குழந்தைகளின் பதற்றத்தைத் தணிப்போம்!

எல்.ரேணுகா தேவி

reduce-the-stress-of-children

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீண்டுகொண்டே செல்கிறது. நோய்த் தொற்றும் குறையவில்லை, ஊரடங்கும் முடியவில்லை. ஊரடங்கால் பெரியவர்களே தடுமாறிப்போயுள்ள நிலையில் குழந்தைகளோ அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் கடிவாளம் கிடையாது என்கிறபோதும் வெளியுலகின் அனுபவங்களே அவற்றை மேலும் வளர்த்தெடுக்கும். அந்த வகையில் இந்த திடீர் முடக்கம், கற்பனையில் சிறகடிக்கும் குழந்தைகளை அதிகமாகவே வதைக்கிறது.

சிறைப்பட்டுள்ள சிறகுகள்

பாடசாலைகள் செயல்படவில்லை. பரபரப்பான ஓட்டமும் பாடசாலை நேர வகுப்புகளும் அதைத் தொடர்ந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் அதிக வீட்டுப்பாடங்களும் இந்தக் காலத்தில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலே. இப்படியான வதைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளச்சிக்கல் முன்பு விவாதப்பொருளாக இருந்தது. ஒன்லைன் வகுப்புகள், தனது வயதொத்த குழந்தைகள் இல்லாமல் நான்கு சுவருக்குள் முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் சிரமங்களை தற்போது விவாதிக்க வேண்டியுள்ளது.

பாடச்சுமையும் பயிற்று முறையும் தேர்வுகளும் குழந்தைகளை அழுத்தியபோதும் அவர்கள் இளைப்பாறுவதற்கான வாய்ப்பைச் சுதந்திரக் காற்றும், ஓடியாடி விளையாடுவதும் நண்பர்களோடு உறவாடுவதும் ஏற்படுத்தித் தந்தது. ஆனால், இந்த ஊரடங்கு காலமோ இவை அனைத்திலிருந்தும் குழந்தைகளை விலக்கிவைத்துள்ளது. இயல்பான ஓட்டத்தைத் தடுத்துள்ள இச்சூழல் அவர்களுக்கு உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை. இந்த கொரோனா காலச்சூழல் குழந்தைகளிடம் மனக்கவலையை ஏற்படுத்தும் என்றும் மன அழுத்தத்தையும் அவை உருவாக்கக்கூடும் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையின் ஆலோசனைகள்

கொரோனா காலத்தில் மனநலன் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தளத்தில் மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசியுள்ளது. குழந்தைகள் மத்தியில் உளரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான கீழ்க்காணும் வழிமுறைகளையும் கூறியுள்ளது.

1. குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுங்கள். நோய்த்தொற்று குறித்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதானமாக, உரிய பதிலைச் சொல்லுங்கள். குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவழியுங்கள். படுக்கைக்குச் செல்லும்போது கதைகளைப் படித்துக்காட்டுங்கள். இது மேலும் உங்களை அவர்களுடன் அன்பிற்குரியவர்களாக்கும்.

2. இக்காலத்தில் குழந்தைகள் சற்று பதற்றமடையக்கூடும். அதன் விளைவாக அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுரீதியான விஷயங்கள் குறித்து அவர்களுடன் பேசுங்கள். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எரிச்சலுடன் பதில் சொல்லாதீர்கள். முன்தீர்மானித்து அவற்றுக்குப் பதில் அளிக்காதீர்கள். உரிய கவனத்தோடு அவர்கள் பேசுவதற்குப் பதில் அளியுங்கள்.

3. இச்சூழலில் குழந்தைகள் எளிதில் சலிப்பாக உணரக்கூடும். அவர்களை வீட்டுக்குள்ளே விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். புதிர் விளையாட்டை விளையாட வையுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யச் சொல்லி நீங்களும் உடன் செய்யுங்கள். வீட்டு வேலைகளைச் செய்யும்போது குழந்தைகளுக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்யும்படி சொல்லலாம்.

4. குழந்தைகள் தங்கள் நண்பர்களிடமிருந்து விலகியிருப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தந்திருக்கக்கூடும். எனவே, அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், விருப்பத்திற்குரியவர்களுடன் பேசுவதை ஊக்குவியுங்கள். ஆன்லைனில் இவர்களுடன் இணைந்து விளையாடும் வகையில் ஏதேனும் நடவடிக்கைகளைச் செய்யலாம்.

5. கட்டுக்கடங்காமல் வரும் கொரோனா குறித்த செய்திகள் அனைத்தையும் குழந்தைகளிடம் கூறவேண்டியதில்லை. அதேநேரம் நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களை அவர்களிடம் சொல்லுங்கள். அது நோய் சம்பந்தமான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தும். படங்கள், ஓவியங்கள் மூலமாகவும் விளக்கலாம்.

6. பாடசாலைகள் மூடியிருப்பதால் அவர்களின் படிப்பு தடைப்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் படிப்பதில் செலவழிப்பதை உத்தரவாதப்படுத்துங்கள். அவர்களின் படிப்பு, பாடம் சார்ந்த சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்து அவர்கள் சரியாக அதைச் செய்கிறார்களா என்று பாருங்கள். குழந்தைகள் படிக்கும்போது கூடவே நீங்களும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படியுங்கள். அப்போது செல்போனில் கவனம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

இதைத்தவிர சோப்பு போட்டு அவ்வப்போது கை கழுவதல், சுகாதாரமான நடைமுறையைக் கடைப்பிடித்தல் என்பன போன்ற கொரோனா தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் என்கிறது அறிக்கை.

உண்மையில் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் இந்தக் கொரோனா காலத்திற்கானது மட்டுமல்ல. அதைக் குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதியாகவே பெற்றோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியான காலத்தில் குழந்தைகளிடம் நாம் செலவு செய்யும் நேரம் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் தரும். இதனால், கிடைக்கப்பெறும் ஆசுவாசம்தான் நமது அடுத்தகட்ட செயல்களுக்கான வேகத்தை வழங்கும்.

-இந்து தமிழ்
2020.07.14

Tags: