‘சே’ என்றொரு உலக புரட்சியாளன்!
–கார்த்திக் விநாயகம்
பொலிவியாவில் சேகுவாரா கொன்றுப் புதைக்கப்பட்ட இடத்தின் சரிவில் எழுதப்பட்டுள்ள ஒரு வாசகம் :
“நீங்கள் எப்படி இருந்துவிடக் கூடாது என அவர்கள் அஞ்சுகிறார்களோ, அப்படி வாழ்ந்தவர் – சே!”
ஏகாதிபத்தியத்தின் குலை நடுங்க வைத்த லத்தின் அமெரிக்கன். ஆனால், சே-வை லத்தின் அமெரிக்காவுடன் மட்டுமே நாம் தொடர்புபடுத்தி பார்ப்போமேயானால் நமது பார்வையில் ஏதோ கோளாறு உள்ளதென்று பொருள்.
சேகுவேராவை நோக்கி நீங்கள் அர்ஜென்டினியரா என்று கேள்வியை எழுப்பினால் , “இல்லை. நான் இந்த உலகத்தின் குடிமகன் ( global citizen)” என்பார். சொல்லில் மட்டும் அல்ல செயலிலும் அப்படியே வாழ்ந்துக் காட்டியவர் அவர்.
அர்ஜென்டினாவின் ரோசரியோவில் 1928 ஜூன் 14 – ஆம் தேதி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சே. அவரது இயற்பெயர் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச். இயல்பிலேயே சாகச மனநிலை உடையவராக இருந்த சே, தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்த தருவாயில் தென்னமெரிக்கா முழுவதும் அறியவேண்டும் என்ற கனவை நோக்கிய பயணத்தை நண்பன் ஆல்பர்டோ க்ராண்டோவுடன் தொடங்கினார்.
மோட்டார் சைக்கிள் டைரிஸ் :
சேகுவாரா – ஆல்பர்டோ க்ராண்டோ தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பயணம் சிலி, பெரு, கொலம்பியா, என தென்னமெரிக்கா முழுவதுமாக 8000 கி.மி நீண்டதொரு பயணமாக இருந்தது. இந்த பயணமே சேவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. லத்தின் அமெரிக்காவின் உண்மையான முகத்தைப் பார்த்தார் சே. ஏழ்மை, நோய், அடிப்படை சுகாதார குறைபாடு என சமூகத்தின் கோரமுகத்தை முழுமையாக உணர்ந்தார்.
“நாங்கள் லத்தின் அமெரிக்க அடித்தட்டு மக்களின் வாழக்கையை பார்த்தோம். பிச்சைக்காரர்களிடம் பேசினோம். எங்கள் நாசி அந்த துன்பத்தை துல்லியமாக உணர்ந்தது!” – சிலியில் நுழைந்தபோது சே சொன்ன வார்த்தைகள் இவை.
ஒரு மருத்துவராக மனிதர்களின் ஏற்படும் நோயை அறிந்தவர், பயணத்தின் இறுதியில் சமூகத்தின் நோயை கண்டறிந்தார். அந்த நோய் : “அமெரிக்க ஏகாதிபத்தியம் ” ஆம். அதுதான் மொத்த தென்னமெரிக்காவையும் ஆட்கொண்டிருக்கிறது என அறிந்தார். அதுவே மருத்துவராக இருக்க வேண்டியவர், போராளியாக மாற வைத்தது. மருத்துவம் பார்க்க வேண்டியது மனிதருக்கு அல்ல; ஏகாதிபத்தியத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்குண்ட சமூகத்துக்கு என்பதை உணர்ந்தார்.
குவாத்தமாலா – மெக்ஸிகோ – கியூபா:
புரட்சியின் மூலமாக சமூக மாற்றத்தை முன்னெடுக்க முடிவு செய்த பின், சே முதலில் சென்றது 1953 -இல் குவாத்தமாலா. அமெரிக்காவின் “United Fruit Company”-க்கு எதிரான போராட்டம். போராட்டக்குழுக்கள் முழுமையாக முனைப்புடன் செயல்படாததால் அதிலிருந்து விலகி மெக்சிகோவில் மருத்துவப் பணிகளை தொடர்ந்தார் சேகுவேரா. அங்கிருக்கும்போதுதான் ராவுல் காஸ்ட்ரோ மூலமாக பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் பெற்றதாகிப் போனது. கியூபா விடுதலைப் போராட்டத்தின் முக்கிய போராட்டமான ஜூலை 26 -இல் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின், மீண்டும் மெக்ஸிகோ வந்து சேர்ந்தார் சே. பிடெலும்- சேவும் அன்றைய இரவு முழுவதும் நடந்திய விவாதத்தில் இறுதியில் சே- பிடலுடன் இணைந்து கியூபா வந்தடைகிறார் . 82 பேருடன் வந்த அந்த குழு கியூபாவின் அன்றையஅவலநிலை , பாடிஸ்டாவின் கொடுங்கோல் ஆட்சி ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைத்ததுடன் மக்களை புரட்சிக்கு ஆயத்தமாக்கியது. மருத்துவராக வந்த சே, தன்னுடைய தொடர் ஈடுபாட்டால் ஒரு கொரில்லா குழுவுக்கு தலைமை ஏற்கிறார்.
மக்கள் புரட்சி எங்கும் தீயாய் பரவ ஆரம்பிக்கிறது.
போராட்டம் ஒருபுறம் வலுப்பெற, மற்றொருபுறம் அமெரிக்காவின் கைப்பாவை பாடிஸ்டா மக்கள் செல்வாக்கை இழக்கிறார். புரட்சியின் முக்கிய திருப்புமுனையாக சே தலைமையிலான குழு சாண்டாகிளாராவை கைப்பற்றுகிறது. கியூபா முழுவதும் புரட்சியாளர்கள் கைவசம் வருகிறது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் தன்னிரகற்ற தலைவராக உருவெடுக்கிறார். பிறப்பால் அர்ஜெண்டைனியராக இருந்தாலும் மக்களை விடுதலையை மட்டுமே குறிக்கோளாக கொண்ட போராளி சேகுவாரைவை கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும் தேசிய வங்கியின் தலைவராகவும் நியமிக்கிறார் ஃபிடல்.
சேவின் சமூக புரட்சி:
ஆயுதபுரட்சியின் மூலம் பெறப்பட்ட அரசதிகாரம் சமூக புரட்சி செய்யாமல் நீட்டிப்பது இயலாது என்பதை உணர்ந்த சே, பல சமூக மாற்றங்களை முன்னெடுத்தார் . உலகத்தின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கபட்ட கியூபாவின் கரும்பு உற்பத்தி செய்யும் நிலங்கள் வெளிநாட்ட்டவர்கள் மொத்தமாக கையகபடுத்தியதை மீட்டெடுத்தார். நில சீர்த்திருத்தை கொண்டுவந்தார். தொழில்துறையில் கியூபாவை முன்னேற்றினார். மருத்துவம், பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தினார். பொருளாதார தடைகளை சரி செய்ய உலகநாடுகள் முழுவதும் பயணம் செய்தார். இன்று கியூபா மருத்துவத்திலும், கல்வியிலும் தன்னிறைவை அடைந்ததற்கு சே முக்கிய பங்காற்றினார் .
ஓய்வறியா புரட்சியாளன் :
கியூபாவின் முன்னேற்றத்தை ஒருபுறம் உறுதி செய்துகொண்டு, மற்றொருபுறம் தென்னமெரிக்கா முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து காப்பற்ற முனைந்தார் சே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ” ஒரு நாட்டில் செய்த புரட்சியை தக்கவைத்துக் கொள்ள மற்ற நாடுகளிலும் புரட்சி பரவவேண்டியதன் அத்தியாவசியத்தை அனுபவ ரீதியில் உணர்ந்தார்”. அதற்கு முக்கிய காரணம் ட்ராட்ஸ்கியின் முக்கிய படைப்பான “நிரந்தபுரட்சி” என்ற புத்தகம். அதை தன்னுடைய பொலிவிய பயணத்தில் சே உடன் வைத்திருந்தாக குறிப்பிடுகிறார் ரிக்கார்டோ நஃப்புரி. கியூபாவின் உயரிய பதவியை பிறநாடுகளிலும் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே சே துறந்தார் . பொலிவியாவை நோக்கி தன்னுடைய அடுத்த பயணத்தை நகர்த்தினார் . பொலிவியாவின் அரசியல் சூழ்நிலையும் அவருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது . அதே நேரம் அமெரிக்காவோ பிடல் காஸ்ட்ரோவைவிட சேகுவாராவே ஆபத்தனாவர் என உணர்ந்து தனது CIA மூலம் அவரை பின் தொடர்ந்து பொலிவியாவில் சுற்றிவளைத்தது . முதல் தாக்குதலில் காயம் அடைந்த “சே” லா ஹிகுயேர என்ற இடத்திற்கு அழைத்துசெல்லபட்டு விசாரணைக்கு உட்படுத்தபட்டார். அக்டோபர் – 9 திகதி சேகுவேராவை கொல்ல ஏகாதிபத்தியத்தால் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அவர் உயிரை பிரிக்க 9 குண்டுகள் உடலில்பாய்ச்சபடுகிறது . உலகம் தன்னிகரில்லா ஒரு புரட்சியாளனை இழந்தது. சடலமான புரட்சியாளனின் கரங்கள் வெட்டி வீசப்பட்டன. உலகை கூறுபோடும் கழுகுகளுக்கு எதிர்தெழும் புரட்சியாளர்களின் கரங்களைக் கண்டுகூட பயம்.
சே ஒரு அடையாளம் :
சே – ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளம், தோழமையின் அடையாளம், பொதுவுடமையின் அடையாளம், நட்பின் அடையாளம், புரட்சியின் அடையாளம், மார்க்சியத்தின் அடையாளம், அவரின் முகம் வரைந்த ஆடை அணிந்திருப்பவருக்கு தெரியவேண்டும் இந்த அடையாளத்தின் வலிமை.
“ஒவ்வொரு அநீதியிலும் நீங்கள் கோபமடைந்தால் நீ என்னுடைய தோழன்!” – சே.