மண்ணில் இனி எஸ்பிபி இன்றி…

வஸந்த்

எஸ்பிபி அசாத்திய திறமைசாலி. 20 நிமிடத்துக்குள் ஒரு பாடலைக் கற்றுக்கொண்டுவிடுவார். சொன்னால் பலர் நம்ப மறுக்கலாம்; ஒரே நாளில் 18 பாடல்களெல்லாம் பாடியிருக்கிறார்! பாடலின் மெட்டையும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் பாவத்தையும் சில நிமிஷங்களுக்குள் நினைவுக்குக் கைமாற்றும் வரத்தை அவர் பெற்றிருந்தார். அதேபோல், அவர் அளவுக்கு பாவத்தில் சிறந்த இன்னொருவரைத் தமிழ் சினிமாவில் நம்மால் பார்க்க இயலாது. சோகமோ சந்தோஷமோ எந்த ரசமென்றாலும் அதில் அவர் ராஜாதான். ‘கம்பன் ஏமாந்தான்’ பாடினாலும் சரி, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடினாலும் சரி! ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ‘தீர்த்தக் கரையினிலே’ என்று ஒரு பாடலைப் பாடியிருப்பார். அதில் இசையே இருக்காது; அவருடைய குரல்தான் இசை. அப்படி நம்மை உருக்கியெடுத்துவிடுவார்.

அவரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப் பெரிய அனுபவம். பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அந்தப் படத்தில் எஸ்பிபியும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் நடிக்கவில்லை; இயல்பாக அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தார்; அவ்வளவுதான். அப்போது அவர் மீது ஏற்பட்ட அபாரமான மதிப்புதான் என்னுடைய முதல் படமான ‘கேளடி கண்மணி’க்காக அவரை அணுகக் காரணம் ஆனது. “முதல் படம் பண்றீங்க. அதில ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க. எனக்குப் பாடற கேரியர் இருக்கு. படம் ஓடலைன்னா எனக்குப் பிரச்சினை இல்லை. உங்களுக்கு இருக்குற ஒரே கேரியர் இதுதான். ரிஸ்க் எடுக்காதீங்க” என்றார். நான்தான் அடம் பிடித்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். அவருக்குப் பாடல்கள் ஒலிப்பதிவு போக நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். ஆகவே, அவர் பாடிவிட்டுக் கிடைக்கும் நேரங்களில் நடித்துக் கொடுத்துவிட்டுச் செல்வார்; சில சமயம் நடித்துக் கொடுத்துவிட்டுப் பாடச் செல்வார்.

அந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம், ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி’ பாடல். அதில் சரணம் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடியது பெரிய ஹிட் ஆனது. ஆரம்பத்தில் அப்படி ஒரு பாடலுக்கான திட்டம் இல்லை. அப்போது என்னைப் பார்க்கிறவர்களெல்லாம், ‘படத்தில் யார் நாயகன்?’ என்று கேட்பார்கள்; ‘எஸ்பிபி’ என்றதும், ‘பாடகரா வர்றாரா?’ என்பார்கள். ஆகவே, படத்தில் சிறப்பாக ஒரு விஷயத்தை வைத்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆக, படத்தில் அவர் பாடகராக வராவிட்டாலும், அவருடைய ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு சூழலையும், அதற்கேற்ற விசேஷமான ஒரு பாடலையும் திட்டமிட்டோம். ‘மூச்சுவிடாத பாடல்’ என்ற யோசனையை அவரிடம் சொன்னேன். ரொம்பவும் சீரியஸாக அவர், ‘ரொம்ப நல்லாருக்கு பாஸ் இந்த ஐடியா’ என்று ஆரம்பித்தவர், ‘அப்புறம் யாரை வச்சு படத்தை முடிப்பீங்க?’ என்றார். ரொம்பக் கூர்மையான நகைச்சுவையுணர்வு கொண்டவர் அவர். படமும் அந்தப் பாட்டும் பெரும் வெற்றியை அடைந்தபோது அவர் எனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் கதாநாயகர், நான் இயக்குநர் என்பதால் நாங்கள் இணைந்தே அந்தப் படத்துக்கான பல்வேறு வெற்றி விழாக்களுக்குச் சென்றோம். 2019-ல் அந்தப் படத்தின் 29 ஆண்டு விழாவை கேக் வெட்டிக் கொண்டாடினோம். ஒரு நாள் முழுக்க அவர் என்னுடன் இருந்தார்.

இதையெல்லாம் தாண்டி அவருடைய தனித்துவம் என்று நான் கருதுவது அவருடைய நற்பண்பு. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. கடைசியாக, ஜூலை 16 அன்று எனக்கு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகூட, படிக்க முடியாமல் யாராவது மாணவர்கள் கஷ்டப்பட்டால் மருத்துவராக இருக்கும் தனது நண்பரொருவர் உதவத் தயாராக இருக்கிறார் என்பதுதான். எத்தனையோ பாடகர்களுக்கு அவர் உதவியிருக்கிறார். ஒரு அறக்கட்டளையின் மூலம் இந்த கரோனா காலத்தில்கூட நிறையப் பேருக்கு அவர் உதவினார். மாமனிதர். தனது எந்தப் புகழையும் அவர் தன் தலையில் ஏற்றிக்கொண்டதில்லை. அதனால்தான் தமிழ் மக்கள் தங்கள் இதயத்தில் அவரை இத்தனை உயரத்தி ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

Tags: