வடக்கில் புலிகளின் மாவீரர் தினத்துக்கு தடை!
மாவீரர் தின நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், தி. அருச்சுனா , வி.திருக்குமரன் , த.துளசி, திருமதி. க.திருக்குமரன் மற்றும் கே.சஜந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்
பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை
மன்னார் மாவட்டத்தில், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் 19.11.2020 அன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை நினைவு கூர, மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் பொலிஸார் இன்று மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, குறித்த கட்டளையை பெற்றுள்ளனர்.
இதற்கமைய, வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல், அன்ரன் றொஜன் ஸ்ராலின், வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேருக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.