புலிகளால் கொல்லப்பட்ட தங்கத்துரை

பாலசுகுமார்

பாலாவின் பாலம்: தங்கத்துரை அண்ணன்

ங்கத்துரை அண்ணன் இறந்து 23 வருடங்கள் கடந்து விட்டன ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படியே உள்ளது. இதே நாளில்தான் (05.07.1997) தங்கத்துரை அண்ணன் உட்பட சண்முகாவித்தியாலய அதிபர் இராஜேஸ்வரி, கூனித்தீவின் மூத்த அதிபர் ஜீவரத்தினம் என பல கல்வியாளர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்ட நாள்.

அண்ணன் தங்கத்துரை அடிப்படையில் இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டவர் கொழும்பில் வேலை செய்கிற போது சமஜமாஜி தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர் இலங்கையின் பல இடது சாரி தலவர்களுடனான நட்பு அவருக்கிருந்தது.

மூதூர் தொகுதி அரசியல் பிரதிநிதித்துவம் தங்கதுரை அண்ணனுக்கு முன்பு மூதூரை சாராதவர்களாலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.1970ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மூதூர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிறார்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் இயங்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் தங்கத்துரை என்றால் அது மிகையன்று.

மூதூர் தொகுதியில் இன்று வரை அவர் சாதனையயை மிஞ்சியவர் எவருமிலர்.மூதூர் தொகுதியின் படித்த இளைஞர்கள் அவர் காலத்திலேயே பெருமளவில் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொண்டனர்.பல அபிவிருத்தி திட்டங்கள் அவர் காலத்திலேயே மேற் கொள்ளப்பட்டன.

1977ல் புதிய தேர்தல் தொகுதி வரைவில் முல்லைத்தீவு தொகுதியை வடமாகாணத்தில் பெற்றுக் கொண்டு மூதூர் தொகுதியயை தாரை வார்த்தது தமிழர் கூட்டணி.இரட்டை அங்கத்த்கவர் முறை நீக்கப் பட்டு சேருவில தொகுதி உருவாக்கப் பட்டிருந்தது.

திருகோணனலை மக்களின் ஏகோபித்த எதிற்பையும் மீறி சம்பந்தருக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப் பட்டது.சொல்லப் பட்ட காரணம் சம்பந்தர் அப்புக்காத்து என்பது.பின்னாளில் அதே நெஞ்சுரத்துடன் படித்து சட்டத்தரணியாகிறார் அண்ணன் தங்கத்துரை.

1970ம் ஆண்டு நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அண்ணன் தங்கத்துரை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு சேனையூர் வருகிறார் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி என தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தன.ஆனாலும் மூதூர் தமிழ் மக்கள் தங்கத்துரை அண்ணன் பின்னாலேயே அணி திரண்டனர்.

சேனையூர் பிள்ளையார் கோயில் முன்றலில் முதல் கூட்டம் பல முன்னணி தலைவர்களுடன் தந்தை செல்வாவும் கலந்து கொள்கிறார் நானும் அக்கூட்டத்தில் பிரசார உரையாற்றுகிறேன். கட்டைபறிச்சான் கனகசிங்கம் ஆசிரியர்,என் ஆசிரியர் செ.விபுணசேகரம் ,அண்ணன் கெங்காலிங்கம் ஆகியோர் பிரசார களத்தில் அணிசேர்கின்றனர் அத்தோடு என் மாமா நாகேஸ்வரன்,நண்பன் இரா.இரத்தினசிங்கம் என அண்ணன் தங்கத்துரைக்காக பல மேடைகளில் பேசுகிறோம்.

தங்கம்: தங்கத்துரை அண்ணன்

சம்பூரில் குழந்தவேல் மாஸ்ரர்,மணி,சித்திரவேலாயுதம்,மூதூரில் பூபா.மதுரநாயகம்,புண்ணிய மூர்த்தி,குலேந்திரன்,அன்ரனி டொக்டர் பள்ளிக்குடியிருப்பில் இரத்தினசிங்கம்,மல்லிகைத்தீவில் பாலசிங்கம், சிற்றம்பலம், நடேசபிள்ளை, பட்டித் திடலில் யோகேந்திரம், கவிஞன், மேங்காமத்தில் கிருபை,
கிளிவெட்டியில் தவகுமார், துரை, கணேஸ்என மூதூர் தொகுதி எங்கும் அண்ணன் தங்கத்துரையின் வரவு அரசியலில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

என் அப்புச்சி தீவிர தமிழரசுக் கட்சி வெறியர் என்று சொல்லலாம் அண்ணன் தங்கத்துரைக்காகாக மிக தீவிரமாக செயல் பட்டார் எங்கள் வீட்டுக்கு நன்றி சொல்ல வந்த போது அப்புச்சி கையைப் பிடித்து நன்றி சொன்ன காட்சி பசுமை நினைவாய் உள்ளது.

1972ல் குடியரசு யாப்புக்கு எதிரான உண்ணாவிரத போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மூதூர் தொகுதியெங்கும் இளைஞர்களை அணி திரட்டியவர்,அண்ணன் தங்கத்துரை. அவர் மூட்டிய கனலே பின்னாளில் இயகங்கள் மூதூர் பிரதேசத்தில் வெற்றிகரமான செயல் பாட்டிற்கு தளம் அமைத்தன எனலாம்.

1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் அண்ண் மிகப் பெரிய வெற்றி பெறுகிறார்.அந்த நாட்களில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்துக்காக அவருடன் பயணித்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.

மூதூர் பிரதேசத்தில் ஆரம்ப நாட்களில் ஈழ விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியில் முக்கிய ஆதரவு தளமாக அவர் இருந்தார் குறிப்பாக ஈழப்புரட்சி அமைப்பின் தோழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.இறுதி வரை எத்தனை இடர்கள் வந்த போதும் தன் கட்சிக்கு விசுவாசமாயிருந்த ஒருவர் கொண்ட கொள்கை மாறா தலைவர் அவர்.

அவர் காட்சிக்கு இனியன் கடும் சொல் பேசா பண்பாளன் ,எப்போதும் சிரித்த முகம்.அவர் வாயில் முடியாது என்ற வார்த்தை வரவே வராது.எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாவம்.அகம்பாவமற்ற அரசியல்.மற்றவரை மதிக்கும் பண்பு அதிகாரத் தொனியற்ற தோழமை அரசியல் .

இறுதியாக 1995ல் தோழர் பற்குணத்தின் மரண வீட்டில் சந்தித்தமை நீண்ட உரையாடல் திருகோணமலையில் தனி பல்கலைக் கழகம்,மூதூரில் ஒரு தொழில் நூட்ப கல்லூரி என பல கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.

கொட்டியாரத்தின் அரசியல் தலை மகனுக்கு தோழமை மிக்க அஞ்சலிகள்.

அண்ணன் தங்கத்துரை

கோ.திரவியராசா

கிழக்கு மண் .Kizkkuman: அண்ணன் தங்கத்துரை

05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வு முடிவுற்றதும் வீடு நோக்கி திரும்புகையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை தி/ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.

கல்வி அபிவிருத்தியில்

பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.

அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றியுள்ளார். வீதி அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்தி, சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.

மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத்துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.

அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையேற்பட்டது.இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வொன்றில் உரை

பொதுமக்களினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.

1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அமரர் தங்கத்துரை மரணித்த போதும் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கும் மாவட்ட மக்களுக்கும் செய்த சேவைகள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. அன்னாரது சேவைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன

Tags: