போராட்டத்துக்குள் போராட்டம்!
இது ஒரு வில்லங்கமான தலைப்பு. ஏனெனில் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் நல்லதோ கெட்டதோ அல்லது சரியோ பிழையோ ஏதோ ஒரு தேவைக்காகப் போராடிய வண்ணம் உள்ளனர். அப்படியிருக்கையில், தமக்கு எதிராக இன்னொரு தரப்பினர் போராடினால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்கமாட்டார்கள். காரணம், தமது போராட்டம் மட்டுமே சரியானது, அதுவே முதலும் முடிவுமானது என்பதுதான் அவர்களது நினைப்பு அல்லது வாதம்.
அதற்கு ஒரு உதாரணம் சொல்வேன். யாழ்ப்பாணம் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் அவர்களது ஆதிக்கமே (கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது போல) இருந்தது. ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் புலிகளின் தனி ஆதிக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே புலிகள் அங்கிருந்த தமது ஆதரவு மாணவர்கள் மூலம் தமக்கென தனியான ஆதரவு அமைப்பொன்றை உருவாக்கி வைத்திருந்தனர்.
அந்த அமைப்பிலும் வித்தியாசமாகச் சிந்திக்கும் சில மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தமிழினம் தனியே தேசிய இன விடுதலைக்காக மட்டும் போராடினால் போதாது, தமிழ் சமூகத்திற்குள் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீர்கேடுகள் என்பனவற்றுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இது இயல்பானது. ஏனெனில், மாணவர்கள் பொதுவான போராட்டங்களுக்கு முதன்முதலில் வரும்போது சகல விதமான அநீதிகளுக்கெதிராகவும் போராட வேண்டும் என்ற எண்ணப்பாங்கே அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அதாவது மாஓ சொன்னதுபோல, அவர்களது மனங்கள் “கிறுக்குப்படாத வெள்ளைக் காகிதங்களாக”த்தான் இருக்கும். பின்னர்தான் தலைமைகளால் தமது சித்தாந்தங்களுக்கு ஏற்ப மூளைச்சலவை செய்யப்படுவர்.
எனவே, அவர்கள் தமது எண்ணத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, “போராட்டத்துக்குள் போராட்டம்” என்ற பிரசுரமொன்றை எழுதி அச்சிட்டு வெளியிட்டனர். அதாவது, தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன், தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கும் சமகாலத்தில் போராட வேண்டும் என்பதை தமது பிரசுரத்தில் வலியுறுத்தி இருந்தனர். (அவர்களில் சிலர் இன்னமும் பல நாடுகளில் இருப்பதால் நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) இந்தப் பிரசுரத்தின் சில பிரதிகளை பல்கலைக்கழகத்துக்கு முன்னால் புத்தகக்கடை வைத்திருந்த என்னிடமும் தந்திருந்தனர்.
இந்தப் பிரசுரம் புலிகளின் தலைமைப்பீடத்தின் கவனத்துக்கு சில விசுவாசிகளால் கொண்டு செல்லப்பட்டது. அந்தப் பிரசுரத்தைக் கண்டு தலைமை சினம் கொண்டது. உடனடியாக அதை வெளியிட்டவர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பிரசுரமும் விநியோகிக்காதவாறு தடுக்கப்பட்டது. அதற்கு தலைமை சொன்ன காரணம் என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்தான் பிரதானமானது, அந்த நேரத்தில் வேறு போராட்டங்களையும் அதனுடன் சேர்த்தால் பிரதான போராட்டம் பலவீனமாகிவிடும் என்பதாகும். இந்த ஒற்றைப் பாசிசக் கருத்தோட்டம் புலிகளின் காலத்தில்தான் ஆரம்பமானதொன்றல்ல.
அதற்கும் எமது கம்யூனிஸ்ட் முன்னோடியும், ஆதர்ச தோழருமான மு.கார்த்திகேசன் சொன்ன ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
கார்த்திகேசன் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையொன்றை முதன்முதலாகத் தொடங்குவதன் பொருட்டு 1946 இல் அங்கு கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கு யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தீவிரமாகக் கட்சி வேலைகளில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சி உருவாகி இருக்கவில்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி மட்டுமே தமிழர்கள் மத்தியில் ஏகபோகம் செலுத்திக் கொண்டிருந்தது. காங்கிரசிலேயே பின்னர் தமிழரசுக் கட்சியைத் தொடங்கிய செல்வநாயகம், வன்னியசிங்கம், டாகடர் நாகநாதன் ஆகியோரும் இருந்தனர்.
அவர்கள் எல்லோரும் “நாங்கள் தமிழர்கள். தமிழர்கள் எல்லோரும் ஒரே இனம். எனவே நாங்கள் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” எனப் பிரச்சாரம் செய்து வந்தனர். மறுபக்கத்தில் கார்த்திகேசன் “தமிழர்கள் எல்லோரும் வேறுபாடுகள் அற்றவர்கள் அல்ல, அவர்களுக்குள் உழைப்பவன் – சுரண்டுபவன், ஏழை – பணக்காரன், உயர்சாதி – தாழ்ந்த சாதி என்ற வேறுபாடுகள் உண்டு” எனப் பிரச்சாரம் செய்து வந்தார். அவரது பிரச்சாரம் பிற்போக்குத் தமிழ்த் தலைமையைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.
பின்னர் பொன்னம்பலத்தை விட்டு செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றோர் விலகி தமிழரசுக் கட்சி என்றொரு கட்சியை உருவாக்கிச் செயல்படத் தொடங்கினர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகமும் கார்த்திகேசனும் கலந்து கொண்டனர். நிகழ்வு மேடையில் வைத்து செல்வநாயகத்துக்கு கார்த்திகேசனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அறிமுகம் செய்ததும் கார்த்திகேசனைப் பாரத்து செல்வநாயகம் கேட்ட முதல் கேள்வி, “நீங்கள்தான் தமிழர்களில் இரண்டு தமிழர்களைப் பற்றிப் பேசுகின்ற கார்த்திகேசனோ?” என்பதுதானாம். இதை என்னிடம் கூறிய கார்த்திகேசன், “இவர்கள் தம்மைத்தவிர வேறு ஒருவரும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யக்கூடாது என்ற ஒற்றை எண்ணத்துடன் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.
இந்த நிலைப்பாடு பொன்னம்பலம், செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரையான தமிழ்த் தலைமைகளிடம் மட்டும் இருந்த ஒன்றல்ல. எல்லா முதலாளித்துவ அரசியல்வாதிகளிடமும் இருக்கின்ற பொதுவான ஒரு குணாம்சம். ஒரு நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கின்ற காலகட்டத்தில் அந்த நாட்டின் முதலாளித்துவ வரக்கம் அல்லது பேரினவாத சக்திகள் தமது நாட்டின் தொழிலாளி வர்க்கத்தினதும், சிறுபான்மை தேசிய இனங்களினதும் ஆதரவை நாடிப் பெற்றுக்கொள்ளும். பின்னர் சுதந்திரம் கிடைத்ததும் தன்னை ஆதரித்த சக்திகளை எட்டி உதைத்துவிடும். இது கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திரத்துக்காகப் போராடி வெற்றி பெற்ற பங்களாதேஸ், தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே, அங்கோலா, நமீபியா, எரித்திரியா, கிழக்கு திமோர் உட்பட அநேக நாடுகளில் நடந்திருக்கிறது.
இது பெரிய இனத்து முதலாளித்துவ வர்க்கத்தின் குணாம்சம் மட்டுமின்றி, தனது தேசிய இன விடுதலைக்குப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சிறிய தேசிய இன முதலாளித்துவ வர்க்கத்தின் குணாம்சமும் ஆகும். இதற்கு இலங்கையின் சிங்கள – தமிழ் முதலாளித்துவ வர்க்கங்களின் கடந்தகால, நிகழ்கால வரலாறுகள் நல்லதொரு சிறந்த உதாரணம்.
எனவேதான், உண்மையான மார்க்சிசவாதிகளும் விடுதலை விரும்பிகளும் எந்தவொரு முதலாளித்துவ வர்க்கத்தினதும் தேசியவாதக் கோசங்களை நம்பவோ, அவற்றின் பின்னால் செல்லவோ கூடாது என லெனின் பல தடவைகள் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அவ்வாறு சென்றால் அது இறுதியில் ஏமாற்றத்தில் முடிந்துவிடும் எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் அர்த்தம் தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களும் தமது உண்மையான நேச சக்திகளுடன் ஒன்றிணைந்து, தமது சொந்தக்காலில் தங்கிநின்று போராட வேண்டும் என்பதுதான்.
வரலாற்றிலிருந்து நாம் பாடம் படிப்பது எப்போது?
நன்றி முகநூல்: மணியம் சண்முகம்