுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் இத்தாலி உதவியை கேட்கத் தொடங்கியது. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் தானாக உதவி செய்ய முன்வந்தது கியூபா.

Cuban medical brigade arrives in Italy as ministers round on EU ...

50க்கும் மேற்பட்ட கியூப டொக்டர்களை விமான நிலையத்தில் பார்த்ததுமே அவர்களை எழுந்து நின்று வரவேற்றனர் இத்தாலியர்கள்! கியூப டொக்டர்களின் வருகையால் உயிரிழப்புகள் கொஞ்சம் குறைய தொடங்கியது இத்தாலிக்கு சற்று தெம்பையே தந்தது.. முற்றிலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், கியூபா மருத்துவக் குழு தங்களுடன் இருப்பது ஆறுதலையும் நம்பிக்கையும் நிறையவே தந்து வருகிறது. செல்வம் கொழிக்கும் ஐரோப்பிய நாட்டுக்கு ஒரு ஏழ்மையான கியூபா நாடு உதவி செய்து வருவதை உலக நாடுகளே இன்று திரும்பிப் பார்க்கின்றன.

‘உங்கள் டொக்டர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள்’ என்று வெனிசுலா, ஜமேக்கா போன்ற நாடுகளே வேண்டுகோள் விடுக்கத் தொடங்கி உள்ளன.   இதே பிரேசில்தான் கியூபா டொக்டர்களை தீவிரவாதிகள் என்றது. ஆனால் இப்போது பிரேசிலும் கியூபாவின் உதவியை கேட்கத் தொடங்கி விட்டது. Cuban Interferon Abha 2B என்ற மருந்தை கியூபா கொடுத்து உதவியதால், கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்று சீனஅரசே ஒப்புக் கொண்டுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்த Cuban Interferon Abha 2B மருந்தானது 1981ம் ஆண்டு முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டு டெங்குவை ஒடுக்கி பெரும் வெற்றி பெற்ற மருந்தாகும். அதுதான் சீனாவுக்கு தற்போது கொரோனாவைரஸ் நோய்க்கு எதிராக பயன்பட்டுள்ளது. முக்கியமாக, கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக் கூடும் என  உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் 4 மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான, முற்றும் முழுமையான மருந்து இது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், எந்த மருந்துமே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை, WHO ஒப்புக் கொள்கிறது. அதனால்தான் இந்த மருந்தையும் பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது.

In heroic act, Cuba receives British cruise ship with COVID-19 ...
British cruise ship, MS Braemar

அதேபோல, 1,000 பேருடன் கரீபியன் பகுதியில் பயணித்து வந்த ப்ரீமர் (MS Braemar) சொகுசு கப்பலில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த கப்பலை எந்த நாடும் தங்கள் துறைமுகத்தில் நிறுத்தி கொள்ள ஒப்புக் கொள்ளாத நிலையில் ‘நாங்கள் இருக்கோம்’ என்று முன் வந்தது கியூபா. நங்கூரமிட்டதற்கு அனுமதி தந்ததற்காக, பிரிட்டன் தன் இதயம் கனிந்த நன்றிகளை மறக்காமல் உதிர்த்தது.

‘நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்’ என்று பதாகைகளை ஏந்தி உரக்க சொன்னது! ஆனால் இதில் எந்த நாட்டின் விரோதத்தையும் கியூபா மனசில் வைத்து கொள்ளவில்லை. உலக மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது. தன்னை வஞ்சித்த, தன்னை ஏளனம் செய்த, தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கிய, எந்த நாட்டையுமே கியூபா குத்திக் காட்டவில்லை. பழி தீர்த்துத் கொள்ளவில்லை. பதிலாக உயிரை மட்டுமே காப்பாற்றி உலக நாடுகளை வெட்கப்பட செய்து வைத்து வருகிறது

கியூபாவிடம் உலக நாடுகள் பாடம் கற்று கொள்வது அவசியமாகிறது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்பதுதான் கியூபாவின்  பதிலடி! 

அமெரிக்காவால் செய்ய முடியாததை, ஐரோப்பாவால் செய்ய முடியாததை சின்னஞ்சிறு கியூபா செய்து காட்டி வருகிறது. உலக அரங்கில் ஹீரோவாக உருவெடுத்து வருகிறது இந்த ஏழை நாடு!

-தினகரன்
2020.03.31

Tags: