சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்
கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?
பிரகாஷ் காரத்: சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.
‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.
எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.
ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.
கேள்வி: தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?
பிரகாஷ் காரத்: ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.
அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.
இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது. ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.
கேள்வி: ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும் நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?
பிரகாஷ் காரத்: இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.
சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.
இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.
இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.
எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும். ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.
இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம் தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
பேட்டியின் ஒலி வடிவம்:
தமிழில்: வீ. பா. கணேசன்