ஜானகி அம்மாள்

தாவரவியல் நிபுணரும் மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் (Janaki Ammal) பிறந்த தினம் இன்று (1897 ஆம் ஆண்டு நவம்பர் 4ந் திகதி பிறந்தார்).

த்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் விஞ்ஞானி; இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர்; அமெரிக்காவில் தாவரவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்

`பிறக்கும்போதே கிழவியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று அடிக்கடி நான் எண்ணுவ துண்டு. அப்படி இருந்தால், எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ – பத்தொன்பதே வயதான அந்தப் பெண் தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வாசகங்கள் இவை. இதே பெண், தாய்நாட்டை நீங்கி, பத்து வருடங்கள் அந்நிய தேசத்தில் அகதி போல வாழ்ந்த கதை தெரியுமா?

இடவேலத் கக்கத் கிருஷ்ணன் ஜானகி அம்மாள் (Edavalath Kakkat Krishnan Ammal) கேரள மாநிலம் தெல்லிச்சேரியில் 1897-ம் ஆண்டு பிறந்த இவர், படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். ஹானிங்டன் என்ற ஆங்கிலேயருக்கும், குஞ்சு குரும்பி என்ற மலையாளப் பெண்ணுக்கும் பிறந்த ஈ.கே.கிருஷ்ணனின் மகளான ஜானகி, ஐரோப்பியர் போல உயரமும் இந்தியர் போன்ற தோற்றமும் கொண்டவர். சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படித்த ஜானகி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் மேற்படிப்புக்கு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம்  (University of Michigan) சென்றார். 1931-ம் ஆண்டு அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார். படிக்கும் காலத்திலேயே, சைட்டோஜெனெடிக்ஸ் (Cytogenetics) எனப்படும் மரபணு ஆய்வில் அதிக ஆர்வம்கொண்டிருந்த ஜானகி, `ஜானகி பிரிஞ்சால்’ எனப்படும் புதிய வகைக் கத்திரியை உருவாக்கினார்.

இந்தியா திரும்பும் வழியில் லண்டனுக்கு அருகிலுள்ள ஜான் இன்னஸ் ஆய்வு நிறுவனத்தில் ஓராண்டு தங்கி ஆய்வு செய்தார். இங்குதான் ஆசிரியர் சிரில் டீன் டார்லிங்டனைச் சந்தித்தார். இருவருக்குள்ளும் காதல் தீ மூண்டது. ஆனால், கைகூடாத காதல் அது.

நாடு திரும்பிய ஜானகி, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபின், தன் முதல் காதலான சைட்டோஜெனெடிக்ஸ் ஆய்வுக்குத் திரும்பினார்.

1934-ல் கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்க மையத்தில் சேர்ந்தார். இந்திய வகைக் கரும்பை பப்புவா நியூ கினியா நாட்டு வகைக் கரும்புடன் கலப்பு செய்து, அதிக இனிப்புத் தன்மை கொண்ட புதிய ஹைபிரிட் கரும்பு வகையை உருவாக்கத் துணைபுரிந்தார் ஜானகி.

கோ-கேன் என்று பெயரிடப்பட்ட அந்தக் கரும்பு உற்பத்தி சில ஆண்டுகளில் இரட்டிப்பானதால், இந்தியா கரும்பு இறக்குமதியைக் குறைக்கத் தொடங்கியது.

ஜானகியம்மாளுக்கோ, பிரச்னைகள் கூடிக்கொண்டே போயின. ஆண்களால் சூழப்பட்டிருந்த அந்த மையத்தில் ஒரே பெண் ஜானகி. அதோடு, சாதிய ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டார். இந்தக் கடினமான காலகட்டத்தில் டார்லிங்டனுக்குக் கடிதம் எழுதினார். `ஆணாதிக்கமும் சாதியப் புறக்கணிப்பும் மூச்சுமுட்ட வைக்கிறது’ என்று எழுதினார்.

1940-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் உதாசீனம் செய்து இங்கிலாந்து பயணமானார் ஜானகி. அவருடன் துணை சென்றவர் ஒரு சிறு அணில் பிள்ளை. புடவை மடிப்புகளில் ஓர் அணில் பிள்ளையை இங்கிருந்து கொண்டுசென்ற ஜானகி அதற்கு ‘கபோக்’ என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தார். இரவில் தலைக்கு மேல் பறந்து சென்று குண்டு வீசும் போர் விமானங்களின் சத்தத்துக்கு பயந்து, கட்டிலின் அடியில் தூக்கம். காலை எழுந்ததும், உடைந்த கண்ணாடித்துண்டுகளைப் பெருக்கித்தள்ளிவிட்டு அலுவலக வேலை என்று ஓர் இயந்திரம் போல உழைக்கத் தொடங்கினார் ஜானகி. தன் வழிகாட்டியான டார்லிங்டனுடன் இணைந்து `குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டிவேட்டட் ப்ளான்ட்ஸ்’ (Chromosome Atlas of Cultivated Plants) என்ற நூலையும் எழுதினார்.

தோட்டக்கலையின் மீதுள்ள ஈர்ப்பால் லண்டனுக்கு அருகிலுள்ள விசுலே பார்க்கில் மரபியல் வல்லுநராகச் சேர்ந்தார். மக்னோலியா (Magnolia) பூக்கள்மீது பெரும் காதல்கொண்டார். பணியிடத்தில் புதுவிதமான மக்னோலியா ஒன்றை ‘பாலிப்ளாய்டு’ ஆய்வு மூலம் உருவாக்கினார். மக்னோலியா  கோபஸ் ஜானகியம்மாள் எனப் பெயரிடப்பட்ட அந்த மலர்கள், இன்றும் விசுலே பார்க்கில், அவர் நட்டுவைத்த மரங்களில் பூத்துக் குலுங்குகின்றன. ஒரு தாவரத்தின் பெயராக இந்தியப் பெண் ஒருவரது பெயர் அமைந்தது இதுவே முதன்முறை. இத்தனை சாதனைகளையும் போருக்கு மத்தியில், சரியான உணவுகூட இன்றி நிகழ்த்தினார். வாரம் ஒரு முட்டை, சில அவுன்சுகள் சர்க்கரை மற்றும் மாவு, இப்படி ரேஷனில் ஓடியது வாழ்க்கை.

1950-ல் விமானப் பயணம் ஒன்றில் இந்தியப் பிரதமர் நேருவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை விளக்கிய  நேருவின் அழைப்பை ஒருவழியாக ஏற்றுக்கொண்டார் ஜானகியம்மாள். 1951-ல் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவின் சவுரிங்கீ லேனில் இழுத்துச் செருகிய புடவையுடன் காலை நேரங்களில் தெருவைப் பெருக்கிய ஜானகியைப் பிரியமுடன் நினைவுகூர்கிறார்கள் அந்த நகரத்தின் முதியவர்கள். பணியின் மீது அத்தனை காதல். ஒட்டுமொத்தமாக பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவைப் புனரமைத்தார் ஜானகி. மண்டலங்கள், பிரிவுகள் என நிர்வாகத்துக்கு ஏற்றாற்போல மாற்றியமைத்தார். அதன் நிர்வாகப் பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். அறிவியல் மையம் ஒன்றின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த முதல் பெண்ணாகவும் ஆனார் ஜானகி.

ஜம்முவில் உள்ள 25 ஆயிரம் மூலிகைகள் அடங்கிய பூங்காவுக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது அரசு. இறுதி வரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த ஜானகி, சென்னை மதுரவாயலில் உள்ள மதராஸ் பல்கலைக்கழகத்தின் கள ஆய்வு மையத்தில் தன் இறுதி மூச்சு வரை மரபியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 1977-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது அரசு. எத்தனையோ சோதனைகளைத் தாண்டி, சாதித்த இந்தச் சாதனைப்பெண் 1984-ம் ஆண்டு மரணமடைந்தார். இனி ஒவ்வொரு முறை நாம் சுவைக்கும் இனிப்பின் தித்திப்பை உணரும்போதும், நமக்குள் நிச்சயம் தோன்ற வேண்டிய பெயர் – ஜானகி!

Tags: