மக்கள் கவிஞரின் தொடக்கமும் முடிவும்
–கவிஞர் கே.ஜீவபாரதி
வாழ்க்கைக் குறிப்பு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – ஒக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அழகிய கிராமத்தில் அருணாசலம் – விசாலாட்சி தம்பதியருக்கு பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர்; அவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது. கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தை அருணாசலம் பிள்ளையும், அண்ணன் கணபதி சுந்தரமும் கவிஞர்கள்.
சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அணைக்காடு டேவிஸ் தொடர்பினால், கவிஞரின் குடும்பம் ஆரம்ப காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டது.
கணபதிசுந்தரத்தின் சுயமரியாதைப் பாடல்களை மேடைகளில் பாடி வந்த பட்டுக்கோட்டையார், சிறு வயதிலேயே நல்லதைச் செய்பவன் நாத்திகனா? என்ற பாடலை எழுதி, அண்ணனிடம் காட்டிப் பாராட்டுப் பெற்றார். இதுவே பட்டுக்கோட்டையாரின் முதல் பாடல். ஆனால் இந்தப் பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற வரிகள் கிடைக்கவில்லை. அதே போன்று இந்த கால கட்டத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய எந்தப் பாடலும் கிடைக்காமல் போய்விட்டது.
பட்டுக்கோட்டையாருக்கு அப்போது பதினான்கு வயது. அவருடைய சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு கிராமத்துக் குளத்தங்கரையில் அமர்ந்து, குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் குளத்தின் கரையோரத்தில் நூற்றுக்கணக்காக கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளிக் குதித்து விளையாடின. அவற்றை கவனித்த கவிஞரின் மனதில்,
“ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே _ கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே!
தூண்டில்காரன் வரும்
நேரமாச்சு -_ ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே
கெண்டைக் குஞ்சே!”
என்ற கவிதை தோன்றியது. இந்தக் கவிதையிலும் எஞ்சிய பகுதி உண்டா? இல்லை. மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டும்தான் கவிஞர் எழுதினாரா? என்ற விபரம் கிடைக்கவில்லை.
பட்டுக்கோட்டையார், சக்தி நாடக சபாவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி புதுவையில் நாடகம் நடத்தியபோது, ராஜகுருவாக கவிஞர் நடித்தார். அப்போது பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனின் அறிமுகம் கவிஞருக்கு கிடைத்தது. மன்னர் மன்னன் கவிஞரை பாவேந்தருக்கு அறிமுகம் செய்தார். அந்த நாடகக் குழு புதுவையில் தங்கியிருந்த வரை, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பாவேந்தரைச் சிந்திப்பதையும், அவருடைய கவிதைகளை நகல் எடுத்துக் கொடுப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் கவிஞர். பாவேந்தர் நடத்திய குயில் பத்திரிகையைக் கவனிப்பதிலும், பாவேந்தருக்குப் பணிவிடை செய்வதிலும் கவிஞர் ஈடுபட்டார். அப்போது ஒருநாள் ஒரு கவிதை எழுதி, அதை பாவேந்தரிடம் காட்ட அஞ்சி, கவிஞர் தந்தை பெயராகிய அருணாசலத்தின் முதல் எழுத்து அ கவிஞரின் பெயராகிய கல்யாணசுந்தரம் என்பதில் கல்யா ஆகியவற்றை இணைத்து அகல்யா என்ற புனை பெயரிட்டு, அஞ்சலில் வந்த கவிதைகளுக்கிடையே, தனது கவிதையையும் வைத்துவிட்டார் கவிஞர். கவிதைகளைப் படித்துப் பார்த்த பாவேந்தர் அகல்யா கவிதையை மிகவும் பாராட்டினார். அப்போதும் கவிஞர் அந்தக் கவிதையை எழுதியது தான்தான் என்று கூறவில்லை. பாவேந்தர் பாராட்டிய அந்தக் கவிதையும் இதுவரை கிடைக்கவில்லை. பாவேந்தரின் தொடர்பு மக்கள் கவிஞருக்கு சினிமா உலக அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் பாடல் ஒன்றும் எழுதவில்லை.
1954 நவம்பர் 7இல் ஜனசக்தி நவம்பர் புரட்சி மலராக வெளிவந்தது. இந்த மரலில் நவம்பர் புரட்சியை வரவேற்று பட்டுக்கோட்டையார் எழுதிய புதிய ஒளி வீசுது பார் என்ற கவிதைதான் அச்சில் வந்த பட்டுக்கோட்டையாரின் முதல் கவிதையாகும்.
“புதிய ஒளி வீசுதுபார்
இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுதுபார்
இன்பம் அங்கே”
என்று தொடங்கும் அந்தக் கவிதை. மகாகவி பாரதி, ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்ற கவிதைக்குப் பின் ரஷ்யப் புரட்சியைப் பற்றி வெளிவந்த கவிதைகளில் முதலிடத்தைப் பெறுகிற கவிதையாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது உறுப்பினர்களாக இருந்த முக்தா சீனிவாசன், டி.கே.பாலசந்தர் ஆகியோர் திண்டுக்கல்லில் நடக்கவிருந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் நாடகம் அரங்கேற்ற விரும்பினர். டி.கே.பாலசந்தர் தங்கியிருந்த மைலாப்பூர் அறையில் இதுபற்றி மாலை நேரங்களில் விவாதிப்பர். அந்த விவாதங்களில் தோழர் ஜீவாவும் கலந்து கொள்வார். கண்ணின் மணிகள் என்ற அந்த நாடகத்தை மயிலை நித்தியானந்தம் எழுதினார். அந்த நாடகத்திற்குரிய பாடல்கள் பற்றி விவாதம் எழுந்தபோது, அதற்கு ஒருவரை அழைத்து வருவதாகக் கூறினார் ஜீவா. அதன்படி மறுநாள் பட்டுக்கோட்டையாரை அங்கே அழைத்துச் சென்றார்.
பட்டுக்கோட்டையாரிடம் கதையைச் சொல்லி, ஒரு விவசாயி, தன் முறைப்பெண்ணிடம் பாடுவது
போன்று ஒரு பாடல் எழுதக் கூறினர்.
“ஆண்: கதிராடும் கழனியில்
சதிராடும் பெண்மணி
கலைமேவும் அடியிலே
கவர்ந்தாய் கண்மணி
முதிராத செடியே
முல்லை மலர்க் கொடியே
பெண்: அன்பே என் ஆருயிரே
ஆணழகே என்னுடன்
தென்பாங்குப் பண்பாடும்
தீராத இன்பமே!
ஆண்: ஏரோட்டும் விவசாயி
எருதுகளை ஏரியிலே
பெண்: நீராட்டும் அழகைப்பாரு
கண்ணாலே!
ஆண்: பாராட்ட வேண்டியவள்
பானைகளைத் தலையில் வைத்து
பக்குவமா வாராபாரு
பின்னாலே!
பெண்: தேனாறு பாயுது
செங்கதிரும் வாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது!
ஆண்: மானே இந்த நாட்டிலே வகையான மாறுதல்
வந்தாலன்றி ஏது சீருகள்?
இருவரும்: உழவனும் ஓயாத
உழைப்பும் போல் நாமே
ஒன்றுபட்டு வாழ்க்கையினில்
என்று மிருப்போம்”
என்ற பாடலை எழுதிக் கொடுத்தார் பட்டுக்கோட்டை. அங்கிருந்த அனைவராலும் இந்தப் பாட்டு பாராட்டப் பெற்றது. ஜீவா, பட்டுக்கோட்டையைத் தட்டிக் கொடுத்து, நீ மீண்டும் தோன்றிய பாரதியடா! என்று பாராட்டினார். இந்த பாடலே பட்டுக்கோட்டையார் நாடகத்திற்காக எழுதிய முதல் பாடலாகும்.
அதே நாடகத்தில்,
“கண்ணை இழுக்கும்
அழகொன்று கண்டேன்
காவியம் ஓவியம்
யாவையும் கண்டேன்
மின்னை நிகரிடைப் பெண்களும் ஆண்களும்
வேலை செய்யும் அந்தக்
கோலத்தைக் கண்டேன்”
என்று தொடங்கும் மற்றொரு பாடலையும் எழுதினார் பட்டுக்கோட்டை.
முதலில் குறிப்பிட்ட பாடலில் சிறிது மாற்றம் செய்து, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற படத்திற்கு, பிற்காலத்தில் பயன்படுத்திக் கொண்டார் பட்டுக்கோட்டை.
1954இல் தொடங்கிய படித்த பெண் என்ற திரைப்படத்தில்தான் பட்டுக்கோட்டையார் முதன் முதலாக சினிமாவுக்குப் பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றார். இந்தப் படத்தில்,
“காப்பி ஒண்ணு எட்டணா
கார்டு சைசு பத்தனா
காண வெகு ஜோரா யிருக்கும்
காமிராவைத் தட்டினா
என்ற பாடலையும்,
வாடாத சோலை மலர் பூத்த வேளை
வளர்காத லாலே
மனம் பொங்குதே”
என்ற பாடலையும் எழுதினார் பட்டுக்கோட்டை. இந்தப் படம் 1956இல் தான் வெளி வந்தது. இந்தப் படத்திற்குப் பின் ஆரம்பிக்கப்பட்டு 1955லேயே வெளிவந்துவிட்ட மஹேஸ்வரி என்ற படத்தில்,
“அள்ளி வீசுங்க _ பணத்தை
அள்ளி வீசுங்க _ என்
ஆசை வேணும்
என்றால் காசை அள்ளி வீசுங்க
என்ற பாடலையும்,
அறம் காத்த தேவியே
குலம் காத்த தேவியே _ நல்
அறிவின் உருவான ஜோதியே
கண்பார்த் தருள்வாயே
அன்னையே! அன்னையே!”
என்ற பாடலையும்,
“சின்ன வீட்டு ராணி
எங்க ராணி
சிங்காரத் தங்க நிறம்
அவள் மேனி
கொள்ளைக்காரன் போலே
எல்லை தாண்டி வந்த
கொடியவரை அழிக்கும்
கோபராணி”
என்ற பாடலையும்,
“அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ?
என்ற பாடலையும்,
ஆகாய வீதியிலே
அண்ணாந்து பார்த்தபடி _ என்ன
ஆராய்ச்சி பண்ணுறீங்க?
சொந்தமாய் இருந்து
ஆனந்த நேரமிதை
ஏனோ வீணாக்குறீங்க”
என்ற பாடலையும் எழுதினார்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் இடம் பெற்று, முதலில் வெளிவந்த படம் என்ற பெருமையை அந்த மகேஸ்வரி பெற்றாள்.
1954இல் திரைப்படத் துறையில் புகுந்த பட்டுக்கோட்டையார், சிறிது காலத்தில் திரைப்படக் கவிஞர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு புகழின் உச்சியில் ஏறி நின்றார்.
சினிமா போஸ்டர்களில் பாடலாசிரியர் பெயர் போடத் தொடங்கியதும், பாடலாசிரியர் பெயரைக் கண்டதும் தியேட்டரில் ஜனங்கள் கரகோஷம் செய்ததும் பட்டுக்கோட்டையாருக்குக் கிடைத்த வெற்றிகளாகும். அதே போன்று தங்கள் படத்திற்குப் பட்டுக்கோட்டையாரின் பாடலுக்காக அவர் வீட்டு வாசலில் தயாரிப்பாளர், டைரக்டர்களின் கார்கள் காத்துக் கிடந்ததும், பிளாங்க் செக்குகளைக் கொடுத்து, பாட்டுக்கு வேண்டிய தொகையை கவிஞரையே எழுதச் சொன்ன சம்பவங்களும் பட்டுக்கோட்டையாரின் பாடலுக்குக் கிடைத்த வெற்றிகளாகும்.
சினிமாவில் பிஸியாக பட்டுக்கோட்டையார் இருந்தபோதும் கூட வாய்ப்புக் கிடைக்கும் போது ஜனசக்தியில் கவிதை எழுதுவதையும், ஜீவாவையும், இயக்கத் தோழர்களையும் சந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார். ஜீவாவின் தொடர்பு பட்டுக்கோட்டைக்கு வழிகாட்டியாக அமைந்தது.
“செக்கத் சிவந்த செழுங்
கதிரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் _ புவி
மக்கள் மதிக்கண் விழித்துக்
கிளம்பிட
வானில் உதித்துவிட்டான்
கொக்கரக் கோவென கோழியுங்
கூவுது
கொக்கொடு பற்பல புட்களும்
மேவுது
தொக்கி நின்ற யிருள் சொல்லாமல்
ஓடுது
பத்துத் திசையிலும் _ ஜன
சக்தி முழங்கிடுதே!
தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு
பாடுது
தீய செயல்களைச் செங்கைகள்
சாடுது
பக்குவங்கொண்ட படைபல கூடுது
சிக்கலறுத்துப் பொதுநடை போடுது
சொத்தை மனந்திருந்தப் _ புதுச்
சத்தம் பிறந்திடுதே!
கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே -_ தலைப்
பித்தம் பிடித்ததொரு கூட்டம்
தனித்தனி
பேதம் வளர்த்திடுதே!
ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே _ ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே _ மக்கள்
வெற்றி நெருங்கிடுதே”
என்ற கவிதையை 15.8.1959இல் வெளிவந்த ஜனசக்தியில் எழுதினார் பட்டுக்கோட்டை. இந்தக் கவிதைதான் அவர் எழுதிய கடைசிக் கவிதையாகும்.
இரவு பத்து மணி இருக்கும். வர்ண விளக்குகள் ஆங்காங்கே இந்திர ஜாலம் புரிந்து கொண்டிருக்க விஜயா கார்டனில், வீனஸ் பிக்சர்ஸ் கல்யாண பரிசு வெள்ளி விழாவில் விருந்துக்குப் பிறகு நான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். சாப்பாட்டை முடித்துவிட்டு, தாம்பூலத்தைக் குதப்பியபடி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்குச் சிறிது தூரத்தில் நின்றிருந்தார். நான் அவரை அழைத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டே அவர், உங்களை நானே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார் சிரித்துக் கொண்டே.
என்ன விஷயம்? என்று கேட்டேன்.
கவிஞன் என்பவன், பல்வேறு இசைக் கருவிகளை வைத்து சங்கீதத்தை உண்டாக்கும் கலைஞரைப் போல, வார்த்தைகளைப் பொறுக்கி எழுதுபவனா? என்று அவர் என்னிடம் கேட்டார்.
கவிஞர் கேட்ட கேள்வி என்னை திடுக்கிட வைத்தது! அதுவும் சாதாரணக் கவிஞரா அவர்!
எனக்குப் புரியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் _ என்னைப் பொறுத்த வரை கவிதை என்பது இதயத்தில் சுரந்து, எண்ணத்தில் மிதந்து வருவது. சொற்களைக் கண்டு பிடித்துப் போட்டுக் கவிதை எழுதினால், அது கவிதை ஆகாது! என்றேன்.
இதை நமது சங்கீத டைரக்டர்கள் ஏன் உணருவதில்லை? மெட்டமைக்க அவர்களுக்கு நமது கவிதை ஏற்றதாக இல்லாவிட்டால், மெட்டை மாற்றுவதற்குப் பதில் ஏன் கவிதையை மாற்றச் சொல்கிறார்கள்? அதற்காகச் சொற்களை எப்படிப் பொறுக்கிப் போட வரும்? என்றார் கவிஞர். உண்மைதான்! என்றேன் நான். இங்கு இது மட்டுமல்ல! நடிகர்கள் கூட கவிதைகளில் கை வைத்து விடுகிறார்கள். ஒரு பெரிய தயாரிப்பாளருக்காக நான் பாட்டொன்று எழுதினேன். அதில் வரும் கவிதையை ஹாஸ்ய நடிகர் சொல்படி மாற்றிவிட்டார் தயாரிப்பாளர். நடிகர்கள் தங்கள் கருத்தைச் சொல்லாமே தவிர, பாட்டை மாற்றுவது கூடாது என்பது என் அபிப்பிராயம். அப்படிப் பார்க்கப்போனால் கவிஞர்களும் நடிகர்களைப் பற்றி குறை கூற இடம் ஏற்படும் என்றார் பட்டுக்கோட்டை.
எப்படி? என்றேன்.
கவிதையில் வரும் சொற்களின் ஆழத்தையும் நயத்தையும் பொருளையும் உணர்ந்து எத்தனை நடிகர்கள் பாடி, நடித்திருக்கிறார்கள்? அதே போல் நடனத்தையும் பாவத்துடன் உணர்ந்து யார் ஆடுகிறார்கள்? நடிகைகள் காட்டும் அபிநயத்துக்கும் பாட்டுக்கும் அநேகமாகப் பொருத்தம் காணவே முடியாது. இதே போல் பாட்டு ஒரு பங்கு என்றால் அதற்கான இசை இரண்டு பங்காக இருக்கக் கூடாது! நான் சமீபத்தில் காவடிச்சிந்து மெட்டில் ஒரு ஸ்டூடியோ முதலாளியின் படத்திற்குப் பாட்டெழுதிக் கொடுத்தேன். அதில் பாட்டில் முக்கால் பகுதியை நீக்கிவிட்டு, மற்ற பகுதிக்கு வெறும் இசையை இணைத்திருக்கிறார்கள். இம்மாதிரி செய்வதையும் நான் மனதார வெறுக்கிறேன். இதனால் கவிஞனுக்கு ஏற்படும் உற்சாகத்தையும் குலைத்து விடுகிறார்கள் என்று சொன்னார் கவிஞர் திலகம்.
இதையெல்லாம் மனதுக்குள் போட்டுப் புழுங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இதை அப்படியே ஒரு கட்டுரையாக வடித்துத் தருகிறேன். உங்கள் வரப்போகும் இதழில் போட்டு விடுங்கள் என்றார் கவிஞர். நிச்சயமாகச் செய்வோம். ஆனால் உங்களிடமிருந்து கட்டுரை வருவதுதான் சீக்கிரத்தில் நடக்காத காரியமாயிற்றே! என்றேன்.
இம்முறை அப்படியாகாது என்று நினைக்கிறேன். அப்படி ஒரு கால் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் இதை பேட்டி என்ற வகையில் உங்கள் பத்திரிகையில் வெளியிட்டு விடுங்கள்! என்றார் என்று பேசும்பட நிருபர் எழுதினார். இந்தப் பேட்டியில் பட்டுக்கோட்டையார் கூறியிருக்கும் கருத்துக்கள் அன்றைய இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் நெஞ்சில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியவைகளாகும். இந்தப் பேட்டியில் ஒருக்கால் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் என்று கூறிய பட்டுக்கோட்டை திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 8.10.1959 அன்று மறைந்தார்.
மேலே குறிப்பிட்ட பட்டுக்கோட்டையாரின் பேட்டியை பேசும் பட நிருபர், கவிஞர் தந்த கடைசிப் பேட்டி என்ற தலைப்பில் ஓர் கட்டுரையாக எழுதினார். இதுவே அந்த மக்கள் கவிஞரின் இறுதிப் பேட்டியாகும்.
மயானத்தில் மக்கள் கவிஞரின் உடம்புக்குத் தீயிடப்படுகிறது. அக்னி நாக்குகள் அந்த மகத்தான கவிஞனை ஆரத் தழுவுகிறது. அங்கே நடந்த இரங்கற் கூட்டத்தில், அதோ தீயில் எரிந்து கொண்டிருக்கிறானே அவனுக்கு, அரை அணாவுக்கு வேர்க்கடலையும், பழைய விக்ரமாதித்தன் கதைப் புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்தால் நூறு பாட்டு எழுதிக் கொடுப்பான் என்று ஜீவா பேசினார். பட்டுக்கோட்டை இறந்ததைக் கேட்டு அழுதவர்களை கூட ஜீவாவின் பேச்சைக் கேட்டு அழுதவர்கள் அதைவிட அதிகம் என்று நினைவு கூறுகிறார் டைரக்டர் முக்தா சீனிவாசன்.
பாட்டுக்காக ஒரு படம் ஒடுகிறதென்றால், அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுதியிருக்கிறாரா? என்று கேட்கும் நாள் இது. அவர் பாட்டெல்லாம் பைந்தமிழ் நாவுக்கிசைந்த சொல். காதுகளுக்கினிய கானம். கருத்தில் மணக்கும் கவிதை என்று தமிழகம் அவரைப் போற்றுகிறது. தமிழ் சினிமா உலகில் உதய ஞாயிறுராகத் தோன்றி இசை மணம் பரப்பிய அந்த இளம் கவிஞர் மறைந்து விட்டார் என்ற செய்தி செந்தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துவிட்டது.
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
என்ற பாட்டைப் பாடிய புலவர் மண்ணில் மறைந்துவிட்டார். தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடி, தமிழனை விதித்திருக்கச் செய்த கலைஞன் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்! அவர் பாடல்கள் சிரஞ்சீவியாகப் பல குழந்தைகள் நாவில் ஒலிக்கின்றன.
“உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும்”
இன்பத் தீபாவளி என்று மழலை மொழியில் பாடாத குழந்தைகளும் தமிழகத்தில் உண்டோ? ஆனால், கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியாக அவர் வாழ்வு முடிந்து விட்டது.
அருமை இளம் மனைவியையும், ஐந்து மாதக் குழந்தையையும், வயது முதிர்ந்த தாயையும், தந்தையையும் ஆறாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அவர் மறைந்தார் என்பதைக் கேட்கும் போது, யார்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அகால மரணம் கவிதை உலகத்திற்கு ஒரு மாபெரும் நஷ்டம். படத்தொழிலுக்கு ஒரு பெரும் நஷ்டம். தமிழ்நாட்டுக்கே அது தாங்க முடியாத நஷ்டம் என்று 18.10.59 அன்றைய ஆனந்த விகடன் தலையங்கத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் புதிய ஞாயிறாகத் தோன்றி, புதிய ஒளி பாய்ச்சிய அந்த மக்கள் கவிஞன், தனது இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தான். அவனுடைய கவிதைகளைப் படிப்பதும், மக்களிடத்தில் கொண்டு செல்வதும் புரட்சிகரமான கடமைகளில் முதன்மையானதாகும்!