காற்றின் நறுமணம்! – காருகுறிச்சி நூற்றாண்டு

எஸ்.ராமகிருஷ்ணன்

காருக்குறிச்சி அருணாசலம் (1921 – 8 ஏப்ரல் 1964)

திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரெக்கார்டு காருகுறிச்சியின் நாதஸ்வரம்தான். அந்த மங்கல இசையை ஒலிக்க விட்டவுடன்தான் கல்யாண வீடு ஒளிரத் தொடங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது.

அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனி ருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது.

அந்த வேலாயுதம் மைக்செட் போடும் இடங்களில் சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். காருகுறிச்சியாரின் இசைத்தட்டினை உறையிலிருந்து எடுத்து அவரே தான் இசைக்க விடுவார். வேறு யாரும் அந்த இசைத்தட்டினைத் தொடக்கூடாது. தொட விடமாட்டார். ஆயிரமாயிரம் கல்யாண வீடுகளில் ஒலித்த அந்த இசையைக் கேட்ட கிராமவாசிகளுக்குப் பெரிய சங்கீத ஞானம் கிடையாது. ஆனால், மயில் ஆடுவதை ரசிப்பது போலத் தன்னை மறந்து நாதஸ்வர இசையில் கரைந்துபோயிருப்பார்கள்.

காருகுறிச்சியாரின் ரெக்கார்டு ஒலித்து முடிந்தவுடன் வேலாயுதம் கண்களைத் துடைத்துக்கொள்வார். நல்ல இசை கண்ணீர் வரவழைக்கக்கூடியதுதானே. அதை உறையில் போட்டு மரப்பெட்டியினுள் வைக்கும்போது அவரிடம் காணப்படும் பணிவும் அக்கறையும் அலாதியானது. இசைத்தட்டில் வெளியாகியிருந்த காருகுறிச்சியாரின் புகைப்படத்தை மட்டும்தான் வேலாயுதம் பார்த்திருக்கிறார். அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் நாதஸ்வர இசையின் வழியே ஒவ்வொரு நாளும் அவர் காருகுறிச்சியாரைப் பார்த்தபடியேதான் இருக்கிறார்.

தென்மாவட்டக் கோயில்களிலும், சினிமா தியேட்டரில் ஷோ தொடங்குவதற்கு முன்பும் காருகுறிச்சியின் நாதஸ்வரம் ஒலிப்பது வழக்கம். அது நம்மை மகிழ்வோடு அழைக்கும் குரல். வேலாயுதம் எத்தனையோ முறை காருகுறிச்சியாரின் ரெக்கார்டினைக் கேட்டு ரசித்திருந்தபோதும், ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பதுபோலவே அமர்ந்திருப்பார். அவர்தான் ஒரு நாள் சொன்னார்

“நாதஸ்வர இசை கலக்கும்போதுதான் காற்றுக்கு மணம் வருது. தொலைவிலிருந்து கேட்டுப்பாருங்க. அந்த வாசனை தெரியும்.”

அது உண்மை. கரிசலின் வெம்பரப்பில் வெயிலைப் போலவே ஊர்ந்து செல்லும் நாதஸ்வர இசைக்கு மணமிருக்கிறது. தாழம்பூவின் மணம்போல அலாதியான மணமது.

எங்கோ களை பறித்துக்கொண்டும் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டும் இருப்பவர்கள்கூட தொலைவிலிருந்து சஞ்சரிக்கும் நாதஸ்வர இசையைக் கேட்டு ரசித்தபடியேதான் வேலை செய்வார்கள்.

காருகுறிச்சியாரின் சங்கீதம் குற்றால அருவியைப் போலத் தனித்துவமானது. குளிர்ச்சியானது. மனதையும் உடலையும் சாந்தப்படுத்தக் கூடியது. இசை ஞானம் கொண்டவர்கள் மட்டுமன்றி எளிய மனிதர்களும் அவரது இசையில் கரைந்துபோயிருந்தார்கள்.

இந்த ஆண்டு காருகுறிச்சியாரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. தான் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரமும் கௌரவமும் பெற்ற கலைஞர் காருகுறிச்சியார்.

கோவில்பட்டியில் வசித்த அவர் புதுவீடு கட்டியபோது அதன் திறப்பு விழாவிற்குத் திரையுலக நட்சத்திரங்கள் திரண்டு வந்திருந்தார்கள். கோவில்பட்டி மக்களின் நினைவில் அது அழியாத காட்சியாகப் பதிந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜியும் ஜெமினி கணேசன் சாவித்திரியும் காருகுறிச்சியார் மீது காட்டிய அன்பு நிகரற்றது. வேறு எந்த இசைக்கலைஞருக்கும் இப்படியான அபூர்வ நட்பு சாத்தியமாகியிருக்குமா எனத் தெரியவில்லை.

இசைமேதையாக இருந்ததோடு பழகுவதற்கு அத்தனை நேசத்துடன், உண்மையான பற்றுடன் இருந்தவர் காருகுறிச்சியார். பெரிய ஜமீன்தார்கள் தொடங்கி பெட்டிக் கடைக்காரர் வரை அவர் ஒரேபோலத்தான் நட்பு பாராட்டினார். பிரபலமான இசைக்கலைஞராக விளங்கியபோதும், கோவில்பட்டிப் பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குக் கச்சேரி செய்துகொடுக்க அவர் மறக்கவேயில்லை. பேருந்து நிலையத்தினை ஒட்டிய மேடையில் அவர் கச்சேரி செய்யும் போது அதைக் கேட்டவர்கள் சாமானிய மக்கள். அவர்கள் மனதில் இன்றும் அந்த இசை ஒலித்தபடியேதானிருக்கிறது.

கோவில்பட்டியில் அவர் கட்டிய வீட்டைப் போல தன் மகள் திருமணமாகிப் போன பழனியிலும் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் காருகுறிச்சியார். மகள் பிறந்த வீட்டினை விட்டு புகுந்தவீடு போனபோதும் அதே வீட்டில் இருப்பதுபோல உணர வேண்டும் என ஆசைப்பட்ட பாசமிகு தந்தையாக இருந்திருக்கிறார். இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவர் காருகுறிச்சியாரின் உறவினர் முருகேசன்.

தஞ்சை மண்ணின் இசைக்கலைஞர்கள் கொண்டாடப்பட்ட அளவிற்குத் தென்மாவட்ட இசைக்கலைஞர்கள் கொண்டாடப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கிருந்தது. அதன் காரணமாகவே ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினேன். அந்த நாவலை எழுதும் நாள்களில் நிறைய நாதஸ்வரக் கலைஞர்களைச் சந்தித்தேன். அவர்கள் மனதில் ராஜரத்தினம் பிள்ளைக்கும் காருகுறிச்சிக்கும் உள்ள இடம் தெய்வத்திற்கு நிகரானது.

நாதஸ்வரக் கலைஞர்கள் இன்று அழகான சில்க் ஜிப்பா அணிந்து கௌரவமாக மேடையில் அமர்ந்து வாசிக்கிறார்கள் என்றால் அதற்கு ராஜரத்தினம் பிள்ளைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ‘அவர் இசைச் சக்கரவர்த்தி. மன்னரைப் போலத்தான் உடையும் உடுத்தியிருப்பார். அவர் காலத்திற்கு முன்பு வரை நாதஸ்வரக் கலைஞர்கள் மேல்சட்டை அணிய முடியாது. துண்டுதான். ஆனால் ராஜரத்தினம் பிள்ளையும் அவரின் சீடர் காருகுறிச்சியாரும் எங்களுக்கு கௌரவத்தை உருவாக்கித் தந்தார்கள். அவர்களை ஒவ்வொரு நாளும் வணங்கியே கச்சேரி செய்கிறோம்’ என்றார் ஒரு நாதஸ்வரக் கலைஞர்

நாவல் எழுதும் பணியில் ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். முருகன் கோயிலில் கேட்ட நாதஸ்வர இசை அப்படியே காருகுறிச்சியாரின் சாயலில் இருந்தது. கோயிலில் கேட்கும்போது நாதஸ்வரம் மெய்மறக்கச் செய்து விடுகிறது. உண்மையில் கற்சிலைகள்கூடக் கைதட்டும் அளவிற்கு வாசிக்கிறார்கள். அந்த வாசிப்பு, தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்லும் மகளைப்போலவே தோன்றியது. அந்த நாதஸ்வரக் கலைஞரைப் பாராட்டியபோது அவர் தன் பர்சில் இருந்த காருகுறிச்சியார் படத்தைக் காட்டி ‘‘அவரு மாதிரி வாசிக்க முடியாதுங்க. புலிவேஷம் கட்டிக்கிடுறது மாதிரி நாங்க வாசிக்கிறது வெறும் வேஷம்” என்றார்.

பணிவின் காரணமாக அப்படிப் பேசிய போதும் ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் உருவாகக் காருகுறிச்சியார் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார்.

காருகுறிச்சியாரின் மறைவை ஒட்டி எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி காருகுறிச்சியார் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கு.அழகிரிசாமியின் சொந்த ஊரான இடைசெவலில்தான் காருகுறிச்சி பெண் எடுத்திருந்தார். ஆகவே அவரை அழகிரிசாமி நன்றாக அறிந்தவர்.

அந்தக் கட்டுரையில் ‘`அருணாசலம் நாதஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, `இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்’ என்று பரவசத்தோடும் பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவை இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லிவிடலாம். அதேபோல் இந்த சிஷ்யரிடத்தில் குருவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்’’ என்று கு.அழகிரிசாமி குறிப்பிடுகிறார். உண்மையான சொற்கள் அவை.

25 ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்துகொண்டு பேசினேன். கௌரிசங்கர் உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள், கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள், செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் ஒன்றிணைத்து சிறப்பாக அந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் வேறு எங்கும் திரையிடப்படவேயில்லை. கௌரி சங்கரும் மறைந்துவிட்டார். அவரது கனவு பாதியில் முடிந்துபோனது.

காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரில் ஒரு சிலையிருக்கிறது. உள்ளூர் மக்கள் உருவாக்கிய சிலை அது. வளைந்து போன நாதஸ்வரம் உள்ள சிலை. ஒரு மகத்தான இசைக்கலைஞனுக்குக் கம்பீரமான சிலை தேவை. அதை அரசே உருவாக்கிக் காருகுறிச்சியில் வைக்க வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். கோவில்பட்டியில் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் உருவாக்க வேண்டும்.

எனது ‘சஞ்சாரம்’ நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் துணைவியார் எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அது மிகப் பெரிய பேறு. அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதுதான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.

தமிழ் மக்களின் அழியா நினைவில் காருகுறிச்சியாரும் அவரது சங்கீதமும் நிகரற்ற மகிழ்ச்சியின் அடையாளமாகவே நிலைகொண்டிருக்கிறார்கள்.

Tags: