சஜித் தனி வழி செல்வாரா?

கே.மாணிக்கவாசகர்

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவரும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பாகப் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியைத் தீர்த்து வைப்பதற்காகக் கூட்டப்பட்ட இறுதிக் கூட்டமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆனால் 2015 இல் ஐ.தே.க. கட்சி ஆட்சிக்கு வந்து ரணில் பிரதமரான பின்னர் தமது பொது விரோதிகளான ராஜபக்சாக்களை ஒன்றுபட்டு எதிர்ப்பதற்காக அந்தப் போட்டி சற்று பின்தள்ளப்பட்டிருந்தது.

ஆனால் 2019 நொவம்பர் 16ஆம் திகதிக்கான ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அந்தப் போட்டி மீண்டும் முன்னணிக்கு வந்தது. சஜித்தை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் ஏற்க மறுத்ததின் மூலம் இந்த முரண்பாடு வெளிப்படையாகத் தீவிரமடைந்தது.

ஆனால், கட்சியின் பெரும்பாலான கீழ்மட்ட உறுப்பினர்களினதும், ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளினதும் அழுத்தத்தால் ரணில் சஜித்துக்கு ஜனாதிபதி வேட்பாளராக வழிவிட்டு ஒதுங்கவேண்டி ஏற்பட்டது. ஆனால் கட்சித் தலைவர் பதவியை ரணில் சஜித்துக்கு விட்டுக் கொடுக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று அவர் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக யார் பதவி வகிப்பது என்ற விடயத்தில் மீண்டும் ரணிலுக்கும் சஜித்துக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தத் தடவையும் ரணில் சஜித்திடம் பின்வாங்க வேண்டி ஏற்பட்டது. சஜித் வெற்றிகரமாக எதிர்க்கட்சித் தலைவரானார்.

தற்பொழுது ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் புதிய மோதல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தலை கட்சி வெற்றிகரமாக முகம் கொடுப்தாக இருந்தால் கட்சித் தலைவர் பதவியை தனக்குத் தர வேண்டும் என சஜித் கோரி வருகிறார். ஆனால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரணில் கட்சித் தலைவர் பதவியை மட்டும் விட்டுத்தர முடியாது என விடாப்பிடியாக நிற்கின்றார். அவர் அவ்வாறு நிற்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, கட்சிக்குள் ரணிலுடன் நிற்பவர்கள் சஜித்துடன் ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியாக பலம் உள்ளவர்களாக இருப்பதுடன், சாதி ரீதியாகவும் உயர்ந்தவர்கள். சஜித்தைப் பொறுத்தவரை அவரது தகப்பனார் காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே சஜித்துக்கு தலைமைப் பதவி வழங்குவதற்கு மறுப்பதற்கு சாதிப் பிரச்சினையும் ஒரு காரணம் என்பது ஒளிவு மறைவான விடயமல்ல.

இரண்டாவது, ரணிலை விட கட்சியின் கீழ்மட்டங்களிலும், பொதுமக்களிடமும் சஜித்துக்கு செல்வாக்கு அதிகம். ஒருகால் சஜித்துக்கு கட்சித் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டால், அதுவே அறுதியும் உறுதியும் ஆகிவிடும் என ரணில் தரப்பு பயப்பிடுகிறது. எனவே டட்லி சேனநாயக்கவுக்கு பிறகு சேனநாயக்க வம்சத்திடமிருந்து ஜெயவர்த்தன வம்சத்துக்குக் கிடைத்த கட்சித் தலைமைப் பதவியை ரணில் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

இந்தச் சூழ்நிலையில் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருப்பதால், ஐ.தே.கவை விட்டு விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான கட்சிகளும் சஜித் தலைமையில் புதிய கூட்டணி அமைவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ரணில் தலைமை இருக்கும்வரை ஐக்கிய தேசிய முன்னணி இனி ஒருபோதும் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாது என்பதே அவர்களது கருத்தாகும்.

இந்த நிலைமையில், சஜித், ராஜபக்சாக்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி புதிய கட்சி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது போல, ஐ.தேகவை விட்டு விலகி புதிய கட்சி அமைத்து அதன் மூலம் அதிகாரத்துக்கு வர முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனெனில், ராஜபக்சாக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும், தற்பொழுது சஜித் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

முன்பு சஜித்தின் தகப்பனார் ஆர்.பிரேமதாசவும், அப்போது கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் இதே வகையான பிரச்சினையை எதிர்நோக்கினார், ஆனால் பிரேமதாச, ஜே.ஆர். ஆட்சியில் பிரதமராக இருந்த காரணத்தாலும், கட்சி கீழ்மட்டத்திலும் மக்களிடமும் செல்வாக்கு இருந்த காரணத்தாலும், எல்லாவற்றையும் விட பிரேமதாசவிடம் ஜே.ஆரை பயமுறுத்தக்கூடிய பெரும் அடியாள் கூட்டம் இந்த காரணத்தாலும், ஜே.ஆர். பிரேமதாசவிடம் பணிந்து போகும் நிலைமை ஏற்பட்டது.

அப்படியொரு நிலைமையை உருவாக்கி ரணிலை சஜித் பின்வாங்க வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் என்னதான் செய்தாலும் தற்போதைய நிலைமையில் ராஜபக்சாக்களிடமிருந்து அதிகாரத்தை மீட்டெடுப்பது என்பது இலேசுப்பட்ட விடயம் அல்ல என்ற யதார்த்தமும் இருக்கின்றது.

Tags: