இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுப்பது ஏன்?

-கே.மாணிக்கவாசகர்

லங்கையில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அந்நோயால் இறப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது.

இந்த நோய் உலகளாவிய ரீதியில் பரவி வந்த நேரத்தில் பல நாடுகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறின. சுகாதாரத்துறையில் முன்னேறிய நாடுகள் எனக் கணிக்கப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சுவிஸ் போன்ற மேற்கு நாடுகளில் இந்த நோயின் தாக்கமும், அதனால் ஏற்பட்ட மரணங்களும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேகமெடுத்தது. (அமெரிக்காவில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததிற்கு இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தவறியதும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது)

அது மாத்திரமின்றி, இலங்கையின் அயல்நாடான இந்தியாவிலும் இன்றுவரை இந்த நோய் தலைவிரித்தாடியபடி உள்ளது.

இத்தகைய நிலையில் சீனாவுக்கு அடுத்ததாக நியுசிலாந்தும் இலங்கையும்தான் இந்த நேயைக் கட்டுப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு உட்படப் பல நாடுகள் பாராட்டுத் தெரிவித்தன. (சீனாவில் இந்த நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்கு அந்த நாட்டில் நிலவும் சோசலிச அமைப்புத்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை)

நியுசிலாந்தும் இலங்கையும் பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நாடுகள். இருந்தும் அவற்றால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடிந்தமைக்கு இரண்டு காரணிகள் அடிப்படையாகும். ஓன்று, இந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக இருந்தபோதும், இவற்றின் அர்ப்பணிப்பும் விவேகமும் உள்ள அரச தலைமைகளாகும். மற்றது, மக்களது ஒத்துழைப்பாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை, அது பிரித்தானியர் ஆட்சியில் இருந்த காலந்தொட்டு நல்ல, சீரான சுகாதார சேவையை கொண்டுள்ள நாடாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசுகளும் அதைப் பின்பற்றி வந்துள்ளன. அதனால்தான் இலங்கையில் மலேரியா, அம்மை, நெருப்புக் காய்ச்சல், காச நோய் என்பனவற்றை வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது. தென்னாசியாவில் இலங்கையைத் தவிர்த்து கூடுதலான வைத்தியசாலை வசதிகள் உள்ள நாடுகள் எதுவும் கிடையாது எனத் துணிந்து கூறலாம்.

இந்த நிலைமையில் நியுசிலாந்து தனது நிலையைத் தொடர்ந்து சீராக வைத்திருக்க இலங்கையில் மட்டும் நிலைமைகள் தலைகீழாக ஏன் மாறியது என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்று பரவல் மினுவாங்கொடவிலுள்ள ஆடைத் தெழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு முதலில் ஏற்பட்டு அவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்புள்ள பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து வந்த சிலரால் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் இந்தியாவில் இருந்து அங்கு வந்தவர்கள் வைத்திய பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் பரவலாக இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதைப் பார்க்கையில், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மூலம் மட்டும் பரவியதாக அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது. இது சில வேளைகளில் பலருக்கு முன்னரே ஏற்பட்டு இருந்து, ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு உள்ளாகாததால் இப்பொழுது பரவி வருவதாகவும் கூட இருக்கலாம்.

எது எப்படியிருப்பினும், இந்த நோய் ஏற்பட்ட முதல் கட்டத்தில் அரசாங்கம் துரிதமாகவும், கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாகவும் இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது.

ஆனால் பின்னர் என்ன நடந்தது? அரசாங்கம் படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன் மெத்தனமாகவும் இருந்தது. பொதுமக்களும் இலங்கையில் இந்த நோய் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது எனக் கருதி தமது முன்னைய வழமையான வாழ்க்கைக்குத் திரும்பினர். இங்கு ஒரு உதாரணம் சொல்லலாம். இவ்வருட நல்லூர் கந்தசாமி கோயில் வருடாந்தத் திருவிழாவின் போது ஆகக்கூடியது முன்னூறு பேர்கள் கலந்து கொள்ளலாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். ஆனால் தேர்த்திருவிழாவின் போது கூடியிருந்த மக்கள் தொகை எத்தனை ஆயிரம்?

அது மட்டுமின்றி, திருமண, பூப்புனித, கிரகப் பிரவேச, மரண சடங்குகளின் போது மக்கள் முன்னைய வழமைப் பிரகாரம் நூற்றுக்கணக்கில் நெருக்கியடித்துக் கொண்டு கூடத் தொடங்கினர். வர்த்தக நிலையங்கள், சந்தைகள், அலுவலகங்கள், பாடசாலைகளிலும் அவ்வாறே. பேரூந்துகளில் கிழங்கு அடுக்குவது போல மக்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இப்படிப் பலதைச் சொல்லலாம்.

கொரோனா தொற்று முற்றிலுமாகக் கட்டுப்பாட்டுக்குள் வராத ஒரு சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு என அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும். அதேபோல, தாமும் கண்டபடி நடக்கக்கூடாது என்பதை மக்களும் உணர்ந்திருக்க வேண்டும். எனவே, தற்போதைய தொற்று அதிகரிப்புக்கு அரசாங்கமும் மக்களும்தான் காரணம்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த தொற்றை வைத்து அரசியல் செய்வது அவர்களது பொறுப்பற்ற நிலையையும், வங்குரோத்து அரசியலையும்தான் படம் பிடித்துக் காட்டுகிறது. அரசாங்கம்தான் இந்த நோய் பரவலுக்குக் காரணம் என அவை குற்றம் சாட்டுவதும், சுகாதார அமைச்சரைப் பதவி விலகக் கோருவதும் சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகள்.

மறுபக்கத்தில், இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதும், மந்திரிக்கப்பட்ட நீரை அமைச்சரே ஆறுகள் குளங்களில் ஊற்றுவதும் மற்றொரு வேடிக்கை விளையாட்டுகள்.

இந்த நோய் மேலும் பரவாதிருக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எடுப்பதும், அதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுமே இன்றைய தேவையாகும்.