ஜவஹர்லால் நேரு, அனைத்திற்கும் மேலாக மதசார்பற்றவர்!

பிரகாஷ் காரத்

ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்பியாக, உலக அரங்கில் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட தலைவரான ஜவகர்லால் நேரு வலதுசாரி பிற்போக்கு வாதத்தை இறுதிவரை எதிர்த்துப் போராடியவர். அவரது மதசார்பற்ற கண்ணோட்டத்தை இன்றைக்கும் நினைவுகூர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை வலியுறுத்தி ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஒட்டி ஃப்ரண்ட்லைன் (Frontline) இதழின் 2014 டிசம்பர் 12 பதிப்பில் தோழர் பிரகாஷ் காரத் (Prakash Karat)எழுதியிருந்த கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இப்போது தமிழில் வெளியாகிறது.

ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில், நேருவின் பாதை, பாரம்பரியம் ஆகியவை குறித்தும் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் பொருள் எத்தகையதாக அமைகிறது என்பது குறித்துமான விவாதம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. நேரு முன்வைத்த தொலைநோக்கு, குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு நேரெதிர் நிலைபாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி ஓர் ஆளும் கட்சி என்ற வகையில் தலைமை வகிக்கும் நரேந்திர மோடியின் அரசு தரும் முரண்பட்ட சித்திரமானது இந்தக் கேள்வியை மேலும் கூர்மையாக்குகிறது.

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில் நேருவிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பெருமளவிலான ஒற்றுமை நிலவியது எனில், விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்த ஆண்டுகளில் அதிகமான அளவில் இடைவெளிகளும் மோதல்களும் நிலவின.

நேரு மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேருவின் காலம் குறித்த இடதுசாரிகளின் புரிதல் என்பது மிகப்பெருமளவில் சமநிலையான, நாகரீகமான ஒரு வடிவத்தை பெற்றதாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் அறிவுச்செறிவு மிக்க தலைவராக நேரு விளங்கினார். அவ்வகையில் அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கடந்தவராகவும் அவர் இருந்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல்பூர்வமான உணர்வு ஆகியவற்றை ஆதரிப்பவராகவும் நேரு இருந்தார். மகாத்மா காந்தியைச் சுற்றியிருந்த பழமைவாத, மீட்சிவாத தலைவர்கள் பலரின் கருத்துக்களுக்கு இவை முற்றிலும் முரணானவையாக இருந்தன. நேருவின் இத்தகைய நவீனமான, முதலாளித்துவ ஜனநாயகபூர்வமான அணுகுமுறையானது தேசவிடுதலைப் போராட்டத்தில் அவரை தனித்துவமானதொரு ஆளுமை கொண்டவராக ஆக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என்ற கோஷத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போராடியவர் நேருதான். 1927ஆம் ஆண்டில் மதராஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒரு தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். எனினும் காந்திஜியின் வற்புறுத்தலால் நேருவின் தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன்பிறகு 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சி முழுமையான விடுதலை என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டது. 1921ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்தனர். அப்போதும் கூட காந்திஜி அதை நிராகரித்தார். தொழிலாளர்-விவசாயிகளின் வெகுஜன அமைப்புகள் காங்கிரஸுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார். எனினும் கட்சித் தலைமையை  இதை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் அவர் தோல்வியுற்றார்.

1936ஆம் ஆண்டில் நேரு தலைமைப் பொறுப்பில் இருந்தபோது லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு சோஷலிசத்திற்காகப் பேசியது. ஐரோப்பாவிலும் உலகத்திலும் தலைதூக்கி வந்த பாசிஸம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்தும் அறிந்தவராகவும் நேரு இருந்தார். இந்தக் காலப்பகுதியில்தான் காங்கிரஸிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இடதுசாரிகள் நேருவுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.

எனினும் காந்திஜியின் மிகவும் நம்பகமான சீடராகவும் நேரு இருந்தார். தேசவிடுதலை இயக்கத்தின் வர்க்கத் தலைமையின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக காந்திஜியின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுக்கு அதன் ஒவ்வொரு கட்டத்திலுமே நேரு அடிபணிந்தார். காந்திக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவராகவும் நேரு இருந்தார். காந்திஜியின் வாரிசு என்றும், அவருக்குப் பின்னால் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பவர் என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

முக்கியமாக, நேருவின் சோஷலிசம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்பதையும் தேச விடுதலை இயக்கத்திற்குள் பெருந்திரளான மக்களை கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவுமே அவர் அதைப் பயன்படுத்தினார் என்பதையும் தொடக்கத்திலேயே கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்திருந்தனர். பிரதமராக ஆன பிறகு, நேரு சோஷலிசத்திலிருந்து விலகி, சமூக ஜனநாயகத்தின் பக்கம் நகர்ந்து சென்றார். இருந்தபோதிலும், 1955ஆம் ஆண்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘சோஷலிச வகைப்பட்ட சமூகம்’ என்பது வலதுசாரி சக்திகளையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்பட்டது. 1955ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல்களிலும், 1957இல் கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க நேருவின் ‘சோஷலிச’ மேடை பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ வளர்ச்சி

துவக்க கட்டத்திற்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய நேருவின் பார்வை மேற்கு நாடுகளை நோக்கியிருந்தது. எனினும் சுயேச்சையான, முன்மாதிரியுடன் கூடிய வளர்ச்சியுடன் இந்தியா தலையெடுக்க மேற்கத்திய நாடுகள் உதவி செய்யாது என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். எனவே முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு தேவைப்படுகின்ற பொதுத்துறையை வளர்த்தெடுப்பதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் நேரு இறங்கினார். பொதுத்துறையை வளர்த்தெடுப்பதற்கு சோவியத் யூனியனிடமிருந்து உதவி பெறப்பட்டது. பெருநகர மூலதனத்திலிருந்து ஓரளவிற்கு சுதந்திரமானதாக, அரசின் உந்துதலின் மூலமான முதலாளித்துவ வளர்ச்சியாக அது இருந்தது என்பதே இதன் பொருள். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சில பிரிவுகள் நேருவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒட்டுமொத்தத்தில் இது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றதாகவே இருந்தது. இவ்வாறு நேருவிய வகைப்பட்ட பாதையானது சர்வதேச மூலதனத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டிய தேவையில்லாத, ஒரு வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியது.

அதேநேரத்தில் நிலச் சீர்திருத்தங்களை  மேற்கொள்ளாமல், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, அதே நேரத்தில் ஏகபோக மூலதனத்திற்கும் ஊட்டம் கொடுத்து முதலாளித்துவத்தை வளர்த்தெடுத்ததானது முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதைத் தொடர்ந்த காலப்பகுதியில் சுயேச்சையான வளர்ச்சிக்கான எந்தவிதமான வாய்ப்பையும் இது வலுவிழக்கச் செய்ததோடு, சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒன்றிணைவதற்கும், அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கும் வழியேற்படுத்தித் தந்தது. நேருவிய காலத்தின் மிகப் பெரிய துரோகம் என்பது நிலச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது என்ற அதன் உறுதிமொழியினை நிறைவேற்ற மறுத்ததே ஆகும். நேரு அரசினால் முன்வைக்கப்பட்ட இந்த வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தது மட்டுமின்றி, இதுவே சோஷலிசப் பாதை என்ற அதன் தம்பட்டத்தையும் முற்றிலுமாக நிராகரித்தனர்.

வெளியுறவுக் கொள்கை

எனினும் 1950களின் நடுப்பகுதியில் நேரு அரசு இடதுசாரி பாதையை நோக்கி மாறியதாகத் தோற்றம் அளித்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆவடி மாநாடு  ‘சோஷலிச வகைப்பட்ட’ சமூகத்திற்காகப் பாடுபடப் போவதாக அறிவித்தது. (1956-61க்கான) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் மயமாக்கலுக்கும் பொதுத்துறைக்கும் உத்வேகம் அளித்தது. தொடக்க ஆண்டுகளில் மேற்கு நாடுகளை சார்ந்திருந்த நிலைக்குப் பிறகு, அணிசேரா கொள்கை என்ற புதியதொரு பாதையை நோக்கி நேரு வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்தார். இந்தக் கொள்கை சர்வதேச அமைதிக்காகவும் தேச விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தீவிரமாக பாடுபட்டது. இந்தக் கொள்கையிலிருந்து விலகி நின்ற சில தருணங்கள் இருந்தபோதிலும், அதிகமான செயல்திறனையும், ஓரளவிற்கு சுயாட்சியையும் கொண்டு பெருமளவிற்கு இந்திய அரசின் நலன்களுக்கு உகந்ததாக நேரு காலத்திய வெளியுறவுக் கொள்கை இருந்தது. சீனாவுடன் எல்லை மோதல் உருவான காலம் வரை இந்த நிலை நீடித்தது.

நேரு மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும், இடதுசாரிகளுக்கு உள்ளேயும் மாறுபட்ட கருத்துக்கள் தோன்ற வழிவகுத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒரு பிரிவினர் முற்போக்கான வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையுடன் பொருத்தி வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினர். நேரு பின்பற்றிய பாதையை எவ்வித விமர்சனமுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதே இந்தக் கோரிக்கையின் உள்ளீடான அம்சமாகும். 1956ஆம் ஆண்டு பாலக்காடு நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது காங்கிரஸில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நிலைபாட்டை ஆதரித்த போதிலும் காங்கிரஸ் உடனான ஐக்கிய முன்னணி என்ற கருத்துருவை கட்சி காங்கிரஸ் நிராகரித்தது. 1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கான விதை அப்போதுதான் தூவப்பட்டது.

1930களில் சோஷலிசத்தை ஆதரித்துப் பேசி வந்த நேரு முதலாளித்துவம் குறித்த சமூக-ஜனநாயக அணுகுமுறைக்கு நெருக்கமாக நகர்ந்து சென்றார். அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவம் என்ற இந்த வடிவமானது மூலதனக் குவிப்புக்கு வழிவகுத்து, பெருநிறுவன குடும்பங்கள் உயிர்த்தெழவும் வழியேற்படுத்தியது. ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப்போன நேரு, அதை வறட்டுத்தனமான ஒரு தத்துவமாகவும் கண்டார். மேலும் சோவியத் யூனியனில் இருந்தது போன்ற ஒரு சோஷலிச அமைப்பில் வன்முறையும் வற்புறுத்தலும் உள்ளார்ந்த அம்சமாக விளங்குகின்றன என்றும் அவர் குறை கூறினார்.

பிந்தைய காலப்பகுதியில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளீடாக அமைந்த அனைத்துக் குறைபாடுகளையும் வெளிப்படுத்துவதாகவே நேருவின் தலைமையிலான அரசு இருந்தது. ஆளும் காங்கிரஸ் மேலும் மேலும் ஊழல் மிக்கதாக, விடுதலைப் போராட்டத்தின்போது நிலவிய சமூக, அரசியல் குறிக்கோள் அனைத்தையும் கைவிட்டதாக மாறியது. நேருவிற்குப் பிறகு காங்கிரஸில் சீரழிவு மேலும் துரிதமாக ஆனதோடு, நேரு காலத்திய நேர்மறை அம்சங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டன. புதிய தாராளவாதப் பாதையை நோக்கிய அதன் சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

நேரு காலத்திய வளர்ச்சிப் பாதை குறித்த இடதுசாரிகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேருவின் இரண்டு உயிரோட்டமான பங்களிப்புகள் இருந்தன. தேசிய இயக்கத்தில் மதச் சார்பின்மை குறித்த ஆழமான, தீவிரமான உறுதிப்பாடு வேறு எந்த தலைவருக்கும் அவரைப் போன்று இருக்கவில்லை. இந்திய அரசின் மதசார்பற்ற திசைவழியை நிறுவுவதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றது மிக முக்கியமான பங்கினை வகித்தது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் கலவரங்கள் வெடித்து, முஸ்லீம்களின் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் நேரு கலவரம் நடந்து வந்த இடங்களுக்கு நேரடியாகச்  சென்றார். வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் நேருவின் இச்செயலை வெறுத்ததோடு, அதை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தனர். இத்தகைய பாதுகாப்போ, சிறப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படக் கூடாது என்றுதான் அவர்கள் கருதினர்.

இத்தகையதொரு தருணத்தில்தான் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் “தேசியவாதம் ஆக தனது தோற்றத்தை வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் சிறுபான்மையினரின் வகுப்புவாதம் அது எப்படி இருக்கிறதோ அதே வகையில் அடையாளம் காணப்படும்” என்று மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் நேரு எச்சரித்தார். நாட்டு விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில் அரசு அமைப்பு மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மதசார்பற்ற குறிக்கோளை நிறுவுவதற்காக நேரு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இடைவிடாது போராட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக புருஷோத்தம் தாஸ் தாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது காங்கிரஸுக்குள் இருந்த இந்து பாரம்பரியவாதிகளுடனான நேருவின் இந்தப் போராட்டங்கள் உச்சநிலையை எட்டின. வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், மதசார்பற்ற ஓர் அரசை நிறுவுவதிலும் நேருவைப் போல் தெளிவான சிந்தனை, உறுதி ஆகியவற்றைக் கொண்ட வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லை.

1948ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆன, எளிதில் அமைதிப்படுத்தி விட முடியாத வகையில் நேரு அரசின் எதிரியாக விளங்கிய பி.டி. ரணதிவே 1989ஆம் ஆண்டில் நேருவின் பிறந்ததின நூற்றாண்டு தருணத்தில் நேருவைப் பற்றிய மிகச் சிறப்பான மதிப்பீட்டை செய்திருந்தார். அப்போது அவர் எழுதியிருந்தார்: “ஆழமான மதசார்பற்ற கண்ணோட்டம், ஜனநாயகம் குறித்த நவீன கருத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நேருவிற்குப் பதிலாக வேறு எவராவது அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் நாட்டின் விடுதலையே அபாயத்திற்கு ஆளாகியிருக்கும்”. மேலும் “மீட்சி வாத பாரம்பரியத்தை மறுதலித்து, மதசார்பற்ற, நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டியதில் நேருவின் தனித்துவமான பங்களிப்பை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது” என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (பி.டி. ரணதிவே, ஜவகர்லால் நேரு: ஒரு நூற்றாண்டு மதிப்பீடு, மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜூலை-டிசம்பர் 1989)

அதற்குள் பல்வேறு விதமான குறைபாடுகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் நாட்டில் வேரூன்றுவதை உறுதிப்படுத்தியதில் தனிப்பட்ட பொறுப்பு நேருவிற்கே உரியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கருடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜனநாயக ரீதியான கட்டமைப்பினை உருவாக்குவதற்குக் காரணமாகவும் அவர் திகழ்ந்தார். இருந்தபோதிலும், நேருவின் ஜனநாயக ரீதியான சாதனையிலும் மிகப்பெரும் களங்கம் ஒன்றும் இருந்தது. கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது தனது கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த அவர் 1959இல் இ. எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அரசை கலைத்தார். இங்கும் கூட வர்க்க நலனே அவரது ஜனநாயக உணர்வுகளை மீறியதாக இருந்தது.

Prakash Karat was the general secretary of the Communist Party of India (Marxist) from 2005 to 2015

பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்கும் மத்திய அரசின் தற்போதைய ஆளும் கூட்டணி நேருவின் பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தாக்கத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறது. நேருவிற்கும் இந்தக் கூட்டணிக்குமான வேறுபாடு மிகப் பெரியது. மதசார்பற்ற அடித்தளத்தின்மீது ஒரு தேசியவாத உணர்வை கட்டியமைக்க இந்தியாவின் முதல் பிரதமர் தீவிரமாக முயற்சி செய்தாரெனில், தற்போதைய பிரதமர் தான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். மக்களிடையே அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்தெடுக்க நேரு தீவிரமாக பாடுபட்டு வந்தார் எனில், வேதகாலத்திலேயே அறிவியல் உருவாகி நன்கு வளர்ந்திருந்தது; மகாபாரத காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்தது; மாற்று அறுவை சிகிச்சை மூலம் உருவானவரே விநாயகர் எனப்படும் பிள்ளையார் என்பது போன்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் புராணக் கதையை பரப்புபவராக நரேந்திர மோடி இருக்கிறார். இப்போது  மதசார்பற்ற மதிப்பீடுகள் குறுகிய, பிரிவினை நோக்கம் கொண்ட இந்துத்துவா தத்துவத்திற்கு விரோதமான சமூக, கலாச்சார கருத்தாக்கங்கள் அனைத்தின்மீதும் முழு அளவிலான தாக்குதல்தான்  நடந்து வருகிறது.

மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு  ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும்.

மூலம்: Secular, above all
தமிழில்: வீ. பா. கணேசன்

Tags: