தோழர் வி. சின்னத்தம்பி மறைவுக்கு அனுதாபங்களும் அஞ்சலியும்!

லங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்டகால செயற்பாட்டாளரும், பல்வேறு மக்கள் இயக்கங்களில் செயற்பட்டவரும், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபருமான தோழர் வி.சின்னத்தம்பி தாம் வாழ்ந்து வந்த பருத்தித்துறை – வராத்துப்பளை கிராமத்தில் இன்று காலமான துயரமான செய்தி வந்திருக்கிறது.

கரணவாய் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் சின்னத்தம்பி, தமது இளமைக்காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து வேலைசெய்த தோழர் சின்னத்தம்பி, பின்னர் 1964 இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அதிலிருந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி உருவானபோது அதனுடன் இணைந்து அதன் மத்திய குழுவிலும், வட பிராந்தியக் குழுவிலும் சிறப்பாகச் செயற்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட சிறுபான்மை தமிழர் மகாசபையிலும், பின்னர் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலும் இணைந்து காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார். ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இலங்கை தேசிய ஆசிரியர் சங்கத்துடன் (சிறீ லங்கா ஜாதிக குரு சங்கமய) இணைந்து அதன் மத்திய குழுவிலும், வட பிராந்தியக் குழுவிலும் சிறப்பாகப் பணியாற்றினார். கட்சியின் ஆசிரிய அணியினரான மு.கார்த்திகேசன், அ.சிவலிங்கம், மு.குமாரசாமி, எம்.பி.செல்வரத்தினம், கே.ஜனகா, கே.தங்கவடிவேல், எஸ்.செல்லையா என்.கே.ரகுநாதன், மாதகல் வ.கந்தசாமி, எஸ்.சேவற்கொடியோன், செல்லத்தம்பி, சூடாமணி, வி.ரட்டாய், பசுபதி போன்ற பலருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தார்.

கூட்டுறவுத் துறையில் அதிகமான ஈடுபாடு கொண்ட தோழர் சின்னத்தம்பி, உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க நெறியாளர் குழுவில் நீண்டகாலம் செயல்பட்டு, கூட்டுறவுத்துறையில் நிலவி வந்த ஊழல்களுக்கு எதிராகச் சளைக்காமல் போராடினார். அதேபோல தான் திருமணம் செய்த வராத்துப்பளை கிராமத்தில் கட்சி வேலைகளை முன்னெடுப்பதிலும், அங்கு தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் பனங்கட்டித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதிலும் அயராது பாடுபட்டார்.

வராத்துப்பளையில் திருமணம் செய்து, ஆசிரிய தொழிலில் ஈடுபட்டபோதும், தனது குடும்பத் தொழிலான விவசாயத்தை மறக்காது தினசரி மாலை வேளைகளில் வராத்துப்பளையில் இருந்து சைக்கிள் ஓடி கரணவாய் வந்து தோட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டார். சில வருடங்களுக்கு முன்னர் அருமை மனைவி நோய்வாய்ப்பட்டு காலமான பின்னர் அந்தக் கவலைகளுடனேயே வாழ்ந்து வந்தார். அவருக்கு அந்த வலி எத்தகையது என்பதை அந்த நேரத்தில் அவருடன் உரையாடியபோது அறிய முடிந்தது.

கொள்கை விடயத்தில் எந்தவித சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமளிக்காது வாழ்ந்து வந்த தோழர் சின்னத்தம்பி, அதேநேரத்தில் தோழர்களில் இன்ப துன்பங்களில் தானும் ஒருவராகப் பங்குபற்றி தனது தோழமையை வெளிப்படுத்தி வந்த ஒருவராவார்.

தோழர் சின்னத்தம்பி அவர்களுடன் இணைந்து பணியாற்றிய நாட்களும், அவருடைய வீட்டில் பல தடவைகள் தங்கி உரையாடிய நினைவுகளும் காலத்தால் அழியாதவை. தோழரின் மறைவையிட்டு அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், செங்கொடியைத் தாழ்த்தி தோழர் சின்னத்தம்பிக்கு எமது புரட்சிகர அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி, முகநூல்: மணியம் சண்முகம்
2020.11.19

Tags: