சமூக வலைதளங்களுக்குத் தணிக்கை தேவையா?
–குடந்தை ராஜா
செல்போனைக் கையில் வைத்திருப்போர் எல்லோரும் தம்மைச் செய்தியாளராகவே பாவித்துக்கொள்ளும் பாங்கு களமாடிவந்தது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக கண்களில் படும் சுவாரஸ்யக் காட்சிகளை மொபைலில் பதிவு செய்வதும் அவற்றை முகநூல்களிலும் வாட்ஸ் அப் எனும் பகிரிகளிலும் பதிவேற்றம் செய்வதையும் பலர் வழக்கமாக்கிக் கொண்டனர். இவற்றுக்குக் கிடைத்து வரும் லைக் செய்வோரின் எண்ணிக்கை பெருக்கத்தால் தனியே யூடியூப் சேனல் என்றவாறு நிகழ் யுக உச்சம் திகழ்கிறது. இவற்றில் பலர் நற்பேறு தங்களைத் தொலைக்காட்சிச் செய்தியாளராகவே அனுமானித்துக் கொள்கின்றனர். எந்தப் பணியாயினும் அதற்கெனச் சில நெறிமுறைகள் இருக்கும். நெறியிலா நிலைப்பாடுகள் வெறிமிகு செயல்பாடுகளுக்கு இட்டுச் சென்றுவிடும். இதுதான் இப்போது யூடியூப் சேனல்களில் தெறிக்கிறது.
வீட்டில் இருந்த படியே ஒரு நல்ல கேமராவுடன் பொருந்திய செல்போன் உள்ளதா? ஏதோ ஒரு மொழியில் சரளமாகப் பேசமுடியுமா? உலக விஷயங்களில் ஓரளவுக்குத் தெளிவான அறிவு இருக்கிறதா? நீங்களும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம். மாதந்தோறும் லட்சங்களில் பணம் சம்பாதிக்கலாம். கண்டபடி கேமரா முன் பேசலாம், தப்பும் தவறுமாக ஏசலாம். வேண்டுமென்றே பிரபலங்களை வம்புக்கு இழுத்து யூடியூப் ஹீரோ (அல்லது ஹீரோயின்) ஆகலாம், அப்படி ஆனவர்கள் கூட இருக்கிறார்கள்.
சமீபத்ததில் ஒரு டெல்லிவாசி இந்தியில் கண்ட, கேட்ட வார்த்தைகளை மிகவும் வேகமாகவும் சரளமாகவும் பேசியே யூடியூப் ஹீரோவாக ஆனார். அவர் என்ன படித்திருக்கிறார் என்பது முக்கியமில்லை. 21 வயதே நிரம்பிய அவரின் மாத யூடியூப் வருமானம் ₹ 4 லட்சம் என்கிறார்கள், அதுதான் முக்கியம். நல்ல வேளை, தமிழில் அது போன்று இல்லை (அல்லது எனக்குத் தெரிந்து இல்லை!) அவ்வளவு கொச்சையான வார்த்தைகள், பச்சையான வசனங்கள்…. சிரிப்பு, விமர்சனம் என்கிற போர்வையில்!
இவ்வாறெல்லாம் ஏன் நடக்கின்றன? சமூக வலைதளங்களுக்கெனத் தனித் தணிக்கை முறை கிடையாது. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம், அதிலும் குறிப்பாக யூடியூபில் சாதாரண சேவையைத் தவிர, பிரீமியம் போன்ற விளம்பரமில்லா சேவைகள் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவை எவற்றிலும் கட்டுப்பாடு என்பது ஒருவித சுய கட்டுப்பாடு மட்டுமே. வேறு ஒருவர் அல்லது பலர் புகார் தெரிவித்தால் அதனால் வரக்கூடிய கட்டுப்பாடும்தான். தணிக்கை என்ற, பிரசுரிக்கும் முன் சான்றிதழ் பெறுதல் என்ற முறை ஏதும் இல்லை.
சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 500 மணி நேரத்துக்கான யூடியூப் உள்ளடக்கங்கள் (பதிவுகள்) பதிவேற்றம் செய்யப் படுகின்றன. உலக இண்டர்நெட் ஜனத்தொகையில் சுமார் 45% மக்கள் யூடியூப் உபயோகிக்கிறார்கள். முகநூலுக்கு அடுத்தபடி இரண்டாவது இண்டர்நெட் சமூக வலைதளம் யூடியூப். (https://www.businessofapps.com/data/youtube-statistics/) இவ்வளவு பெருஞ்செயலியை…உலக அளவில் உள்ள பிரம்மாண்டத்தை நாம் எவ்வாறு கட்டுப்படுத்த இயலும்?
“சீனாவும் பல அரபு நாடுகளும் செய்கின்றனவே! எனவே நம்மால் முடியாதா?” என்று நாம் யோசிக்க முடியாது. நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இது மிகவும் சிக்கலான செயல்.
யூடியூப் பயனாளிகள் உலகெங்கிலும் நுறு கோடிக்கு மேல் உள்ளனர் என்று விக்கிபீடியா கூறுகிறது. சீனா போன்ற நாடுகளில் இவர்கள் இல்லை என்பதையும் மீறி இந்த எண்ணிக்கை. இதில் பணம் பண்ணுவது யார் என்று பார்த்தோமெனில் அவ்வளவு பேருமே தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அல்லது காட்சிகளால் சம்பாதித்தவர்கள் என்று கூறி விட முடியாது. நல்ல தரமான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றை விட வேண்டத்தகாத, தடை செய்யத் தக்கக் கருத்துகள்தான் அதிகம். இளைஞர்களும் இளைஞிகளும் இதில் கவரப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. எவ்வளவோ வசவுச் சொற்கள் உள்ள வலைதளங்கள் பொய்த் தகவல்களை மற்றும் விரும்பத்தகாத பதிவுகள் அடங்கிய தளங்கள்தான் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் நோக்கர்களைக் கவர்கின்றன. சராசரி வயது முப்பதுக்குக் கீழ் உள்ள இந்தியா போன்ற நாட்டில் ( குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளோடும், உலக சராசாரியுடனும் ஒப்பிடுகையில்) இது போன்ற ஒரு பாதிப்பை நாம் கவனத்துடன் அணுக வேண்டும்.
சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றம் ஒரு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மத்திய அரசுக்கு, மூன்று வாரத்துக்குள் தன் கருத்தைப் பதிவு செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த வழக்கின் சில பொதிவுகள் இதோ:
யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பல தரப்பட்ட படங்கள், பேச்சுகள், கருத்துகள் வருகின்றன. இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு எந்தத் தணிக்கையும் இல்லை. இவற்றில் ஆபாசமான, அருவருக்கத்தக்கவை மட்டுமின்றி, பொது நலனுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய தரவுகள் தெறிக்கின்றன. தேச விரோத எண்ணங்களைப் பரப்புகின்ற கருத்துகள் கூட எந்தத் தயக்கமுமின்றி வருகின்றன. இவற்றைப் பார்த்துப் பலரும், குறிப்பாக இளைஞர்கள் வழிதவறிப் போவார்கள் என்றும் கூட இந்த வழக்கில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அரசாங்கம் மூலமாகச் சமூக வலைதளங்களுக்கும் தணிக்கை போன்ற ஒரு கட்டுப்பாடு அவசியம் என்று வேண்டுகோள் எழுப்பப்பட்டிருக்கிறது.
திரைப்படங்களுக்குத் தணிக்கை இருப்பது போல, சமூக வலைதளங்களுக்கும் தணிக்கை தேவையா? ஆம் எனில், அது தொழில்நுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சாத்தியமா? நடைமுறைப்படுத்த இயலுமா?
இவை பற்றிப் பார்ப்போம்.
இப்பொழுதுள்ள தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000 மற்றும் அதன் திருத்தம் 2008இன் படி அது சாத்தியமே. இதற்குத் தனியாகச் சட்டம் தேவை இல்லை. பிரிவு, 69இன் படியும் 70-பி இன் படியும் மத்திய அரசின் கீழுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு அங்கமான CERT in (Computer Emergency Response Team – India) என்கின்ற அமைப்புக்கு இதன் அதிகாரம் இருக்கிறது. ஒரு அரசாங்கம் தகவல் அறிவிப்பு வெளியிட்டு இச்சட்டத்தின் கீழ் தனியான அதிகாரியையும் முழு நேரப் பேரமைப்பையும் உண்டாக்கலாம்.
கண்டிப்பாக அரசாங்கத்துக்கு இந்தச் சட்டத்தில் இதற்கான அதிகாரம் இல்லை என்று ஓரிரு வழக்குகள் வரக்கூடும். அவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில், “தனி நபர் அந்தரங்கத் தகவல் பாதுகாப்புச் சட்டம்” வர இருக்கிறது. இந்த சட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட பின் ஒரு மிகப் பெரிய Data Protection Authority என்கின்ற நாடு முழுவத்துகுமான அமைப்பு (வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கியும் தொலைபேசித் துறைக்கு TRAI என்னும் நாடு தழுவிய அமைப்பும் இருப்பது போல) உருவாகும். அது நாடு முழுவதுமானத் தகவல் பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட அனைத்துச் சட்ட விதிமுறைகளையும் அவற்றின் நடைமுறைப்படுத்தல் பற்றியும் கண்காணிக்கும். மற்றும் பல அதிகாரங்கள் கொண்ட அமைப்பாகவும் இது இருக்கும். இச்சட்டம் வந்த பிறகு, DPA (Data Protection Authority) போன்ற ஒரு அமைப்பின் கீழ் இந்தத் தணிக்கை முறையைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராயலாம்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, அவற்றிற்கு, இந்திய சினிமடோகிராப் சட்டத்தின் கீழ் தணிக்கை முறை இருக்கிறது. அதுவும் அவ்வப்பொழுது சர்ச்சைக்குள்ளானாலும் கூட, ஒரு வரைமுறை, ஒரு குழு மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன. சினிமா துறையே இன்று முழுவதுமாக டிஜிட்டல் மயமாகிவிட்டது. சென்சாருக்கு அளிக்கப்பட்டப் பிரதி தான் தியேட்டர்களில் காண்பிக்கப் பட்டதா? எத்தனை பிரதிகள், எடுக்கப்பட்டன? தகவல் திருட்டு எப்படி ஆயிற்று? சமூக வலைதளங்களுக்கு எப்படிப் பிரதிகள் போயின? அவை தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் முன் எடுக்க (திருட)ப் பட்ட பிரதிகளா? அதற்குப் பிறகு தணிக்கையான பிரதிகளா? இப்படியெல்லாம் சர்ச்சைகள் அவ்வப்பொழுது எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை உள்ளடக்கி, சினிமடோகிராப் சட்டத்தில் பெருஞ்சீர்திருத்த சட்டமாகவே இதைக் (தணிக்கையை) கொண்டு வரலாம். இவ்வாறெல்லாம் இல்லாமல், கால தாமதத்தைப் பொருட்படுத்தாமல் இதற்கென்றுத் தனிச் சட்டமாகவே இயற்றலாம். அதுவே சாலச் சிறந்தது.
தகவல் தொழில்நுட்ப ரீதியாகச் சற்று பார்ப்போம். யூடியூப் போன்ற வலைதளத்தைத் தடை செய்ய வேண்டுமாயின், அதற்கு நடைமுறை இப்பொழுதும் உண்டு, மேலே கூறிய I.T. Amendment Act 2008 படி CERT In அமைப்பை அணுக வேண்டும், அது இந்த வலைதளம் எந்த ஒரு நெட்வொர்க் மூலமாக வருகிறதோ அந்த நிறுவனத்தின் மூலம் இந்த 2008 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தில் கீழ் வந்த 2009 ஆம் ஆண்டின் விதிகள் படி இந்தத் தடையை நடைமுறைப்படுத்துகிறது.
ஆனால் இப்படி ஒரு வலைதளத்தைத் தடை செய்து விட்டாலும் கூட அந்தத் தகவலுக்குச் சொந்தக்காரர் அதே தகவலை வேறொரு வலைதளத்தில் (அது கிட்டத்தட்ட அதே மாதிரி பெயருடைய ஒன்றாகக் கூட இருக்கும்) பதிவேற்றம் செய்ய முடியும். பிறகு இந்த புதிய வலைதளத்துக்கும் முதலில் செய்த படியே அதே முறையைப் பின்பற்றித் தடை உத்தரவு வாங்க வேண்டும், இதுபோல், தடை உத்தரவு வாங்குவதற்குக் கண்டிப்பாகக் குறைந்தபட்சம் சில நாட்கள் ஆகிவிடும். ஆனால், வீம்புக்காகவே வேறொரு பெயரில் உள்ள ஒரு வலைதளத்தில் அதே தகவலைப் பதிவேற்றம் செய்ய ஓரிரு நிமிடங்கள் போதும். ஏனெனில் தகவல் தொழில் நுட்பம் அப்படி! இதுவே தணிக்கை என்ற முறையில் வந்துவிட்டால், இந்த வரைமுறையைச் சற்று எளிதுபடுத்த முடியும்.
எப்படி இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்யும். பொதுவாகவே நம் நாட்டில் எந்த ஒரு சட்டத்திலும் நடை முறைச் சிக்கல்கள் மற்றும் நீதி பரிபாலனச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு நம் நாட்டின் சட்டப் பரிபாலனத்தின் நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால் எந்த அரசும் சும்மா இருந்துவிட முடியாது. “இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். இவற்றைத் தடுக்க முடியாது. விபத்துகள் நிகழத்தான் செய்யும். அவற்றைத் தடுக்க ஒன்றும் செய்ய முடியாது. ‘கொலை, திருட்டு போன்றவை நிகழத்தான் செய்யும். அவற்றைத் தடுத்தல் சாத்தியமில்லை.”
இவ்வாறெல்லாம் கூறிக்கொண்டுச் செயலற்று இருந்து விட முடியாது அல்லவா? எனவே நெட்வொர்க் நிறுவனங்களைக் கட்டுப் படுத்துவது மூலமாகவும், தண்டனையை உறுதிப்படுத்துவதன் வாயிலாகவும்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும். ‘நீங்கள் எவ்வளவு முறை பதிவேற்றம் செய்தாலும் நாங்கள் அதைத் தடை செய்வோம், அதுவும் உடனே செய்வோம், பிறகு சட்டப்படி உறுதியான நடவடிக்கையும் எடுப்போம், தண்டனையையும் விதிக்க வைப்போம்’ என்கின்ற ஒருவித பயத்தை குற்றவாளிகளிடையே உண்டு பண்ண வேண்டும்.
மனு நீதி போன்றப் பண்டைக் கால ஏடுகளிலேயே கூட தண்டனையின் கடுமையும் மற்றும் அதன் உறுதித் தன்மையும், பயமும்தான் மக்களிடையே குற்றங்கள் செய்வதைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாக, இப்பொழுது சமீபகாலமாக OTT – Over The Top என்கிற அதிகமாகப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு நெட்வொர்க்கின் “பிணையத்தின் மேலே” என்கிற ஒரு சேவையும் ஒன்று உள்ளது. அதாவது, நெட்வொர்க் என்பது நமக்குத் தொலை தூரப் பிணையச் சேவையை வழங்குகின்ற BSNL, Airtel, Vodafone போன்ற நிறுவனம் தருகின்ற செயல். பிணையம் அதாவது நெட்வொர்க் என்கின்ற சேவையானது கிட்டத்தட்ட ஒரு சாலை போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் மேலே எந்த வண்டி செல்கிறது என்பது தான் இந்த ‘ பிணையத்தின் மேலே உள்ள அதாவது OTT எனப்படும் செயலிகள்.
amazon prime, netflix மற்றும் zee 5 என்பது அனைத்தும் இந்த OTT என்னும் சேவையில் அடங்கும். இதுபோன்ற தகவல் தொழில்நுட்பத்தில் முழு நீளத் திரைப் படம், குறும்படம் அல்லது தகவல் எதையும் வெளியிட வேண்டுமாயின், அதற்குத் தணிக்கை கிடையாது. இந்தப் படத்தை வெளியிடுவது இந்த OTT நிறுவனம். ஆனால் இது பயணிப்பதோ ஒரு நெட்வொர்க் நிறுவனத்தினர் போட்ட பாதையில். இப்பொழுது எவ்வளவோ மத மற்றும் இனக் கலவரங்களை உண்டு பண்ணக் கூடியக் காட்சிகள் இவற்றில் வருகின்றன ஆபாசமான, அருவருப்பான, விரும்பத்தகாத, பயங்கரமானச் சித்தரிப்புகளும், தணிக்கையில் வெட்டத்தக்கக் காட்சியும் இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தில் வெளிவந்து விடுகின்றன.
இந்த OTT சேவையைப் பற்றித் திரைப்படத்துறை விநியோகஸ்தர்கள், வரும் நாட்களில் இது போன்ற OTT சேவையில் வரும் படங்கள்தான் அதிகரிக்கும் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் கணிக்கின்றனர். எனவே இப்பொழுதே அரசு இது விஷயத்தில் நல்ல நீண்ட காலத் தீர்வை நோக்கி ஒரு முடிவு எடுப்பது நல்லது. இந்த அணுகுமுறையில் பார்த்தாலும் கூடச் சமூக வலைதளங்களுக்குத் தணிக்கை தேவை என்ற கருத்து வலுப் பெறுகிறது.
இப்பொழுதே எந்த முதலீடும் இல்லாமல், சமூக வலைதளங்களில் பிறரை வசை பாடியும் மிக மிகக் கொச்சையான வார்த்தைகளை உபயோகித்தும் எவ்வளவோ பேர் பிரபலமாகின்றனர். அவர்கள் வலைதளத்திற்கு எவ்வளவு பேர் ‘வருகிறார்கள்’ அதாவது பார்க்கிறார்கள் என்பது பொறுத்து யூடியூப் (அதாவது, கூகுள்) நிறுவனம் அவர்களுக்கு வருமானமும் கொடுக்கிறது. பல்வேறு கணக்கெடுப்பின்படி, பல நாடுகளில், (நம் நாட்டிலும் சேர்ந்துதான்) மிக அதிகமாக மக்கள் பார்க்கின்ற வலைதளங்களே ஆபாசமான வலைதளங்கள்தான் என்று கூறுகின்றனர். அப்படி இருக்கையில், தொழில்நுட்ப ரீதியாக இதற்கு வழிமுறை அல்லது வரைமுறை அல்லது தணிக்கை வேண்டும் என்கின்ற வாதம் வலுப்பெறுகிறது.
பத்திரிகைத் துறைக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்று ஒன்றும், டெலிவிஷன் சேனல்களுக்குச் சுயக் கட்டுப்பாட்டுக் குழுமம் ஒன்றும் கூட இருக்கிறது. ஆனால் சமூக வலைதளங்களுக்குத் தடையோ, கட்டுப்பாடோ, பொறுப்புணர்வோ கூட இல்லை. யூடியுப் அல்லது ஃபேஸ்புக் போன்றவற்றிற்கு புகார்களின் பேரில் நடவடிக்கை என்ற நடைமுறைதான் உள்ளது. அதுவும் அந்த நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படியில் தடை செய்வதற்கு CERT In என்ற அமைப்பும் இருக்கிறது. ஆனால் இவை எல்லாமே தணிக்கை என்பதோ அல்லது சான்றிதழ் வழங்குதல் என்கிற முறையின் படியோ இல்லை.
இப்பொழுது தணிக்கைச் சான்றிதழ் போன்ற கட்டுப்பாடு ஏதும்கொண்டு வரப்பட்டால், இதில் கருத்துச் சுதந்திரம் பறி போய்விடும் எனப் போர்க் குரல் பிறக்கும். அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப் பட்ட கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுகிறது, ஒடுக்கப் படுகிறது என்றெல்லாம் கூடச் சர்ச்சைகள் எழலாம். ஆனால், சமுதாயப் பார்வையில் இதுபோன்ற கட்டுப்பாடு அவசியம் என்றே பொறுப்புள்ள எவரும் நினைப்பர்.
சட்டத்தின் பார்வையில் நாட்டின் உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் கருத்துச் சுதந்திரம் பற்றி அரசியல் சாசனத்தின் 19(2) பிரிவை விவாதிக்கும் பொழுதும் கூட, கருத்துச் சுதந்திரம் என்பதே நியாயமான வரையறைக்குட்பட்டதுதான் என்று குறிப்பிட்டுள்ளது., அது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது. எனவே, அரசும் இதைக் கருத்துச் சுதந்திரப் பாதுகாப்புப் பாதிக்கும் என்று கருதத் தேவையில்லை. தாம் பத்திரிகைகளின், எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் நண்பன் அல்லது பாதுகாவலன் என்னும் அடையாளம் போய்விடும் என்று அச்சப் படத் தேவையில்லை. ஒரு நாட்டின் சமுதாயப் பாதுகாப்பு, அமைதி, குந்தகமின்மை போன்ற பரந்த நோக்கிலேயே இதை, அரசும் மற்ற பொறுப்பு மிக்கவர்களும் பார்க்க வேண்டும்.