சோறா? சுதந்திரமா?

-பரிபூரணன்

August | 2015 | Tamil and Vedas | Page 2

ந்தத் தலைப்பில் உள்ள கேள்வியில் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன. அதேநேரத்தில் இந்தத் தலைப்புதான் இன்றுவரை தமிழர் அரசியலை வழிநடத்தியும் வருகின்றது.

இந்தக் கேள்விக்கு சொந்தக்காரர்கள் தமிழரசுக் கட்சியினர்தான். இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியதற்கு ஒரு காரணம் இருந்தது. தமிழரசுக் கட்சி எப்பொழுதுமே தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள், அபிவிருத்தி, வேலை வாய்ப்பு என்பன பற்றிப் பேசுவதும் இல்லை, அக்கறை செலுத்துவதும் இல்லை.

தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழ் தேசியம் பற்றித்தான் உரத்துப் பேசியது. இருப்பினும் அக்கட்சியின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில்தான் தமிழர் பிரதேசங்களான காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை, பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனையில் காகித ஆலை என மூன்று பாரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதாக அக்கட்சியினர் பெருமைப்படுவதுண்டு.

அதேபோல அக்கட்சியின் சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வி.குமாரசாமி அதே ஐ.தே.க. அரசில் உதவி அமைச்சராக பதவி வகித்த காலத்தில்தான் மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் பாரிய முயற்சியில் இறங்கினார். அம்முயற்சி நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தாலும், அவர் தமிழ் விவசாயிகளினதும் பொது மக்களினதும் தண்ணீர் பிரச்சினையை ஒரு நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறார் என்பது புலனாகின்றது.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த ஐ.தே.க. அரசின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த தமிழ் காங்கிரஸ் அந்த மலையகத் தமிழரின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்த கொடுமையை ஆதரித்திருந்த போதிலும், மறுபக்கத்தில் இந்த பொருளாதார வெற்றிகள் அவர்களது சாதனைகளாக இன்றும் பார்க்கப்படுகின்றன.

எனவே தமிழ் காங்கிரசின் இந்த பொருளாதார சாதனைகளை மனதில் வைத்துத்தான் தமிழரசுக் கட்சி “சோறா? சுதந்திரமா?” என்ற கேள்வியை எழுப்பியது என்று கருதுவோரும் உண்டு. அதாவது, எமக்கு சோறு போடும் பொருளாதார முயற்சிகளை விட, தமிழர்களின் இன விடுதலைத் தாகம்தான் முக்கியம் என்ற கருத்தை முன்வைப்பதற்காகவே தமிழரசுக் கட்சி இந்தக் கேள்வியை எழுப்பியது என்பது இதன் அர்த்தம். இன்னொரு விதமாகச் சொல்வதானால், யதார்த்தத்தில் மனிதர்களுக்குத் தேவையான சோறு என்ற உணவுப் பண்டத்தை விட, மனத்தாகமான இன விடுதலைத் தாகம்தான் முக்கியமானது என்பது இதன் அர்த்தம்.

தமிழரசுக் கட்சி இந்த சோறா சுதந்திரமா என்ற கோசத்தை எழுப்பியதற்கான உண்மையான வேறு என்ற கருத்துள்ளவர்களும் இருக்கின்றனர். அதாவது, தமிழரசுக் கட்சி உருவாவதிற்கு முன்பு தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர்கள் அனைவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்ப் பகுதிகளில் சவாலாக இருந்தவர்கள் இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியுமே.

இந்த இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் இரண்டு சமாந்திரமான கொள்கைகளைப் பின்பற்றின. ஒரு பக்கத்தில் இக்கட்சிகள் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் வகையில் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகப் போராடிய அதேநேரத்தில், அந்த இனத்திற்குள்ளேயே சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், வர்க்க ரீதியாக சுரண்டப்பட்ட தொழிலாளர் விவசாயிகளுக்காகவும் போராடினர். மறுபக்கத்தில், தமிழ் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு என்பனவற்றிலும் இக்கட்சிகள் அக்கறை செலுத்தின. அதனால் இந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு வளர்ந்திருந்தது.

இப்படியான ஒரு சூழலில்தான் தமிழரசுக் கட்சி உருவானது. எனவே தமிழ் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி, இடதுசாரிகளுக்கு எதிரான பிரதான அணியாக தன்னை நிலை நிறுத்துவதற்காகத்தான் தமிழரசுக் கட்சி இந்த சோறா சுதந்திரமா என்ற கோசத்தை முன் வைத்ததாக கருதப்படுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

இதை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாத இடதுசாரிகள் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தை ஒரு முற்போக்கான நிகழ்வு என்று கருதி வரவேற்றனர். எப்படி ஏகாதிபத்திய சார்பு தரகு முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த பண்டாரநாயக்க தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய முதலாளித்துவக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவானதோ அதேபோலத்தான் பிற்போக்கு வலதுசாரி தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்த தமிழ் தேசிய முதலாளித்துவ சக்திகளால் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக இடதுசாரிகள் கருதினார்கள்.

ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசின் பிற்போக்கு இனவாதப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதால் இடதுசாரிகளின் கற்பனை கலைந்து போனது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழரசுக் கட்சி எழுப்பிய சோறா சுதந்திரமா கோசம் தமிழ் பொதுமக்களை இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை போன்ற ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. ஏனெனில் தாம் தமிழினத்தின் சுதந்திரத்துக்காகப் போராடுபவர்கள் என்பதும், இடதுசாரிகள் பொருளாதார அபிவிருத்தி என்ற சோற்றுக்காகப் போராடுபவர்கள் என்றும் தமிழரசுக் கட்சி வியாக்கியானம் செய்ததினால் இதில் எதை ஆதரிப்பது என்று குழம்பிப் போனார்கள் தமிழ் மக்கள். ஏனெனில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இரண்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் தமிழன் என்பவன் என்ன அறிவில்லாத, ஆற்றலில்லாத முண்டமா என்ன? எனவே அவன் ஒரு யுக்தியைக் கையாண்டான். அது என்ன யுக்தி?

தனக்கு அத்தியாவசியமான அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கு இடதுசாரிகளையும், தனது இனப் பிரச்சினைகளுக்காக கதைப்பதற்கு தமிழரசு கட்சி எனவும் பாகுபாடு வகுத்துக் கொண்டான். அதனால்தான் 1956இற்குப் பின்னர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளை அனுப்பிய தமிழன், அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் உள்ளுராட்சி சபைகளுக்கு இடதுசாரிகளைத் தெரிவு செய்தான். இந்த நிலைமை இனப் பிரச்சினை கூர்மையடையும் 70கள் வரை தொடர்ந்தது.

1970களில் இனப் பிரச்சினை தீவிரமடைந்து, 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தனித் தமிழீழ தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் இடதுசாரிகள் தமிழ் மக்களிடமிருந்து முற்றாக ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். அதன் பின்னர் தமிழரசுக் கட்சிக்கு சோறா சுதந்திரமா என்ற கோசம் எழுப்ப வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. அன்றிலிருந்து 2019 ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை எல்லாத் தமிழ் தலைமைகளும் சோறா சுதந்திரமா என்ற கோசத்தின் பின் பாதியான ‘சுதந்திரம்’ என்ற சொல்லை மட்டுமே தமது வேத வாக்காகக் கொண்டு செயல்பட்டு வந்தன.

2019 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமல் கோத்தபாய சிங்கள மக்களின் வாக்குப் பலத்தினால் மட்டும் ஜனாதிபதியான பின்னர் இலங்கை அரசியலில் தமிழ் தலைமைகளின் இடம் வெற்றிடமாகிப் போனதுடன், அவர்களின் தலைகளில் மூளை இருந்த இடமும் காலியாகிப் போனது. அதன் பின்னர்தான் தமிழர்களின் பிரதான தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய கோசம் ஒன்றைக் கண்டுபிடித்து கையில் எடுத்துள்ளது.

அந்தப் புதிய கோசம் என்னவென்றால், தமிழ் மக்களுக்கு “சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும்” என்பதாகும். ஆனால், பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தின் ஏனைய இரு கூறுகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் மீண்டும் “சோறா? சுதந்திரமா?” என்ற கோசத்தை பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தீவிரமாக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த இரு பகுதியினரில், “சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும்” என்ற பகுதியினரையா அல்லது “சுதந்திரம் மட்டும் வேண்டும்” என்பவர்களையா தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இன்னும் சில தினங்களில் பொதுத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்

Tags: