இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !

சீத்தாராம் யெச்சூரி

தேசியவாதம் (Nationalism), ஜனரஞ்சகவாதம் (Populism) இரண்டுமே பலவிதமான வியாக்கியானங்கள் தரக்கூடிய சொற்கள். இவற்றின் பொருள் குறித்தான மயிர்பிளக்கும் வாதங்களுக்குள் நான் செல்லவில்லை, மாறாக இந்திய சூழலில் உதித்துள்ள ஜனரஞ்சக தேசியவாதத்தைக் (Populist Nationalism) குறித்து சுறுக்கமாக விவாதிக்கவுள்ளேன். அது இந்திய எல்லைகளைக் கடந்தும்  தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கிறது.

முதலாளித்துவ உலகத்தில், முதலாளித்துவ தேசியவாதமானது எப்போதும் முதலாளி வர்க்கத்தின் நலன்களையே முன்நிறுத்துகிறது. ஆளுகின்ற வர்க்கமாக முதலாளித்துவம் தொடருகின்றவரையில், தேசியவாதமே ‘தேசபக்தியாக’ பொருள்கொள்ளப்படும். அதே சமயத்தில் ஜனரஞ்சகம் என்பது ‘பொய்யான உணர்வுநிலையை’ ஏற்படுத்தக்கூடிய விளைவையும் நிகழ்த்துகிறது.

ஜனரஞ்சகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் திறளின் உணர்வுகளிலும், உளவியல் கட்டமைப்பிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம் தேசியவாத எண்ணங்களை வளர்த்தெடுக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும். முதலாளித்துவ ஆளுகையில்,  ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு இரட்டை நோக்கங்கள் உள்ளன. முதலாவது, முதலாளி வர்க்கத்தின் நலன்களை முன்னெடுப்பது, இரண்டாவது, தங்கள் ஜனரஞ்சகவாத முழக்கங்களின் அடிப்படையில் சமூகங்களில் மாற்றங்களை எதிர்நோக்குகிற குழுக்களின் நலன்களை முன்னெடுப்பது.

தேசியவாதம்:

மனித நாகரீகத்தில் நிலவுடைமைக் கட்டத்திலிருந்து முதலாளித்துவக் கட்டத்தை நோக்கி நடைபெற்ற நீண்ட மாறுதல் நடவடிக்கையின் உள்ளார்ந்த பகுதியாகவே தேசஅரசுகளும் தோன்றின. இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் தேவாலயங்களிடமிருந்து அரசுகளைப் பிரித்தெடுப்பதற்கான போராட்டத்தையும் தொடங்கியது. முதலாளித்துவம், நிலவுடைமையை வெற்றிகண்டது, அதே நேரத்தில், நிலவுடைமையின் உச்சத்தின் போது, அனைத்து நாகரீகங்களிலும் அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் ஆட்சியதிகாரம் செலுத்துவதற்கான தெய்வீக ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக புகுத்தப்பட்ட நம்பிக்கையிலிருந்து, அரசியல் அதிகாரம் தனியே  பிரிக்கப்பட்டது. இறுதியில் 1648 ஆம் ஆண்டில் வெஸ்ட்பாலியாவில் கையெழுத்தான ஒப்பந்தங்கள், தேச அரசுகளுக்குள்ள இறையாண்மை மற்றும் அதன் காரணமாக எழுகிற சர்வதேச சட்டங்களுக்குமான கொள்கைகளை வகுத்தன.

அரசுகளின் இறையாண்மை கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச அமைப்புமுறையை நிறுவுவது பற்றிய நம்பிக்கையை பரவலாக அது ஏற்படுத்தியது; அரசுகளுக்கிடையே சமத்துவம்; ஒரு அரசின் உள் பிரச்சனைகளில் மற்றொரு அரசு தலையீடு செய்யாத கொள்கை ஆகியவை பொதுவாக வெஸ்ட்பாலியன் அமைப்புமுறையாக அறியப்படுகின்றன.

1644க்கும் 1648க்கும் இடையே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களே தற்போது நடைமுறையில் உள்ள பல சர்வதேச சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

(வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெற்ற மாற்றங்கள், பாசிசத்தைப் பிரசவித்தன)

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதன் தொடரியக்க விளைவாக காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது என்ற நிலையில், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், விடுதலையடைந்த அந்த நாடுகளின் பண்புகளையே வீரஞ்செறிந்த முறையில் மாற்றியமைத்தன.  இந்தியா உட்பட  காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்த நாடுகளில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்கள்தான் இந்நாடுகளின் கட்டமைப்பை உருவாக்கின என்பது உறுதி.

‘இந்தியக் கருத்து’ – பரிணாமம்

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய காவியத்தன்மை வாய்ந்த போராட்டத்திலிருந்து ‘இந்தியக் கருத்து’க்கு அடிப்படையாக அமைந்த எண்ணம் உருவாகியது. ‘இந்தியக் கருத்து’ என்பது என்ன? அதன் சிக்கலான பன்முகத்தன்மை மனதில் இருத்தியபடியே, சற்று எளிய வார்த்தைகளில் சொல்வதானால், ‘இந்திய நாடு அதன் மகத்தான வேறுபாடுகளை, அனைவரையும் உள்ளடக்கியதொரு மக்கள் ஒற்றுமையை நோக்கி மேம்படுத்துவதைத்தான்’ அந்தக் கருத்து (idea) அடிப்படை எண்ணமாகக் கொண்டிருக்கிறது. இது, அடிப்படையில், வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பின் ஐரோப்பாவில் உருவான ஒட்டுமொத்த வளர்ச்சிப் போக்குக்கும் முற்றிலும் எதிரானது.

இப்போது அவ்வாறு உருவாகியுள்ள மதச்சார்பற்ற (secular)  ஜனநாயக நவீன இந்தியக் குடியரசை, தங்களுடைய சித்தாந்தமான ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ்./பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பொருள், இந்துப்  பெரும்பான்மைவாதத்திற்கு மற்ற மதவழி சிறுபான்மையோர் (குறிப்பாக உள்ளிருக்கும் எதிரியாக கற்பிக்கப்பட்ட முஸ்லிம்கள்) அடங்கி நடக்கும் வகையில் இந்திய தேசியத்திற்கு எதிராக ‘இந்து தேசியவாதத்தை வளர்த்தெடுத்து’ அதன் மூலம் வெஸ்ட்பாலியன் மாதிரியை நோக்கி பின்னிழுப்பதாகும்.

உண்மையில் இவர்கள் கூறும் பெரும்பான்மைவாதம் என்பது ஒரு வெறிபிடித்த, சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரம் என்பது, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியக் கருத்தி’னையே முற்றிலும் நிராகரிக்கிற ஒரு புதுவித அரசியல் உளவியல் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக சிந்தனையாளர்கள் ‘இந்தியக் கருத்தை’யே தள்ளுபடி செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தையே மறுதலிக்கின்றனர். இந்தப் போராட்டத்திலிருந்துதான் இந்திய தேசியத்தின் கருத்துரு, வெஸ்ட்பாலியன் ‘தேசியவாத’த்தை விடவும் மேம்பட்ட ஒன்றாக எழுந்து வளர்ந்தத . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வழியாக முகிழ்ந்த இந்திய தேசியத்திற்கு (இந்தியக் கருத்துக்கு) எதிராக ஆர்.எஸ்.எஸ்/பாஜக இன்று மிகவும் பிற்போக்கான இந்திய (இந்து) தேசியவாத பின்னிழுப்புக்கு தலைமையேற்கிறது.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கின்ற அகீல் பில்க்ராமி: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலான, மக்களின் ஒன்றுபட்ட உறுதியான அளப்பரிய அணிச்சேர்க்கை என்பது இந்தியர் அனைவரும் ஒன்று என்கிற மாற்று சிந்தனை இல்லாமல், ஒன்றுபட்ட சிந்தனையில்லாமல் சாத்தியமாகியிருக்காது” என உறுதிபடத் தெரிவிக்கிறார்.

மொழி, மதம், இனம், பண்பாடு இன்னும் பலவற்றின் அடிப்படையில் இந்தியாவில் காணப்படும் வேற்றுமைகள், உலகில் இதுவரை அறியப்பட்ட எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாத வகையில் பரந்து விரிந்ததாகும். அதிகாரப்பூர்வமான பதிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் குறைந்தது 1,618 மொழிகள் உள்ளன, 6400 சாதிகள் உள்ளன, 6 முக்கிய மதங்கள் உள்ளன – அவற்றில் 4 மதங்கள் இங்கேயே பிறப்பெடுத்தவை, மானுடவியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட 6 இனக் குழுக்கள் – இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அரசியலாக ஒரே நாடாக நிர்வகிக்கப்படுகிறது இந்தியா.

இந்தியாவில் 29 முக்கிய மத-பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுவதும், ஒப்பீட்டளவில் இதுதான் அனைத்து நாடுகளிலும் மிக அதிகமான மத அடிப்படையிலான விடுமுறை நாட்களைக் கொண்ட நாடு என்பதும் இங்கே நிலவும் வேற்றுமையின் அளவுகோலாகும்.

Digital Art Of Narendra Modi NAMO Editorial Photo - Illustration of male,  head: 149806161

பிரிவினையும் பிரிட்டிஷ் ஆட்சியும்:

இவ்வளவு பரந்துபட்ட வேற்றுமையை ஒருங்கிணைத்தது பிரிட்டிஷார்தான் என வாதாடுபவர்கள், 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் வகுப்புவாத இடம்பெயர்வையும் ஏற்படுத்திய பிரிவினையை திட்டமிட்டுக் கட்டமைத்தது பிரிட்டிஷார்தான் என்ற உண்மையைக் காண மறுக்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், சைப்ரஸ், ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கமானது, தன் காலனி நாடுகளில் பிரிவினையின் வழியாக ஆராத வடுக்களை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவில் நடைபெற்ற மக்களின் விடுதலைக்கான  போராட்டங்கள்தான் இந்திய மக்களை, அவர்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமைப்படுத்தி 660க்கும் மேலான நிலவுடைமை முடியாட்சிப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன இந்தியாவாக மாற்றிடும் விரிந்த ‘இந்திய உணர்வு நிலை’க்கு வடிவம் கொடுத்தது.

முதலாளித்துவமும், தேசியவாதமும்:

தேசம் குறித்த வெஸ்ட்பாலியன் விளக்கமானது, வணிகவாத சித்தாந்தத்தைக் கொண்ட வணிக முதலாளித்துவக் காலகட்டத்தில் உருவாகிய முதலாளித்துவ தேசியத்தோடு இணைந்து உருவானது. ஒரு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வ வளத்தை சூரையாடுவதன் மூலம் – தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள தங்கம், வைரம் மற்றும் இதர கனிம வளங்களை அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு நேரடியாகவே சூரையாடுவதன் மூலம் – தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளைத்தான் இவர்கள் தேசியவாதம் என்ற சொல்லில் பயன்படுத்துகிறார்களே ஒழிய அந்த நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்களால் ‘தேசம்’ என்பது மக்களுக்கு மேலான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஏகாதிபத்தியம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் போர் தொடுக்கும் சமயத்தில் தங்கள் சார்பாக மக்களை அணிதிரட்டுவதற்காகத்தான் இந்தச் சொல்லை பயன்படுத்திக்கொள்கிறார்கள். போராடும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சக தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, அப்போதும் இப்போதும் எக்காலத்திலும் ‘வளங்களைக் குவித்திட’ விரும்பும் ஒரு உளவியல் கருதுகோளாகிய ‘தேசம்’ மக்களுக்கு அப்பாற்பட்டதாகவே நிற்கிறது.  சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆளுகை மற்றும் தாக்குதல் காணப்படுகின்ற இன்றைய நிலைமையில், முதலாளித்துவ தேசியவாதமானது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை, பரந்த மக்கள் மீது பெரும் துயரத்தை சுமத்துவதன் மூலம் ஊக்குவிக்கிறது. தேசியவாதம் என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயக கட்டமைப்புக்கு உள்ளேயே நவீன தாராளமயத்திற்கு கொடுக்கப்படுகிற அரசியல் ஆதரவு மக்களை பரிதாபகரமான முறையில் அச்சுறுத்துகிறது.

இந்திய சூழலும், பின்நோக்கிய இழுப்பும்:

தற்போது இந்தியாவில், கார்பரேட் – வகுப்புவாதக் கூட்டு ஆதிக்கம் செலுத்திவருகிறது, தேசியவாத சித்தாந்தத்தை தீவிரமாக பரப்புரைப்பதன் வழியே ‘தேசம்’ மற்றும் அதன் நலன்களை மக்களுக்கும் மேலானதாக சித்தரிக்கிறது, மக்களிடம், ‘தேசத்தின்’ பெயரால் அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவது உட்பட, தியாகங்களை வற்புருத்துகிறது. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் தலைவர் ‘தேச நலன்களைச் சமரசம் செய்வதாக கருத்துரிமை இருக்க முடியாது’ என்று  பறைசாற்றுகிறார்.

இப்படிப்பட்ட தேசியவாத தேசம், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வகுப்புவாத சக்திகளின் பாசிச லட்சியத்தை மேலும் முன்னெடுப்பதிலும் இணைந்திருக்கிறது. பாசிச நிகழ்ச்சி நிரலானது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுத் தன்மையை, பெருமளவில் சகிப்பற்ற பாசிச ‘இந்து ராஷ்டிராவாக’ உருமாற்ற விரும்புகிறது.

இந்துத்துவ கற்பிதங்கள்:

ஆர்.எஸ்.எஸ் கட்டமைக்கும் தேசியவாதமானது, இந்து ராஷ்ட்டிரம் அமைக்கின்ற  அதனுடைய சித்தாந்த – கருத்தாக்க நியாயத்தினைச் சார்ந்ததாகும். (இவர்கள் கூறும் இந்துத்துவா ராஷ்ட்ரத்திற்கும், இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.) ஆர்எஸ்எஸ்-இன் மறைந்த தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், 1939இல் எழுதிய நாம் அல்லது   வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்னும் நூலின் முகப்புரையில், “இந்துக்கள், அயலக இனத்தைச் சேர்ந்த எவராலும் இந்த நாடு படையெடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மண்ணில் எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தகராறோ மற்றும் எவராலும் தொந்தரவுக்கு உள்ளாகாமலோ இருந்து வந்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “எனவே, இந்துக்கள் பூமியான இந்த பூமி, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது,”  என்றும் குறிப்பிட்டார். (We or Our Nationhood Defined – M.S. Golwalkar, 1939, Page 6).

இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், இவ்வாறாக இந்துக்கள்தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும், தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும்  அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வரலாற்று ஆய்வின் அடிப்படையுமின்றி “நிறுவியதைத்” தொடர்ந்து, அத்தகைய இந்து தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்கள்.

“… இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில், … இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான ‘தேசிய’ வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறார்கள்.

“… இவற்றை ஏற்றுக்கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் ‘தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனமும், அவர்களின் இதயத்தினருகில் உள்ள தேசமும் பெருமையடைய வேண்டும் என செயல்பாட்டைத் தூண்டி, இலக்கை நோக்கி முயற்சிப்போரே உண்மையான தேசிய தியாகசீலர்கள். மற்றவர்களெல்லாம் தேசிய நோக்கத்துக்கு துரோகிகளும் எதிரிகளும் ஆவர், அல்லது இளகிய பார்வையில் அவர்கள் முட்டாள்கள்.”  (கோல்வால்கர், 1939, பக்.43-44).

இதுதான் ‘இந்தியக் கருத்தானது’ அனைத்தையும் உள்ளடக்கியதொரு தேசியவாதமாக சாத்தியப்பட முடியாமல் பின்னடைவினை உருவாக்குகிறது. இன்று முன்னெடுக்கப்படுவது, தனிவகைப்பட்ட இந்துத்துவ தேசியவாதம், அதுதான் இந்தியச் சூழலில், ஜனரஞ்சக தேசியவாதமாக அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட பிற்போக்கான திட்டத்தை இந்தியாவில் வெற்றியடையச் செய்திட, ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள் வரலாற்றை இந்து புராணங்களைக் கொண்டும், மெய்யியலை இந்து நம்பிக்கைகளைக் கொண்டும் மாற்றீடு செய்வதில் மையமிட்டுள்ளார்கள். இந்தியாவில் இப்போதுள்ள பாஜக அரசாங்கம், திட்டமிட்ட வகையில் நமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படும் கல்வித்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது, இந்துத்துவ சிந்தனையாளர்களை உயர்கல்வியின் பல்வேறு நிலைகளில் பணியமர்த்திவருகிறது.

பகுத்தறிவற்ற வாதமும் அதன் சவாலும்:

தத்துவார்த்த நிலையில், பகுத்தறிவற்ற வாதத்தை மீண்டும் புகுத்துவதற்கான முயற்சிகள், ஜனரஞ்சக தேசியவாதத்தின் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன. ஜார்ஜ் லூகாசுடைய ‘பகுத்தறிவை நொறுக்குதல்’ (Destruction of Reason) என்ற ஆரம்பகால படைப்பினை, பகுத்தறிவற்ற தத்துவத்தின் மீதான விமர்சனம் என்ற விதத்தில், இந்திய சூழலுக்கு  ஏற்ப மீளுருவாக்க வேண்டும். ஹிட்லரை நோக்கிய ஜெர்மனியின் பயணத்தை மற்ற பிற காரணிகளுக்கிடையே, ஜார்ஜ் லூகாஸ்தான், தத்துவப்பரப்பில் கண்டறிகிறார். அவருடைய மையமான கவனம் பின்வருமாறு, “பகுத்தறிவற்றவாதம், ஏகாதிபத்திய உலகத்தில் ஒரு உலக நிகழ்வுப்போக்காகும்” என அவர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

பகுத்தறிவின்மை என்பது, முதல் பார்வையிலேயே, காரணகாரியத்திற்கு   விரோதமான தத்துவப் போக்கு ஆகும், அதன் எல்லா வெளிப்பாடுகளும், ஐரோப்பிய அறிவொளிக் கால நாட்களில் இருந்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயம் வரையில் மனிதர்கள் தங்கள் விவகாரங்களில் தர்க்க அறிவைப் பயன்படுத்துவதற்கும், உண்மையை உற்று அறிவதற்குமான திறனுக்கு சவாலாகவே அமைந்திருக்கிறது. எந்த நிலையிலும் முழுமையான உண்மையை, அறிவுகொண்டு விளக்குவது சாத்தியமில்லை. இருந்தாலும் பகுத்தறிவின்மையானது, உண்மைக்கும் அறிவுக்குமான இயக்கவியல் உறவை பார்க்க மறுக்கிறது.

லூகாஸ் சொல்வதைப் போல, நிலவுகின்ற உண்மை, அது குறித்த நமது அறிவை விடவும் வளமானதும், சிக்கலானதும் ஆகும். இந்த இடைவெளியை பகுத்தறிவின் அடிப்படையில் புரிந்துகொள்வதற்கு பதிலாக, பகுத்தறிவற்றவாதமானது ஒருவர் உண்மையின் முழுமையைக் குறித்து பகுத்தறிந்த ஞானத்தைப் பெறவே முடியாது என்ற முடிவுக்கு வருகிறது. அறிவின் உயர்ந்த வடிவமாக (அதனால்) கருதப்படுகிற ‘நம்பிக்கை’ அல்லது உள்ளுணர்வினைக்’ கொண்டே முழு உண்மையை உள்வாங்க முடியும் என்கிறது. அத்தகைய ‘நம்பிக்கையைக்’ கொண்டவர்களுக்கு ஜனரஞ்சக தேசியவாதம் ஊக்கமளிக்கிறது, இரண்டு இலக்குகளை அடையும் காரணத்திற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் நவ-தாராள நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க வேண்டும், இந்தியாவை பிரத்யேக மத ராஜ்ஜிய அரசாக மாற்ற வேண்டும் ஆகியவைதான் அந்த இலக்குகள்.

இதுபோன்ற பகுத்தறிவற்றவாத தத்துவமானது, ஆர்.எஸ்.எஸ்/பாஜக அரசின் கீழ்  இந்தியாவின் சமூக-அரசியல்-பண்பாட்டு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியிருக்கிறது.

நாம் நடத்துகிற போராட்டம்:

பகுத்தறிதல், இந்தப் பார்வைதான் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார நிரலுக்கு உழைப்பதன் மூலமாக ‘இந்தியக் கருத்து’ சாத்தியமாக்கப்படவேண்டும் என்கிறது. பகுத்தறிவற்றவாதமோ, தனது லாபத்தை பெருக்குவதற்காக இந்திய பொருளாதாரத்தை அடிமைப்படுத்த விரும்பும் சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, நவதாராள சீர்திருத்தங்களை அமலாக்கச் சொல்கிறது. நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அகற்றுவதோடு நில்லாமல், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக மாற்றுகிறது. இத்தகைய போக்கு, ஏழை இந்தியாவுக்கும் பணக்கார இந்தியாவுக்குமான இடைவெளியை அதிகரிக்கிறது. ஏழைகள் மேலும் ஏழ்மையாக்கப்படுகிறார்கள், பணக்காரர்கள் மேலும் வளம்கொழிக்கின்றனர். ‘இந்தியக் கருத்து’ முன்னிருத்தும் உள்ளடக்கிய பார்வைக்கு எதிரான வெளித்தள்ளும் நிரலாக அது உள்ளது.

நமது மக்களின் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித், பழங்குடி, மதவழி சிறுபான்மை மற்றும் பெண்களின் சமூக பொருளாதார உள்ளடக்கத்துக்காக உழைக்கும் படி சொல்வது பகுத்தறிவு. பகுத்தறிவுக்கு விரோதமான வாதமோ அவர்கள் வெளித்தள்ளப்படுவதை மேலும் தொடர்ந்து முன்னெடுக்கிறது. சமுக – பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுக்காத ‘தகுதி திறமை’ குறித்து பேசுவது பகுத்தறிவின்மை வாதமாகும்.

நமது அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகின்ற, ‘சாதி, மதம், பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமக்களின் சமத்துவத்தை’ எதிர்நோக்குவது பகுத்தறிவுக்  கண்ணோட்டம். இந்த சமத்துவத்தை மறுப்பது பகுத்தறிவின்மைவாதம். அப்படிப்பட்ட மறுப்பானது நவ தாராளமய கொள்கைப் பாதை மற்றும் இந்துத்துவ தேசியவாதத் தாக்குதலின் விளைவாகும்.

அரசில் இருந்து மதம் பிரிக்கப்படவேண்டும் என்பது பகுத்தறிவுக் கண்ணோட்டம். தீவிரமான மதப் பிரிவினையை ஊட்டுவதன் மூலம் உள்ளடக்கும் தன்மையினை வளர்க்கவேண்டிய இடத்தில் பிரிவினையை முனிருத்துவது பகுத்தறிவின்மை வாதம். அத்தகைய பகுத்தறிவின்மை வாதம் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கும் உரிமைகளை நேரடியாக ஆபத்துக்குள்ளாக்குவதுடன் அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை, வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் வகுப்புவாதத் தாக்குதலுக்கு இலக்காக்குகிறது.

‘இந்தியக் கருத்தினை’ முன்னெடுக்கும் மதிப்பீடுகளை வளர்ப்பது பகுத்தறிவு. நமது கல்வி அமைப்பை விஷமாக்குவது, அனைவருக்குமான கல்வியை மறுப்பது, காரணகாரியங்களையும், அறிவியல் மனப்பாங்கையும் மறுப்பது பகுத்தறிவின்மை வாதம். நமது வளமான ஒருங்கமைந்த (syncretic) கலாச்சாரத்தின் இடத்தில் இந்து புராணத்தை மாற்றீடு செய்ய முயல்வது பகுத்தறிவின்மை வாதமாகும்.

இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய  தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.

தமிழில்: இரா.சிந்தன்

மூலக்கட்டுரை: Com. Sitaram on the ‘Populist Nationalism: the Indian Context’

Tags: