சிவப்புத் துண்டுக்காரர்… களப்போராளி… அழியாத அடையாளம் – தோழர் தா.பாண்டியன் நினைவலைகள்!

வருண்.நா
-இரா.செந்தில் கரிகாலன்

ம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் கோளாறு காரணமாக 26.02.2021 அன்று காலமானார். அவருக்கு வயது 89.

தா.பா!
மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில் பேராசிரியர், வழக்கறிஞர், தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், களப்போராளி, நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல தளங்களில் செயல்பட்டவர் தா.பாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மூன்று முறை பணியாற்றியவர்.

காரைக்குடியில் இன்டர்மீடியேட் சேர்ந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார் தா.பாண்டியன். மாணவர் மன்றத்தில் இணைந்து தீவிரமாகக் களப்பணியாற்றினார். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தா.பாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். அடிப்படையில் வழக்கறிஞரான தா.பாண்டியன், கட்சியின் முழுநேரப் பணியாளராக விரும்பி, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார். கட்சியின் மாநிலக்குழு, நிர்வாகக்குழு, செயற்குழு, மாநிலச் செயலாளர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தவர் தா.பாண்டியன். அதேபோல, ரயில்வே தொழிற்சங்கம், துறைமுகம் தொழிற்சங்கம் என ஏராளமான பொறுப்புகளை வகித்தவர்; பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

சமூகப் பணி!
தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பா. தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. ஜனசக்தி' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத்தில் சவுக்கடி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. சுமார் 15 நூல்களையும் எழுதியிருக்கிறார் தா.பா.

தேர்தல் வரலாறு!
சட்டமன்றத் தேர்தலில் ஆறு முறையும், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறையும் போட்டியிட்டிருக்கிறார் தா.ப. 1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர்கள் கல்யாணசுந்தரம், டாங்கே உள்ளிட்டோரோடு இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார் பாண்டியன். 1983-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தல்களில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார் தா.பா. இந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸோடு கூட்டணியிலிருந்தது ஐக்கிய கம்யூனிஸ்ட்.

மரணத்துக்கு அருகே சென்று திரும்பியவர்!
ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரது உரைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தா.பா. 1991 நாடளுமன்றத் பிரசாரக்கூட்டத்தின்போது ராஜீவ் காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான். 1991, மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி வெடிகுண்டுவைத்துக் கொல்லப்பட்டபோது, அவரது அருகில்தான் நின்றுகொண்டிருந்தார் தா.பா. குண்டு வெடித்தபோது தா.ப-வும் தூக்கிவீசப்பட்டார். முதலில் அவரும் உயிரிழந்துவிட்டதாகவே செய்திகள் வந்தன. ஆனால், படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் தா.பா

சொந்த வாழ்க்கை!
தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை மண முடித்தார் தா.பாண்டியன். தா.பா – ஜாய்சி தம்பதியருக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா என்ற மகள்களும் இருக்கிறார்கள். திருமணம் முடிந்த சில நாள்களிலேயே கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளரானதால் சென்னைக்குச் சென்றுவிட்டார் தா.பாண்டியன். சென்னையில் சட்டம் பயின்றார். அந்தச் சமயத்தில், காரைக்குடியிலிருந்து தன் மனைவி அனுப்பிவைக்கும் பணத்தில்தான் தினசரிச் செலவுகளை மேற்கொண்டார்.

2012-ம் ஆண்டில் அவர் மனைவி மறைந்த பிறகு, “திருமணத்துக்குப் பிறகு அவளது சிறிய எதிர்பார்ப்பான பூவைக்கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று மறைந்துவிட்டாள். தற்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனை தீர்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஏக்கத்தோடு பேசியிருந்தார் தா.பா.

அழியாத அடையாளம்!
மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் தா.பா. எளிய அரசியல்வாதி, கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பவர், லட்சியத்துக்காகப் பாடுபடுபவர், ஓய்வில்லாமல் உழைப்பவர், சாமானியர்களுக்காகக் குரல் கொடுப்பவர், களத்தில் இறங்கிப் போராடுபவர், எப்போதும் சிவப்புத் துண்டோடு இருப்பவர்… இவைதான் தா.பாண்டியனின் அடையாளங்கள். இன்று அவர் உடலளவில் மறைந்திருந்தாலும், தமிழக அரசியலின் அழியாத அடையாளங்களுள் ஒன்றாக எப்போதும் நிலைத்திருப்பார் தோழர் தா.பா!

-விகடன்
27.02.2021

Tags: