தோழர் மு கார்த்திகேசன்: பரந்துபட்ட மக்கள் தளத்துக்குரிய கதிர்வீச்சு

-ந.இரவீந்திரன்

கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன், கார்த்திகேசன் மாஸ்டர் என இடதுசாரிகள் மற்றும் கல்விப்புலத்தினர் மத்தியில் நினைவு கூரப்பட்டு வந்த மகத்தான ஓர் ஆளுமையின் நூற்றாண்டு ஜூன் மாதத்தில் நிறைவு பெற்றதன் பேரில் ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலதரப்பட்டவர்கள் வந்து கலந்து கொண்ட இக்கூட்டம் அளவுக்கு வேறெந்த முற்போக்காளர்களுக்கான நினைவுக் கூட்டம் ஏதும் இலங்கையில் இதுவரை நடந்ததில்லை என்ற குறிப்புகளைக் காண முடிந்தது. யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது தோழர் கார்த்திகேசன் தொடர்பான நினைவுகளை மீட்டும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெறத் தவறியதில்லை.ஆயினும் அவரது பங்களிப்பின் காத்திரத்துக்குரிய கனதியோடு யாழ்ப்பாணச் சமூகம் அவரை மனதில் பதித்து வைத்திருப்பதாகச் சொல்வதற்கில்லை; குறிப்பாக, வருடாந்தம் அவரது நினைவு சார்ந்த ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்று வரவில்லை.மாறாக கொழும்பில் “கார்த்திகேசன் நினைவுக்குழு” ஏற்பாட்டில் வருடந்தோறும் கார்த்திகேசன் நினைவுப் பேருரைகள் இடம்பெற்று வந்துள்ளன. இவ்வருடம் கொழும்பில் நூற்றாண்டு நினைவுக் கூட்டம் ஒன்றை நடத்துவதோடு எதிர்காலத்தில் அத்தகைய நினைவுப் பேருரைகள் எதனையும் முன்னெடுக்கப் போவதில்லை என அக்குழுவின் தலைமை உறுப்பினர்கள் கூறுவதனை கேட்கக் கூடியதாக உள்ளது. மிகவும் காத்திரமான விடயங்களை பேசுபொருளாக கொண்ட ஆற்றல் மிக்க ஒரு ஆளுமையின் நினைவுப் பேருரைகளைத் தொடர இயலாது இருப்பது ஏன்?. ஏற்கனவே இடம்பெற்று வந்த கூட்டங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்புகளினால் அவர்கள் இந்த முடிவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த நூற்றாண்டு நினைவலைகள் இத்தகைய பின்வாங்கலுக்கு இடமளிக்காது தொடர்ச்சியாக நமது ஆளுமைகளை கொண்டாடவும் அடியொற்றி முன்னேறவும் ஏற்ற வாய்ப்பை பெருக்க வேண்டும் என எதிர்பார்ப்போம்!

மக்கள் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு உழைத்தவர்களும் அத்தகையோருக்கு கலங்கரை விளக்காக அறிவொளி ஊட்டியஆசான்களும் முக்கிய கவனிப்பைப் பெற இயலாமல்போனதற்கு பல காரணங்கள் உள்ளன. மூன்று தசாப்தங்கள்நீடித்த யுத்தமானது கருவி காவியவர்களே போராளிகள் எனநம்பும் அளவுக்கு வன்முறை மனப்பாங்கை வளர்த்துவிட்டுள்ளது; இனக்குரோதங்கள் மேலோங்கிய சூழலில்மனுக்குல விடுதலையை முன்னிறுத்திய சமூகப்போராளிகளான இடதுசாரிகள் காணாமல் ஆக்கப்படும்கருத்தியல் கொடூரம் நேர்ந்தது. இது நமது மண்ணுக்குமட்டுமே உரிய நிகழ்வுப்போக்குமல்ல. மனுக்குல விடுதலைஎனும் எழுச்சி வேகம் சென்ற நூற்றாண்டின் எழுபதாம்ஆண்டுகள் வரை பேரெழுச்சியாக முன்னேறி வந்த போதுமிரண்டுபோன சுரண்டல் கும்பல் திட்டமிட்டவகையில் வளர்த்துவிட்ட மக்களிடையே மோதலுக்கு உரியதான இன – மத – தேசிய – நிற பேதக் குரோதங்கள் இன்றைய கெட்டபோரிடும் உலக நியதியை முன்னணிக்கு உரியதாக்கி உள்ளது; தமர்*பிறர் எனும் பகுப்பு இன்று வலுப்பட்டு விட்டது. ஒவ்வொருசமூகப் பிரிவும் தத்தமது சுயதம்பட்டப் பெருமைகளைமுன்னிறுத்தி மற்றவரை சக மனிதப் பெருமிதத்துக்கு உரிமைகோர இடமற்றவர்களாக கருதும் அடையாள அரசியல்செல்நெறி இன்றைய உலக நிலவரத்தை தீர்மானிக்கும்பொதுப்போக்கு; இதன் பேறாக மேலோங்கி வந்துள்ள பழமைவாதப் பிற்போக்கு மனப்பாங்கு வலதுசாரிகளின் கையோங்குவதற்கு வழிகோலியுள்ளது.

மக்கள் நலநாட்டக் குறிக்கோளுடன் இயங்கிய இடதுசாரிகள் கண்டுகொள்ளப்படாமல் போனதற்கும் மக்கள்விரோத வலதுசாரிகள் ஜனநாயகத்தின் பெயரால் தலைமைசக்திகள் ஆகிவிட்டமைக்கும் எதிரிகளின் சதி எனப்புறக்காரணி மீது மட்டும் பழிபோட்டு அமைதி கண்டு கொள்ள இயலாது. இடதுசாரிகள் இழைத்த தவறுகளுக்குரியதான அகக் காரணிகளும் கவனிப்புக்குரியன. அறுபதாம் ஆண்டுகள்வரை இடதுசாரிகள் வரலாற்றுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் பலமிக்க சக்திகளாகத் திகழும் நிலை உலக அளவிலானதாக இருந்தது – மூன்றாம் உலக நாடுகளில் இலங்கை இவ் விடயத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இடதுசாரி அணி 1964 இல் சோவியத் – சீனப் பிளவின் பின்னர்தத்தமது நாடுகளின் விவகாரங்களை முதன்மைப்படுத்திஇயங்குவதனை விடவும் சோவியத் – சீனச் சார்பான கோட்பாட்டு விவாதங்களை மேலான பணியாகக் கருதமுற்பட்ட போது முதற் சரிவைச் சந்தித்தது. மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுபதாம்ஆண்டுகளில் மென்மேலும் மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்திப் பிளவின் மேல் பிளவடடைந்து சிறு குழுக்களாக சிதறிப்போயின. முன்னதாக அர்ப்பணிப்புடன் இயங்கிய ஆளுமைகள் முன்னர் வேறுபட்ட கருத்துக்களுடனும் பொதுக் குறிக்கோளின் பொருட்டு ஒன்றுபட்டு இயங்கியதை போலன்றி எழுபதுகளைத் தொடர்ந்து ஏதாவது ஒரு குழுவின் பிரதிநிதிகளாகினர். அவர்களது பங்களிப்பு சார்ந்த ஆளுமை வீச்சுடன் அவர்களை வழிபாட்டு நாயகர்களாக கொண்டாடிய அடுத்த தலைமுறையினர் ஏனைய இடதுசாரி சக்திகளோடு ஒன்றுபட்டு இயங்குவதற்கான களங்களை இனங்காண முயல்வதாயன்றி தத்தமது வழிபாட்டு நாயகர்களின் பரம ரசிகர்களாய் ஏனைய தலைவர்கள் மீது சேறு வாரித் தூற்றும் போக்கு மேலோங்கத் தொடங்கியது. முற்போக்குத் தலைவர்களைத் தவறாக எடை போடும் காரணிகளை மக்கள் விரோதிகள் பிரச்சாரப்படுத்தியதை விடவும் உள்வீட்டு சகோதரர்களே இவ்வண்ணம் செய்து முடித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் தான் தோழர் கார்த்திகேசன் பரந்துபட்ட மக்கள் தளத்தில் கவனிப்பை பெறாதுள்ளமையைக் காண வேண்டும். இத்தகைய தலைவர் வழிபாடு எமது இடதுசாரித் தலைவர்கள் இன நல்லிணக்கத்திற்கும் மக்களின் பன்முகப்பட்ட வாழ்வியல் விருத்திக்கும் செய்திருந்த பங்களிப்புகளை மூடி மறைத்து எவ்வகையில் கேடு விளைவித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். நான்கு வருடங்களின் முன்னர் “புதிய தளம்” சஞ்சிகையின் இரண்டாவது இதழுக்கு எம்.ஏ.சி.இக்பால் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார். யாழ்ப்பாண முஸ்லிம் வார்ட் பிரதேசத்தைச் சேர்ந்த இக்பால் சாதியத் தகர்ப்புப் போராட்டத்திற்கு பங்களித்தது உட்பட சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச தலைவர்களில் ஒருவராக இயங்கிய தனது அனுபவங்களை விரிவாக அந்தப் பேட்டியில் முன்வைத்திருந்தார். மிகப்பெரும் கம்னியூஸ்ட் கட்சியாக இருந்து குமாரிலால், வட்சன் பெர்ணாந்து, ரோஹண விஜயவீர போன்றவர்களோடு நமது பங்குக்கு கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம் போன்றோரின் ‘துரோகத்தனமான பிளவுகளினால்’ சண் ஆதரவு குழுவுக்கு உரியவர்களாக தாம் மாறி இருந்தமையை இக்பால் வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை பேர் விலகுவதற்கு தமது தலைவரிடம் இருந்திருக்கக்கூடிய தவறினைச் சுய விமர்சன ரீதியாக அலசாமல் எழுந்தமானத்துக்கு ஏனைய தலைவர்களை எல்லாம் துரோகிகள் என முத்திரை குத்துவதில் உள்ள பாதகம் பற்றி அவர் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அவரிடம் சண் ஆதரவு குழு ரசிகர்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய செல்வாக்கின் காரணமாக சண்முகதாசனை அப்பழுக்கற்ற தலைவராக காட்டுவதும் ஏனையவர்கள் சந்தேகத்துக்கிடமின்றி துரோகிகளே என்ற தீர்ப்பை வலியுறுத்துவதும் அவருக்கான பணியாக அப்போது இருந்து விட்டது.

இப்போது கார்த்திகேசன் நூற்றாண்டின் பொருட்டு 15 வருடங்களுக்கு முன்னர் எம்.ஏ.சி.இக்பால் எழுதியிருந்த ஒரு கட்டுரை முகநூலில் மறுவெளியீட்டைக் கண்டிருந்தது. கார்த்திகேசன் நினைவு குழுவினர் வெளியிட்டிருந்த தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் கார்த்திகேசன் பெற்றிருந்த செல்வாக்கும் அதன் பேரில் தாம் எல்லாம் கொம்யூனிஸ்டுகள் ஆவதற்கு உந்துதல் பெற்றிருந்தமைக்கான அடிப்படை சம்பவம் ஒன்றை பேசுபொருள் ஆக்கியிருந்தார் இக்பால்; யாழ் மாநகரசபையில் இரண்டு வார்டுகள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க பத்துமடங்கு எண்ணிக்கையில் தமிழ் மக்களுக்கான வார்டுகள் இருந்தபோதிலும் 1955 ஆம் ஆண்டில் ஒரு முஸ்லிம் தலைவர் மேயராக இயலுமானதற்கு அந்த வருடம் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த தோழர் கார்த்திகேசனின் முன்முயற்சியே காரணம் என மேற்படி கட்டுரையில் இக்பால் விளக்கியிருந்தார். இதனை எழுதி பத்து வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட “புதிய தளம்” சஞ்சிகைக்கான பேட்டியில் யாழ் மாநகர சபையில் முஸ்லிம் ஒருவர் எவ்வாறு மேயராக முடிந்தது என்ற கேள்விக்கு தமிழ் காங்கிரஸ் கட்சி – தமிழரசுக் கட்சி என்பவற்றுக்கு இடையேயான முரண்பாட்டின் காரணமாகவே அது சாத்தியப்பட்டது எனத் தோழர் இக்பால் கூறியிருந்தார். பலதரப்பட்ட மக்களிடமும் செல்லக்கூடிய ஒரு சஞ்சிகையில் சண்முகதாசனை வழிபாட்டுக்குரியவராகக் காட்டி, கொம்யூனிஸ்ட் இயக்கம் பின்னடைந்தமைக்கு தோழர் கார்த்திகேசன் போன்றோரது துரோகங்களே காரணம் எனக் கூற வேண்டியிருந்தமையால் ஒரு ஆளுமையின் மகத்தான பங்களிப்பு இவ்வகையில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை இங்கு கூறுவது கார்த்திகேசன் நூற்றாண்டு நினைவுக் கட்டுரை என்பதால் அவரை வழிபாட்டுக்குரியவராக்கி தோழர்கள் சண்முகதாசன், இக்பால் போன்ற ஆளுமைகளை வில்லன்களாக சித்திரிப்பதற்காக அல்ல; இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தலைவர் வழிபாடு தமது ஆளுமையின் விஸ்வரூப பிரம்மாண்டத்தை காட்டும் பொருட்டு ஏனையவர் பங்களிப்பை மூடி மறைத்து வில்லன்களாக வர்ணித்தமையால் ஏற்பட்ட பாதக விளைவை எடுத்துரைப்பதற்காக என்பதை மறவாதிருப்போம். தவிர, கார்த்திகேசன் நூற்றாண்டு நிறைவுற்ற கையோடு அடுத்த வருடம் ஜுலை மாதம் முதல்தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவுகூரப்பட உள்ளது.அடுத்தடுத்து வரும் இந்த இரு வருடங்கள் போல அவர்கள் ஓரணியில் செயலாற்றி ஏற்படுத்திய சாதனைகள் இணைவுக்குரியன. ஏற்பட்ட பிளவில் சரி – தவறுகள் பற்றிய தேடல் புதிய வரலாறு படைப்பதற்கான சரியான கோட்பாட்டை வகுப்பதற்கானதாக அமைய இயலுமே அன்றி ஒருவரை நாயகராகவும் மற்றவரை வில்லனாகவும் சித்திரிப்பதற்கானதாக அமைந்துவிடக் கூடாது. இருவரிடமும் சில விடயங்களில் சரிகளும் வேறு விடயங்களில் தவறுகளும் இருந்துள்ளன. எந்த ஒருவரும் தவறுகளுக்கு அப்பாற்பட்ட புனித விக்கிரகமோ வழிபாட்டு நாயகரோ கிடையாது – செயற்படாத ஒருவரே தவறு ஏதும் செய்யாது இருக்க இயலும்! பிளவடைந்து மோதியது எதாயினும் ஒரு தரப்பின் தவறினால் அல்ல!
அவர்கள் மாறுபட்ட கருத்துகளுடன் பிரிந்து சென்ற பின்னர் தான் அவர்களுக்குள் கோட்பாட்டு ரீதியான வேறுபாடு ஏற்பட்டது என்றாகிவிடாது; ஒன்றுபட்டு இயங்கிய அறுபதாம் ஆண்டுகளின் இறுதிப்பகுதி வரையில் கூட பல்வேறு விடயங்களில் வேறுபட்ட கருத்து நிலைகள் கொண்டிருந்தனர்; அத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு இலக்கு நோக்கி போராடும் தோழமை உணர்வு கொள்ளும் வகையில் வரலாறு படைக்கும் மக்கள் சக்தியைக்கிளர்ந்தெழச் செய்து தலைமை தாங்கும் ஆற்றலை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. மகத்தான தொழிற்சங்கப் போராட்டங்கள், சாதியத் தகர்ப்புப் போராட்டங்கள் என்பவற்றில் கொம்யூனிஸ்டுகள் வீரார்ந்த போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்தி இயல்பான மக்கள் தலைவர்களாகத் துலங்கினர். அதன்போது தமக்குள் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களை உட்கட்சி விவாதங்கள் வாயிலாக தீர்க்க முயன்றனர். ஒத்த கருத்தை எட்ட இயலாத இடங்களில் பெரும்பான்மையினர் முடிவுக்கு அமைய இயங்க ஏற்றவண்ணம் செயற்களம் தொடர்ந்து விரிவடைந்தவாறு இருந்தது. எழுபதுகளின் பின்னர் புறநிலையில் ஏற்பட்டு வந்த மாற்ற நிலைகளை சரியாக கணித்து மாறுபட்ட சூழல்களுக்கு அமைவான கோட்பாடுகளை வகுத்து ஏற்ற வேலை திட்டத்தை முன்னெடுக்க இயலாமல் போன போது வரலாறு இடதுசாரிகளின் கைகளை விட்டு நீங்கிப் போனது; போகவும், செயலற்ற நிலையில் குடுமிச் சண்டையும் தவறுகளை மற்றவர் மேல் சாய்த்துத் தனி வழி காண்பதுமான போக்குகள் வலுத்தன.


இத்தகைய சாதனைக் காலத்தினதும் பின்னடைவின் போதும் தோழர் கார்த்திகேசன் பங்குப் பாத்திரமும் பற்றி சுருக்கமாக இங்கு பேசுவது அவசியமானது. அவர் குறித்த விரிவான வரலாறு வெளிவராத போதும் அடிப்படையான அம்சங்களை கண்டுணர ஏற்றதான சில நூல்கள் பிரசுரமாகி உள்ளன. இங்கு ஒரு முற்போக்கு ஆளுமையின் சாரம்சமிக்க பண்புக்கூறுகள் அலசப்படுவதன் வாயிலாக அவர் குறித்த தேடலை தூண்டுவதற்கு முயல்வேன். வர்க்க அணி சேர்க்கையில் தொழிலாளர் தலைமையை உத்தரவாதப்படுத்துவது கொம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பணி என்ற வகையில் முன்னதாக அதனை பார்ப்போம்; தொடர்ந்து, மிகப்பெரும் சாதனையாக சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தமையையும் பின்னடைவு காரணியில் முதன்மையாக விளங்கும் தேசிய இனப் பிரச்சினைகளைக் களத்தையும் அலசுவோம்!
வர்க்கப் போராட்ட களம் மலேசியாவில் தொழில் புரிந்த தந்தையுடன் வாழ்ந்தவர், மாணவ பருவத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெறும் பொருட்டு தாயகம் திரும்பியிருந்தார் தோழர் கார்த்திகேசன். வலுவான தொழிற்சங்கங்களை கட்டியெழுப்பிச் சமூக மாற்றச் சிந்தனையை விதைக்கும் முன்னேற்ற திசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினால் ஈர்க்கப்பட்ட கார்த்திகேசன் பட்டதாரியாக உயர் பதவிகளை அலங்கரிக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றை உதறித் தள்ளி கட்சியின் முழுநேர ஊழியராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். கட்சியின் பல்வேறு தளங்களில் பணியாற்றிய அதே வேளை அவரது கல்விப்புல சிறப்பு காரணமாக கட்சிப் பத்திரிகை துறையில் கூடுதலாகக் கவனம் செலுத்தும்படி வலியுறுத்தப்பட்டார்; குறிப்பாக அவரது ஆங்கிலப் புலமை காரணமாக ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழு தலைமையை அலங்கரித்தார்.
வட பிரதேசத்தில் ஏற்கனவே சமசமாஜக் கட்சி தோழர் தர்மகுலசிங்கம் தலைமையில் இடதுசாரித்துவம் செயல் வீச்சினை முன்னெடுத்து வந்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் இடதுசாரி இயக்க வரலாற்றில் வீறுமிக்க பங்களிப்பை ஆற்ற உள்ள சாதியத் தகர்ப்புக் களத்துக்குரிய முதற்கட்ட பணியை தர்மகுலசிங்கம் அவர்களே தொடக்கி வைத்து இருந்தார்; இருப்பினும் சமசமாஜக் கட்சியின் கோட்பாட்டு – நடைமுறைப் பாதகங்களை கடந்து அடுத்த படிநிலை வளர்ச்சியில் இடதுசாரி இயக்க செல்நெறியை வளர்க்கும் பணியை வட பிரதேசத்தில் முன்னெடுக்க வேண்டுமென இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்து கொண்ட போது அதற்குத் தலைமை ஏற்று இயக்க வல்லவராக தோழர் கார்த்திகேசனைக் கட்சி இனங்கண்டு யாழ்ப்பாணத்துக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். 


இவ்வகையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் தொடக்கி வைத்தவர் கார்த்திகேசன் எனும் வரலாற்றுச் சிறப்பு மங்காத வகையில் அவரது செயல் வீச்சு கனங்காத்திரம்உடையதாக இருந்தது. கொழும்பு உட்பட தென்னிலங்கை மற்றும் மலையகம் போன்ற பகுதிகளில் வலுவான தொழிற்சங்கங்கள் அமைய ஏற்றதான தொழில் துறைகளும் பெருந்தோட்ட உற்பத்தி துறைகளும் காணப்படுவது போன்ற களம் அல்ல வட பிரதேச நிதர்சனம். இருப்பினும் புதிதாக தொடங்கி இருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை போன்றவற்றில் இணைந்திருந்த தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தினரும் சுருட்டு தொழிலாளர்கள் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த உதிரித் தொழிலாளர்களும் அமைப்பாக்கப்பட்டு தொழிற்சங்கங்களின் சம்மேளனத்துக்குரிய உறுப்பினர்கள் ஆவதற்கு கார்த்திகேசன் முழு ஈடுபாட்டுடன் உழைத்தார். ஒவ்வொன்றிலும் தொழிலாளர் நலன் பேணும் நடவடிக்கையோடு வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற நிகழ்வுகளில் சோர்வறியாது தொழிலாளர்கள் அனைவரும் செயலாற்ற அவசியமான வழிமுறைகளையும் மேற்கொண்டார். குறிப்பாக சீமெந்துத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மேற்கொண்ட வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது தொழிலாளர் உரிமைகள் தொடர்பாகப் போதம் ஊட்டவும் தளர்வறியா உற்சாகத்தைத் தொழிலாளர்கள் தொடர்ந்து பேணவும் கார்த்திகேசன் காட்டிய அக்கறை விதந்துரைக்க தக்கது; இதுகுறித்து நீர்வை பொன்னையன் தனது தன் வரலாற்று நூலான “நினைவலைகள்” இல் விரிவாக பதிவு செய்துள்ளார். தொழிலாளர் போராட்ட களங்களில் எப்போதும் பிரசன்னமாகி போராடுபவர்களது உத்வேகத்தை வளர்த்தெடுப்பதைப் போன்றே பொது மக்கள் மத்தியிலான பிரசாரக் கூட்டங்கள் நிறைவடைந்த பின்னர் மேடைகள் அகற்றப்படுவது வரை அப்பணிகளில் பங்கேற்று பூரணமிக்க ஈடுபாட்டைக் காட்டுபவராக கார்த்திகேசன் திகழ்ந்துள்ளார். 


தொழிற்சங்கங்களை கட்டியெழுப்புவதற்கு காட்டிய அக்கறைக்கு சற்றும் தளராத வகையில் விவசாயிகள் சங்கங்களை கட்டுவதற்கான முக்கியத்துவத்தையும் உணர்ந்தவராக அதனை நடைமுறைப் படுத்தி இருந்தார். கார்த்திகேசனின் வழிப்படுத்தலுடன் விவசாயிகள் சங்கத்தில் பொறுப்பேற்று இயங்கிய நீர்வை பொன்னையன் அது குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்; வன்னிப் பிராந்திய விவசாயிகளது போராட்டங்கள் குறித்த நீர்வையின் சிறுகதைகள் ஒப்பீடற்ற தனித்துவம் மிக்கவை – களத்தில் செயற்பட்டு பெற்ற அனுபவச் செழுமையோடு உணர்வு பொங்க படைக்கப்பட்டவை அவை. யாழ்ப்பாணத்தின் தொழிலாளர் – விவசாயிகள் மத்தியில் பணியாற்றுவதே சமூக மாற்றத்தில் பெரும்பங்காற்றலாகிவிடாது எனும் வகையில் அன்றைய யாழ்ப்பாணம் இலங்கை பூராவுக்குமான பல்துறை ஊழியர்களை வெளிக்கொணரும் கல்விப் புல செறிவுடையதாக இருந்தது. அவ்வகையில் ஆசிரியத் தொழில் யாழ் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான வலுமிக்க செயற்களமாகும். இதனை நன்குணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆற்றல் மிக்க பணியாளரை ஆசிரியத் தொழிலை ஏற்கும்படி பணித்தது. முழுநேர ஊழியராக கார்த்திகேசன் தொடர்ந்திருப்பின் ஆற்றியிருக்கத்தக்க பங்களிப்புக்கு சற்றும் குறையாத வகையில் பெரும் சாதனைகளை ஒரு ஆசிரியராக செயற்பட்டும் நிறைவேற்றி உள்ளார். ஆசிரியர் / தோழர் கார்த்திகேசன் ஒரு மைய சக்தியாக விளங்கி மார்க்சிய இயக்கம் யாழ் மண்ணில் புதிய தளம் நோக்கி விகசிக்க காத்திரமான பங்களிப்பை நல்கியமை பற்றி பலரும் தமது பதிவுகளில் வலியுறுத்தி உள்ளனர்.


சாதியத் தகர்ப்பு தொழிலாளர் – விவசாயிகள் – மாணவர்கள் – ஏனைய இனத்தவர்கள் – வெகுஜனச் செயற்களம் எனும் பல்வேறு தளங்களில் முன்னணி சக்தியாகத் திகழ்ந்த அளவுக்கு சாதியத் தகர்ப்புப் போராட்ட அணியின் முதன்மை பங்களிப்பினை தோழர் கார்த்திகேசன் கொண்டிருக்கவில்லை. இதன் பொருள் சாதிமுறை தகர்க்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை இல்லை என்பதல்ல; வர்க்க அமைப்புத்தகர்க்கப்படும்போது சாதி முறையும் அற்றுப்போகும் என்பதால் அவர் அளவில் பிரதான தளத்தில் தீவிர கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து இருந்தார். தவிர, ஒருவர் அனைத்து தளங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள அவசியமும் இல்லை; இந்த களத்துக்கு பூரண ஆதரவை நல்கிய படி தனக்குரிய பணிகளில் ஆற்றல்மிகு பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதிலேயே கார்த்திகேசனின் ஆளுமை விகசிப்பு வெளிப்பட்டிருந்தது.


சாதியத் தகர்ப்புப் போராட்ட வழிமுறையில் பெரும் ஈடுபாடு அவருக்கு இருந்ததில்லை என்பதை அவருக்கு மட்டும் உரிய குணாம்சமாக கருதவேண்டியதில்லை. அவர் மீது பெருமதிப்பை கொண்டிருந்த ஒரு தோழரிடம் சாதியத் தகர்ப்புப் போராட்டம் ஏற்படுத்தியிருந்த மாற்றங்கள் பற்றி உரையாடிய போது, அது அப்படி என்ன பெரிதாகச் செய்துவிட்டது எனும் எதிர்க் கேள்வியை கேட்டார். கார்த்திகேசன் நினைவுக் குழுவின் மிக முக்கியமான அந்த தலைமைத் தோழரின் இந்த எதிர் கேள்வி முதலில் பெரும் வியப்பை தருவதாக இருந்த போதிலும் பின்னர் அதற்கான அடிப்படையைப் புரிந்து கொள்ள இயலுமாயிருந்தது. தலைமை வழிபாட்டு ரசிக மனப்பாங்கு நோய்க்கூறு அது; கார்த்திகேசனை மீறி வேறு ஆளுமைகள் முன்னணி வகித்த ஒரு களம் பெரிதாக சாதித்து விட்டது என்பதை ஏற்றுக் கொண்டால் அவரது பக்தி விசுவாசத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமல்லவா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிளவுகளின் பின்னரும் கார்த்திகேசனுடன் இணைந்து அவருடனான மத்திய குழுக்களில் சேர்ந்து இயங்கிய தோழர் மூர்த்தி அவர்களும் சாதியத் தகர்ப்புப் போராட்ட வழிமுறைகளில் தவறு இருந்ததாக நேரடிப் பேச்சில் எனக்கு கூறியிருந்தார்; சாதிமுறைக்கு எதிரான போராட்டத்தில் கட்சி ஆயுதமேந்தியது தவறு, மாறாக தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவே ஆயுதபாணியாகியிருக்க இருக்க வேண்டும் என மூர்த்தி வலியுறுத்தினார். இந்தக் கருத்தை அப்படியே கார்த்திகேசன் கொண்டிருக்காவிட்டாலும் சாதி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் முன்னணிப் பாத்திரத்தை அவர் வகித்திருக்கவிருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை; அதற்காக அவரை நேசிப்பவர்கள் அந்த வரலாற்றுச் சாதனையைக் குறைமதிப்பீடு செய்வதன் பேரில் தோழர் கார்த்திகேசனைக் குறை விளங்க வேண்டியதில்லை. கார்த்திகேசனின் மார்க்கத்தை ஏற்று இயங்கிய நீர்வை பொன்னையன் தனது “நினைவலைகள்” நூலில் சாதியத் தகர்ப்புக் களங்களில் தாம் பங்கேற்றதை வலியுறுத்தியிருப்பது அப்போராட்டத்தின் வரலாற்றுப் பங்களிப்பை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும்.இந்தக் களத்தில் முன்னணியில் அவர் வெளிப்பட்டிருக்காதபோதிலும் சாதியத் தகர்ப்புப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் ஆழப் பதிந்துள்ளது. டானியல், டொமினிக் ஜீவா போன்ற இலங்கையின் புகழ்பூத்த படைப்பாளிகள் தங்களது சமூகச் செயல் வீச்சுக்குக் களம் அமைத்துத் தந்ததில் கார்த்திகேசனின் பங்களிப்பை விரிவாகப் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தலைமறைவுப் பணியின் பொருட்டு வருகைதந்திருந்த ப. ஜீவானந்தம் கார்த்திகேசன் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விடயங்களை டானியலும் டொமினிக் ஜீவாவும் எழுதிச் சென்றுள்ளனர். டானியலுக்கு முன்னரே தலித் இலக்கிய முன்னோடியாக களம் இறங்கியிருந்த என். கே.ரகுநாதன் தோழர் கார்த்திகேசனிடமிருந்து பெற்ற மற்றொரு உயர் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை திராவிட முன்னேற்றக் கழக அங்குரார்ப்பணக் கூட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் தனது வீட்டில் இடம் கொடுத்திருந்தார். சாதியத் தகர்ப்புக் கருத்தியல் காரணமாகத் தொடக்கப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை விடவும் கார்த்திகேசனின் கம்யூனிஸ்ட் கட்சி காத்திரமான வகையில் சாதியத்தகர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பது கண்டு தான் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியை வரித்துக்கொண்டதாக ரகுநாதன் கூறுவார்.


மாற்றுக் கருத்தாளர்களோடு ஐக்கியப்பட்டு இயங்கி, வலிந்து தம் பக்கம் இழுக்க முயலாமலே – சரியான செயற்பாட்டு வளர்ச்சி வாயிலாக வசீகரிக்க இயலும் என்பதற்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கார்த்திகேசன் வாயிலாக எடுத்துக்காட்டாகி உள்ளது.
தேசிய இனப்பிரச்சனை மார்க்சியத்தை வர்க்கப் போராட்ட முன்னெடுப்பின் பொருட்டு தொழிலாளி – விவசாயி வர்க்கங்களை அணிதிரட்டும் முன்னணி பணியைக் கொண்ட தத்துநெறியாக கருதும் மனப்பாங்கு இன்றுங்கூடப் பலரிடம் காணப்படுகிறது. சாதி/ தேசிய இனப் பிரச்சனைகள் என வருகிறபோது சாதியவாத (தலித்திய), தேசிய இனவாத சக்திகளின் முன்னெடுப்புகளுக்கு உத்வேகம் வழங்குவதன் வாயிலாக அவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண உதவி நல்கி முடிவை எட்டிய பின்னர் வர்க்கப் போராட்டக் களத்தை தெளிவாகக் கண்டடைய இயலும் எனக் கருதும் போக்கு பல மார்க்சியர்களிடம் ஏதோவொரு வடிவில் இருந்து வருகிறது. இன்று தமிழகத்தில் பல மார்க்சியர்களே முற்றிலும் தலித்தியவாத கருத்துக்களை முன்வைக்கின்றனர்; இலங்கையில் தமிழ் தோழர்கள் பலர் தமிழ் தேசிய இன வெறியர்களோடு அவ்வப்போது தோளோடு தோள் சேர்ந்து இனவாத முழக்கங்களை எழுப்புகின்றனர்.


முன்னதாக அந்தத் தளங்களில் இயங்கியிருக்காத காரணத்தால் சாதிவாத, இனவாத சக்திகளின்நிலைப்பாடுகளை அந்தந்த தளங்களில் அப்படியே ஏற்கிற அவலம் மார்க்சியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மார்க்சியர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த (நவீன இலங்கை வரலாற்றின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகளில் அது மட்டுமே வெற்றிபெற்றிருந்தது) காரணத்தால் இலங்கை மார்க்சியர்கள்தலித்திய வாதத்துக்கு ஆட்படவில்லை. அதேவேளை தேசியஇனப்பிரச்சினையில் மார்க்சியர்களே தலைமையேற்றுசெயலில் இறங்க வேண்டும் என்னும் தெளிவு இன்னமும்பெறவில்லை. சாதிமுறை தகர்க்கப்படல், தேசிய இனஒடுக்குமுறையை முறியடித்தல் என்பனவும் மார்க்சியத்தின்பணி எனப் புரிந்து கொள்ளும் போது எமக்கான சொந்தவேலைத்திட்டங்கள் கைவரும்; சாதியவாத (தலித்திய) இனவாத சக்திகளின் செயற்பாடுகளை இரவல் வாங்கவேண்டிய அவசியம் ஏற்படாது. மார்க்சியத்தை வர்க்க வாதமாகமார்க்சியர்களே கருதுவதில் இருந்து இன்னமும்விடுபடவில்லை.ஆயினும், சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவத்திலிருந்து இலங்கை மார்க்சியர்கள் புதிய தளங்களை எட்டும்கோட்பாட்டு உருவாக்கங்களை கண்டறிந்துள்ளனர்; வர்க்கஅரசியலுக்கு மாற்றான திணை அரசியல் என்பதையும்இப்போது பேசுபொருளாக்கியுள்ளனர். இதன்வழி எமக்கானசெயற்களம் விரிவாகும் போது அண்மைக் காலமாக நிலவிவரும் தேக்கமும் பாதக நிலைகளும் தகர்க்கப்படும்; எதிரிவரையறுக்கும் போர்க்களத்தில் எதிர்வினை ஆற்றுவது என்றஇன்றைய கையறு நிலையில் நின்று நீங்கிப் புதிய தளத்தில்வரலாறு படைக்கும் உந்துதலை மாற்றிக்கொள்வர். சாதியத்தகர்ப்புப் போராட்டத்தில் முன்னணி வகித்த தலைவர்களில் வி.ஏ. கந்தசாமி தவிர ஏனையவர்கள் அனைவரும் சண் அணியில்இருக்க 1972 ஆம் ஆண்டில் பிளவடைந்து சென்ற கார்த்திகேசன் அணியினர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) என இயங்கியிருந்தனர் (வி. ஏ. கந்தசாமி இந்த அணியின் மற்றொரு பிரதான தலைவர்) இவ்விரு அணிகளும் தேசிய இனப் பிரச்சினையை எவ்வாறுஅணுகினர் என பார்ப்பது சுவாரசியமானது.


தேசிய இனப் பிரச்சனையை சரியாக அணுகிச் சுயநிர்ணயஉரிமையை ஏற்கவில்லை என்ற காரணி உட்பட நான்குகாரணங்களை முன்வைத்து 1978 ஆம் ஆண்டு சண்முகதாசன்தலைமையில் இருந்து விலகி உருவான புதிய ஜனநாயக கட்சிஇன்னமும் செயற்களத்தில் உள்ளபோது சண்முகதாசன்தனக்கான ஒரு ஆதரவாளர் குழுவை மட்டும் உடையவராகச்செயலற்ற நிலைமைக்கு ஆளானார்; செயலற்ற அந்தநிலையில் வெறும் ஆயுத வழிபாட்டு மனப்பாங்கில் தமிழீழவிடுதலைப் புலிகளின் தவறான வன்முறை மார்க்கத்துக்குஉத்வேகம் ஊட்டும் வகையில் பிரிவினைவாதச் சுயநிர்ணயஉரிமையை ஏற்பதாக பிரகடனப்படுத்தினார். இத்தகைய பாதகநிலைக்கு மாறாக, தேசிய இன முரண்பாடு கூர்மைபடத்தொடங்கிய எழுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறிலேயேகார்த்திகேசன் அணியினர் அதன்பால் கவனம் குவிக்கதொடங்கி இருந்தனர். அப்போது சமசமாஜக் கட்சி, இலங்கைகம்யூனிஸ்ட் கட்சி (பீற்றர் கெனமன் – எஸ்.ஏ. விக்ரமசிங்க – வைத்திலிங்கம் அணி) என்பன பங்கேற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம்அதிகாரத்தில் இருந்தது. அதனைச் சரியாகக் கணிப்பிட்டு ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தை மேற்கொள்ளத் தவறுகிறார் எனும் குற்றச்சாட்டையும் சண்மீது சுமத்தியவாறுதான் கார்த்திகேசன் அணியினர் தனிவழி சமைத்தனர்- ஒரு இடதுசாரி அரசாங்கத்துடன்ஐக்கியத்துக்குரிய இடங்களைக் கவனம் கொள்ளாமல்போராட்டத்திற்கு உரிய அம்சங்களை மட்டும் சண்பார்த்தபோது போராட்டத்துக்கு உரிய விடயங்களைகாணமறுத்துச் சரணாகதி வகைப்பட்ட ஐக்கியத்தைகார்த்திகேசன் அணியினர் முன்னெடுத்தனர்.

இருப்பினும் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படையைகார்த்திகேசன் அணியினர் சரியாகப் புரிந்துகொண்டுஅவசியப்பட்ட நடைமுறையை முன்னெடுக்கதலைப்பட்டிருந்தனர். பிரிவினையற்ற சுயநிர்ணய உரிமையைவலியுறுத்தும் வகையிலான அப்புதிய வேலைத் திட்டமுன்னெடுப்பில் நிச்சயமாக தோழர் கார்த்திகேசனின் கோட்பாட்டு வழிகாட்டல் இடம் பெற்றிருக்கும். “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி” எனும் வெகுஜன அமைப்பை அக்கட்சிஉருவாக்கி அதன் செயற்பாடுகளில் பங்கெடுத்த பலதோழர்களது பதிவுகள் கார்த்திகேசனின் பங்கு பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன. அவர் மீது பெரும் மதிப்பைகொண்டிருந்த தோழர் விசுவானந்த தேவன் அதன் தீவிரசெயற்பாட்டு முனைப்பில் “தமிழீழ தேசிய விடுதலைமுன்னணி”, “தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி” என்றபிரிவினை நிலைப்பாட்டிற்கு வளர்த்தெடுத்து சென்றமையில்கார்த்திகேசன் உடன்பாடற்றவர் என்பதை “தோழர் விசுவானந்த தேவன் நினைவு மலர்” இல் தோழர் இயக்கச்சி மணியம் எழுதியுள்ள விரிவான கட்டுரை வழியாக அறியமுடிகின்றது.ஆக, கார்த்திகேசன் நூற்றாண்டில் அவரது பங்களிப்புகளைவெளிக்கொணரும் அவசியமுள்ள இவ்வேளையில் சரியானகண்ணோட்டத்துடன் – தனிநபர் வழிபாட்டு பக்தி மார்க்கத்தைகைவிட்டு அணுகும்போது, இலங்கை இடதுசாரி இயக்கத்தின்வீரியமிக்க பக்கங்களை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கும் கைங்கரியத்தையும் சாத்தியமாக்கியவர்களாவோம். அதன்போது ஒரு ஆதரவுத் தளத்தினர்க்கு உரியவராக அன்றி பரந்துபட்ட வெகுஜனப் பரப்புக்குரிய ஒளிவீச்சு தோழர் கார்த்திகேசன் என உணர்வோம்.

Tags: