எழுத்தாளார் இராசேந்திர சோழன் காலமானார்

மிழிய சிந்தனையாளரும், ‘மண்மொழி’ இதழின் ஆசிரியருமான எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (01.03.2024) காலமானார். இவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பாகும். இவரது சிறுகதைகள் தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு முக்கிய வரவுகள். வடிவ நேர்த்தியும், கனலும், எதார்த்தமும் கொண்டவை. அடிமன சலனங்கள் வெளிப்படும் தருணங்களை கதையாக்குவதில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. இவர்களுக்கு இணையானவர்.

அவரது உடல், அவர் விருப்பப்படி, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவர் மகன் வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்.

எழுத்தாளர் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ஆம் திகதி தென்னார்க்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார். தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். 1961 இல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தார். தந்தை ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்படி் சொல்ல அதை மறுத்து சென்னைக்குச் சென்று பல வேலைகள் செய்து வாழ்ந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1965 இல் திரும்பி வந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தகுதி பெற்றார்.

1968 இல் ஆசிரியராகி இருபது ஆண்டு காலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வசித்து வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

தமிழ் எழுத்தாளர். மார்க்ஸிய பார்வை கொண்டவர். பின்னர் தமிழ்த் தேசியப் பொதுவுடைமைப் பார்வை என மாற்றிக்கொண்டார். வட தமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொது வாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயற்பாடுகளால் நிறைத்தவர்.

‘க்ரியா’ வெளியீடாக வெளிவந்த இவரது ‘எட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பும், மூன்று குறுநாவல்கள் அடங்கிய ‘இராசேந்திர சோழன் குறு நாவல்கள்’, ‘பறிமுதல்’ ஆகிய தொகுதிகளும் புனைவிலக்கியத்தில் முக்கியமானவை.தமிழ் நாடகக் கலைக்கு அஷ்வகோஷின் பங்களிப்பு முக்கியமானது. அதன் புத்தக வடிவங்களாக அஷ்வகோஷ் நாடகங்கள், தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள், மரியாதை ராமன் மதிநுட்ப நாடகம், மேற்கத்திய இந்திய நாடகம் இயங்குதல் கோட்பாடு இவற்றை உள்ளடக்கிய ‘அரங்க ஆட்டம்’ என்ற நூலும் இவர் தமிழுக்கு தந்த கொடைகள்.

அரசியல் செயல்பாடுகளிலும் களம் நின்று விடிவு தந்த மிகச் சிறந்த போராளி. ‘எங்கள் ஊரில் ஒரு கதாபாத்திரம்’ என்ற சிறுகதை ஆனந்த விகடனில் பரிசு பெற்ற முதல் கதையாக வெளிவர, அதைத் தொடர்ந்து ‘கசடதபற’, ‘கணையாழி’, ‘அஃக்’ ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். தமிழின் முக்கிய அடையாளம், உன்னதமான படைப்பாளி ஆர். இராஜேந்திர சோழன்.

இவரது சொந்த ஊரான மயிலம் பற்றி இவர் சொல்லும் போது, “மயிலத்தில் மயில் போலவே ஒரு மலை இருக்கும். அந்த மலையின் பிம்பம் மயில் வடிவத்திலேயே இருக்கும். அந்த மலையோடு நான் உரையாடியதும், அந்த மலை என்னோடு உரையாடியதுமான அந்த பசுமையான காலத்தில் ஞாபக அடுக்குகளை சுமந்தவனாகவே என் இளமைக் காலம் இருந்தது” என்பார்.

மேலும் “பிராட்வே எதிரில் தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் சிறுவனாக நான் விளையாடிக் கொண்டிருந்த போது, எனது அம்மா காலமாகி விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட போது உறைந்து போன அந்த மனநிலையின் மீதங்களோடு தான் எனது படைப்புக்களையும் சம்மந்தப்படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது. திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் போதுமான கருத்தடைச் சாதனங்கள் இல்லாத அந்த காலத்திய பெண்மணிகள் சந்தித்த மரணங்களில் எனது தாயின் மரணமும் ஒன்று. எனவே தான் எனது படைப்புக்களில் பெண்கள் பிரதானமானவர்களாகிறார்கள். பெண் இல்லாமல் எனது படைப்புக்கள் இல்லை, ஏன் இந்த உலகமே இல்லை. எனது பாட்டி சொல்வார்கள் பெண் இல்லாத வீடும் பூட்டை (சரட்டை) இல்லாத கேணியும் ஒன்று என்பார்கள் அது தான் உண்மை”. என்று இவர் தனது படைப்புகள் குறித்து கூறியவற்றை பார்க்கும் போது இவரது மொழியும் கலையும் பெண்களைச் சார்ந்ததே என்பது ஒட்டுமொத்தமான 77 சிறுகதைகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தினால் நன்றாகப் புலப்படும்.

இவர் தனது சிறுகதைகளுக்கு புதுமைப் பித்தனின் கதை வடிவங்களைத் தேர்ந்து கொண்டார். அந்த வடிவத்திற்குள் தான் ஒரு வாழ்வின் கிண்டலான விமர்சனம் கலைத் தன்மையோடு இருக்கும். புதுமைப் பித்தன் படைப்புகளில் உரையாடலற்ற பனுவல் இருக்கும். இவரது கதைகளில் உரையாடல் மிகுந்த பனுவல் இருக்கும். இதிலிருந்து தான் இவரது நாடக எழுத்துக்களும் துவங்குவதாகக் கருத வேண்டி இருக்கிறது.

அரசியல் வாழ்க்கை

இராசேந்திர சோழன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கலை இலக்கியச் செயல்பாடுகளுடன் இணைந்தார். அவர்களின் அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியுடன் (மார்க்ஸிஸ்ட்) கருத்துவேறுபாடு கொண்டு பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) யில் சிலகாலம் ஈடுபட்டார்.

1992 இல் சோவியத் ரஷியாவின் உடைவுக்குப் பின் மார்க்ஸிய அமைப்புகளில் தேசியம் சார்ந்த உரையாடல்கள் தொடங்கின. இந்தியத் தேசியம் என்னும் அமைப்பை ஏற்க முடியாதென்றும், தமிழ்த்தேசியம் போன்ற பண்பாட்டுத் தேசிய உருவகங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறும் ஒரு தரப்பினர் உருவாயினர்.

இராசேந்திரசோழன் தமிழ்த் தேசிய அரசியல் மேல் நம்பிக்கை கொண்டவர். ‘தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியது தான் மார்க்ஸியம். மார்க்ஸியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறையப் பேரிடம் உள்ளது. அப்படி இல்லை’ என தன் அரசியல் நிலைப்பாட்டை பல செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சலி

எழுத்தாளர் இராசேந்திரசோழன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புனைவிலக்கியத்திற்கும் முற்போக்கு கருத்துலகிற்கும் 1970 முதலாக காத்திரமான பங்களிப்பினைச் செய்துவந்த அஸ்வகோஷ் எனும் தோழர் ராசேந்திர சோழன் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக, தோழர் கே.முத்தையாவின் தலைமையில் தீவிரமாக இயங்கியவர். சிறுகதைகள் மட்டுமின்றி ஏராளமான அரசியல், வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

அவரது முதல் சிறுகதைத்தொகுதியான ‘பறிமுதல்’ போலவே பின்னர் வந்த ‘எட்டுக்கதைகள்’ தொகுப்பும் பரவலான கவனம் பெற்றது. பத்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் வெளியிட்டுள்ளார்.

பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பயிற்சிபெற்று, பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். அவசர நிலைக்கு எதிரான அவரது விசாரணை என்கிற நாடகம் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு நாடக முகத்தை வழங்கிய முன்னோடி. பல மாவட்டங்களில் நாடகப்பட்டறை நடத்தி த.மு.எ.ச நாடகக்குழுக்களை உருவாக்குவதற்கு உதவினார்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிற்காலத்தில் த.மு.எ.சவில் இருந்து விலகியிருந்தாலும் இறுதிவரை ஓர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பெரும்பங்காற்றி மறைந்துள்ள தோழர் இராசேந்திர சோழன் மறைவுக்கு த.மு.எ.ச தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது என தெரிவித்துள்ளனர்.

இராசேந்திர சோழனின் மறைவிற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில், “இராஜேந்திர சோழன் தமிழ் இலக்கியத்தின் அரிதிலும் அரிதான நவீன படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய கதைகள் பேசிய உலகங்கள், அவருடைய கதையின் மாந்தர்கள் பேசிய மொழி, அவருடைய கதைகளின் கருப்பொருட்கள் எல்லாமே மிகவும் அரியவை. எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் களத்திலும் எழுத்திலும் நின்று பணியாற்றுவதற்குப் பாதை அமைத்துத் தந்த முன்னோடிகளில் ஒருவர் அவர்” என்று புகழ் வணக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: