பெருந்தொற்று மட்டுமல்ல பருவநிலை நெருக்கடியும் பேசப்பட வேண்டும்

ஹாஸன் நூர் (Hassan Noor)
-நியால் ஓ’கானர் (Niall O’Connor)

Environmental activist Licypriya Kangujam, eight years old, holds a sign at Juhu beach during a cleaning drive in Mumbai, India, February 21, 2020 [AP Photo/Rajanish Kakade]

ருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தென் கொரியா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள் மீது குழந்தைகள் வழக்கு தொடரத் தொடங்கியிருக்கும் தருணம் இது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டியது அவசியம்.

வலுவிழக்கும் உரிமைகள்

கடுமையான வானிலை பாதிப்புகளால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு, பருவநிலை தொடர்பான நெருக்கடி மேலும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையினர்தான் இதனால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்பதால், இது குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நெருக்கடியும்கூட. குழந்தைகளின் உயிர்வாழும் உரிமை பாதுகாக்கப்படும் என்று குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐநா மாநாடு உறுதியளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் அபாயங்களை அது தெளிவாகக் குறிப்பிடுகிறது – புவி வெப்பமயமாதல் எனும் அபாயம் உட்பட.

ஆனால், ஏற்கெனவே பேரழிவுக்குள்ளாகும் அபாயத்தில் இருக்கின்ற, கரியமில வாயு உமிழும் மிகப் பெரிய மூன்று நாடுகளைக் கொண்ட, மிகவும் மாசடைந்த 100 நகரங்களில் 99 நகரங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் இதுபோன்ற உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.

எந்த ஒரு நிலக்கரிச் சுரங்கம் புதிதாகத் திறக்கப்படும்போதும், எந்த ஒரு ஏக்கர் வனப் பரப்பு எரிக்கப்படும்போதும், தூய்மையான, ஒரு பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தூய்மை, பசுமை அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் எந்த ஒரு வாய்ப்பை நாம் தவறவிடும்போதும் இந்த உரிமைகள் பின்னடைவைச் சந்திக்கின்றன.

திசைமாறிய விவாதக் களம்

நமது இயற்கை வளங்களை அதீதமாகப் பயன்படுத்துவதன் விளைவுகளை மட்டுப்படுத்த உதவும் நடவடிக்கைகளை எடுக்கும் தார்மீகப் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. ஆனால், அப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் சட்டபூர்வக் கடமைகளும் அரசுகளுக்கு உண்டு எனும் கருத்து தற்போது வளர்ந்து வருகிறது. நமது குழந்தைகளும் தங்கள் குரலை உரத்து ஒலிக்கச் செய்து வருகின்றனர். எனினும், கோவிட்- 19 பெருந்தொற்றுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது.

கடந்த வருடம் பருவநிலை நெருக்கடி தொடர்பாகக் குழந்தைகளும் இளைஞர்களும் உருவாக்கிய அதிர்வுகள் மீதான கவனத்தை, உலகளாவிய பெருந்தொற்று மடைமாற்றி மவுனிக்கச் செய்துவிட்டது. பருவநிலை மீது அக்கறை கொண்ட இளம் செயற்பாட்டாளர்கள் பலர் இவ்விஷயத்தில் தொடர்ந்து இயங்கவே செய்கிறார்கள். எனினும், 2019-ல் பருவநிலை தொடர்பாகப் படிப்படியாக அதிகரித்துவந்த இணைய உரையாடல்கள், 2020-ல் கோவிட்-19 பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கணிசமாகக் குறைந்துவிட்டன.

பருவநிலை தொடர்பாக, 2019 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் உலகளாவிய அளவில் நடந்த இணைய விவாதங்கள், 2020-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் 70 சதவீதம் குறைந்திருக்கின்றன. அரசியல் திட்டம் எனும் அளவில் பருவநிலை நெருக்கடி தொடர்பான விவாதங்களை, ‘கோவிட்-19’ தொடர்பான விவாதங்கள் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன என்பது உண்மைதான். அதேசமயம், பருவநிலை தொடர்பான பிரச்சினை தீவிரமானது அல்ல என்று அர்த்தமில்லை.

Protesters dressed as the earth and President Donald Trump pretend to fight during a climate march [File: Reuters]

எப்படிப் பார்த்தாலும், இந்தப் பிரச்சினை கோவிட்-19 பிரச்சினையைவிடவும் மனித இனத்துக்கு பல மடங்கு ஆபத்தானது. இன்னும் சொல்லப்போனால் இதற்குத் தீர்வு காண தடுப்பூசிகளும் இல்லை.

குழந்தைகள், இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது எனும் சூழலில், அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும். பருவநிலை நெருக்கடிகளை அரசுகள் எதிர்கொள்ளும்போது துணிச்சலுடனான லட்சியங்களுடன் அவர்களின் தேவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அப்படியான நடவடிக்கைகள் குறைவு.

