தேச உருவாக்கத்தில் நூறு ஆண்டுகள் : இந்திய கம்யூனிச இயக்க நூற்றாண்டு
–என்.குணசேகரன்,
சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்
வளமான, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கங்களில் உலகிலேயே தனிச் சிறப்புக்கள் கொண்ட இயக்கமாக இந்திய கம்யூனிச இயக்கம் விளங்குகிறது. வருகின்ற அக்டோபர் 17 அன்று நூற்றாண்டுநிறைவு செய்கிற மகத்தான இயக்கமான கம்யூனிச இயக்கம், இன்றைக்கும் இந்திய உழைப்பாளி வர்க்கங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் செயல்படும் இதர பல இயக்கங்களுக்கும், கம்யூனிச இயக்கத்திற்கும் முக்கிய வேறுபாடு உண்டு. பல கட்சிகள், இயக்கங்கள் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் நலன் போன்ற பல விஷயங்களை பேசினாலும், சுரண்டலில் இருந்து உண்மையான விடுதலை,சமத்துவம் போன்றவற்றில் தத்துவார்த்தப் பார்வையும் செயல்பாடும் கொண்டது கம்யூனிச இயக்கமே. இன்று செயல்படும் பலகம்யூனிச, மார்க்சிய இயக்கங்களும் வர்க்க விடுதலையை அடிப்படையாக கொண்ட சோசலிச சித்தாந்தத்தை தங்களது செயல்பாட்டுக்கான அடித்தளமாக கொண்டுள்ளன.
முழு விடுதலை முழக்கம்
இந்த ஒரு நூற்றாண்டில் இந்தியா வரலாற்று ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டது. இந்திய சிக்கல்கள், பன்முகத் தன்மை கொண்டவை. அனைத்துக்கும் உழைக்கும் மக்கள் நலனில் இருந்து தீர்வுகளை முன்வைத்து பயணித்த இயக்கமாக கம்யூனிச இயக்கம் திகழ்கிறது. காலனி ஆட்சியை எதிர்த்து இயக்கம் கட்டுவதில் பல்வேறு பார்வைகள் அன்று இருந்தன. பல முரண்பாட்ட அணுகுமுறைகள் பல இயக்கங்களிடம் நிலவின. ஆட்சி அதிகாரம் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருக்கிறநிலை நீடிக்கலாம்; அவர்களது ஆளுகையின் கீழ் சில அதிகாரங்கள் கிடைத்தால் போதும் என்பது போன்ற பார்வைகள் காங்கிரஸிலிருந்து துவங்கி அன்று தமிழகத்தில் செயல்பட்ட நீதிக்கட்சி வரை இருந்தது. காங்கிரஸ் ஆரம்பகாலத்தில் டொமினியன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிற ‘குடியேற்ற நாடுகளுக்கான சிறப்புரிமை’ என்பதனை முன்வைத்தது.
அன்றைக்கு மதவாத கண்ணோட்டங்களுடன் இயங்கிய பல அமைப்புக்களும் ஆங்கிலேயர் ஆட்சி நீடிப்பதையே விரும்பின. அந்த அமைப்புகளின் வழித்தோன்றலாகவே இன்றைய பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளனஎன்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. அந்த சூழலில் மிகவும் துணிச்சலாக, அழுத்தமான எதிர்கால பார்வை கொண்ட ஒரு முழக்கத்தை கம்யூனிச இயக்கம் முன்வைத்து மக்களிடையே அதனை எடுத்துச் சென்றது.1920-ல் முதல் கிளை அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே இந்தப் புரிதலுக்கு வந்து, 1922-ல் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் தோழர் சிங்காரவேலர், ‘நாட்டுக்கு முழு விடுதலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். முழு விடுதலை என்கிற அந்த முழக்கம்மிகவும் ஆழமான பொருள் பொதிந்த முழக்கமாக அமைந்தது. சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஏழை இந்திய குடிமகனுக்கும் உண்மையான விடுதலையும், உரிமையும் கிடைத்திட வேண்டுமென்ற உள்ளடக்கம் கொண்ட முழக்கம் அது. நிலம், தொழில் ஆகியவற்றில் தனியுடைமையை அகற்றி,விவசாயிகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் உற்பத்தி முழுவதும் இருக்க வேண்டுமென்பதும் முழு விடுதலை முன்வைத்த இலட்சியப் பாதை.
தியாக வரலாற்று சிறப்புக்கள்
அன்றைக்கு பெரிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் அதனை நிராகரித்த போதிலும் இந்தியாவிற்கு முழு விடுதலை வேண்டும் என்கிற கோரிக்கையை மக்களிடையே கம்யூனிஸ்ட்கள் பிரச்சாரம் செய்தனர். இந்த இலட்சியத்தை முன்வைத்து, உழைக்கும் மக்களைத் திரட்டி அவர்கள் போராடினார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களான தெலுங்கானா போராட்டம், வங்கத்தில் தெபாகா போராட்டம், கேரளாவில் புன்னப்புரா வயலார், மஹாராஷ்டிராவில் வொர்லி, எழுச்சி தமிழகத்தில் தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்த போராட்டம் என நீண்ட நெடிய போராட்டங்களை கம்யூனிஸ்ட்கள் நடத்தினர். தொழிலாளர்களைத் திரட்டி சங்கங்கள் அமைத்து உரிமைக்கான போராட்டங்களை நடத்தினர். இதனால் ஆங்கிலேய ஆட்சியினால் வேட்டை யாடப்பட்டனர். இதற்காக அடக்குமுறை, சித்திரவதை, கொடுமைகளை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டனர். 1920-லிருந்து 1930 வரை பத்துக்கும் மேற்பட்ட சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்கள் மீது போடப்பட்டன.பெஷாவர், கான்பூர், மீரட் வழக்குகளும், தமிழகத்தில், சென்னை, மதுரை, நெல்லை, சதி வழக்குகளும் போடப்பட்டு கம்யூனிஸ்ட்கள் பல நூற்றுக்கணக்கில் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டனர். இத்தகைய தியாக வரலாற்றுச் சிறப்புக்கள் கொண்ட இயக்கம் கம்யூனிச இயக்கத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.
விடுதலை இந்தியாவின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கை வழி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதிலும் கம்யூனிஸ்டுகள் தெளிவான பார்வை கொண்டவர்களாக செயல்பட்டு வந்தனர்.இந்தக் கொள்கைவழியின் அடிப்படைக் கோட்பாடு வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்பதுதான். இதில் துவக்க காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட்கள் உறுதியாக இருந்தனர். தாங்கள் செயல்பட்ட மாநிலங்களில் இந்த தனித்த பார்வையோடு காங்கிரஸ் உள்ளிட்ட இதர இயக்கங்களோடு கூட்டு செயல்பாடுகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் அன்றைக்கு சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையில் செயல்பட்டு வந்த போது அந்த இயக்கத்தின் இலட்சியப் பாதையை, உழைக்கும் மக்களின் விடுதலையான சோசலிசம் என்கிற கருத்தியலோடு இணைத்த பெருமை சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளையே சாரும். அன்று காங்கிரஸ் உள்ளிட்ட இயக்கங்கள் இந்தப் பிரச்சினைகளில் மாறுபாடு கொண்டிருந்தனர். குறிப்பாக, சமூக சீர்திருத்தம் சார்ந்த பிரச்சினைகளில் சமரசத்தோடும், ஊசலாட்டங்களோடும் இருந்தனர். அத்துடன் இயல்பாகவே பொருளாதார சுரண்டலை ஒழிப்பதற்கான முனைப்பு அவர்களிடம் இல்லை. ஏனெனில் அவர்களது வர்க்க சார்பு இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவடன் இணைந்திருந்தது.
தமிழகத்தில் பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் திராவிடஇயக்கம் அழுத்தம் அளித்தாலும் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் உறுதியான தீர்வான வர்க்கச் சுரண்டலில்இருந்து விடுதலை என்கிற இலட்சியத்தை முன்னிறுத்த அவர்களால் இயலவில்லை. சமூக முரண்பாடுகளுக்கு சிங்காரவேலர், ஜீவானந்தம் உள்ளிட்ட மார்க்சியர்கள் விவசாயம், தொழில் உள்ளிட்ட உற்பத்தி முறைகளில் சமூகக் கட்டுப்பாடு அவசியம் என்ற தீர்வுக்கான கோட்பாட்டை பேசினர். “நிலம் உழுபவனுக்கு சொந்தம்”என்ற கம்யூனிஸ்டுகளின் பார்வை சுய மரியாதை மேடைகளில் ஒலித்தது. இது போன்ற இதர சமூக சீர்திருத்தப் பிரச்சனைகளையும் அணுகினர். பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, மத பிற்போக்குத் தனங்கள் அனைத்தையும் இந்த பார்வையுடன் பிரச்சாரம் செய்தனர். துவக்கத்தில், பெரியாரும் அவர்களின் பார்வை அடிப்படையிலேயே முழங்கினார். பிறகு சுயமரியாதை இயக்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டது. கம்யூனிச இயக்கம் பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து சோசலிச மாற்றினை முன்வைத்து உறுதியுடன் பயணித்தது.
இந்திய சிக்கல்களை தீர்ப்பதற்கான மாற்றுப் பார்வை
பொருளாதார சுரண்டல் மட்டுமல்ல; சாதி, மதம், இனம், மொழி, பாலின பிரச்சனைகள் அனைத்திலும் முற்போக்கு நிலைபாடுகள் கொண்ட இயக்கமாக கம்யூனிச இயக்கம் நூற்றாண்டு முழுவதும் செயல்பட்டு வந்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் கொண்டிருந்த முற்போக்கு கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கு செல்வாக்கு செலுத்தும் நிலைக்கு வந்துவிடவில்லை என்பது உண்மையே. சாதியம், மதவாதம், பெண்ணடிமைதனம், சுரண்டல் அனைத்தும் நீடிக்கின்றன. ஆனால் இதற்கு எதிரான முற்போக்கு கண்ணோட்டங்கள் இந்த சமூகத்தில் மக்களிடையே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு கம்யூனிச இயக்கத்தின் பங்கு அளப்பரியது. வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் இன்றைய இந்தியா என்ற தேசம் உருவானதில் பல முரண்பட்ட போக்குகள் இருந்து வந்துள்ளன. மதச்சார்பின்மையை அரசு தனது கொள்கையாக பிரகடனப்படுத்தினாலும் அதனை பின்னுக்கு இழுக்கும் சக்திகளும் செயல்பட்டு வருகின்றன. கூட்டாட்சி என்பது அரசின் அடிப்படையாக இருந்தாலும் அதனை பின்னுக்குத் தள்ளிடும் அதிகாரக்குவியலுக்கான சர்வாதிகார சக்திகளும் செயலாற்றி வருகின்றன.
தேச உருவாக்கத்தின் அனைத்து முற்போக்கு கூறுகளுக்கும் கம்யூனிஸ்ட்களின் போராட்டம், செயல்பாடுகள், தியாகங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.உழைக்கும் மக்கள் நலன் காக்கும் பல சட்டங்கள் கம்யூனிஸ்ட்களின் உறுதியான போராட்டங்களால் கொண்டுவரப்பட்டன. கம்யூனிஸ்டுகளின் மகத்தான பங்கு இல்லாமல் இன்று நாம் காணும் இந்தியா என்பது உருவாகி இருக்க வாய்ப்பில்லை. எனவே தேச உருவாக்கத்தில் கம்யூனிஸ்ட்களுடைய பங்கு மகத்தானது. ஆனால் இன்னும் சோஷலிச இலக்கு நோக்கிய பயணமும் அதற்கு எதிரான சக்திகளை முறியடிக்கும் பயணமும் தொடர வேண்டியுள்ளது. தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் வலிமை மிக்க இயக்கம் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் நூற்றாண்டாக முன்னெடுத்த இலட்சியத்தை சாதித்திடும்.