விடாது குளவி
–கவிதா சுப்ரமணியம்
ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்…
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்…
– ஆதவன் தீட்சண்யா
தமிழக எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகளே இவை. ஆனால் இந்த வரிகள், தமிழகத்துக்கு மாத்திரமல்லாது, இலங்கையிலுள்ள தேயிலை மலைக்கும் நன்றாகப் பொருந்தும். ஒரு சிலருக்கு, அதிகாலை எழுந்தவுடன், சுடச் சுட ஒரு கப் தேநீர் பருகினால்தான், அன்றைய பொழுது நன்றாக விடியும். ஆனால், நாம் பருகும் அந்தச் சூடான தேநீருக்குப் பின்னால், தன்னலமற்ற பலரின் உழைப்பும் சுரண்டலும் புதைந்து கிடக்கிறது என்பதை, நம்மில் பலர் எத்தனை முறை சிந்தித்து பார்த்துள்ளோம்.
மலையகம் என்றாலே, அது ஒரு சுற்றுலாத்தலம் என்றாகிவிட்டது. மலைக் குன்றுகளுக்கு மத்தியில் செல்லும்போது, பச்சைப்பசேல் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியாகத்தான் இருக்கும். ஆனால், அந்தக் குளிர்ச்சிக்குள் இருக்கும் ஒவ்வொரு தொழிலாளியின் அடி மடியிலும், ஒவ்வோர் இரகசியங்களும் அடிமைக் கதைகளும் புதைந்துள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1815களில், 10 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், இந்தியாவில் இருந்து இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற அழைத்து வரப்பட்டமை தொடங்கி, இப்போது அந்த அடிமைத்தனத்தால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்று, இந்த நூற்றுக்கணக்கான வருடங்களும், தலைமுறை தலைமுறைகளாகப் போராட்டங்களுடனேயே வாழ்ந்து வரும் மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வரலாற்றை, எப்போதும் மறைத்துவிட முடியாது.
மலையகத்திலுள்ள தேயிலை மலைகளில், பல விடயங்கள் சரியானதாக நடைபெறவில்லை. லயன் வீடு, காணிப் பிரச்சினை, கல்வி, சுகாதாரம், சம்பளம் என, ஏற்கெனவே பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் இருக்கும் போது, குளவித்தாக்குதல் பிரச்சினை இப்போது தலைவிரித்தாடி வருகின்றது. ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், குளவித் தாக்குதல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 800க்கும் மேற்பட்டவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர்.
எபோஸ்லி, டயகம, அக்கரபத்தனை, பொகவந்தலாவ, தலவாக்கலை ஆகிய பகுதிகளிலேயே, குளவித் தாக்குதல் பிரச்சினை அதிகளவில் காணப்படுகின்றது.
குளவிகள் அல்லது அதன் இனம் அழிந்து வருவதற்கு, இதற்கு முன்னர் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், இப்போது, காடழிப்பு, காடுகளுக்குத் தீ வைத்தல் மூலம் குளவிகளின் வாழ்விடங்கள் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், வாழ்விடங்களைத் தேடி, குடியிருப்புப் பிரதேசங்களில் தங்களது கூடுகளைக் குளவிகள் அமைத்துக்கொள்வதாகவும், சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவ்வாறு குடியிருப்புப் பிரதேசத்துக்குள் தங்களது வாழ்விடங்களை அமைத்துக்கொள்ளும் குளவிகளை முற்றாக அழித்தொழித்துவிடவும் முடியாது. ஏனெனில், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில், குளவிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
குளவித்தாக்குதல் பிரச்சினைகளில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு, சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இதுவரையில் அரசாங்கத் தரப்பில் எந்தவொரு வேலைத்திட்டமும் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறலாம். இந்நிலையில், இந்தக் குளவிக்கொட்டுப் பிரச்சினையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு, நிலையான அபிவிருத்தி வலையமைப்பின் இணை நிறுவுனர்களான எஸ்.கிங்ஸ்லி கோமஸ், சந்திரலேக்கா கிங்ஸ்லி ஆகியோரால், பாதுகாப்பு அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
பெண் தலைமைத்துவக் குடும்பம், பாலியல் தொழிலாளர்கள், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் அரசாங்க ஊழியர்கள் அடங்கிய ஒரு குழுவாகவே, இக்குழு செயற்பட்டு வருகின்றது. இந்தச் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே, இந்தப் பாதுகாப்பு அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தொழிலாளியின் தலையில் அதிகளவான குளவிகள் கொட்டுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே, அந்தத் தொழிலாளி உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இதிலிருந்து ஒரு தோட்டத் தொழிலாளியை பாதுகாக்கவும் கொழுந்துக் கூடையின் பாரத்தைத் தலையில் தாங்கிக்கொள்வதற்காகவும், இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அங்கியில், தொப்பியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கியைத் தயாரிப்பதற்கு, 1,500 ரூபாய் மாத்திரமே செலவானது என்றும், அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒரு பெண், 18 கிலோகிராமுக்கும் அதிகளவான பாரத்தைத் தன் தலையில் சுமப்பதால், வாழ்நாளில் நீண்ட பிரச்சினையை எதிர்நோக்குகிறார். இந்த எடையுடன், மலைக்குன்றுகளில் ஏறி இறங்கும்போது, அது தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும் என்பதை நம்மில் பலரும் அறிந்து வைத்திருப்பதில்லை.
கொழுந்து பறிக்க மலைக்குச் செல்லும் பெண்கள், இறப்பர் சீட் என்று கூறப்படும் ஒருவகை பொலித்தீனையே இடுப்பில் கட்டி, ஒரு கயிறு மூலம் அதை இறுகக் கட்டிக்கொள்வர். இதனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு, வயிறு, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது அதிகமாகி வருகின்றது.
இந்நிலையில், குளவிக்கொடுக்கு, கூடை, கயிறு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், சப்பாத்துகள் இல்லாமல், 90 சதவீதமான பாதுகாப்பைத் தரும் வகையிலேயே, இந்த அங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள், தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கேற்ப சில மாற்றங்களும் செய்யப்பட்டு வருவதாகவும், கிங்ஸ்லி கோமஸ் தெரிவித்திருந்தார்.
இந்த ஆடையை, வனஜீவராசிகள் திணைக்களம், 100 சதவீத பாதுகாப்பு ஆடையாக ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் அடிக்கடி இடம்பெற்று வரும் காடழிப்பு, காட்டுக்கு தீ வைத்தல் போன்ற செயற்பாடுகளும் இந்தக் குளவிகள் பிரச்சினைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. குளவிகள், மிகவும் அமைதியான இடங்களிலேயே தங்களது கூடுகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றன. இந்நிலையில், காடுகள் அழிக்கப்பட்டு, தோட்டங்களில் உள்ள மரங்களும் வெட்டப்படுவதால், தேயிலைச் செடிகளுக்குக் கீழ், குளவிகள் கூடு கட்டி வருகின்றன. எனினும், கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள், தேயிலைச் செடிக்கு அடியில் இருக்கும் கூடுகளை அவதானிப்பதில்லை. அதுமாத்திரமல்லாது, மிகவும் உயரமான மரங்களில் இருக்கும் குளவிக்கூடுகளை, கழுகுகள் அடித்துச் செல்வதும் தற்போது அதிகரித்து வருகின்றன. கழுகு பறந்து சென்றுவிட்டாலும், தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களே, குளவிகளின் கோபத்துக்கு ஆளாகின்றனர்.
தொழிலாளி ஒருவர் குளவிக்கொட்டுக்கு இலக்கானவுடன், தோட்ட மருத்துவ அதிகாரியிடமே முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தோட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு, தடுப்பூசிகள் போடும் அனுமதி இல்லை என்பதால், நகரத்திலுள்ள வைத்தியசாலையொன்றுக்கே பாதிக்கப்பட்டோர் அழைத்துச் செல்லப்படல் வேண்டும். இதனாலேயே, தோட்ட மருத்துவ நிலையங்கள் அனைத்தும் மாகாண அல்லது அரசாங்க வைத்தியசாலைகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குளவிக்கொட்டு தொடர்பான சிகிச்சைகள் பற்றி கருத்துத் தெரிவித்த டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி டொக்டர் ஜே.அருள் குமரன், “குளவிக் கொட்டுக்கு இலக்காகும் ஒரு தொழிலாளிக்கு, உடனடியாக I.V Hydrocortisone, I.V Chlorpheniramine, I.V Adrenaline போன்ற மருந்துகள் வழங்கப்படல் வேண்டும். உடலில் ஏற்படும் குறைந்த அழுத்தம், மூச்சுத்திணறல், அதிகளவு விஷம் உடலில் ஏறுதல் என்பனவே, சாதாரணமாகக் குளவிக்கொட்டுக்கு இழக்கான ஒருவர் உயிரிழப்பதற்குக் காரணமாகின்றது. அத்துடன், சில தோட்டங்களில், முதலுதவிக்கான வசதிகளின்மையும் பாதிப்புகள் அதிகமாவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. 1990 அம்பியூலன்ஸ் சேவை சிறப்பாகச் செயலாற்றி வந்தாலும், மலையகத்திலுள்ள வீதிப் பிரச்சினைகள் காரணமாக, சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னரே, பாதிக்கப்பட்ட தொழிலாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடியதாக உள்ளது. இந்த மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், உடலில் குத்தியிருக்கும் குளவிகளின் கொடுக்குகள் அகற்றப்பட்டு சில மணி நேரத்துக்குப் பின்னரே, உடலில் ஏற்பட்ட வீக்கம் தணியும். எனவே, குளவிக்கொட்டுப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்கும் அதேநேரம், அனைத்துத் தோட்ட மருத்துவ நிலையங்களையும், ஒவ்வோர் அரசாங்க வைத்தியசாலைகளுக்குக் கீழ் கொண்டு வருவதன் மூலம், உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, குளவிக்கொட்டால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, காப்புறுதிகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவருகின்றது. சமீபத்தில், அலிமா காசீம் எனும் 55 வயதுடைய பெண்ணொருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இவரின் கணவர், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, புல்லுக்கட்டு சரிந்து உயிரிழந்திருந்த நிலையில், அவருடைய மரணச் சான்றிதழல் தொலைந்துபோனமையால், இவருக்கான காப்புறுதி, அவரின் மகனுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், குளவிக்கொட்டு எனும் ஒரு சம்பவத்தின் கீழ், தொழிலாளிகளின் ஆடை, அவர்களுக்கான மருந்து, சிகிச்சை போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்போது, காப்புறுதிகள்கூட தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படாத பட்சத்தில், இது குறித்து சந்தாப் பணம் அறவிடும் தொழிற்சங்கங்களாவது கவனத்திற்கொள்வது மிக முக்கியமானதாகும். குளவிகள் தொடர்பாக நெஷனல் ஜோக்ரப்பி எனும் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, குளவி, தேனீ போன்ற பூச்சியினங்கள், 30,000 அடையாளம் காணப்பட்டிருந்தன. இவை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தனித்தனியாகப் பிரிந்து செல்லும் இனங்கள் இல்லாமல், ஒரு சமூகமாகப் பிரிந்து செல்லும் இனமே மிகவும் கோபத்துடன், மனித இனத்துக்கு அச்சுறுத்தலாகவும் வாழ்ந்து வருபவை ஆகும். எனவே, அவற்றைக் கோபப்படுத்தாமல் மனித நடவடிக்கை இருப்பதே மிகவும் சிறப்பானது என, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக்கொட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக, ஒவ்வொரு தோட்டங்களிலும் குழுக்களை அமைத்து, தோட்டத் தொழிலாளர்கள் மலைக்குச் செல்லும் முன்னர், குளவிக்கூடுகள் இருந்தால் அவற்றை அகற்றும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு சந்தா செலுத்தும் தொழிலாளர்களுக்கு, சந்தா பணத்தினூடாகக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அண்மையில் தெரிவித்திருந்தார்.
தொழிலாளர்கள் தொழில் நேரத்தில் எதிர்கொள்ளும் விபத்துகளின்போது, இந்தக் காப்புறுதித் திட்டம் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் இது ஒரு முன்னகர்வுத் திட்டம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம், குளவிக் கொட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவது மிக முக்கியம்.
இது தவிர்ந்த, நடைமுறைச் சாத்தியமான பல திட்டங்களை, குளவிக்கொட்டுப் பிரச்சினைக்கான முன்வைக்க வேண்டியது, பொறுப்பு வாய்ந்தவரகளின் கடமையாகும்.
-தமிழ்மிரர்
2020.09.04