ஆசிய – பசிபிக் நாடுகளின் கடமை

ஆசிய – பசிபிக் நாடுகளின் அரசுகள்தான் இந்தப் பணிகளில் முன்னிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், பருவநிலை நெருக்கடியால் மனிதர்கள் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ளும் சூழல் அதிகம் நிலவுவது இந்தப் பிராந்தியத்தில்தான். இங்குதான் உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் வசிக்கிறார்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஏழைகள் வசிப்பதும் இங்குதான். ஆசியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிப்பேர், தாழ்வான கடற்கரைப் பகுதிகளிலும், வெள்ள அபாயம் மிக்க பகுதிகளிலும்தான் வசிக்கிறார்கள். கடல் மட்டம் உயரும் அபாயத்தையும், வெள்ள அபாயத்தையும் அவர்கள் அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டில் இரண்டு மிகக் கடுமையான புயல்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து சந்தித்திருக்கிறது தெற்காசியா. பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பருவ மழைகளில் ஒன்றை அது எதிர்கொள்கிறது. ஃபிஜி, சாலமன் தீவுகள், வனுவாட்டு போன்ற பசிபிக் தீவு நாடுகள் ஒரு மீட்டர் உயரத்துக்குக் கடல் மட்டம் உயர்ந்தாலே முற்றிலும் அழிந்துவிடும் எனும் அபாய நிலையில் இருக்கின்றன. சீனாவின் கடற்கரைப் பகுதிகளில், ஒரு மீட்டருக்குக் கடல் மட்டம் உயரக்கூடும் எனும் அபாயச் சூழலில் 2.3 கோடி மக்கள் இருக்கிறார்கள். கிழக்கு ஆசியா முழுவதும் அத்தகைய அபாயத்தில் 4 கோடி பேர் இருக்கிறார்கள்.

பெருந்தொற்றுகளின் பின்னணி

இயற்கையின் அழிவானது பெருந்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காடுகளை அழிப்பது, சட்டவிரோத வன உயிர் வர்த்தகம், நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, நிறுவன அளவிலான மாமிச வணிகம் என மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாகவே விலங்குகள் மூலம் பரவும் வைரஸ் பெருந்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களின் இத்தகைய செயல்கள் இயற்கை உலகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் கட்டாயத்துக்கு விலங்குகளையும் பூச்சிகளையும் தள்ளுகின்றன.

People and Power - Trump v California part 2

இயற்கை வளங்களை மனித இனம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாகவும், துஷ்பிரயோகம் செய்வதாகவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இளம் செயற்பாட்டாளர்களும் விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறார்கள். அந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதற்கான விலையை இன்றைக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உங்கள் குரலுக்குச் செவிமடுக்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்லவே நாம் விரும்புகிறோம். அதனால்தான், சுற்றுச்சூழல் தொடர்பான தங்கள் குரல்கள் உரத்து ஒலிக்கும் வகையில் ஆசியா- பசிபிக் பிராந்தியம் முழுவதும் இளைஞர்கள் முன்னெடுக்கும் புதிய பிரச்சாரத்துக்கு ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனமும், சேவ் தி சில்ட்ரன் அமைப்பும் அதரவு தெரிவித்திருக்கின்றன.

பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், அனைத்துச் சமூகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட சரியான தொழில்நுட்ப நடவடிக்கைகளை அமல்படுத்துவது அவசியம்தான். ஆனால், அதிகாரமளித்தல் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றில்தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, நிலையான மாற்றங்களை ஏற்படுத்த விழையும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டும். ஆம், நாம் சிறந்த வகையில் மீள்கட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம். ஆனால், நிலைத்திருக்கும் வகையில் அதைச் செய்வதற்கு, சமூக நீதியையும், பாலினச் சமத்துவத்தையும் முன்னணியிலும், மையமாகவும் வைத்திருப்பது அவசியம்.

நம்பிக்கை அளிப்பது அவசியம்

இலங்கையைச் சேர்ந்த 17 வயது கவிதி  (Kaviti) இந்தப் பிரச்சினையை உணர்ந்திருக்கிறார். “எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நுரையீரல்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. வெப்பம் காரணமாக என் உடலில் தடிப்புகள் ஏற்படுகின்றன” என்று சொல்லும் அவர், “பிளாஸ்டிக் பொருட்களால் கடல் நிரம்பியிருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெரியவர்கள் தேவையான உழைப்பைச் செலுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களையும், குப்பைகளையும் நகரமெங்கும் வீசுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகமெங்கும் கவிதி போன்ற கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்!

நன்றி: அல் ஜஸீரா (Al Jazeera)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

மூலக்கட்டுரை: The climate crisis: Our children warned us, but we did not listen

Tags: