இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழில்துறை வழங்கும் பங்களிப்பு
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆடைத் தொழில்துறை ஆற்றி வருகின்ற பங்களிப்பு அதிகம். இந்தத் தொழிற்துறை இலங்கையின் ஏற்றுமதியில் மிகப் பாரிய பங்களிப்பாக உள்ளதுடன், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 வீதமாகக் காணப்படுகிறது. எனினும் கொவிட்-19 பரவல் நிலைமையை அடுத்து இத்தொழில்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரம் செழிப்பதற்கு வேலைவாய்ப்பு மிக முக்கியம். இலங்கையை எடுத்துக் கொண்டால் ஆடைத்தொழில்துறை வழங்கும் வேலைவாய்ப்பின் அளவை வேறு எந்த தொழில்துறையும் வழங்குவதில்லை. இத்தொழிற்துறை மூலமாக சுமார் 350,000 பேர் நேரடி வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளதுடன், இன்னும் இரு மடங்கு எண்ணிக்கையானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் இதன் மூலமாகக் கிடைக்கப் பெறுகின்றது.
கொவிட்-19 காரணமாக ஆடைத் தொழில்துறையில் பெரும் பின்னடைவுகள் இருந்த போதிலும், இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ளது. மேலும், நாட்டின் எந்தவொரு தனியான தொழில்துறையையும் விட கிராமப்புற மக்களுக்கு வலுவூட்டுகின்ற ஒரு தொழிற்துறையாக காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் பயணமானது, 30 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்த தொழிற்துறை மூலமாக கட்டியெழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஆடைத் தொழில் துறையானது நெறிமுறை கடின உழைப்பு, சுற்றுச்சூழல் பேண்தகமை மற்றும் பொறுப்புணர்வுடனான ஒரு துறையாக உலகளாவில் பெயர் பெற்றுள்ளது. இலங்கை சர்வதேச முன்னணி வர்த்தக நாமங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன், இந்த வர்த்தக நாமங்கள் அனைத்தும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுடன் சுயாதீனமான கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கப் பெறும் வசதிகள் மற்றும் அவர்களின் ஊதியம் தொடர்பில் ஆடைகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுயாதீனமாக ஆய்வுகளை முன்னெடுத்து வருவதுடன், இந்த நடைமுறையானது தொழில்வழங்குநரின் தலையீடு இன்றி அந்நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பின் மூலமாக இந்த ஆய்வு மற்றும் கருத்து அறிதல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உலகளாவிய பொறுப்புணர்வு அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (The Worldwide Responsible Accredited Production -WRAP) அத்தகைய ஒரு அமைப்பாகும். அதன் இணையத்தளத்தின்படி, WRAP Gold my;yJ WRAP Platinum என சான்றளிக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இலங்கையில் உள்ளன. இந்த சான்று அங்கீகாரம் ஒரு கடுமையான செயல்முறையாகும்.
ஆடை உற்பத்தியைப் பொறுத்தவரையில் இலங்கையிலும் பார்க்க குறைந்த உற்பத்திச் செலவில் தயாரிக்கக் கூடிய வேறு நாடுகள் காணப்பட்டாலும், இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நியாயமான ஊதியம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியத்துடனான அக்கறை என்பன வெளிநாட்டு நிறுவனங்கள் இன்னமும் இலங்கையை விரும்புவதற்கான ஒரு முக்கியமான காரணம்.
தொழில்துறையின் சம்பளக் கட்டமைப்பு என்பது பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தவறாக சித்தரிக்கப்படும் ஒரு அம்சமாகும். இந்த தவறான விளக்கங்கள் குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய சம்பளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வழக்கமான சம்பளங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என எப்போதே திகதியிடப்பட்ட அரச ஆவணங்களின் வெளிப்பாடுகளிலிருந்து எழுகின்றன. இலங்கையில் ஒரு தொழிற்சாலை ஊழியர் சராசரியாக மாதமொன்றில் 40,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொள்கிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போக்குவரத்து, உணவு, மருத்துவம், காப்புறுதி என பல சலுகைகளும் இதில் அடங்கும்.
இலங்கை ஆடைத் தொழிற்துறையின் மீள்எழுச்சியானது நாட்டில் கொவிட்-19 இன் முதல் அலையிலிருந்து அது மீண்டதிலிருந்து வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே முதல் செப்டெம்பர் வரை கணிசமான தொகை கொண்ட ஏற்றுமதிகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை இந்தத் தொழில்துறையால் நிலைநிறுத்த முடிந்துள்ளது. அந்நிய செலாவணி வருவாய் குறைவடைந்து, வெளிநாட்டு நாணய இருப்புக்கள் குறைந்து விட்ட காலகட்டத்தில் நாட்டில் அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டும் முக்கியமான துறைகளில் ஒன்றாக இத்துறை விளங்கியது. பிராந்தியத்தில் அதிக ஊதியத்தை வழங்குகின்றமைக்கு மத்தியிலும், ஆண்டுதோறும் ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான இலங்கையின் திறன் வியக்க வைப்பதுடன், பொறுப்புணர்வுடன், பொறுப்புக்கூறலுடன், வெளிப்படைத்தன்மையுடன் வளர்ச்சி காண வேண்டும் என்ற தொழில்துறையின் விருப்பத்திற்கு இது ஒப்பானது.
கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் ஆடைத் தொழிற்துறை மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறது. இருப்பினும், இந்த குறிப்பிடத்தக்க தொழிற்துறைக்கு ஏற்படும் ஆபத்தை நமக்கு ஏற்படும் ஆபத்தாக கருத வேண்டும். கொவிட் என்பது ஆடைத்தொழிற்துறை சார்ந்த ஒரு பிரச்சினை அல்ல என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஒரு உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான பிரச்சினை. இதை சமாளிக்க அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்பதுடன் அரசாங்கம் தற்போது இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது. தொழிற்சாலை மட்டத்தில், கொவிட்19 தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் இரண்டையும் உருவாக்க தொடர்புபட்ட சமூகங்களுடன் நெருக்கமாக இணைந்து இத்துறை செயற்பட்டு வருகிறது.
இந்த வைரஸின் தோற்றம் மற்றும் இரண்டாவது அலை எப்படி, எங்கு தொடங்கியது என்பது இன்னமும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. எனினும் எந்தவொரு ஆடைத்தொழிற்சாலையும் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான காரணம் அல்ல என்பதை மட்டும் ஆணித்தரமாக கூற முடியும். சுகாதாரத் துறையினர் இதற்குரிய விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை விரைவில் வெளிக்கொண்டு வருவார்கள் என்று நம்பலாம். இந்த நிலையில் ஆடைத் தொழிற்துறையையும், அதன் ஊழியர்களையும் வீணே அவதூறு செய்து குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயமற்றது. அனைத்து தொழிற்சாலைகளும் சுகாதார அமைச்சு மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகின்றன. அதிகாரிகளால் எழுந்தமானமாக பீ.சி.ஆர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆடைத்தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் நமது முழுச் சமூகத்தையும் மேம்படுத்தியுள்ளனர். -அதை நாம் மறந்து விடக் கூடாது.
இவர்களின் கடின உழைப்புத்தான் அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகிறது மற்றும் அவர்களின் கடின உழைப்புதான் இந்த சிறிய நாட்டை உலகளாவிய ஆடைத் தொழிற்துறையில் ஒரு பெயர்பெற்ற நாடாக நிலைநாட்டுவதன் மூலம் இலங்கைக்கு புகழை சேர்ப்பித்து வருகின்றது.
இலங்கை உலகில் இரண்டு விஷயங்களுக்கு பெயர் பெற்றது. -அதன் தேயிலை மற்றும் ஆடைகள். நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படுவதையும், சுகாதாரம் மற்றும் கல்வி மேம்படுத்தப்படுவதையும் நாம் காணும் போது மேற்குறிப்பிட்ட ஆடைத்தொழில்துறை பணியாளர்களே இதைச் சாத்தியமாக்கியுள்ளனர்.
ஆகவே இத்தொழில்துறையிலுள்ள பணியாளர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கி, அவர்களைக் கண்டவாறு தூற்றாது அவர்களால் எமது நாட்டுக்கும், பொருளாதாரத்துக்கும், சமூகத்திற்கும் கிடைக்கப் பெற்று வருகின்ற பாரிய நன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
-தினகரன்
2020.11.28