800 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு: அப்பட்டமான சந்தர்ப்பவாதம்!

என். ராமகிருஷ்ணன்

‘800’ என்னும் திரைப்படத்தில், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளரும், இலங்கைத் தமிழருமான முத்தையா முரளிதரன் வேடத்தில், இன்றைய பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பாரதிராஜா போன்றவர்களும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால், இலங்கை அதிபர் ராஜபக்சவுடனும் சிங்களர்களுடனும் முரளிதரன் நல்லுறவு கொண்டிருந்தார் என்பதாகும். அவர் சிங்களர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததால், கண்டிப்பாக அவர் ஈழத்துத் தமிழர்களின் எதிரிதான் என்று ஒரு வடிவமைப்பை உண்டாக்கி வருகிறார்கள். இது சரிதானா என்று பார்ப்போம்.

இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர், இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் பார்வையில் குற்றாளிகளாக நின்ற பலரது கதைகள், ‘அவர்கள் பக்கத்துக்கு நியாயத்தை’ எடுத்துச்சொல்வதாக நிறைய சினிமாவாக வந்துள்ளன. சீவலப்பேரி பாண்டி படம் அதில் ஒன்று. கள்ளக்கடத்தல்காரனின் வாழ்க்கை வரலாற்றில் உச்ச நடிகர்களான கமல், ரஜினி போன்றோரும் நடித்துள்ளனர். நாடக நடிகர் மனோகர், ராவணன், சிசுபாலன், சூரபத்மன் என்று புராணங்களில் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களின் கதாபாத்திரங்களில் நாடகம் போடவில்லையா? அவரை ‘நாடகக் காவலர்’ என்று நாம் கொண்டாடவில்லையா?

தமிழ் நடிகர்களில், எம்ஜியார் ஒருவரைத் தவிர, அநேகமாக எல்லா நடிகர்களும் எதிர்மறை வேடங்களில் நடித்தவர்கள்தான். ஒருவேளை, 800 படம், முரளிதரனின் அரசியல் கருத்துகளை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும், அதில் என்ன தவறு இருக்க முடியும்? ஏன், முரளிதரன் பக்கத்துக்கு நியாயம் எதாவது இருந்தால், அதை அவர் திரைப்படத்தின் மூலம் சொல்லக்கூடாதா? பேச்சுரிமை.. பேச்சுரிமை என்று மூச்சுக்கு முந்நூறு முறை பேசும் இந்தத் தலைவர்களும், திரைத் துறைப் பெரியவர்களும், ஏன் 800 திரைப்பட இயக்குனருக்கு அதே பேச்சுரிமையை தர மறுக்கிறார்கள் என்பது ஒரு நகை முரண். இது, பாரதிராஜா போன்றவர்களின் போலித்தனத்தை தோலுரித்துக் காட்டுவதாகவே இருக்கிறது.

ஈழத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய பிரபாகரன் போன்றவர்களை எதிர்த்துக் கருத்து சொன்னால் தவறா? அப்படிச் சொன்னால், அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களா? என்ன ஒரு அபத்தம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை தனது அஹிம்சை கொள்கைகளால் வழி நடத்திச்சென்று, நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மஹாத்மா அவர்கள். அவரை நாம் அந்த வெற்றிக்குப் பொறுப்பாக்கி ‘தேசப்பிதா’ என்று போற்றிவருகிறோம். ஆனால் அதே சமயத்தில், அள்ளித்தெளித்தது போன்ற அவசரக்கோலத்தில், நாட்டை இரண்டாகப் பிரித்து, இரண்டு நாடுகளுக்கும் விடுதலை கொடுத்து, நாட்டைப் பிரிந்தபின் நடந்த மாபெரும் வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் யார் பொறுப்பு? அதற்கும் அவர்தானே பொறுப்பெடுக்க வேண்டும், அல்லது மஹாத்மா காந்தியை நம்பாத முஹம்மது அலி ஜின்னா பொறுப்பேற்க வேண்டும், அல்லது இருவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், நாம் மஹாத்மாவின் நோக்கத்தை சந்தேகப்படவில்லை என்பதால், நாம் அந்தக் கொலைகளுக்கு அவரை பொறுப்பாக்கவில்லை. அதுபோல, ஒருவேளை முரளிதரனின் நோக்கம் நல்லதாக இருந்தால், அவரை ஈழத் தமிழர்களின் எதிரி என்று ஏன் பார்க்க வேண்டும். அவர் காந்தியைப் பின்பற்றும் அஹிம்சாவாதியாகவும் இருக்கலாமே.

இன்றைய காலகட்டத்துக்கு, காந்தியின் அஹிம்சை கொள்கைகள் ஒத்துவருமா அல்லது வராதா என்ற கேள்விக்கும் இந்த விவாதம் இட்டுச் செல்லலாம். அமெரிக்காவில், மார்ட்டின் லூதர் கிங் ஒரு இனவெறிக்கு எதிராக, மஹாத்மாவின் அஹிம்சை வழியில் போராடினார். அதில் வெற்றி கண்டார். தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா, அஹிம்சை வழியில் இதேபோன்ற இனவாதத்துக்கு எதிராகப் போராடினார். அவரும் வெற்றி கண்டார்.

ஆனால், ஈழத்தில் நடந்தது என்ன? அங்கு புரட்சி ஒன்றுதான் வழி என்று ஆயுதம் ஏந்தி, பிரபாகரன் போன்றவர்கள் போராடினார்கள். காந்திய வழியில் சென்ற தலைவர்களைக் கொலை செய்தார்கள். உடனிருந்த மற்ற போராளிகளையும்கூட ஈவிரக்கம் இல்லாமல் அழித்தொழித்தார்கள். அரசியல் பாதைக்கு அவர்கள் திரும்ப வாய்ப்புகள் இருந்தும், அவர்கள் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களுக்கு மக்கள் ஆட்சியில் ஆதரவும், நம்பிக்கையும் இல்லை. ஈழம் அமைந்திருந்தாலும், அங்கு சர்வாதிகார ஆட்சியே இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி அடையவில்லையே.

இரண்டு இனங்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளில், அஹிம்சை வழி நடப்பதுதான் சரியான வழி. அஹிம்சை வழியில் நடப்பதால், எதிரியின் மனத்தில் பயம் ஏற்படாது. பயம் இல்லாத மனத்தில்தான் தனது தவறை உணர செய்யும் எண்ணங்கள் தோன்றும். அதுவே சமாதானத்துக்கு வழி வகுக்கும். அஹிம்சை வழியில் போராடினால், எதிரியும் அஹிம்சை வழிக்கு வருவான். ஆனால், ஆயுதம் ஏந்தினாலோ, எதிரியும் ஆயுதம் ஏந்துவான். முடிவில், போராட்டம் ஆயுதங்களும் ஆயுதங்களுக்கு இடையில் என்று முடிந்துவிடும். யாருடைய ஆயுதங்களுக்கு வலிமை அதிகமோ அவர்கள் வெற்றிபெறுவார்கள். அதன்பின், தோற்றவர் கதி அதோகதிதான். இலங்கையில் நடந்தது இதுதான்.

இன்று, தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை போராட்டப் பாதைக்கு வழி நடத்திய பிரபாகரன் போன்றவர்களைப் போற்றுபவர்கள் அனைவரும், மஹாத்மா காந்திக்கு எதிரானவர்கள். உலகுக்கு நாம் அளித்துள்ள பல நல்ல செய்திகளில், அஹிம்சைக் கொள்கையும் ஒன்று. அது நம் அனைவரின் பெருமை. ஆனால், வன்முறை ஆதரவாளர்கள் நம் நாட்டின் பெருமைக்கும் எதிரானவர்கள். அதில் பாரதிராஜாவும் ஒருவர். மற்றும் வைகோ, சீமான், ராமதாஸ், தாமரை போன்றவர்களும் அடங்குவார்கள். ஒருமுறை அல்ல.. மூன்று முறை வெற்றி கண்ட அஹிம்சை கொள்கையை அவமானப்படுத்தும் இவர்களை, பொதுவாழ்வில் இருந்து அனைவரும் ஒதுக்க வேண்டும். இன்று, மேற்காசிய நாடுகளில் அமைதி திரும்பாததற்கு, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்தியதே காரணம். ஆயுத வழி ஒரு பழைய கால, நாடோடித்தனமான போராட்ட வழி. நாகரிக உலகில் அதற்கு இடமில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையை எப்படி தீர்த்திருக்க வேண்டும். 2006-2011 காலகட்டத்தில் இங்கு இருந்த மத்திய அரசும், மாநில அரசும், மற்றும் இங்கிருந்த தலைவர்களும் ராஜபக்சவை பேச்சுக்கு அழைத்திருக்க வேண்டும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராஜபக்ச சிங்களர்களின் தலைவர். நம் நாட்டிலேயே, எல்லா தலைவர்களையும் எல்லாருக்கும் பிடிப்பதில்லையே. அப்படியானால், ராஜபக்ச மீது மட்டும் ஏன் வெறுப்பைக் காட்ட வேண்டும்?

கருணாநிதி போன்றவர்கள், இலங்கைக்குச் சென்று அங்கேயே ராஜபக்சவை சந்தித்திருக்க வேண்டும். ஈழத்தில் போராடும் குழுக்கள், சிங்களர்கள், தமிழ் தலைவர்கள் என்று எல்லோரும் சேர்ந்து பேசி, நம் தலைவர்கள் அமைதிக்கு உத்திரவாதம் அளித்திருக்க வேண்டும். ராஜிவ் காந்தி செய்த தவறைச் செய்யாமல், நல்லெண்ண அடிப்படையில் சிங்களர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.

வேண்டுமானால், ராஜராஜ சோழன் காலத்தில், நாகப்பட்டினத்தில் மன்னரால் அனுமதிக்கப்பட்ட புத்த மதத்துக்கு ஆதரவாகக் கட்டப்பட்ட சூளாமணி விகாரம்போல் ஒரு கோயிலை தமிழ்நாட்டில் கட்டி, சிங்களர்களின் மனத்தில் தமிழர்கள் அவர்களுக்கு எதிரிகள் இல்லை என்று காட்டியிருக்கலாமே. அதன்மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலாவையும் அதிகரித்திருக்கலாமே. அயர்லாந்து நாட்டில், போராட்டக் குழுக்கள் பிற்காலத்தில் அரசியல் பாதைக்குத் திரும்பியதுபோல, ஈழப் போராளிகளும் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால், ஈழத் தமிழர் படுகொலை நடந்திருக்காது.

இலங்கை என்பது ஒரு வெளி நாடு. அவர்களுக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் உள்ளது. ஆகையால், அவர்களைக் கையாளும்போது, நமது நாட்டின் நலனையும் முன்னிறுத்தியே நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதற்கு மிக்க விவேகம் வேண்டும். அங்கு அமைதி நிலவினால்தான் நமக்கு நல்லது. ஆனால், இங்குள்ள தலைவர்களுக்கு அந்த விவேகம் கிடையாது. நேற்று வரை காதுகள் கூசும் அளவுக்குத் தங்கள் அரசியல் எதிரிகளைப் பேசிவிட்டு, அடுத்த நாளே அவர்களுடன் கைகோர்த்து, கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது; நிரந்தர நண்பனும் கிடையாது’ என்று சந்தர்ப்பவாதம் பேசும் நம் அரசியல்வாதிகள், ஏன் ராஜபக்சவையும் அப்படி நடத்த மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிர். இன்று, நடிகர் விஜய் சேதுபதியை இவர்கள் எதிர்ப்பது, இந்தச் சந்தர்ப்பவாதத்தின் ஒரு பகுதியே.

விஜய் சேதுபதிக்கும், முத்தையா முரளிதரனுக்கும் நம் ஆதரவைத் தெரிவிப்போம்.

Tags: