நேட்டோ எனப்படும் அமெரிக்காவின் கூலிப்படை

ரோப்பிய – ஆசிய அரங்கில் அமெரிக்கா தனது வல்லாதிக்க சதுரங்க விளையாட்டில் பலி கொடுக்கும் விளையாட்டுக் காயாகவே உக்ரைனை பயன்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து நாஜி ஹிட்லரிடமிருந்து ஐரோப்பாவை ரஷ்ய செஞ்சேனை காப்பாற்றியது. 2.5.1945 இல் பெர்லின் ரீச்ஸ்டாக் (Reichstag) கோட்டையில் சோவியத் படைகள் செங்கொடியை ஏற்றும் போதே அமெரிக்காவிற்கும் பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கும் கம்யூனிச கிலி பற்றிக் கொண்டது. இதன் காரணமாகவே தனது சர்வதேச மேலாதிக்க உயர்நிலையை உலகிற்கு காட்ட, தேவையின்றி அணுகுண்டுகளை ஜப்பானின் ஹரோஷிமா- நாகசாகி நகர்களில் அமெரிக்கா வீசியது. லட்சக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், மக்களைப் படுகொலை செய்தது. இதன் தொடர்ச்சியில் ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் செல்வாக்கையும் கம்யூனிசத்தின் விரிவாக்கத்தையும் தடுத்து நிறுத்த பிரிட்டிஷ் பிரபுதந்திரிகளால் உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ கூட்டணியாகும். 

பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளை கொண்ட துவக்க கால நேட்டோவில் 1949-இல் அமெரிக்கா ஐரோப்பாவின் அடுத்தடுத்த நாடுகளையும் இணைக்கச் செய்தது. ஒவ்வொரு நாட்டையும் இவ்வாறு இணைக்கச் செய்வதற்கு அந்த நாடுகளின் ஆட்சி அதிகார மையங்களுக்குள் புகுந்து தனக்கு சாதகமாக முடிவெடுக்க சதிவேலை செய்தது. இன்று 27 நாடுகளைக் கொண்ட தனது சர்வதேசக் கூலிப்படையாகவே அமெரிக்கா நேட்டோவை உருமாற்றிக் கொண்டுவிட்டது. நேட்டோவின் விதி 5 (வாஷிங்டன் ஒப்பந்தம்) ‘ஒருவருக்காக அனைவரும்; அனைவருக்காக ஒருவரும்’ என்ற முழக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தால் நன்னம்பிக்கை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு போல தோன்றும். ஆனால் உண்மையில் ஒரு சில நாடுகள் பெரும்பாலான உலக நாடுகளைச் சுரண்டி தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கான பொருளாதார ராணுவக் கூட்டு சதியமைப்பாக நேட்டோ மாறியுள்ளது. தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவு செய்யும்போது அல்லது ஒருநாட்டிற்குள் புதிதாய் நுழையும் போது அந்நாட்டின் ஆட்சி-அதிகார மையங்களுக்குகள் ஊடுருவி இடையீட்டாளர்கள் மூலம் அந்நாட்டின் அரசியல் பொருளாதார நிதித்துறையையே ஊழல்மயமாக்குவதும் அந்நாட்டின் தொழில்துறை உற்பத்திக் கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை சீர்குலைத்து நாசமாக்கும் வேலைகளை செய்யும் ஒரே நாடு அமெரிக்கா தான். 

May 2, 1945: Raising a Flag over the Reichstag

உலகில் அமெரிக்க நாட்டின் அராஜகமான தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை 1950 கொரிய யுத்தத்தில் இருந்து தொடர்ந்து வியட்நாம், சிரியா, ஆப்கன் என நீண்ட பட்டியலிடலாம். உக்ரைனை நேட்டோவின் பாய்ச்சல் பலகையாக மாற்றி கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய எல்லை அருகே நிலை கொள்ளச் செய்ய வேண்டும்; இதன் மூலம் ரஷ்யாவை சுற்றி வளைக்க வேண்டும்; அமெரிக்காவின் தூரகிழக்கில் தென்சீனக்கடல் பிரச்சனையை பயன்படுத்தி சீனாவை சுற்றிவளைத்து கட்டிப்போட வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. இதுதான் அமெரிக்காவின் சதித் திட்டமாக உள்ளது. கோவிட்19 பாதிப்பினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆனால் சீன, ரஷ்ய பொருளாதாரம் மீண்டு முன்னேறி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த சர்வதேசப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் அமெரிக்கா கலகம் விளைவித்து வருகிறது. அப்படிக் கலகம் துவக்கப்பட்ட இடம்தான் உக்ரைன். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் (2010-2014) 2010 ஆண்டில் சர்வதேச பார்வையாளர்களால் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தேர்தலின் மூலம் பதவிக்கு வந்தவர். இவர் அமெரிக்க -ஐரோப்பிய எதிர்ப்பு மற்றும் முன்னாள் சோவியத் ரஷ்ய ஆதரவு நிலையை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அமெரிக்க தூண்டுதலால் நடைபெற்ற கலகத்தின் மூலம் 2014 பிப்ரவரி இறுதியில் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். யானுகோவிச் தலைநகர் கீவ்-லிருந்து தப்பித்து ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். நிலைமை முற்றவே நேட்டோ தளமாக உக்ரைனை மாற்ற நினைக்கும் அமெரிக்க சதிகளை முறியடிக்கவும் ரஷ்யாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதியை தக்க வைத்துக் கொள்ளவும் கிரீமியாவை ரஷ்யா அதிரடியாக அம்மக்களின் ஆதரவோடு இணைத்துக் கொண்டது. 2014 இல் இதே காலகட்டத்தில் கிழக்கு உக்ரைனில் பூர்வீகமாக சோவியத் பாசம் கொண்ட ரஷ்ய ஆதரவு டான்பாஸ் பகுதியின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் இரு நகரங்களை தலைமையிடமாகக் கொண்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என சுயமாகப் பிரகடனம் செய்து கொண்ட அரசுகள் உருவாயின. இந்நிகழ்வுகள் அனைத்தும் அமெரிக்காவின் நேட்டோ கனவு நகர்வுகளை தோல்வியடையச் செய்தன.

பைத்தியமடைந்த உக்ரைன் அரசு டான்பாஸ் பகுதியில் உக்கிரமான தாக்குதலை தொடுத்தது. ஏராளமான மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருந்த நிலையில் பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்-இல் 5.9.2014 அன்று ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. மின்ஸ்க் ஒப்பந்தம் தோல்விடையவே 12.2.2015 அன்று மீண்டும் 2 ஆவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இம்முறை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளின் தலைவர்கள் அலெக்சாண்டர் ஜாகர்சென்கோ மற்றும் இகோர் ப்ளாட்னிட்ஸ்கி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். 1991 இல் சோவியத் யூனியன் கலைந்தபோது எந்த நிலையிலும் உக்ரைன் நேட்டோ தளமாக்கப்படமாட்டாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இதையும் 12.2.2015 இரண்டாம் மின்ஸ்க் ஒப்பந்தத்தையும் மீறும் அனைத்து வேலைகளையும் அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டமிட்டு செய்தன. பதட்டங்களையும் மோதல்களையும் உருவாக்க சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை அமெரிக்க நிர்வாகங்கள் திட்டமிட்டு உருவாக்கி வந்தன. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆன்ட்டி ப்ளிங்கன் தனது ஒரு பேட்டியில் உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் அனுமதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். இக்கடிதம் எழுதப்பட்ட அதே நேரத்தில் கியூபாவின் கிராண்மா செய்தியின்படி 2022 ஜனவரியில் மட்டும் உக்ரைனுக்கு, அமெரிக்காவிடமிருந்து 170 டன்களுக்கும் அதிகமான கொடிய ஆயுதங்கள் கிடைத்தன. ஜனவரி 25ஆம் தேதி மற்றொரு 80 டன் அமெரிக்க ஜாவெலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் வழங்கப்பட்டன. கூடுதலாக, உக்ரைனுக்கு அமெரிக்கா தயாரித்த ஆயுதங்கள், ஜாவெலின் ஏவுகணைகள், ஸ்டிங்கர் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமீபத்தில் மேலும் 700 ஜாவெலின் ஏவுகணைகளையும் இதர வகை 2200 எல்ஏடபிள்யு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரைன் பெற்றுள்ளது. 

ஊடகங்கள் மறைந்த முக்கியச் செய்தி

இதன் தொடர்ச்சியில்தான் தீவிர அமெரிக்க எதிர்ப்பு கொள்கையுடைய டான்பாஸ் பகுதியின் இரண்டு குடியரசுகளையும் 22.2.2022 அன்று ரஷ்யா தனி நாடுகளாக அங்கீகரித்தது. எந்த நேரத்திலும் ஐரோப்பிய யூனியனில் முதற்கட்டமாகவும் பின்னர் நேட்டோவில உக்ரைனை கூட்டாளியாக்க முடியும் என்ற நிலையில் 25.2.2022 அன்று உக்ரைனின் குடிமக்கள் வசிக்காத ராணுவ கட்டுமானங்கள், படைக்கிட்டங்கிகள் மீது துல்லியமாக தாக்கி ரஷ்ய படைகள் நிர்மூலமாக்கத் தொடங்கின. இதற்கான நிலையை உருவாக்கி காத்திருந்த அமெரிக்கவும் ஐரோப்பிய நாடுகளும் சாதுர்யமாக உக்ரைனிலிருந்து தன் குடிமக்களை திரும்ப அழைத்துக் கொண்டன. மிகமுக்கியமாக கீவ் நகரிலிருந்து மாணவர்கள், மற்றவர்கள் வெளியேறுவதற்கு அவகாசம் அளிக்கும் நடவடிக்கைகளை அறிவார்ந்த முறையில் ரஷ்யா மேற்கொண்டது. தென்மேற்கே வாசில்கிவ் செல்லும் நெடுஞ்சாலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என வெளியேறுவதற்கு பாதுகாப்பு வழிகளை (Safe corridors) உருவாக்கி முதன் முதலாக அறிவித்தது. இவை அனைத்தையும் பன்னாட்டு ஊடகங்கள் மறைத்தன.  ரஷ்யா –உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதி திரும்ப வேண்டும். அது நீடித்த நிலையைான அமைதியாக இருக்க வேண்டும். நமது உண்மையான விருப்பம் இதுதான். அதே சமயத்தில் கிழக்கு உக்ரைனில் நேட்டோ தளங்கள் உருவானால் முடிவில்லா போரில் லட்சக்கணக்கான அப்பாவி ஐரோப்பிய, ஆசிய மக்கள் பலியாவார்கள். இந்நி்லையிலிருந்து ஐரோப்பிய, ஆசிய மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் நாஜி- ராணுவமயமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனை சுத்திகரிக்கும் ரஷ்யாவின் இந்த முடிவு நியாயமானதே எனத் தோன்றும். 

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அதிகரித்த பதற்றத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளியாக, அமெரிக்கா உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் அனுப்புவது தீர்வாகாது என மக்கள் சீனா உறுதியாக உரத்துக் கூறுகிறது. சீனாவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து இந்தியாவும் இணைந்து ஆசியாவின் கருத்தாக மாற்றினால் அது நிலைத்த அமைதிக்கு வழிவகுக்கும்.  கொரியா, வியட்நாம், யூகோஸ்லேவியா, கொசோவோ, இராக், ஆப்கானிஸ்தான் சிரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், லிபியா போன்ற நாடுகளின் மீதான போர்கள் தனித் தனியானவையல்ல. இவைகளுக்கிடையே உள்ள அடிப்படை பொதுவானது. அமெரிக்கா மற்றும் நேட்டோ தான் அவை.  இன்று கிழக்கு ஐரோப்பாவில் உக்ரைனில் நடைபெறும் எல்லா குழப்பங்களுக்கும் மனித உயிர் மற்றும் பொருளாதாரச் சேதங்களுக்கெல்லாம் அமெரிக்காவே மூல காரணமாகும்.  முன்பும் இப்போதும் எப்போதும் பொருந்தக்கூடிய பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகள் உள்ளன: “கொள்ளையடிக்கும் தத்துவத்தை (முதலாளித்துவம் – ஏகாதிபத்தியம்) ஒழித்துக்கட்டினால் போர்களும் தாமாக மறையும்.”

-தீக்கதிர்
2022.03.20

Tags: