ஏப்ரல் 10: தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு தினம்

-சே.த.இளங்கோவன்

டந்த 60 ஆண்டுகளாக திரையில் மட்டுமே சாகசங்கள் புரியும் ‘மூன்றெழுத்து’ ஹீரோக்கள் போலல்ல அவர். திரைப்பட ஹீரோக்களை மட்டுமே ரசித்தவர்களுக்கு அவர் புதியவராக இருக்கலாம் ஆனால்  மக்களுக்காக களத்தில் முழங்கி, அடிபட்டு, ரத்தம் சிந்தி போராடி பல உரிமைகளை வென்றெடுத்தவர் பி.எஸ்.ஆர்.

அடியாட்களைத் துரத்திய அசலான ஹீரோயிசம்:

அது 1942 க்கு பிந்தைய காலம். குன்னியூர்ப்பண்ணைக் கிராமத்தின் அய்யனார் கோயில் மைதானம். ஒடிசலான தேகம். கூரிய பார்வை. வீரியமிகு உரைகளை வெளிப்படுத்தும் உதடுகள். விவசாயிகளை அடிமைகளாக நடத்தும் பண்ணையார்களுக்கு எதிராக கழுத்து நரம்பு புடைக்க முழங்கிகொண்டிருக்கிறார். அதே நேரம் கூட்டத்தை ஒடுக்கும் நோக்கில் கடுமையான ஆயுதங்களோடு குண்டர்கள் நெருங்குகின்றனர். இதை கண்டவர் எந்தவித சலனமுமில்லாமல் அய்யனாரே அதிரும் வண்ணம் முழங்குகிறார். “இரத்தத்தை உரியும் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக முஷ்டியை உயர்த்துவோம். எத்தனை நாட்களுக்கு தான் அடிமையாக கிடப்பது? இழப்பதற்கு ஏதுமில்லாத நாம், உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவோம். வாழ்க்கை ஒருமுறைதான். விவசாய தோழர்களே துணிந்து நிற்போம். எழுந்து நிற்போம்.” என்றதுதான் திரண்டிருந்த விவசாயிகள், தாக்க வந்த குண்டர்களை தாக்குகின்றனர். ஏழை மக்களின் ‘நெஞ்சுரம்’ எனும் வலிமையான ஆயுதத்துக்குக் முன் கத்தி, கோடாரி, கடப்பாரை போன்ற ஆயுதங்கள் வெத்து ஆயுதங்களாக மாறின. உழவர் பெருமக்களின் தாக்குதலை தாங்கமுடியாமல் குண்டர்கள் சரண்டராக, “நீங்கள் குன்னியூர் மிராசுதாரர்கள் அனுப்பிவைத்த அடியாட்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள் தோழர்களே! நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துதான்” என்று முழங்குகிறார். ஹீரோயிசம் என்பது தனிநபர் சாகசமல்ல, மக்களை திரட்டி அநீதியை ஓடவிடுவதே அசல் ஹீரோயிசம் என்று புரியவைத்த அவர் ‘பி.சீனிவாசராவ்’. விவசாய பெருமக்களும், உழைக்கும் பெருமக்களும் இவரை காம்ரேட் ‘பி.எஸ்.ஆர்’ என்று அழைப்பார்கள்.

இந்த மூன்றெழுத்தைக் கேட்டாலே ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் மட்டுமல்ல நிலவுடமையாளர்கள், பெரும் பண்ணையார்கள் வர்கம், ஆதிக்க சாதியவாதம் அலறும்.

உயிரைக் காப்பாற்றிய தாசித்தாய்:

1907-ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் நாள் தென் கர்நாடகத்தில் படகராவில் பிறந்த பி.எஸ்.ஆர் பின்னாட்களில் தமிழ் மக்களின் தோழராக மிளிர்ந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். ‘அரசாங்கப் பதவிகளை இந்திய மக்கள் துறக்க வேண்டும். மாணவர்கள் ஆங்கிலேய அரசு கல்வி நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்’ என்ற சுயராஜ்ஜிய கொள்கையில் ஈர்க்கப்பட்டு தமது கல்லூரி படிப்பை துறக்கிறார். அன்று தொடங்கிய அவரின் போராட்டப்பயணம் பல இலக்குகளைச் சாதித்த பயணமாக வரலாற்றில் பதிவாகிறது.

நேரத்துக்கு உண்ணாமல், தூங்காமல் போராடிய பி.எஸ்.ஆருக்கு பல தருணம் போலீசார்கள் கொடுக்கும் கடுமையான லத்தியடிகளே உணவாக மாறும். அந்நிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றபோது லத்திகளால், எலும்பை எண்ணி எண்ணி அடித்தார்கள். குற்றுயிரும், குலையியுருமாக இருந்த பி.எஸ்.ஆரை தூக்கி சாக்கடையில் வீசினார்கள். அப்போது உயிருக்குப் போராடிய அவரை தம் வீட்டுக்கு தூக்கி சென்று சிகிச்சையளித்து காப்பாற்றியவர் தாசி தொழில் செய்பவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஓர் தாயே. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களால் உயிர் காப்பாற்றப்பட்ட பி.எஸ்.ஆர் ஆயுள் முழுக்க, அவர்களுக்களின் விடுதலைக்காகவே பாடுபட்டார்.

கம்யூனிஸ்டான ‘பி.எஸ்.ஆர்’:

தொடக்கத்தில் காங்கிரஸ் தேசியவாதியாக இருந்த பி.எஸ்.ஆர் சிறைக்கு சென்றபோது அங்கே நேதாஜியின் நட்பை பெற்று நெருங்கிய நண்பரானார். காலப்போக்கில் அரசியல் மாறுபாடு கொண்டு  கம்யூனிச கொள்கையின்பால் ஈடுபாடு கொண்டார். சிறையில் தோழர் ஹைதர்கான் கொடுத்த கார்ல் மார்க்சின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’-யே, பி.எஸ்.ஆரை தோழர் பி.எஸ்.ஆராக உருமாற அடித்தளமிட்டது.  

1936 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை  தமிழ்நாட்டில் உருவாக்கினார் பி.எஸ்.ஆர். ஜீவாவுடன் இணைந்து ‘ஜனசக்தி’ பத்திரிக்கையின் மூலம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். இதன்மூலம் இடதுசாரி அரசியலின்பால் ஈடுபாடு கொண்ட முன்னணி சக்திகள் உருவாகினர். இதன் தொடர்ச்சியாக கட்சி முடிவுக்கேற்ப 1942-ம் ஆண்டில் விவசாயிகள் இயக்கத்தின் பொறுப்பாளராக தஞ்சை பகுதிக்கு மாறினார்.

ஆண்டைகளின் பிடியில் தஞ்சை:

அன்று தஞ்சை எப்படி இருந்தது தெரியுமா?

தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 லட்சம் ஏக்கர் மேல் உள்ள நஞ்சை  நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரும் நிலபிரப்புகள், ஆதினங்கள் கையில் இருந்தன. ஒவ்வொருவருக்கு குறைந்தது 6,600 ஏக்கர் நிலம் இருந்தது. இவையல்லாமல் தஞ்சை, திருப்பனந்தாள், உத்திரபதி, மன்னார்குடியில் என சுற்றுவட்டாரங்களில் பல்லாயிர ஏக்கர் நிலங்கள் மடங்களுக்கு சொந்தமாக இருந்தன. இங்கு லட்சக்கணக்கான விவசாயிகளை பண்ணையடிமைகளாக வைத்து, கொழுத்தனர் பண்ணை நிலபிரப்புக்கள். அதிகாலை 3 மணிக்கு கொம்பு ஊதப்படும். பண்ணையடிமைகள் விழித்துக்கொண்டு நாலரை மணிக்கு ஏற்கட்ட மாட்டை

அவிழ்க்க வேண்டும். அதன்பிறகு வயலில் இறங்குபவர்கள் 11 மணிக்கு மேட்டுக்கு(கரை) வர வேண்டும். அங்கு வைத்திருக்கும் கஞ்சியை குடித்துவிட்டு, மாட்டுக்கு தண்ணி காட்டிவிட்டு, மீண்டும் வயலுக்குள் இறங்கி இரவு எட்டு, ஒன்பது மணி வரை உழைக்க வேண்டும். இதில் உடனிலை சரியில்லை என்றோ அல்லது வேறு காரணங்களுக்காக பண்ணையடிமைகள் வேலைக்கு வராமல் போனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் ஈரக்குலையை நடுங்கச் செய்யும்.

சாட்டையடி சாணிப்பால்:

ஐந்து பிரி கொண்ட சாட்டையில், பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லை சொருகி அடிப்பார்கள். சதைகள் பிய்த்துகொண்டு போகும். ரத்தம் பீறிடும். துடித்து அழுதால் அடி அதிகமாகும். இவ்வளவு அடிபட்டவர்களுக்கு எந்த வைத்தியமுமில்லை. வைக்கோலை கொளுத்தி சாணி உருண்டையைச் சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பது மட்டுமே வைத்தியம். பெண்களும் இதிலிருந்து தப்ப இயலாது. இந்த கொடூரத்தின் உச்சமே ‘சாட்டையடி சாணிப்பால்’. மாட்டு சாணத்தை கரைத்து மாட்டுக்கு மருந்து கொடுக்கும் மூங்கில் குழாயில் நிரப்பி அந்த சாணிப்பாலை பருக செய்வார்கள். ஒற்றைக்காலில் சுடு மணலில் நிற்கும் தண்டனை, இரும்பு கம்பிகளால் அடி என இரக்கமற்ற தண்டனைகள் விதவிதமாக தொடரும். இவையல்லாமல் பண்ணையடிமை வீட்டு பிள்ளைகள் படிக்கக் கூடாது. அவர்கள் வீட்டு மகன், மகள் திருமணம் நடக்க வேண்டுமென்றாலும் பண்ணையார் அனுமதி கிடைத்தால் மட்டுமே நடக்கும். மாடு வளர்த்தால், முதல் கன்று பண்ணை நிலபிரப்புக்கே. மானுடநேயத்தையே கேள்வி கேட்கும் இந்த கொடூரங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, விவசாய சங்கங்களை கட்டியமைத்தார் பி.எஸ்.ஆர்6.

சாதியும் மொழியும் தடையில்லை:

கன்னடமே தாய்மொழி. பிறப்பால் பிராமணர். ஆனால் அவரிடம் கம்யூனிச பார்வையும், உழைக்கும் மக்கள் விடுதலை இலக்கும், எளிய மக்கள் மீதான அளவில்லாத நேசிப்பும்’ இருந்ததால் இவை எதுவும் மக்களை திரட்டத் தடையாக இல்லை. உழவர்களோடு உழவராக மாறினார். கடுமையாக உழைத்தார். பல நாட்கள் பட்டினியோடு இருந்து விவசாய மக்களை திரட்டினார். ஏழை மக்கள் அன்போடு கொடுத்த அவர்களின் உணவான நண்டு, நத்தை, மீன்களை அன்போடு இவரும் உண்டார். உழைக்கும் மக்களின் குடிசைகளிலும், ஏதோ ஒரு சிறு விவசாயி வீட்டு திண்ணைகளிலும் படுத்துறங்கி அரசியல் பணியாற்றினார். பகலில் திரண்டால் நிலபிரப்புக்களுக்கு தெரிந்துவிடும் என்று இரவில் கூடுவார்கள் விவசாய வர்கத்தினர். இதனாலேயே விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு ‘அமாவாசை கூட்டம்’ என்றும் பெயருண்டு. அப்படி கூடிய  பல கூட்டங்களும் குண்டர்கள் கொண்டு தாக்குதலில் ஈடுபடுவார்கள் நிலபிரப்புகள். அதிலொன்றே நமது கட்டுரையின் தொடக்க வரிகள்.

வென்ற போராட்டம்:

எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிராமம் கிராமமாக பயணித்து சங்கத்தை விதையாக்கினார் பி.எஸ்.ஆர். மக்கள் சாரை சாரையாக இணைந்து கிளைப்பரப்பினர். அவரின் நீண்ட பயணத்துக்கு பலன் கிடைத்தது. ‘பண்ணையாட்களை சாட்டையால் அடிப்பதை நிறுத்தவேண்டும், சாணிப்பால் கொடுமை அகற்றப்படவேண்டும், முத்திரை மரக்காலில் நெல் அளக்க வேண்டும்’ என்ற மூன்று ஒப்பந்தங்களும் மன்னார்குடியில் ஏற்பட்டு, ஒப்பந்தம் வெற்றி பெற்றது. நிலபிரப்புக்களும் இதை தவிர்க்கமுடியாமல் ஏற்று ‘2 சின்னபடி நெல் கூலி பெண்களுக்கும், 3 சின்ன படி நெல் கூலி ஆண்களுக்கும்’ கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

கடவுளின் தேரைத் தொட எங்களுக்கு உரிமையில்லையா?:

பி.எஸ்.ஆர் விவசாயப் பிரச்சனைகளில் மட்டுமல்ல, சாதிய,சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களமாடியவர். 1944 , மே மாதத்தில் விவசாயிகளுக்கான முதல் மாநாடு மன்னார்குடியில் நடந்ததென்றால் மூன்றாவது மாநாடு வத்திராயிருப்பில் நடந்தது. அப்போது நடந்த உழவர் பேரணி, மறவர்கள் உள்ள மேலப்பாளையம் தெருவில் புகுந்து, கடந்து, அக்ரகாரத்தில் நுழைக்கிறது. இதைக்கண்டு பதறியடித்து வந்த இன்ஸ்பெக்டர், “இங்கே நுழையக் கூடாது” என்கிறார். பி.எஸ்.ஆரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘எல்லோரும் மனிதர்கள் தான். விவசாயிகள் இல்லையேல் இங்கு யாருமே வாழ இயலாது. அவர்களே உலக இயக்கத்துக்கான அச்சாணி’ என வெகுண்டெழுந்தார். இறுதியில் சம்மதம் கிடைத்து, அக்ரகாரத்துக்குள்ளும் பேரணி பயணிக்கிறது. இதேபோல் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கோயிலில் ஒரு சம்பவம். ‘கோயில் கொடி கட்டிவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் 15 நாட்களுக்கு திருத்துறைப்பூண்டி நகரத்துக்குள்ளேயே நுழையக்கூடாது’ என்பது ஊர் வழக்கம். தற்செயலாக நுழைந்த தலித் சீரங்கன் மற்றும் அவர் மனைவியும் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இந்த அநீதியைக் கண்டு பொங்கியெழுந்த பி.எஸ்.ஆர், 5௦௦ க்குமேற்பட்ட தலித் மக்களை திரட்டிக்கொண்டு, தேர் வரும்போது நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார்.

“எல்லோருக்கும் பொதுவான கடவுளின் தேரைத் தொழ எங்களுக்கு உரிமையில்லையா?” முழங்கினார்கள். வடம் பிடித்து இழுத்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். பின்பு ஆட்சியர், கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் தலித் மக்கள் மீதான தடை நீங்கி உரிமைப் போராட்டம் வென்றது. (ஆனால் அதன்பிறகு சாதி இந்துக்கள் தேரோட்டத்தை நிறுத்திவிட்டு சப்பரம் கட்டி இழுத்து செல்கின்றனர் என்பது தனிக்கதை). தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய இரட்டை குவளை முறையை ஒழித்தார். சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் முற்பட்ட, பிற்பட்ட சமூக மக்கள் பெருமளவு பங்கேற்றனர் என்பது  கவனிக்கப்படவேண்டியது. இதற்கிடையே நான்காண்டு தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்தவர், சேலத்தை சேர்ந்த தோழர் நாச்சியாரம்மாளை காதல் திருமணம் செய்தார்.

பொதுத்தேர்தல் வெற்றி:

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முடிந்த காலக்கட்டத்தில், திருத்துறைப்பூண்டியில் ‘நில வெளியேற்ற எதிர்ப்பு’ மாநாட்டுக்கு 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். 1952 ல் நடந்த பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளில்  6 ல் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு காரணம், ‘பி.எஸ்.ஆர்’.அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதில் ஆளுமைமிக்கவர் ‘பி.எஸ்.ஆர்’.

இன்று ஓரளவேனும் நாம் அனுபவித்து வரும் பலன்கள், பி.எஸ்.ஆர் போன்ற போராளிகளின் உதிரங்களின் விளைந்த முத்துக்களாகும்.

புரட்சி ஓங்குக:

வர்க்க எதிரிகளைப் போலவே பி.எஸ்.ஆரை விடாமல் துரத்தி வந்தது ஆஸ்துமா. வர்க்க எதிரிகளைத் துரத்தியடித்த அவரால் ஆஸ்துமாவை வெல்ல இயலவில்லை. 1961, செப்டம்பர் 30 ம் தேதி உடலால் அனைவரையும் விட்டு விலகினார் பி.எஸ்.ஆர். சாதி தலைவர்கள் படங்களை மாட்டி வரும் இக்காலக்கட்டத்தில், இன்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சாதி, மத பேதம் கடந்து பத்துக்கு ஒரு வீட்டில் சீனிவாசராவ் படம் மாட்டப்பட்டிருக்கும். அது, மக்கள் சக்தியை நம்பிய  அம்மாபெரும் புரட்சியாளருக்கு மக்கள் செலுத்தும் நன்றிக்கடன்.

ஒருமுறை அப்போதைய அமைச்சர் பாஷ்யத்துடன், பி.எஸ்.ஆருக்கு விவசாய பிரச்சனைகளையொட்டி விவாதம் ஏற்பட்டது. அப்போது பாஷ்யம்,

“மிஸ்டர் பி.எஸ்.ஆர் நான் யார் தெரியுமா? ரெவின்யூ மந்திரி. நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே குவிந்து உங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்” என்கிறார். அதற்கு பி.எஸ்.ஆர், “மிஸ்டர் பாஷ்யம், உங்களுக்கு எட்டு மணி நேரம் வேண்டும். ஆனால் ‘புரட்சி ஓங்குக’ என்று நான் முழக்கமிட்டால் 5 நிமிடம் போதும். இங்கே திரளும் எம் மக்களால் நீங்கள் சுற்றிவளைக்கப்படுவீர்கள்.” என்றார். கர்ஜனையும், அமைச்சருக்கே நேரம் கொடுத்த கம்பீரமுமே ‘பி.எஸ்.ஆர்’. அதிகார வர்கத்துக்கு எப்போதும் தலைசாக்காத புரட்சியாளர் -‘பி.சீனிவாசராவ்’.

Tags: